Tuesday, July 14, 2020

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2


(இதன் முதல் பகுதி கீழே உள்ளது. மீண்டும் ஒரு முறை அதை படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)

வேதம் என்பது எழுதா மறை, எழுதா கிளவி என்று பார்த்தோம்.

ஏன் என்றால், ஒலி வடிவம்தான் உயர்ந்தது. அதை அப்படியே வரி வடிவத்துக்கு மாற்ற முடியாது. வேதம் ஒலி வடிவம் ஆனது. அதை எழுதி வைத்தாலும்,  அதை ஒரு  குருவின் மூலம் தான் படிக்க வேண்டும் என்று விதி செய்து வைத்தார்கள். வரி வடிவத்தில் உள்ளதை படித்தால் தவறு நிகழ்ந்து விடலாம் என்பதால். 

சரி, வேதம் உயர்ந்தது. ஏற்றுக் கொள்வோம்.  

அந்த வேதம் எதைச் சொல்கிறது. அது சொல்லும் பாடம் என்ன? அதில் நமக்கு அறிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

புகழேந்தி புலவர் கூறுகிறார் 

திருமாலின் திருவடிதான் மறை நூல்களின் முடிபு என்கிறார். 

அந்தத் திருவடி எப்படிப்பட்ட திருவடி திருவடி தெரியுமா?

"மறை நூல்களுக்கெல்லாம் முடிவானது, நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் அர்த்தம் அதுதான். அந்தத் திருவடி, ஆதிமூலமே என்று அலறிய யானைக்கு உதவவும், அன்று ஆயர் பெண்களின் குரலுக்கும் கூப்பிடுவதற்கு முன்னே செல்வதற்கு தயாராக இருந்த அடி " என்கிறார். 

பாடல் 


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள்

முந்தை = பழமையான

மறைநூல் = வேதங்களின்

முடியெனலாம்  = முடிந்த முடிபு எனலாம்

தண் = குளிர்ச்சியான

குருகூர்ச் = குருகூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த

செந்தமிழ் = செந்தமிழ் நூலான திருவாய் மொழி என்ற

வேத = வேதத்தின்

சிரமெனலாம்  = தலை என்று கூறலாம்

நந்தும் = வருந்திய

புழைக்கைக்கும்  = யானைக்கும்

நேயப் = நேசம் கொண்ட

பொதுவர் மகளிர்க்கும் = ஆயர் குல பெண்களுக்கும்

அழைக்கைக்கு = அழைப்பதற்கு

முன்செல் அடி. = முன்பே சென்ற திருவடிகள்

அவனை அழைக்கக் கூட வேண்டாமாம். அழைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே ஓடி வந்து விடுவானாம்.

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று மணிவாசகர் கூறியது போல.

குழந்தை பசித்து அழுவதற்கு முன்பே, அதற்கு இப்போது பசிக்கும் என்று அறிந்து ஓடி வந்து  அமுது அளிக்கும் தாயைப் போல,

நினைத்தால் போதும் அவன் திருவடிகள் நம் முன் வந்து தோன்றும் என்கிறார்.

வேதத்தின் தலையிலும், நம்மாழ்வார் பாடல்களின் முடியிலும்,  உள்ள அந்த திருவடி, யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் உதவி என்று சொல்லும் முன்னே ஓடி வந்த திருவடி.

உரையை விட்டு விடுங்கள். அர்த்தம் பிடி பட்டு விட்டது அல்லவா, இனி உரை தேவை இல்லை.  நேரடியாக பாடலைப் படித்துப் பாருங்கள்.

சுவை தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/2.html

------------- பாகம் ஒன்று கீழே ---------------------------------------------------------------------



செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 

என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html

2 comments:

  1. கருத்து அறிவித்த தங்களுக்கு நன்றி!
    அழைக்கைக்கு முன்செல்லும் அடிக்கு சரணம்!

    ReplyDelete