நாலடியார் - எதைக் கற்பது ?
உலகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் நன்றாக இருக்கிறது, இதுவும் சுவாரசியமாக இருக்கிறது, அது பயனுள்ளதாக இருக்கும், இது ஆன்மீகத்துக்கு உரிய நூல் என்று அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது.
சரி, ஏதோ ஒன்றை படிக்கலாம் என்று உட்கார்ந்தால் , "டொய்ங்" என்று whatsapp சத்தம். என்ன தான் வந்திருக்கிறது என்றுர் பார்ப்போம் என்று மனம் அதன் பின்னே போகிறது. பார்த்தால் அதோடு நிற்குமா மனம்? அதுக்கு ஒரு பதில் போடுவது. நாம் போட்டால் மற்றவன் சும்மா இருப்பானா? அவன் பதிலுக்கு ஒன்று சொல்லுவான். இப்படி கொஞ்ச நேரம் போகிறது.
சரி, அதை எல்லாம் முடித்து விட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,இந்த செய்திகளை கொஞ்சம் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று மனம் போகிறது. கொரோனா என்ன ஆச்சோ, கிரிக்கட் மேட்ச் எப்படி வருமோ, தங்கம் விலை என்ன ஆயிற்றோ என்று கவலை. சரி அதை எல்லாம் பார்த்துட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,
இந்த hotmail / gmail ஒருக்க சீக்கிரம் பாத்ருவோம் என்று மனம் போகிறது.
அப்புறம், இந்த facebook update கொஞ்சம் பாக்கணும்.
இது உருப்படுமா?
நாலடியார் சொல்கிறது....
"கல்விக்கு கரை இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் சொற்பமானது. அதிலும் பல நாட்கள் நோயில் போய் விடுகிறது. எனவே, ஆராய்ந்து, தெளிந்து சிறந்தவனவற்றையே படிக்க வேண்டும். எப்படி என்றால், நீரும் பாலும் கலந்து இருந்தாலும், நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னம் போல."
பாடல்
கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
click the link below to continue reading
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_34.html
பொருள்
கல்வி கரையில = கல்வி கரை காண முடியாதது. நாலடியார் காலத்திலேயே அப்படி என்றால், இப்போது எவ்வளவு வளர்ச்சி நிகழ்ந்து இருக்கிறது?
கற்பவர் நாள்சில; = கற்றுக் கொள்ள நினைப்பவர்களின் நாடுகளோ வெகு சில.
மெல்ல நினைக்கின் = ஆராய்ந்து பார்த்தால்
பிணிபல = நோய் பல.உடல் நோயும், மன நோயும்.
தெள்ளிதின் = தெளிந்து
ஆராய்ந்து =ஆராய்ந்து
அமைவுடைய = பொருத்தமானவற்றை
கற்பவே = கற்க வேண்டும்
நீரொழியப் = நீரை நீக்கி
பாலுண் = பாலை மட்டும் உண்ணும்
குருகின் தெரிந்து. = அன்னப் பறவையைப் போல
வாசிக்கின்ற ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க வேண்டும். நான் இப்போது வாசிப்பது எனக்கு எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்று.
தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும், மறுமைக்கும் அறம் பொருள் இன்பம் என்றான பலன்களை தராத நூல்களை ஒரு போதும் படிக்கக் கூடாது.
என்ன ? சரியா?
No comments:
Post a Comment