திருக்குறள் - தீயினும் அஞ்சப்படும்
பாடல்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
பொருள்
தீயவை = தீய செயல்கள்
தீய பயத்தலால் = தீமை தருவதால்
தீயவை = அத் தீய செயல்கள்
தீயினும் = தீயை விட
அஞ்சப் படும் = அஞ்சத் தகுந்தவை
எளிமையான குறள். நேரடியாக பொருள் விளங்கக் கூடியது.
சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
பலர், பல குற்றங்களை செய்கிறார்கள். அதாவது தீமைகளைச் செய்கிறாரகள். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நிறைய சொத்து சேர்த்து விடுகிறார்கள். பெரிய வீடு, கார், தோட்டம், வேலையாள், புகழ், அதிகாரம் எல்லாம் தூள் பறக்கிறது. அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.
தீயவை செய்கிறவன் நல்லாத்தான் இருக்கிறான்..இந்த வள்ளுவர் சொல்வதை எல்லாம் எப்படி நம்புவது என்ற சந்தேகம் எழலாம்.
இந்த குறளுக்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார்
"பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று"
என்று.
என்ன அர்த்தம்?
தீ இன்று கை வைத்தால் என்று தான் சுடும். இரண்டு மாதம் கழித்து சுடாது போன வருடம் எண்ணெய் சட்டியில் கை வைத்தாயே, அதற்கு இப்போது சுடுகிறேன் என்று ஒரு வருடம் கழித்து சுடாது.
ஆனால், நாம் செய்த தீமை இருக்கிறதே, அது காலம் பார்த்து சுடும்.
இன்று சுட்டால் நம்மால் சமாளித்துக் கொள்ள முடியும். கையில் காசு இருக்கிறது.உடம்பில் தெம்பு இருக்கிறது. இப்ப சுடாது. "பிறிதொரு காலத்து" என்கிறார் பரிமேல் அழகர்.
வயதான காலத்தில், யாரும் இல்லாத தனிமையில், அங்கு வந்து சுடும். அப்போது சுட்டால் தான் வலி தெரியும் என்பதால்.
இல்லையே. கடைசிவரை நல்லாத்தான் இருந்து செத்தான். நாடே கூடி அவனுக்கு மரியாதை செய்ததே. எங்கே அவன் செய்த தீமைகள் அவனை சுட்டன என்று நாம் சந்தேகப் படலாம்.
"பிறிதோர் தேசத்தில், பிறிதொரு உடம்பில்" என்கிறார் பரிமேல் அழகர்.
இந்த உடம்பில், இந்த நாட்டில், சுட வேண்டும் என்று இல்லை.
நாம் எவ்வளவோ பேரை பார்க்கிறோம்.
ஆட்களை விடுங்கள். கசாப்பு கடைக்கு கோழி ஆடெல்லாம் எப்படி கொண்டு போவார்கள் தெரியுமா? கொண்டு போய் துள்ள துடிக்க வெட்டுவார்கள். துடிக்க துடிக்க கழுத்தை அறுப்பார்கள்.
போர் மேகங்கள் எப்போதும் சூழ்ந்து இருக்கும் நாட்டில் பிறந்து, எப்போது தலையில் குண்டு விழுமோ, இந்த பிள்ளைகளை எப்படி காப்பாற்றப் போகிறோமோ என்ற தவிப்பில் வாழ்பவர்கள் எத்தனை பேர்.
ஏன் அந்த துக்கம்?
முன்பு செய்த தீவினை.
கண் முன்னால் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகளை பார்க்க நேர்வது.
இங்கே தப்பி விடலாம் என்று எண்ணி தீவினை செய்யக் கூடாது.
சாட்சிகளை வாங்கிவிடலாம், சட்டத்தை வாங்கி விடலாம் என்று இறுமாந்து இருக்கக் கூடாது.
தேசிய நெடுஞ்சாலையில் அடி பட்டு குத்து உயிரும் குலை உயிருமாய் கிடக்கும் நாய்களை பார்க்கும் போது நினைவு வர வேண்டும். என்று செய்த தீவினையோ, இன்று வந்து மூண்டது என்று.
யாரும் தப்ப முடியாது.
நல்லதே செய்து கொண்டிருப்பான். வறுமை வாட்டும்.ஏன்? முன்பு செய்த தீ வினை.
இரண்டாவது,
தீயை தொட்டால், அது தொட்டவனை மட்டுமே சுடும். ஆனால் தீவினை இருக்கிறதே அது சுற்றத்தையும் நட்பையும் சுடும்.
ஒருவன் களவாடி பொருள் சேர்கிறான். ஒரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான். தண்டனை அவனுக்கு மட்டுமா?
அவன் மனைவிக்கு இந்த சமுதாயத்தில் என்ன அங்கீகாரம் கிடைக்கும்? அவன் மகனுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? அவன் மகளுக்கு எப்படி திருமணம் ஆகும்? அவன் பெற்றோர்கள் வெளியே தலை காட்ட முடியுமா?
எனவே தான் தீவினை , தீயை விட அஞ்சப்படும் என்றார்.
மற்றவன் எப்படியோ போகட்டும். நாம் செய்யும் தீவினை நம்மை வந்து சேரும் என்பதால், தீவினை செய்யாமல் இருப்பது நலம்.
அவன் செய்கிறானே, நல்லாத்தானே இருக்கிறான் , நானும் செய்தால் என்ன என்று நினைப்பவர்கள் , அவர்கள் வழி செல்லட்டும்.
நாம் நல் வழியில் செல்வோம்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_2.html
நல்லதொரு விளக்கம். அருமை.
ReplyDelete