திருக்குறள் - தவம்
நமக்கு எப்போதும் இன்பம் வேண்டும். இன்பம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, துன்பம் கொஞ்சம் கூட வந்து விடக் கூடாது என்று நினைக்கிறோம்.
நம்மால் சிறு துன்பத்தைக் கூட சகித்துக் கொள்ள முடிவதில்லை.
செல்லும் போது, போக்கு வரத்து நெரிசலில் சற்று கால தாமதம் ஆனால், எரிச்சலும், கோபமும் வருகிறது. என்ன இந்த நாடு, ஒரு சாலை வசதி இல்லை, ஒருவரும் சாலை விதிகளை கடை பிடிப்பது இல்லை என்று எல்லோர் மேலும் எரிச்சல் கொள்கிறோம்.
சின்ன தலைவலி வந்தால் போதும், "தலை வலி மண்டையே வெடித்து விடும் போல் இருக்கிறது, தலை வலி மண்டையைப் பிளக்கிறது " என்று அதை பெரிது படுத்தி அங்கலாய்க்கிறோம்.
ஏதோ ஒரு வரிசையில் நிற்கிறோம். அந்த வரிசை சற்று மெல்லமாக சென்றால், "என்ன இது, இவ்வளவு நேரம் ஆகிறது, வேலை தெரியாத ஆட்களைப் போட்டு நம் உயிரை வாங்குகிறார்கள் " என்று கோபிக்கிறோம்.
சிறிது நேரம் மின்சார தடை வந்தால் போதும். நாடு, மக்கள், நடை முறை (process ) என்று எல்லாவற்றின் மேலும் கோபம் கொள்கிறோம்.
பால் காய்ச்சும் போது பால் பொங்கி விட்டால், கோபம் வருகிறதா இல்லையா?
ஒரு சின்ன துன்பத்தைக் கூட சகிக்க முடியவில்லை.
அப்படியே வளர்ந்து விட்டோம். அப்படியே பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.
இப்படி இருந்தால், வாழ் நாள் முழுவதும் எப்போதும் எரிச்சல், கோபம், வெறுப்பு இதுதானே மிஞ்சும். ஏதாவது தடங்கல், ஏதாவது கால தாமதம் எங்காவது நிகழ்ந்து கொண்டே தானே இருக்கும்.
இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் பட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்குமா?
சரி, அதுக்கு என்ன செய்வது? போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால் கோபமும், எரிச்சலும் படாமல் என்ன செய்வது?
வள்ளுவர் வழி சொல்லித் தருகிறார்.
துன்பம் வரும். சின்ன துன்பங்கள், தடங்கல்கள், கால தாமதங்கள், தோல்விகள், நட்டங்கள் , ஏமாற்றங்கள் இவை எல்லாம் வாழ்வில் சாதாரணமாக நடக்கும். அவற்றை ஏற்று வாழப் பழக வேண்டும்.
துன்பத்தை எப்படி பழகுவது? இதுக்காக எங்காவது போய் எனக்கு துன்பம் செய்யுங்கள் என்று கேட்டு வாங்க முடியுமா?
முடியாது.
எனவே தான், நாமே நமக்கு சில துன்பங்களை வரவழைத்து அதில் இருந்து , அவற்றை அனுபவித்துப் பழக வேண்டும்.
எப்படி?
விரதம் இருப்பது என்பது அப்படிப்பட்ட ஒரு பழக்கம்.
பசிக்கும். உடம்பு சாப்பாட்டைக் கொண்டு வா என்று சொல்லும், "முடியாது..இன்று உனக்கு சாப்பாடு கிடையாது " என்று பழக்க வேண்டும். பசி ஒரு துன்பம் தான். அந்தத் துன்பத்தை ஏற்றுப் பழக வேண்டும்.
அது போல, தூக்கம் வரும். தூங்காமல் இருந்து பழகுவது.
குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது.
சூடாக இருக்கும் போது , குளிர் சாதனத்தை (air conditionar ) கொஞ்ச நேரம் கழித்து on செய்வது. மின் விசிறியை சற்று நேரம் கழித்து ஓட விடுவது. அந்த சிறிது நேரத்தில் உடம்பு சங்கடப்படும். படட்டும் என்று விட வேண்டும். அப்படி செய்து பழகி விட்டால், பின்னால் வேறு ஏதாவது துன்பங்கள் வந்தாலும், அவற்றை ஏற்று பழகி விடுவோம்.
காய்ச்சல் வந்தால், ஒரு நாள் பொறுத்துப் பழக வேண்டும்.
இது ஒரு விதத்தில் உடம்பை துன்பங்களுக்கு பழக்குவது.
இன்னொரு விதம் என்ன என்றால், பிறர்க்கு துன்பம் செய்யாமல் இருப்பது.
கணவனோ/மனைவியோ/உடன் பிறப்போ, கீழே வேலை செய்பவர்களோ, யாராவது நமக்குத் தவறு செய்தால், அவர்கள் மேல் எரிந்து விழாமல், அவர்களை திட்டாமல், வெறுக்காமல் (மனதளவில்) பொறுமை காப்பது. அதுவும் ஒரு வித பழக்கம்.
தனக்கு வந்த துன்பத்தைக் தாங்கிக் கொள்வது.
மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.
இது இரண்டும் தான் தவம் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு
பொருள்
உற்றநோய் = தனக்கு வந்த துன்பத்தை (நோய் = துன்பம்)
நோன்றல் = பொறுத்துக் கொள்ளுதல்
உயிர்க்கு = மற்ற உயிர்களுக்கு
உறுகண் = துன்பம்
செய்யாமை =செய்யாமல் இருப்பது
அற்றே தவத்திற்கு உரு = அது தான் தவத்தின் அடையாளம்
அவ்வளவுதான் தவம் என்பது.தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது. அவ்வளவு தான்.
அடுத்த முறை
- நீங்கள் நிற்கும் வரிசை மெல்லமாகப் போனால்
- போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால்
- ஏதாவது விடயத்தில் கால தாமதம் நிகழ்ந்தால்
- சிறு உடற் வலி ஏற்பட்டால்
- மற்றவர்கள் நாம் நினைத்தபடி செய்யாமல் இருந்தால்
கோபப் ப்டாமல் அமைதி காக்க. அப்படி இருப்பதே பெரிய தவம்.
தவம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று நினையுங்கள்.
கொஞ்சம் உடலையும் மனதையும் பழக்கப் படுத்துங்கள். திடீரென்று ஒரு துன்பம் வந்தால் அதை தாங்க முன்னமேயே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
துன்பத்தைத் தாங்க பயிற்சி வேண்டும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_12.html
மகிழ்ச்சியை அனுபவிக்க பயிற்ச்சி வேண்டாமா ? பல பேர் தங்கள் வாழக்கையில் எல்லாம் பெற்றும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள். மகிழ்ச்சிஅயை அனுபவிக்க பயிற்ச்சி வேண்டும்
ReplyDelete