திருக்குறள் - பிறனில் விழையாமை - 8 - பேராண்மை
(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலைத் தலங்களில் காணலாம்
முன்னுரை - https://interestingtamilpoems.blogspot.com/2022/06/blog-post_8.html
குறள் 141: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/1_10.html
குறள் 142: https://interestingtamilpoems.blogspot.com/2022/06/2.html
குறள் 143:https://interestingtamilpoems.blogspot.com/2022/06/3.html
குறள் 144 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/4.html
குறள் 145 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/5_19.html
குறள் 146 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/6_21.html
குறள் 147 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/7_23.html
குறள் 148 : https://interestingtamilpoems.blogspot.com/2022/06/8_24.html
)
ஆண்மை என்றால் வீரம், கம்பீரம், துணிவு, வலிமை என்று பொதுவாக பொருள் சொல்லலாம்.
வீரம் என்றால் பகைவர்களை வெல்வது, அவர்கள் வலிமையை ஒடுக்குவது என்று கொள்ளலாம்.
வெளியில் உள்ள பகையை வெல்வது எளிது. உள்ளே உள்ள பகையாகிய காமத்தை வெல்வது மிகக் கடினம்.
எனவே வள்ளுவர் வெளிப் பகையை வெல்வதை ஆண்மை என்றும், உள் பகையான காமத்தை வெல்வதை பேராண்மை என்றும் கூறுகிறார்.
இராவணன் ஆண்மை மிக்கவன்தான். வெளிப் பகை எல்லாம் வென்று , அடக்கி ஒடுக்கினான். ஆனால், உட்பகையான காமத்தை வெல்ல முடியவில்லை.
சீதையிடம் மண்டியிடுகிறான், காலில் விழுகிறான். கெஞ்சுகிறான். எங்கே போயிற்று ஆண்மை?
'இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்" தந்த இராமன் பேராண்மையால் உயர்ந்து நிற்கிறான்.
பாடல்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு
பொருள்
(pl click the above link to continue reading)
பிறன்மனை = மாற்றான் மனைவியை
நோக்காத = நோக்காத
பேராண்மை = பேராண்மை, பெரிய ஆண்மை
சான்றோர்க்கு = சான்றோருக்கு
அறனொன்றோ = அறன், காவல்
ஆன்ற ஒழுக்கு = நிறைந்த ஒழுக்கமும்
சான்றோருக்கு, மற்றவன் மனைவியை நோக்கமல் இருப்பது காவலும், அறமும் ஆகும் என்கிறார்.
இதில் பரிமேலழகர் செய்யும் நுணுக்கங்கள் சுவையானவை.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
"நோக்கா". மற்றவன் மனைவியை பார்க்காமல் இருப்பது என்று அர்த்தமா? அது முடியுமா? வேலைக்குப் போகிறோம். எவ்வளவோ திருமணம் ஆன பெண்கள் உடன் வேலை செய்கிரார்கள். அவர்களை எல்லாம் பார்க்கக் கூடாது என்றால் ஒன்று நாம் வேலைக்குப் போகக் கூடாது, அல்லது அவர்கள் வேலைக்கு வரக் கூடாது. அது முடியாத காரியம்.
நோக்குதல் என்றால் "உள்வாங்குதல்" என்று உரை செய்கிறார். இந்த இடத்தில் காமக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது என்று பொருள். ஆசையோடு பார்த்தல். ஒரு அர்த்தத்தோடு பார்த்தல்.
"அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்" என்பான் கம்பன். அங்கே காதல் இருந்தது.
மாற்றான் மனைவி மேல் வைப்பது காதல் அல்ல, காமம்.
"சான்றோருக்கு" அது என்ன குறிப்பாக சான்றோற்கு என்கிறார்? சான்றோர் என்றால் யார்? அனைத்து நல்ல குணங்களும் நிறைந்தவர்கள். குறை ஒன்றும் இல்லாதவர்கள். அவர்களைப் பார்த்து நாம் படிக்க வேண்டும்.
"அறனொன்றோ". அறன் புரிகிறது. அது என்ன "ஒன்றோ" ?
கொஞ்சம் இலக்கணம் படிப்போம். அப்போதுதான் அது புரியும்.
தமிழ் இலக்கணத்தில் "எண்ணிடை" என்று ஒன்று உண்டு.
அதற்கு முன் உருபு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
எழுத்து, சொல், வரி அல்லது வாக்கியம், பத்தி (para), கதை/கட்டுரை என்று விரிந்து கொண்டே போகிறது அல்லவா?
வீடு கட்டும் போது செங்கல் மேல் செங்கல் அடுக்கிக் கொண்டே போக முடியாது. இரண்டு செங்கல் ஒன்றை ஒன்று இறுக பற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நடுவில் கொஞ்சம் சாந்து வேண்டும். சிமென்ட் அல்லது காரை என்று சொல்லுவார்கள். அதை இரண்டு செங்கலுக்கு நடுவில் வைத்து கட்டினால் தான் கட்டிடம் உறுதியாக இருக்கும்.
அது போல இரண்டு சொற்களை கட்டுவதற்கு 'உருபு' என்ற ஒன்றைப் பயன் படுத்துகிறோம். து ஒரு இடைச் சொல். அது பற்றி ஒரு தனி புத்தகமே எழுதலாம்.
மிகவும் சுவையான பகுதி.
அவள் முகம் நிலவு இருந்தது
என்றால் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றுகிறது அல்லவா?
அவள் முகம் நிலவு போல இருந்தது
என்றால் சரியாக இருக்கிறது அல்லவா? இங்கே போல என்பது ஒரு உருபு.
இராமன் இராவணன் கொன்றான்
என்றால் சரியாக இருக்கிறதா? இல்லையே
இராமன் இராவணனைக் கொன்றான்
இப்போது சரியாக இருக்கிறது அல்லவா? இங்கே இராவணனை என்பதில் உள்ள 'ஐ' என்பது ஒரு உருபு.
அது பற்றி பின்னர் விரிவாக காண்போம்.
குறளுக்கு வருவோம்.
"அறனொன்றோ " என்பதில் 'ஒன்றோ' என்பது 'எண்ணிடை உருபு என்கிறார் பரிமேலழகர்.
ஒரு பட்டியல் இருக்கிறது என்றால், அது முழுமையாக தெரிந்து விட்டால் அதற்கு எண்ணிடை உருபை பயன் படுத்தலாம்.
உதாரணமாக
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் சுவையானவை.
இதில் 'ஆகிய' என்பது எண்ணிடை உருபு.
கண், வாய், செவி, மூக்கு, தோல் ஆகிய ஐந்து புலன்களும்
இயல் , இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்
என்று கூறும் போது அந்த பட்டியல் முடிந்து விடுகிறது. மொத்தமும் அவ்வளவுதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
எனவே, அங்கு எண்ணிடை உருபை பயன்படுத்தலாம்.
இங்கே
"அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு" என்பதில் அறமும், ஒழுக்கமும் ஆகிய இரண்டும் இந்த ஒன்றைச் செய்யாமையால் வரும் என்கிறார்.
ஒன்றோ என்பது எண்ணிடை உருபு.
இறுதியாக, அறம் செய்வது கடினமான காரியம். அறத்தின் வழி வாழ்வது என்பது கத்தி மேல் நடப்பது போல. மிக மிக எச்சரிகையாக இருக்க வேண்டும்.
ஆனால், சில சமயம் ஒன்றும் செய்யாமலேயே அற வழியில் நாம் செல்ல முடியும். சும்மா இருந்தால் போதும்.
உதாரணமாக, மற்றவன் பொருளை களவாடாமல் இருந்தால் அது ஒரு அறம்.
எடுக்காமல் இருந்தால் போதுமே.
பொய் சொல்லமால் இருந்தால் அது ஒரு அறம்.
அது போல, பிறன் மனை நோக்காமல் இருந்தால் அதுவே ஒரு அறம்.
எவ்வளவு எளிது !
" செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்"
என்று பரிமேலழகர் முடிக்கிறார்.
No comments:
Post a Comment