Wednesday, August 8, 2012

தேவாரம் - மருண்ட குரங்கு


தேவாரம் - மருண்ட குரங்கு 


திரு ஞானசம்மந்தர் சிறு வயதிலேயே ஞானம் பெற்று இறைவன் மேல் பாடத் தொடங்கியதாக வரலாறு.

சிறு வயதில் பாடினார் என்றால், அவர் பாடிய பாடலுக்கும் மாணிக்க வாசகர், நாவுக்கரசர் போன்றவர்கள் வயதான காலத்தில் பாடியதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

இருக்கிறது.

அது ஒரு அழகிய கோயில்.

மாலை நேரம். 

வானெங்கும் மழை மேகங்கள்.

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவன் மேல் பாடல்களை பாடிக் கொண்டே போகிறார்கள்.

கோவிலில் மாலை பூஜை தொடங்கும் நேரம்.

மணி அடிக்கிறது. தம  தம மத்தளம் முழங்குகிறது.

கோவிலில் நந்தவனத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன.
குரங்கில்லாத மரமா ?

மணி சத்தையும், மத்தள சத்தத்தையும் கேட்ட குரங்குகள் இடி இடித்து மழை வரப் போகிறதோ என்று மரங்களில் உச்சியில் ஏறி பார்க்கின்றன.

ஞான சம்பந்தர் சின்ன பையன். இந்த குரங்குகள் இப்படி மரமேறி முகில் பார்ப்பது அந்த பாலகனின் மனதை கொள்ளை கொள்கிறது.

பாடல் பிறக்கிறது. கொஞ்சு தமிழ்...அருவி போல் சல சலக்கும் வார்த்தைகள்...

படித்துப் பாருங்கள், உங்கள் மனத்திலும் மழை அடிக்கலாம்....




புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி
யலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங் கோவில்
வலம்வந்த மடவார்க ணடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே

சீர் பிரிப்போம்:

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்து ஐமேல் உந்தி
அலமந்த போது அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடனம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி
சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே

பொருள்:

புலன் ஐந்தும் = ஐந்து புலன்களும்

பொறி கலங்கி = கலக்கமுற்று

நெறி மயங்கி = வழி தெரியாமல்

அறிவு அழிந்து = அறிவு அழிந்து

ஐமேல் உந்தி = ஐந்து புலன்களும் உந்தித் தள்ள

அலமந்த போது = இறுதி காலம் வந்த போது

அஞ்சேல் என்று = அச்சப் படாதே என்று

அருள் செய்வான் = அருள் செய்யும் இறைவன்

அமருங் கோயில் = உறையும் கோவில்

வலம் வந்த =அந்த கோவிலை சுற்றி வரும்

மடவார்கள்  = பக்தர்கள்

நடனம் ஆட = நடனம் ஆட

முழவு அதிர = முரசு, மத்தளம் ஒலிக்க

மழை என்று அஞ்சி = ஏதோ மழை வரப்போகிறது என்று அஞ்சி

சில மந்தி = சில குரங்குகள்

அலமந்து = மாலை நேரத்தில்

மரமேறி  = மரத்தின் உச்சியில் ஏறி

முகில் பார்க்கும் = மழை மேகம் வருகிறதா என்று பார்க்கும்

திருவையாறே = திருவையாறே 

2 comments:

  1. வயதால் வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ, இந்தப் பாடல் மிக நல்ல பாடல்தான்.

    ReplyDelete
  2. நான் ஒரு எண்சீர் ஆசிரிய விருத்தம் எழுதும்பொழுது ’அலமந்து’ என்ற சொல் பயம்படுத்த எண்ணி, வலைத்தளத்தில் தேடிய பொழுது இப்பாடல் கிடைத்தது.

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    (காய் 4 / மா தேமா)

    புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்
    ..டைம்மே லுந்தி
    அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா
    ..னமருங் கோயில்
    வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர
    ..மழையென் றஞ்சிச்
    சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந்
    ..திருவை யாறே! 1

    130 திருவையாறு, முதல் திருமுறை, திருஞான சம்பந்தர் தேவாரம்

    ReplyDelete