Thursday, August 30, 2012

பெரிய புராணம் - முதல் பாடல்

பெரிய புராணம் - முதல் பாடல்

நீங்கள் எப்பவாவது கவிதை எழுத நினைத்ததுண்டா?

ஏதேதோ எழுத வேண்டும் என்று தோன்றும்...இதை எழுதலாமா, அதை எழுதலாமா ? இப்படி எழுதலாமா ? அப்படி எழுதலாமா ? என்று மனம் கிடந்து அலை பாயும்...ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது.

பெரிய பெரிய ஞானிகளுக்கே இந்த கஷ்டம் இருந்திருக்கிறது. 

இறைவனே நேரில் வந்து முதல் அடி எடுத்து தந்து இருக்கிறான்...

அருணகிரி நாதருக்கு "முத்தை தரு" என்று முதல் அடி எடுத்துத் தந்தான்.

குமர குருபரருக்கு "திகடசக்கரம்"என்று எடுத்துக் கொடுத்தான் முருகன். 

சேக்கிழாரும் முதல் அடி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். 

இறைவனே "உலகெல்லாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தான்.

சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின் முதல் பாடல்  


உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

சீர் பிரிப்போம் 

உலகு எல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் 

பொருள்

உலகு எல்லாம் = எல்லா உலகங்களிலும்
உணர்ந்து ஓதற்கு அரியவன் = உணர்ந்து ஓதுவதற்கு அரியவன். அவனை உணரவுதும் கடினம், உணர்ந்தபின் ஓதுவதும் கடினம். ஆனால் அதற்காக அவனை தேடுவதை நிறுத்தி விட வேண்டுமா ? இல்லை. 
நிலவு உலாவிய = நிலவு உலாவும்
நீர் மலி  = நீர் நிறைந்த
வேணியன் = அடர்ந்த ஜடா முடியன். ஓஹோ, அப்படியா, அவனை பார்க்க முடியுமா, தலையில் நீரோடு, நிலவோடு இருப்பானா ? ஆள் அடையாளம் தெரிந்து விட்டதால், அவனை பார்க்க முடியுமா ? இல்லை. 
அலகு இல் சோதியன் = ஒரு அளவு இல்லாத பிரமாண்டமான ஜோதியை போன்றவன்...அப்ப என்ன சொல்றீங்க...பாக்க முடியாதா ? அவரு ஒரு ஆள் இல்லை ...பெரிய ஜோதி...அப்படியா ? இல்ல.
அம்பலத்து ஆடுவான் = அம்பலத்தில் ஆடுவான் - ஓ, அப்படியா...அப்ப ஆள பார்க்கலாம் ?
மலர் சிலம்படி  = மலர் போன்ற, சிலம்பு அணிந்த திருவடிகளை 
வாழ்த்தி வணங்குவாம் = வாழ்த்தி பின் வணங்குவாம் 

சேக்கிழார் திணறுகிறார்...சொல்லவும் முடியவில்லை..சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை...


7 comments:

  1. பாட்டு பிரமாதம். விளக்கம் அதைவிடப் பிரமாதம்.

    அருமையான விளக்கம் தந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். தங்களின் கட்டுரைகள் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் அருமையாகவும் , புரியாத பல சந்தேகங்களுக்கு விடையாக இருந்து வருகிறது. தங்களின் தமிழ்த் தொண்டு வாழ்க.

    தாங்கள் இந்த கட்டுரையில் "குமர குருபரருக்கு "திகடசக்கரம்"என்று எடுத்துக் கொடுத்தான் முருகன்" என்று எழுதி உளீர்கள் . அது தவறு . திகடசக்கரம் என்று கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முருகன் எடுத்து கொடுத்து கந்த புராணத்தை பாட வைத்தார் . எனவே இதை உடனே திருத்தி அமையுங்கள்.


    "திருக்குறள் இளம் புலமையர் "
    கே.பி .ரோஹித்கணேஷ்
    (சொற்பொழிவாளர் , கட்டுரையாளர் )
    திருச்சி

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி. திருத்திக் கொள்கிறேன். எழுதும் போது பிழை நேர்ந்து விட்டது. மன்னிக்கவும்.

      Delete
  3. ஐய்யா,வணங்குவோம் என்றிராமல் வணங்குவாம் என்றிருக்கிறதே இரண்டிற்கும் ஒரே பொருளா?

    ReplyDelete
  4. சுட்டி காட்டியமைக்கு நன்றி. முதலில் பொருள் தெரியாமல் இருந்தது. நீங்கள் வினா எழுப்பிய பின் தேடினேன். தோன்றா எழுவாய் என்று ஒன்று இருக்கிறது என்பதை இன்று அறிந்தேன். யார் வணங்குவார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் (தோன்றாமல்) நிற்பதால் அது தோன்றா எழுவாய் எனப்படுகிறது. தொழுவோம் என்று இருந்தால் யார் தொழுகிறார்கள் என்று தெரிய வரும். நல்ல உத்தி. இதற்கு மேல் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  5. திகட சக்கரச் செம்முக மைந்துளான்
    சகட சக்கரத் தாமரை நாயகன்
    அகட சக்கர வின்மணி யாவுறை
    விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

    ReplyDelete