நள வெண்பா - பெண்மை அரசு
பெண்மை அரசாளுகிறது.
ரத, கஜ, துரக, பதாதி என்ற நால் வகை படை இருப்பது போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால் வகை படைகளோடு,
தன்னுடைய ஐந்து புலன்களும் அமைச்சர்கள் போல் வழி நடத்த,
காலில் அணிந்த கொலுசே முரசாக ஒலிக்க (அவள் வருவதை அறிவிக்கும்),
பத்தாதற்கு அவளுடைய கண்ணே வேல் படையாகவும், வாள் படையாகவும்,
அவள் நிலவு போன்ற முகமே வெண் கொற்ற குடையாகவும்
அவள் ஆட்சி செய்கிறாள்...
நால் குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்
வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்
ஆளுமே பெண்மை அரசு.
நால் குணமும் = அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களே
நால் படையா = நான்கு படையாக
ஐம்புலனும் = மெய், வாய், விழி, நாசி, செவி என்ற ஐந்து புலன்களும்
நல் அமைச்சா = நல்ல வழி நடத்தும் அமைச்சர்களாக
ஆர்க்கும் சிலம்பே = சப்தமிடும் கொலுசே
அணி முரசா = முரசாக
வேல் படையும் = கூரிய வேல் படையும்
வாளுமே = வாள் படையும்
கண்ணா, = கண்ணாக
வதன மதிக் = நிலவு போன்ற முகமே
குடைக் கீழ் = வெண் கொற்ற குடையாகக் கொண்டு
ஆளுமே பெண்மை அரசு. = பெண் என்பவள் ஆட்சி செய்கிறாள்
No comments:
Post a Comment