பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார்
இவ்வம்மையார் காரைக்காலில் உதித்ததால் இப்பெயர் பெற்றார். இவருடைய இயற்பெயர் புனிதவதி.
அற்பத்து மூன்று நாயன்மார்களில் 3 பெண்கள். அவர்களில் இவர் ஒருவர்.
அவர், பரமதத்தன் என்பவரை மணந்து இல்லறம் நடத்தி வந்தார்.
ஒரு நாள் பரம தத்தனின் கடைக்கு வந்த வணிகர்கள் அவரிடம் இரண்டு மாங்கனிகளை தந்தனர். அவரும், அதை தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த கனிகளை பெற்றுக் கொண்ட புனிதவதியார், மதியம் கணவன் உணவு உண்ண வரும்போது தரலாம் என்று அதை வைத்து இருந்தார்.
அப்போது பசியோடு ஒரு சிவனடியார் வந்தார்.
புனிதவதி அவருக்கு ஒரு மாங்கனியை உணவாக கொடுத்தார்.
பின், பரமதத்தன் உணவு உண்ண அந்த போது , மீதி இருந்த ஒரு மாங்கனியை அவருக்கு கொடுத்தார். அதன் சுவை மிக நன்றாக இருக்கவே, அவர் இன்னொரு மாங்கனியும் வேண்டும் என்று கேட்டார்.
புனிதவதியார், இறைவனை வேண்ட, சிவன் அருளால் அவருக்கு ஒரு மாங்கனி கிடைத்தது.
அதை பரமதத்தனுக்கு கொடுத்தார்.
இரண்டாவது மாங்கனியின் சுவை மிக மிக இனிமையாக இருக்கவே, இது ஏது என்று கணவன் கேட்ட போது பொய் உரைக்காமல் இறை அருளால் மாங்கனி கிடைத்ததை கூறினார்.
பரமதத்தன் நம்பவில்லை. அப்படியானால் இன்னொரு மாங்கனி இறைவனிடம் கேட்டு பெற முடியுமா என்று கேட்டான்.
அம்மையாரும் அவ்வாறே இறைவனை வேண்டி இன்னொரு மாங்கனி பெற்றுத் தந்தார்.
பரமதத்தன் மிரண்டு போனான்.
இந்தப் பெண் தெய்வாம்சம் நிறைந்த பெண் என்று எண்ணி, வேறு ஊருக்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான்.
இதை அறிந்த புனிதவதியார் அந்த ஊருக்கு உறவினர்களோடு சென்றார்.
அப்போது, பரமதத்தன் புனிதவதியின் காலில் விழுந்து ஆசி வேண்டினான்.
கணவன் தன்னோடு வாழ மாட்டான் என்று அறிந்து, இனி இந்த இளமையும் அழகும் தேவை இல்லை என்று எண்ணி, இறைவனை வேண்டி, உடலில் உள்ள தசைகளை துறந்து பேய் வடிவம் பெற்றார்.
அதைச் சொல்ல வந்த தெய்வப் புலவர் சேக்கிழார்
ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார்.
பொருள்
ஈங்கிவன் = இங்கு இவன் (கணவன்)
குறித்த கொள்கை = கொண்ட கொள்கை . அதாவது, புனிதவாதியான தன்னை ஒரு தெய்வப் பெண் என்று அவன் நினைத்த கொள்கை
இது = இந்த உடல்
இனி = இனிமேல்
இவனுக்காகத் = கணவனுக்காகத்
தாங்கிய = பெற்ற, கொண்ட
வனப்பு நின்ற= அழகு நின்ற
தசைப்பொதி = தசை என்ற சுமை
கழித்து = கழித்து, விடுத்து
இங்கு உன்பால் = இன்று உன்னிடம்
ஆங்குநின் தாள்கள் = அங்கு (கைலாய மலையில் ) உன் திருவடிகளை
போற்றும் = வணங்கும்
பேய்வடிவு = பேய் வடிவம் (பூத கணங்கள் )
அடியேனுக்குப் = அடியவனாகிய எனக்கு (புனிதவதியாருக்கு)
பாங்குற வேண்டும் = அழகுடன் வேண்டும்
என்று பரமர்தாள் பரவி நின்றார் = என்று இறைவனின் திருவடிகளை போற்றி நின்றார்.
இவர் இயற்றிய பாடல்கள் :
1. அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள்,
2. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்),
3. திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும்.
தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.
தமிழ் பாடல்களை இசை வடிவில் பாடியதில் இவரே முதன்மை பெறுகிறார்.
நேரம் இருப்பின், இந்த மூல நூல்களைப் படித்துப் பாருங்கள்.
அற்புதமான பாடல்கள்.
என்ன ஒரு சுவையான கதை!
ReplyDeleteஇந்த மாதிரி ஆகி விடும் என்றுதான் நான் என் இறை அம்சத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன்!!