இராமாயணம் - கற்று அறிந்தவர் என அடங்கி
இராமனும் சீதையும் வனத்தில் நடந்து செல்கிறார்கள். இராமன் இயற்கை காட்சிகளை சீதைக்கு காட்டிக் கொண்டே வருகிறான்.
"பெரிய யானைகளை அப்படியே விழுங்கும் மலைப் பாம்புகள், முனிவர்கள் மலையில் ஏறுவதற்கு எளிதாக படிகட்டுகள் போல வளைந்து வளைந்து கிடப்பதை பார் " என்று சீதைக்கு காட்டுகிறான்.
பாடல்
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பன-பாராய்!
பொருள்
இடி கொள் = இடியை விழுங்கியதைப் போல் சப்தம் எழுப்பும்
வேழத்தை = யானைகளை
எயிற்றொடும் = எயிறு என்றால் பல். இங்கு தந்தம்.
எடுத்து = எடுத்து
உடன் விழுங்கும் = அப்படியே விழுங்கும்
கடிய மாசுணம் = வலிமை மிக்க மலைப் பாம்புகள்
கற்று அறிந்தவர் = கற்று அறிந்தவர்கள்
என அடங்கிச் = போல அடங்கி
சடை கொள் சென்னியர் = சடை கொண்ட முனிவர்கள்
தாழ்வு இலர் = தாழ்வு இல்லாதாவர்கள்
தாம் மிதித்து ஏறப் = அவர்கள் மிதித்து ஏற
படிகளாம் = படிகளாக
எனத் தாழ்வரை = என தாழ்ந்து
கிடப்பன-பாராய் = கிடப்பதைப் பார்
கற்று - அறிந்தவர் என்று இரண்டு வார்த்தைகளை கம்பன் போடுகிறான்.
கல்வி வேறு , அறிவு வேறு.
கல்வி கற்று, பின் அறிவு பெற்றவர்கள் அடங்கி இருப்பார்கள்.
அடக்கம் இல்லாதவர்களைப் பார்த்தால், ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று.
அடக்கம் அறிவின் இலட்சணம்.
இரண்டாவது, அறிவு தவத்திற்கு ஒரு படி கீழே.
தவம், அறிவைத் தாண்டி மேலே போகிறது.
முதலில் கல்வி, பின் அறிவு, அதையும் தாண்டி தவம்.
No comments:
Post a Comment