இராமாயணம் - இராவணனின் இறை பக்தி
போருக்கு இராவணன் தயாராகிறான்.
போருக்கு முன்னால் அவன் அடைந்த இழப்புகள் ஏராளம்.
ஒரு தம்பி எதிரியிடம் சென்று விட்டான் (வீடணன்)
ஒரு தம்பி போர்க்களத்தில் மாண்டு விட்டான் (கும்பகர்ணன்)
மூத்த மகன் போரில் இறந்து விட்டான் (இந்திரஜித்து )
மாமன் மற்றும் பல உறவினர்களை இழந்து விட்டான்.
ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம், அவன் நிலையில் நாம் இருந்தால் நம் மன நிலை எப்படி இருக்கும்.
கவலை - துக்கம், அடக்க முடியாத துக்கம், எல்லோர் மேலும் கோபம், வெறுப்பு, ஏமாற்றம், என்று எல்லாம் இருக்கும்.
இதன் நடுவில் இறைவனை வழிபடத் தோன்றுமா ? மற்றவர்களுக்கு உதவத் தோன்றுமா ?
இராவணன் செய்தான்
ஈசனை வழிபடுகிறான். வேண்டுபவர்களுக்கு வேண்டியபொருள்களை தானம் தருகிறான். பின் போருக்குப் புறப்படுகிறான்.
பாடல்
ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான்
பொருள்
ஈசனை = சிவனை
இமையா முக் கண் இறைவனை = இமைக்காத மூன்று கண்களை கொண்ட இறைவனை
இருமைக்கு = இம்மைக்கும் மறுமைக்கும்
ஏற்ற = ஏற்புடைய
பூசனை முறையின் செய்து = பூசைகளை முறையாகச் செய்து
திரு மறை = உயர்ந்த மறைகளில்
புகன்ற தானம் = சொல்லப்பட்ட தானங்களை
வீசினன் இயற்றி = எல்லோருக்கும் கொடுத்து
மற்றும் = மேலும்
வேட்டன = ஆசைப்பட்டதை
வேட்டோ ர்க்கு எல்லாம் = ஆசைப் பட்டவர்களுக்கு எல்லாம்
ஆசு அற நல்கி = குற்றம் இல்லாமல் கொடுத்து
ஒல்காப் = தளராத
போர்த் தொழிற்கு அமைவது ஆனான் = போர் தொழிலுக்குப் புறப்பட்டான்
இப்படி ஈசனை வழிபடத் தெரிந்தவன், தானம் செய்ய அறிந்தவன் ஏன் முன்பு முனிவருக்கும் பிறருக்கும் கொடுமைகள் பல செய்தான்?
ReplyDeleteநீங்கள் சென்றுப் பார்த்தீர்களா?
Delete