Monday, March 17, 2014

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம்

இராமாயணம் - இராமன் மார்பில் பாய்ந்த சரம் 


யுத்த காண்டம்.

மாலையில் இராமன் கடற் கரையில் தனிமையில் இருக்கிறான்.

யுத்தம் வரப் போகிறது. எப்படி சண்டை இட வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய இடம்.

இராமனை சீதையின் நினைவு வாட்டுகிறது.

அவளைப் பற்றி நினைக்கிறான்.   அவன் உடல் சோர்வு அடைகிறது. காமத்தில் மெலிகிரான் .

அவன் மார்பும் தோளும் எவ்வளவு வலிமை மிக்கவை ? மேரு மலையை மத்தாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, மேரு மலை சாய்ந்தது. அதை பிடித்து நிறுத்த யாராலும் முடியவில்லை. அவர்களுக்கு வாலி உதவினான். அப்படிப்பட்ட பலம் கொண்ட வாலியின் நெஞ்சை ஒரே அம்பால் துளைத்த வலிமை கொண்டவன் இராமன்.

அது மட்டுமா ?

கரன் என்ற அரக்கனின் உயிரை கொண்டவன்.

அது மட்டுமா ?

ஏழு மரா மரங்களை ஒரே அம்பால் துளைத்த தோள் வலி கொண்டவன் இராமன்.

அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இராமனின் மார்பை மன்மதனின் அம்பு துளைத்தது.

அது மட்டும் அல்ல,

நிலவின் ஒளி என்ற வாளும் அவன் நெஞ்சில் பாய்ந்தது.

பாடல்

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய 
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன் 
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 

பொருள்

கரத்தொடும் = கையினால்

பாழி = வலிமையான, பெரிய

மாக் கடல் = பெரிய கடல்

கடைந்துளான் = கடைந்தவன் (வாலி)

உரத்தொடும் = அவன் வலிமையையும்

கரனொடும் = கரன் என்ற அரக்கனின் உயிரையும்

உயர ஓங்கிய = நீண்டு உயர்ந்து வளர்ந்த

மரத்தொடும் = மரா மரங்களையும்

தொளைத்தவன் மார்பில் = துளைத்தவன் மார்பில்

மன்மதன் = மன்மதன்

சரத்தொடும் = மலர் அம்புகளோடு

பாய்ந்தது = பாய்ந்தது

நிலவின் = நிலாவின்

தாரை வாள் = ஒளி என்ற வாள்

ஆணை செலுத்துவதும், அவனை சோர்வடையச் செய்வதும் - பெண் தான்.

எவ்வளவு பெரிய வலிமையான ஆளாக இருந்தாலும் (இராமன் உட்பட) பெண் மேல் கொண்ட  அன்பு / காதல் / காமம் ஆணை மென்மையாக்குகிறது.


No comments:

Post a Comment