Saturday, March 15, 2014

நாலடியார் - ஊடலும் உப்பும்

நாலடியார் - ஊடலும் உப்பும் 


ஊடல் என்பது உப்பு போல.

அது இல்லாவிட்டால் உணவு சுவைக்காது.

சரி, அதுதானே உணவுக்கு சுவை சேர்க்கிறது என்று நினைத்து, சற்று அதிகமாக உணவில் உப்பை சேர்த்தால், உணவை வாயில் வைக்க முடியாது.

மிக மிக எச்சரிக்கையோடு உப்பை சேர்க்க வேண்டும்.

விலை மலிவு தான் என்று அள்ளிப் போடக் கூடாது.

ஊடல் கொள்வது எளிதுதானே என்று எப்ப பார்த்தாலும் துணைவன் அல்லது துணைவியோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

சமைப்பவர்களுக்குத் தெரியும், உணவில் உப்பு சற்று கூடி விட்டால் அதை சரி செய்வது எவ்வளவு கடினம் என்று. என்ன தான் சரி செய்தாலும் உணவில் நல்ல சுவை வராது. ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருக்கும்.

ஊடலும் அப்படித்தான். சற்று கூடி விட்டால் வாழ்க்கை நெருடத் தொடங்கிவிடும்.

எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் சுவையின் அளவைப் பொருத்தது. சிலருக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும். சிலருக்கு கொஞ்சம் குறைய வேண்டும். சுவை அறிந்து உப்பை சேர்க்க வேண்டும்.

எனவே தான், இலையின் ஓரத்தில் உப்பை வைத்து விடுவார்கள். யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளட்டும் என்று.

ஊடலும் அது போலத்தான். சுவை அறிந்து சேர்க்க வேண்டும்.

"அவளை கண்டு , அவளை அணைக்கா விட்டால் அவள் வாடிப் போவாள். கண்ட பின், கொஞ்சம் ஊடல் கொள்வாள். அந்த ஊடல் காதலில் உப்பு போல. ஊடல், காதலில் ஒரு வழி"

பாடல்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

பொருள்

முயங்காக்காற் = அவளை கண்டு அணைக்கா விட்டால் 

பாயும் = உடனே பாய்ந்து வரும் 

பசலை = பிரிவு துயரில், பெண்ணின் உடல் நிறம் மாறும் என்கிறார்கள். நிறம் மாறுமோ இல்லையோ, கொஞ்சம் வாடிப் போகும் என்று கொள்ளலாம்.

மற் றூடி = மற்று ஓடி = மற்ற படி ஊடல் கொண்டு

உயங்காக் கால் = உயங்குதல் என்றால் வாடுதல், மெலிதல், சோர்தல் என்று பொருள். ஊடல் கொண்டு வாடாவிட்டால் 

உப்பின்றாம் காமம் = காமம் உப்பு சப்பு இல்லாமல் போய் விடும்


வயங்கு = வயங்குதல் என்றால் ஒளி வீதல். சிறந்து இருத்தல் 

கோதம் = ஓதம் = ஓதம் என்றால் கடலின் நீர் பெருக்கம். சில சமயம் கடல் நீர் பொங்கி ஆற்றில் உள் நோக்கி வரும். அந்த மாதிரி இடங்களுக்கு  ஓதம் பொங்கும் முகம் என்று பெயர்.  (Backwaters )

நில்லாத் =  நில்லாமல்

திரையலைக்கும் = திரை என்றால் அலை. அலை அடித்துக் கொண்டே இருக்கும்

நீள்கழித் = நீண்ட ஆற்றின் கரை

தண் = குளிர்ச்சி உடைய

சேர்ப்ப! = தலைவா

புல்லாப் = புல்லுதல் என்றால் அணுகுதல், அணைத்தல் 

புலப்பதோர் = புலத்தல் என்றால் ஊடுதல்

ஆறு = வழி

ஊடலும் கூட கூடலுக்கு ஒரு வழிதான் என்கிறது நாலடியார்.





 

No comments:

Post a Comment