சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்
ஒரு ஆகாய விமானம் எப்போது அதிக பட்ச விசையை செலவிடும் ?
அது தரையில் ஓடி, பறக்கத் தொடங்கும் அந்த நேரத்தில், தரையை விட்டு வானை நோக்கித் தாவும் அந்த நேரத்தில் அதிகபட்ச விசை தேவைப்படும்.
அது போல, நாம் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால், தொடக்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன், மிகுந்த பலத்துடன் தொடங்க வேண்டும்.
ஆரம்பத்திலேயே, இது எங்க உருப்படப் போகுது என்று சோர்வோடு ஆரம்பித்தால், அந்த காரியம் சரியாக நடக்காது.
அனுமன், மகேந்தர மலையில் இருந்து கிளம்புகிறான்.
என்ன ஒரு உத்வேகம், செய்யத் தொடங்கிய வேலையில் என்ன ஒரு உற்சாகம், ஒரு புத்துணர்வு....
அங்குள்ள குகைகள் எல்லாம் நசுங்கி, அவற்றில் உள்ள பாம்புகள் நெளிந்து நெளிந்து வெளியே வந்தன. அப்படி ஒரு அழுத்தம் கொடுத்து வேலைக்கு கிளம்புகிறான்.
பாடல்
வன்தந்தவரிகொள் நாகம்,
வயங்குஅழல் உமிழும் வாய,
பொன்தந்தமுழைகள்தோறும்
புறத்து உராய்ப் புரண்டு போவ -
நின்று, அந்தம்இல்லான் ஊன்ற -
நெரிந்துகீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன்வயிறு கீறிப்
பிதுங்கினகுடர்கள் மான.
பொருள்
வன் தந்த = தந்தம் என்றால் பற்கள். வன்மையான பற்களை உடைய
வரி கொள் நாகம் = வரி வடிவம் போன்ற நாகப் பாம்புகள் அல்லது உடலில் வரிகளைக் கொண்ட பாம்புகள்
வயங்கு = விளங்கும்
அழல் = தீயை
உமிழும் வாய = வெளிவிடும் வாய்
பொன் தந்த = பொன் தரும்
முழைகள்தோறும் = குகைகள் தோறும்
புறத்து = வெளியே
உராய்ப் புரண்டு போவ = உராய்ந்து கொண்டு புரண்டு போயின
நின்று = நின்று
அந்தம்இல்லான் = முடிவு இல்லாத (சிரஞ்சீவி ) அனுமன்
ஊன்ற = ஊன்றி எழும்பி
நெரிந்து கீழ் = அமுக்கி , கீழ் நோக்கி
அழுந்தும் = அழுந்தும்
நீலக் குன்றம் = நீல நிறக் குன்றம்
தன்வயிறு கீறிப் = தன் வயிறு கீறி
பிதுங்கின குடர்கள் மான = குடல்கள் வெளியே வந்தன
.
மலைகளின் குடல்கள் போலப் பாம்புகள் இருந்தனவோ?
ReplyDelete