Pages

Monday, March 30, 2015

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்




வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்

    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.


இந்த பாடலைப் பற்றி நான் ஏதாவது எழுதினால் அது அந்த பாட்டுக்குச் செய்யும் அவ மரியாதை என்றே நினைக்கிறேன்.

இப்படியும் கூட கவிதை செய்ய முடியுமா ? 

இராமாயணத்தின் சாரம் இந்த பாடல். 

இறை தத்துவத்தின் சாரம் இந்தப் பாடல்.

இரண்டு நாளாய் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்  கொண்டு இருக்கிறேன்.   

எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. 

இந்தப் பாடலை முழுவதும் வாசிக்க  முடிந்தால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். 





 

Sunday, March 29, 2015

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது 


இன்று பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்கின்றன. இதற்கு யார் காரணம் என்று சர்ச்சைகள் எழுகின்ற போது , பெண்களும் காரணம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.  பெண்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றக் கூடாது, என்றெலாம் சொல்கிறார்கள்.

அந்த விவாதங்கள் ஒரு புறம்  இருக்கட்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட ஆசாரக் கோவை ஆணிடம் சொல்கிறது...ஒரு பெண்ணோடு தனித்து இருக்காதே என்று. அதுவும் எந்தெந்த பெண்களோடு தெரியுமா ...சொன்னால் நம்மால் அதை ஜீரணிக்கக் கூட முடியாது..

பெற்ற தாய்,  மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு கூட தனித்து இருக்காதே...ஏன் என்றால் ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்கிறது.

இவர்களோடு தனித்து இருக்காதே என்று சொன்னது ஆணுக்குத்தான் என்றாலும், ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்று சொன்னது இருவருக்கும்  பொருந்தும்.

புலன்கள் கட்டவிழ்த்து கொண்டால் அது தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பார்க்காது. கணவனுக்கும் தகப்பனுக்கும் வேற்றுமை தெரியாது.

சிந்தக்க கொஞ்சம் விரசமாகத்தான் இருக்கும். இருந்தும், புலன்களின் வேகத்தை  அறிந்து, எதற்கு வம்பு, தனியாக இருக்காதே என்று அறிவுறுத்துகிறது  ஆசாரக் கோவை.

இன்றும் கூட பல வீடுகளில் வயதுக்கு வந்த அண்ணன் தங்கை, அக்கா தம்பி இவர்களை தனியே விட்டு விட்டு பெற்றோர் செல்ல மாட்டார்கள். வயதின் தாக்கம், இளமையின் வேகம், வரம்பு மீறச் செய்யலாம் என்ற பயம்.

 தாய், மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு தனித்து இருக்கக் கூடாது என்றால் முன் பின் அறியாத வேறு எந்த பெண்ணுடன்   தனித்து இருக்கலாமா ?  கூடாது.

அறிவுக்குத் தெரியும் இது தாய், மகள், தமக்கை என்று. புலன்களுக்குத் தெரியாது.

அலுவலகம் ஆனாலும் சரி, மற்ற இடமானாலும் சரி, வேற்று ஒரு பெண்ணோடு தனித்து இருப்பதை தவிர்ப்பது நலம்.

குரான் சொல்கிறது , மனைவி இல்லாத மாற்று பெண்ணோடு தனித்து இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் சாத்தான் அமர்ந்து இருப்பான் என்று.

பாடல்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந்
தாங்கற் கரிதாக லான்.

பொருள்

ஈன்றாள் = தாய்

மகள் = மகள்

தம் உடன்பிறந்தாள் = உடன் பிறந்த அக்கா தங்கை

ஆயினும் = ஆனாலும்

சான்றார் = பெரியவர்கள், படித்தவர்கள், நல்லவர்கள்

தமித்தா உறையற்க = தனித்து இருக்கக் கூடாது

ஐம்புலனுந் = ஐந்து புலன்களும்

தாங்கற் கரிதாக லான் = கட்டுப் படுத்துவதற்கு கடினமானவை என்பதால்

மற்ற பெண்களோடு தனித்து இருப்பதை தவிருங்கள்

அந்த மாதிரி சந்தர்பங்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தராதீர்கள்


இந்த மாதிரி பாடல்களை பள்ளியில் , இளமைக் காலத்தில் சொல்லித் தந்து விட்டால், பின்னர் அது தானாகவே வந்து விடும். பின்னாளில், ஆணும் பெண்ணும் தனித்து இருக்கும் சந்தர்பங்களில்  இது சரியில்லை என்ற எண்ணம்  அவர்களுக்கு தானாகவே வந்து விடும். 

தவறு செய்ய சந்தர்ப்பம் வராது.

நாம் சொல்லித் தருவது இல்லை.

சிக்கல்களை சந்திக்கிறோம்.  

Saturday, March 28, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எப்படி மறப்பேன் ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எப்படி மறப்பேன் ?


காதல் வயப் பட்டவர்களுக்கு அவர்களின் காதலனையோ காதலியையோ ஒரு நிமிடம் கூட மறக்க முடியாது. எப்போதும் அவர்கள் சிந்தனையாகவே இருப்பார்கள். உண்ணும் போதும், உறங்கும் போதும் அவர்கள் நினைவே வந்து வந்து போகும். வேறு ஒன்றிலும் ஆர்வம் இருக்காது. மீண்டும் எப்போது அவர்களைப் பார்ப்போம் என்று தவித்துக் கொண்டு  இருப்பார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்...


ஸ்ரீரங்கம் போய் இருக்கிறீர்களா ?

அகண்ட காவேரி ஆறு. மழைக் காலத்தில் இன்றும் நீர் இரு கரையும் தொட்டுப் போகும். பொங்கி பொங்கி வரும் நீர். அந்த ஆற்றின் நடுவில் உள்ள தீவு ஸ்ரீரங்கம். ஊரெல்லாம் சோலை. இன்று அந்த சோலை எல்லாம் மாறி வீடுகள்  வந்து விட்டன. ஊரின் நடுவில் கோவில்.கோவிலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள். பெருமாளை காண்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். மனம் அப்படியே இலயித்துப்  போகிறார்.

அந்த உருவமே மீண்டும் மீண்டும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. வேறு ஒன்றிலும் மனம் போக மறுக்கிறது. வேறு எதிலும் ஆர்வம் இல்லை. பணம், பொருள், சொத்து , சுகம் என்று எதிலும் பற்று இல்லை. ஒன்றும் இல்லாத ஏழையேனே என்று தன்னைத் தானே  குறிப்பிடுகிறார்.


பாடல்  

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

சீர் பிரித்த பின்

கங்கயில்  புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தன்னுள் 
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே 

பொருள்

கங்கயில் = கங்கையை விட

புனிதமாய = புனிதமான

காவிரி நடுவு பாட்டு = காவிரிக்கு நடுவில்

பொங்கு நீர் = பொங்கி வரும் நீர்

பரந்து பாயும் = பரந்து விரிந்து அனைத்து இடங்களிலும் பாயும்

பூம்பொழில் = பூக்கள் நிறைந்த சோலைகளில் உள்ள 

அரங்கத்தன்னுள் = திருவரங்கத்தில்

எங்கள் மால் = எங்கள் திருமால்

இறைவன் = இறைவன்

ஈசன் = ஈசன்

கிடந்ததோர் = படுத்து இருக்கும்

கிடக்கை கண்டும் = கோலத்தைக் கண்ட பின்

எங்ஙனம் மறந்து வாழ்கேன் = அந்தக் கோலத்தை எப்படி மறந்து வாழ்வேன்

ஏழையேன் ஏழையேனே = ஏழையேன் ஏழையேனே

இறை சிந்தனை என்பது எப்போதும் இருக்க வேண்டும்.

துன்பம் வரும்போது நினைப்பது, நாள் கிழமை வந்தால் நினைப்பது, காலை மாலை பூஜை நேரத்தில் நினைப்பது என்று நமக்கு வேண்டிய அல்லது சரிப்பட்ட நேரத்தில் நினைப்பது அல்ல.

மாணிக்க வாசகர் சொல்லுவார் "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். 



Thursday, March 26, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அணிலம் போலேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அணிலம் போலேன் 


முதியோர்  இல்லத்துக்கு, அனாதை பிள்ளகைளை பராமரிக்க, ஏழை குழந்தையின் மருத்துவ செலவுக்கு என்று எத்தனையோ நன்கொடை வேண்டி விளம்பரங்கள் வரும்.

கொடுத்து உதவலாம் என்று நினைப்போம். ஆனால் ஏனோ மறந்து போகும். கொடுக்கக்  கூடாது .என்றில்லை..மற்ற விஷயங்களில் மூழ்கி இதை மறந்து போவோம்.

நம்மால் ஒரு அனாதை ஆசிரமம் எடுத்து நடத்த முடியாது. யாரோ செய்கிறார்கள், நம்மால் ஆனதை செய்வோம் என்று நினைப்போம்...செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இராமர் இலங்கைக்குப் போக பாலம்  கட்டினார்.குரங்குகள் எல்லாம் மலையைப் பிளந்து கல்லைக் கொண்டு வந்து போட்டு பாலம் செய்தன.

அங்கு ஒரு அணில்  இருந்தது.நாமும் இராமருக்கு ஏதாவது உதவி செய்வோம் என்று நினைத்து, ஓடிச் சென்று கடலில் மூழ்கும்.  அதன் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொள்ளும்.

கரைக்கு ஓடி வந்து உடலை குலுக்கி அந்த மண்ணை கீழே தட்டி விடும். இப்படி கடலின் மண்ணை எல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடலாம் என்று அந்த அணில் எண்ணியது. இராமருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம்.

அந்த அணிலுக்கு இருந்த நல்ல உள்ளம் கூட எனக்கு இல்லையே என்று வருந்துகிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

பாடல்

குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே.

பொருள்

குரங்குகள் = வானரங்கள்

மலையை தூக்கக்  = மலையை பிளந்து கல்லைத் தூக்கி வந்து பாலம் போட

குளித்துத் = கடலில் குளித்து

தாம் = தான்

புரண்டிட் டோடி = புரண்டு இட்டு ஓடி

தரங்கநீ ரடைக்க லுற்ற = அலையும் கடலை அடைக்க நினைத்து

சலமிலா = சலனம் இல்லாத (இது முடியுமா முடியாதா என்ற சந்தேகம் இல்லை)

அணிலம் போலேன் = அணில் போல கூட இல்லாத நான்

மரங்கள்போல் = மரத்தைப் போல

வலிய நெஞ்சம் = வன்மையான மனத்தைக் கொண்ட

வஞ்சனேன் = வஞ்ச மனம் உள்ள நான்

 நெஞ்சு தன்னால் = மனதில்

அரங்கனார்க் காட்செய் யாதே = அரங்கனுக்கு ஆட் செய்யாமல்

அளியத்தே னயர்க்கின் றேனே. = அனாவசியமாக வாழ் நாளை வீணடிக்கின்றேனே

நல்ல காரியம் ஏதாவது செய்கிறோமா ?

நல்ல காரியங்களுக்கு உதவி செய்கிறோமா ?

தொண்டரடி தன்னைத் தானே கேட்டு அயர்ந்தார்.

நாமும் கேட்போம்.



ஆசாரக் கோவை - தூங்கும் முறை

ஆசாரக் கோவை - தூங்கும் முறை 


படுக்கப் போகும் முன் எதை நினைத்துக் கொண்டு படுக்கிறோமோ  அதுவே கனவில் வரும்....

இறைவனை கனவிலும் காண வேண்டும்.

ஆண்டாள் அப்படி கண்டாள் ...திருமாலை "கனா கண்டேன் தோழி நான்" என்று பாடினாள். அவனையே நினைத்துக் கொண்டு இருந்தாள், கனவிலும் அவன் வந்தான்.

இன்றோ, பெரியவர்களும் சிறியவர்களும் படுக்கப் போகு முன் தொலைக் காட்சியில் வரும் நிகழ்சிகளைப் பார்க்கிறார்கள். சினிமா, செய்தி என்று பார்த்து விட்டு படுத்தால் அது தான் கனவில் வரும்.

ஆசாரக் கோவை சொல்கிறது,

படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல்மேல் போர்த்தி உறங்குவது நல்லது என்று.

பாடல்


கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

பொருள்

கிடக்குங்காற் = படுக்கும் போது

கைகூப்பித் = கைகளை கூப்பி

தெய்வந் தொழுது = தெய்வத்தை தொழுது

வடக்கொடு = வட திசை மற்றும்

கோணந் = கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு)

தலைசெய்யார் = தலை வைக்காமல்

மீக்கோள் = போர்வை

உடற்கொடுத்துச் = உடலுக்குக் கொடுத்து

சேர்தல் வழி = தூங்குதல் நல்ல வழி

ஒரு நாள் செய்து பாருங்கள். நல்லா இருந்தால் பின் பற்றுங்கள்.


ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது

ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது 


சாப்பிட்டு முடிந்த பின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்பதற்கு ஒரு பாடல். 

இதில் என்ன இருக்கிறது, தண்ணிய வாயில் ஊத்த வேண்டும், கொப்பளிக்க வேண்டும்...இதில் என்னய்யா பெரிய வழி முறை என்று கேட்கிறீர்களா...

Finger Bowl ல், மேஜையில் அமர்ந்து கை கழுவி, வாய் கொப்பளிக்காமல் இருக்க அல்லவா நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்திருக்கிறோம். 

உணவு உட்கொண்டபின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை...

வாயில் ஊற்றிய தண்ணீர் உடலுக்கு உள்ளே போகக் கூடாது. 

தொண்டை வரை நீர் சென்று சுத்தம் செய்ய வேண்டும்

மூன்று முறை நீர் கொப்பளிக்க வேண்டும் 

நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதுவும் எப்படி என்றால் கண், காது , மற்றும் மூக்கு போன்ற அவயங்களை அழுத்தி கழுவ வேண்டும்.


பாடல் 

இழியாமை நன்குமிழ்ந் தெச்சி லறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

சீர் பிரித்த பின் 

இழியாமை நன்கு உமிழ்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்து உறுப்பு 
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

பொருள் 

இழியாமை = இழிதல் என்றால் இறங்குதல். வாயில் விட்ட நீர் உடலுக்கு உள்ளே இறங்கக் கூடாது 

நன்கு உமிழ்து = நல்லா துப்பி 

எச்சில் அறவாய் = வாயில் எச்சில் இல்லாமல் துப்பி 

அடியோடு நன்கு துடைத்து = அடி நாக்கு வரை நன்கு துடைத்து (நீரால் கொப்பளித்து)

வடிவு உடைத்தா = அளவோடு 

முக்காற் = மூன்று முறை 

குடித்துத் துடைத்து = நீரை உண்டு வாய் கழுவி 
 
முகத்து உறுப்பு = முகத்தில் உள்ள உறுப்புகள் (கண், காது , மூக்கு போன்றவை) 
 
ஒத்த வகையால் = அதற்கு பொருந்தும் வகையில் 

விரல் உறுத்தி = விரலால் அழுத்தி 

வாய் பூசல் = வாய் கழுவுதல் 

மிக்கவர் கண்ட நெறி = பெரியவர்கள் கண்ட வழி 

செய்து  பார்ப்போம்.  அப்படி ஒன்றும் பெரிய வேலையாகத் தெரியவில்லை. 

நல்லதை முயன்று பார்த்தால் என்ன ?





Wednesday, March 25, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ ?



இலக்கியங்களை, அதிலும் குறிப்பாக பக்தி இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும் ? அவற்றைப் படிப்பதால் என்ன நன்மை ?

அதில் அறிவு பூர்வமாக என்ன இருக்கிறது ? கடவுளைப் பார்த்து நீ பெரிய ஆள், உன்னைப் போல் உண்டா, நீ அதைச் செய்தாய், இதை செய்தாய், நீ இப்படி இருக்கிறாய், நீ அப்படி இருக்கிறாய் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன இருக்கிறது.

மிஞ்சி மிஞ்சி போனால் கொஞ்சம் நிலையாமை, மற்றவர்களுக்கு உதவுவது என்பது பற்றி கொஞ்சம் உபதேசம் இருக்கும்.

இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று சலிப்பு வரலாம்.

அதிலும் இன்றுள்ள இளைய தலைமுறை, அறிவியல், தர்க்கம், கணிதம் என்று படித்த இளைய தலைமுறை இந்த பக்தி இலக்கியம் எல்லாம் bore என்று தள்ளி விடலாம்.

அப்படி என்னதான் இருக்கிறது இதில் ?

நமக்கு துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?

துவண்டு போவோம், வருந்துவோம், நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் வருகிறது என்று நொந்து கொள்வோம், எப்படி இதை சமாளிக்கப் போகிறோமோ என்று திகைப்போம்...சில சமயம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விடலாமா என்று தோன்றும், சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்....

இந்த இலக்கியங்களை படிக்கும் போது துன்பங்களை தாங்கி, அவற்றை தாண்டிச் செல்ல  மனம் பக்குவப் படுகிறது. பழக்கப் படுகிறது.

இராமனுக்கு அரசை தருவதாக முதல் நாள் சொன்ன தசரதன் மறு நாள் இராமனை காட்டுக்கு அனுப்பி விடுகிறான்.

இராமன் எப்படி எல்லாம் துன்பப் பட்டிருப்பான் என்பதை தசரதனின் மன நிலையில் இருந்து குலசேகர ஆழ்வார்  உருகுகிறார்.

பிள்ளையை ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்த பின் தவிக்கும் பெற்றோரின் மனம் போல புலம்புகிறது.

பிள்ளைக்கு ஒரு துன்பம் என்றால் எந்த பெற்றோருக்கும் வருத்தம் வரத்தான் செய்யும்.

அதுவும், அந்த துன்பம் ஒரு தகப்பனால் ஒரு பிள்ளைக்கு வந்தது என்றால் அந்த தகப்பன் எப்படி துடித்துப் போவான் ?

அதை விடவா நமக்கு ஒரு துன்பம் வந்து விடும் ?


மெல்லிய பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கி பழக்கப் பட்டவன் நீ. எப்படித்தான் இந்த கல்லின் மேல் படுத்து உறங்குவாயோ என்று உருகுகிறான் தசரதன்.

அவனை விடவா நமக்கு ஒரு துன்பம் வந்து விடும்...பெற்ற பிள்ளையை காட்டுக்கு அனுப்பியதை விடவா ஒரு துன்பம் இருக்கும் ?

பாடல்

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே


பொருள்

கொல்லணை = கொல்லும்

வேல் = வேல் போன்ற கூறிய

வரிநெடுங்கண் = நீண்ட கண்களை கொண்ட

கோசலைதன் = கோசலையின்

குலமதலாய் = குளத்தில் தோன்றிய பிள்ளையாய்

குனிவில் லேந்தும் = வளைந்த வில்லை ஏந்தும்

மல்லணைந்த = வலிமையான

வரைத்தோளா = மலை போன்ற பெரிய தோளை  உடையவனே 

வல்வினையேன் = பொல்லா வினயை உடைய நான்

மனமுருக்கும் வகையே கற்றாய் = மனம் உருகும் வகையே கற்றாய்

மெல்லணைமேல் = மெல்லிய படுக்கையில்

முன்துயின்றாய் = முன்பு துயின்றாய்

இன்றினிப்போய் = இன்று இனிப் போய்

வியன்கான மரத்தின் நீழல் = பெரிய கானகத்தில் மரத்தின் நிழலில்

கல்லணைமேல் = கல் தரையில்

கண்டுயிலக் கற்றனையோ  = கண் துயில என்று கற்றாய்

காகுத்தா = காகுந்தன் என்ற பரம்பரையில் வந்தவனே

கரிய கோவே = கரிய நிறம் கொண்ட அரசனே

காலம் எப்படி மனிதனைப் புரட்டிப் போடுகிறது.

இராமனுக்கே இந்த கதி என்றால் நாம் எம்மாத்திரம்.

அரசு வந்து விட்டது என்று ஆடவும் இல்லை.

அரசு போய் விட்டதே என்று அழுது புலம்பவும் இல்லை.

இந்த நிதானத்தை சொல்லித் தருவது இலக்கியம்.

துன்பத்தை தாங்கும் சக்தி தருவது இலக்கியம்.

அந்த சக்தி வேண்டாமா ?



Tuesday, March 24, 2015

ஆசாரக் கோவை - எதை எப்போது உண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை - எதை எப்போது உண்ண வேண்டும் ?


பசி என்றால் என்ன ? எப்போது பசி வருகிறது ? உணவு உண்டவுடன் பசி போய் விடுகிறதே எப்படி ?

நமது இரத்தத்தில் சர்கரையின் அளவு குறைந்தால், பசி  எடுக்கும். நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களும் வேலை செய்ய ஆதாரமாய் இருப்பது சர்க்கரை (glucose ). இந்த சர்க்கரையை உடம்பில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் கொண்டு செல்வது இரத்தம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும், சர்க்கரை கொண்டுவா சர்க்கரை கொண்டுவா என்று சத்தம் போடும். அந்த சத்தம் தான் பசி.

நாம் உணவு உண்ண ஆரம்பித்தவுடன் சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் சேர்கிறது. சர்க்கரையின் அளவு அதிக பட்ச்சத்தை அடைந்தவுடன் பசி உணர்வு நின்று போகிறது.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது , கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையின் அளவு இரத்தத்தில் கூடும். அது முழுவதும் சேர்வதற்குள் நாம் தேவைக்கு  அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.

நவீன அறிவியல் , சாப்பிட்டு முடிந்து 20 நிமிடம் கழித்துதான் அந்த திருப்தி உணர்வு வருகிறது என்கிறது.

நாம் என்ன செய்கிறோம், அந்த 20 நிமிட இடை வேளையில் இனிப்பு, ஐஸ் கிரீம் என்று மேலும் இனிப்பை உள்ளே தள்ளுகிறோம்.

இரத்தத்தில் ஏற்கனவே உச்ச பச்ச இனிப்பு இருக்கும் போது மேலும் இனிப்பு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேரும்.

எனவே, முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பு, இடையில் மற்ற சுவைகளை சேர்க்க வேண்டும்.


ஆசாரக் கோவை சொல்கிறது,

முதலில் இனிப்பை சாப்பிட வேண்டும், கடைசியில் கசப்பானவற்றை உண்ண வேண்டும். மற்றவற்றை இவை இரண்டுக்கும் இடையில் உண்ண வேண்டும் ?


பாடல்

கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
துய்க்க முறைவகையா லூண்.

பொருள்

கைப்பன = கசப்பது

வெல்லாங்  = எல்லாம்

கடை = கடைசியில்

தலை =  முதலில்

தித்திப்ப = இனிப்பு

மெச்சும் வகையா = புகழும் படியாக

ஒழிந்த = மற்றவைகள்

விடையாகத் = இடையில் 

துய்க்க  = உண்க

முறைவகையா லூண் = இது முறையாக உண்ணும் முறை

eat the desert first


பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள்

பெரிய புராணம் - சார்ந்து நின்ற பொங்கிய இருள் 


இறைவனை யார் அடையலாம் ? அவனை அடைவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா ? இந்த குலத்தில் பிறந்திருக்க வேண்டும், இந்த புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், இந்த இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை கடை பிடித்திருக்க வேண்டும் என்று பட்டியல் இருக்கிறதா ?

அப்படி இருப்பதாய் பல பேர் சொல்லித் திரிகிறார்கள்.

அது போகட்டும், இறைவனை வழிபடும் முறை என்று ஒன்று இருக்கிறதா ? குளித்து, முழுகி, சமய சின்னங்களை உடல் எங்கும் தரித்து, பக்திப் பாடல்களை பாடிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று ஏதாவது முறை இருக்கிறதா ?

இல்லை.

இல்லை என்று யார் சொன்னது ?

பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்...வேடன், மந்திரி, சின்னப் பிள்ளை, அரசன், வயதான பெரியவர், குயவன், இரண்டு பெண்டாட்டி கட்டியவன்  என்று யார் யாரோ இறைவனை

அடைந்திருக்கிறார்கள்...அவர்களின் வாழ்கை  தொகுதிதான் பெரிய புராணம். நம் தமிழ் உலகம் அதை பெரிய புராணம் என்று கொண்டாடுகிறது.

யார் வேண்டுமானாலும் இறைவனை அடையலாம்.

எப்படி வேண்டுமானாலும் இறைவனை அடையலாம் என்று எடுத்துச் சொன்ன நூல் பெரிய புராணம்.

பாடியவர் தெய்வப் புலவர் சேக்கிழார்.

பாயிரத்தில் தான் செய்யும் நூலின் பெயரை கூறுகிறார் சேக்கிழார்.

இந்த உலகில் இரண்டு இருள் உண்டு. ஒன்று இரவு நேரத்தில் வரும் இருள். இன்னொன்று மக்கள் மனதில் உள்ள அறியாமை என்ற இருள். புற இருளை போக்குவது சூரியன். அக இருளை போக்க வந்த இந்த நூலின் பெயர் திருத் தொண்டர் புராணம்

என்று அவர் கூறுகிறார்.


பாடல்

இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

பொருள்

இங்கு = இங்கு

இதன் = இந்த நூலின்

நாமம் கூறின் = பெயரைச் சொல்வது என்றால்

இவ் உலகத்து = இந்த உலகத்தில்

முன்னாள் = முன்னாளில்

தங்கு இருள் = தங்கிய இருள்

இரண்டில் = இரண்டில்

மாக்கள் = விலங்குகள்

சிந்தையுள் = மனதில் , புத்தியில்

சார்ந்து நின்ற பொங்கிய இருளை = சார்ந்து நின்ற பொங்கிய இருளை

ஏனைப் = மற்ற

புற இருள் போக்கு கின்ற = புற இருளை போக்குகின்ற

செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல

நீக்கும் = அக இருளை நீக்கும்

திருத் தொண்டர் புராணம் என்பாம் = திரு தொண்டர் புராணம் என்று சொல்லுவோம்

அக இருளின் தன்மை சொல்கிறார் சேக்கிழார்....

சார்ந்து + நின்று + பொங்கிய இருள்.

இந்த அக இருள் , அறியாமை, ஆணவம் என்பது முதலில் நம்மைச் சார்ந்து நிற்கிறது.  நாம் இல்லாமல் அது இல்லை.

பின்னால், அது நிலைத்து நிற்கிறது. நாளடைவில் இந்த அக இருள் நம்மில் ஒரு பகுதியாகவே மாறி  விடுகிறது.

பின், அது பொங்குகிறது. அறியாமை நாளும் வளர்கிறது. முட்டாள் தனத்திற்கு எல்லை ஏது.

இப்படி சார்ந்து, நின்று பொங்கும் அக இருளை நீக்க வந்த நூல் பெரிய புராணம்.

அக இருள் போக வேண்டும் என்றால், இந்த நூலைப் படியுங்கள் என்கிறார் தெய்வப் புலவர்.

அது வெறும் அடியவர்களின் வரலாற்று நூல் அல்ல. நமக்கு வேண்டிய அறிவை அள்ளி அள்ளி   தரும் நூல்.

நேரமிருப்பின், படித்துப் பாருங்கள்.

அக இருள் நீங்கும். அறிவு ஒளி வீசும்.



ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள்

ஆசாரக் கோவை - உடன் உண்பவர்கள் 


மேஜை நாகரிகம் (Table Manners அல்லது table etiquette ) என்பது என்னவோ மேற்கிந்திய நாடுகளில் உள்ள ஒன்று. அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள  வேண்டும் என்று இன்றைய இளைய தலை முறை நினைக்கலாம்.

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உடன் இருந்து உண்பதின் வழி முறைகளை, நாகரிகத்தை சொன்னது நம் தமிழ் பண்பாடு.

நாம் சாப்பிடும்போது நம் கூட பெரியவர்கள் யாராவது சேர்ந்து உண்டால், அவர்கள் சாப்பிட ஆரம்பித்த பின்னரே நாம் உண்ணத் தொடங்க வேண்டும். அவர்கள் சாப்பிட்டு எழுந்த பின் தான் நாம் எழ வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், திருமணம் மற்றும் சடங்கு  வீடுகளில் நீ முந்தி நான் முந்தி பந்திக்கு முந்துகிறார்கள். யார் முதல் பந்தியில் இருப்பது என்பதில் போட்டி.

பெரியவர்கள் போட்டி போட்டிக் கொண்டு செல்ல முடியாது. அவர்கள் பின் தங்கி விடுகிறார்கள். அவர்கள் பசியோடு இருப்பார்கள்.

இவை எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.

முதலில் வயதில் பெரியவர்களை பந்தியில்  அமரச் செய்து பின் இடம் இருந்தால் மற்றவர்களை அமரச் செய்யலாம்.

இரண்டாவது, விருந்து என்று வந்து விட்டால், சற்று அளவு இல்லாமல் உண்பது என்பது நடக்கிறது. ஒரு நாளைக்குத் தானே, தினமுமா இப்படி ஒரு விருந்து கிடைக்கிறது என்று கண் மண் தெரியாமல் உண்டு உடலை பெருக்க வைக்க வேண்டியது, பின் அல்லல் பட வேண்டியது.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. உண்பதில் நாகரீகம் வேண்டும். 

பாடல்

முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண்
என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

சீர் பிரித்த பின்

முன் துவ்வார் , முன் எழார் மிக்கு உறார் ஊணின் கண் 
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மிற் 
பெரியார் தம் பாலிருந்தக் கால் 

பொருள்

முன் துவ்வார் = (பெரியவர்களுக்கு) முன் உண்ண ஆரம்பிக்க மாட்டார்கள்

முன் எழார் = அவர்கள் எழுவதற்கு முன் எழ மாட்டார்கள்

மிக்கு உறார் = அவர்களுக்கு மிக அருகில் போய் அமர மாட்டார்கள்

ஊணின் கண் = உணவு உண்ணும் இடத்தில் (பந்தியில் )

என் பெறினும் = என்னதான் கிடைத்தாலும்

ஆற்ற வலம் இரார் = வலப் புறம் இருக்க மாட்டார்கள்

தம்மிற் = தம்மை விட

பெரியார் தம் = பெரியவர்கள்

பாலிருந்தக் கால் = உடன் இருக்கும் பொழுது


சொல்லித் தருவோம் மற்றவர்களுக்கும். கொஞ்ச கொஞ்சமாக நாம் நல்லவற்றைப்  பரப்புவோம். நல்லது வளர்கிறதோ இல்லையோ, தீயவை வளராமலாவது  இருக்கும். 


Monday, March 23, 2015

ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன்

ஆசாரக் கோவை - உணவு உண்ணும் முன் 


சில பேர் சாப்பாட்டுக்கு முன்னால் உட்கார்ந்தால் , அவன் பாட்டுக்கு சாப்பிடுவான், போவான். மத்தவங்க சாப்பிட்டாங்களா, யார் இன்னும் சாப்பிடனும், அதைப் பத்தியெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பான்.

அப்படி இருக்கக் கூடாது. தனக்கு முன்னால் யார் யார் எல்லாம் உணவு உண்டார்கள் என்று கேட்க  வேண்டும். அதற்கு ஒரு பட்டியல் தருகிறது ஆசாரக் கோவை. அந்த பட்டியலில் உள்ளவர்கள் முதலில் உண்ண வேண்டும். அப்புறம் தான் நாம் சாப்பிட வேண்டும்.

முதலில் விருந்தினர் உண்ண வேண்டும். மனைவி மக்கள் கூட இல்லை. முதல் இடம் விருந்தினருக்கு. அமிழ்தாயினும் விருந்து புறத்து இருக்க உண்ணாத பண்பாடு நமது பண்பாடு.

அடுத்தது, வீட்டில் வயதான பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு உணவு தர வேண்டும்.

அடுத்தது, வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்கள்....பசு, கிளி போன்றவற்றிற்கு உணவு தர வேண்டும்.

இவர்களுக்கு உணவு தந்த பின்னரே வீட்டில் உள்ள மற்றவர்கள் உண்ண வேண்டும்.

பாடல்

விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

பொருள்

விருந்தினர் = விருந்தினர்

மூத்தோர் = வயதில் மூத்தோர்

பசு = பசு

சிறை பிள்ளை = கிளிப் பிள்ளை

இவர்க்கூண்  = இவர்கு ஊண் (உணவு )

கொடுத்தல்லா லுண்ணாரே யென்றும் = கொடுத்து + அல்லால் + உண்ணாரே + என்றும்

ஒழுக்கம் பிழையா தவர் = ஒழுக்கம் தவறாதவர்கள்

இன்று வாழ்க்கை நெருக்கடி. அலுவகலம் போக வேண்டும், பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டும் என்று முதலில் அவர்களுக்கு உணவு தந்து பின் வீட்டில் உள்ள  பெரியவர்களை கவனிக்க வேண்டி இருக்கிறது.

இருந்தும், பண்பாட்டின் உச்சம் தொட்டு வாழ்ந்த இனம் இந்த தமிழ் இனம்.

நம் கலாசாரத்தை கடை பிடிக்க முடியாவிட்டாலும் அறிந்தாவது கொள்வோமே.

மனதின் ஓரம் கிடக்கட்டும். என்றாவது இதில் கொஞ்சமாவது செய்ய முடிந்தால்  கூட நல்லதுதான்.



Sunday, March 22, 2015

ஆசாரக் கோவை - உண்ணும் முறை

ஆசாரக் கோவை - உண்ணும் முறை 


நமக்கு கிடைத்த மாதிரி முன்னோர்கள் யாருக்குக் கிடைப்பார்கள் ?

எப்படி உணவு உண்ண  வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள் நம் முன்னவர்கள்.

உணவினால் இன்று எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது...

அதிகமாக உண்டு அளவுக்கு அதிகமாக எடை போட்டு அவதிப் படுகிறோம், சர்க்கரை அதிகம் உண்டு சக்கரை நோயால் துன்பப் படுகிறோம், கொழுப்பு கூடி கொலஸ்ட்ரால் வந்து சங்கடப் படுகிறோம், acidity , நெஞ்சு எரிச்சல் என்று எத்தனையோ சிக்கல்கள்....

ஏன் என்றால் எதை உண்பது, எப்படி உண்பது என்று தெரியாததனால்.

எப்படி உணவு உட்கொள்ள வேண்டும் என்று ஆசாரக் கோவை நமக்கு சொல்லிழ்த் தருகிறது.

இன்று பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் உணவு உண்ணும் போது தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டோ அல்லது  ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டோ , கணனியில் மெயில் அல்லது ஏதோ ஒரு வெப் சைட்டை பார்த்துக் கொண்டோ உணவு உண்கிறார்கள். கிரிகெட் மேட்ச் என்றால் அதை பார்த்துக் கொண்டே உண்கிறார்கள். பெரிய பெரிய உணவு விடுதிகளில் பெரிய தொலைக் காட்சி பெட்டி வைத்து அதில் ஏதோ செய்தி ஓடிக் கொண்டிருக்கும், அதைப் பார்த்துக் கொண்டே உணவு உண்கிறார்கள்.

அதே போல, உணவு உண்ணும்போது, பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் மதிப்பெண், போன்றவற்றை விவாதம் செய்வது...

அல்லது, வேறு குடும்ப விவகாரங்களை பேசுவது, செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி  பேசுவது என்று  போகிறது.

வேறு சில குடும்பங்களில் பிரச்சனைகளை பேசுவதே சாப்பாட்டு மேஜையில் தான்.

இது அனைத்துமே தவறு என்கிறது ஆசாரக் கோவை.

உணவு உண்ணும் போது வேறு எதையும் பார்க்கக் கூடாது. உணவை மட்டுமே பார்த்து உண்ண வேண்டும்.

நாளை முதல் சாப்பிடும் போது டிவி யை அணைத்து விடுங்கள். புத்தகமோ, புத்தகமோ இருக்கக் கூடாது.

படித்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது.

எதையும் பேசக் கூடாது. நல்லதும் சரி, கெட்டதும் சரி, ஒன்றையும் பேசக் கூடாது.

குறிப்பாக பெண்கள் வீட்டுப் பிரச்சனைகளை சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பது நல்லது.

உணவை தொழுது உண்ண வேண்டும். உணவு உயிர் தரும் பொருள். உயிர் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு உயர்ந்தது உணவு.

மடியில் ஒரு டப்பாவில் பாப் கார்ன் அல்லது பஜ்ஜி அல்லது பிஸ்கட் என்று எதையோ வைத்துக் கொண்டு டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டோ, சினிமா பார்த்துக் கொண்டோ உண்பது கூடாது.

உணவுக்கு மரியாதை தர வேண்டும்.

தெய்வம் போல நினைத்து தொழுது உண்ண வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை.


இப்போது துரித உணவு விடுதிகள் (fast food ) வந்து விட்டன. நின்று கொண்டே சாப்பிட்டு விட்டுப் போகிறார்கள். கூடாது. அமர்ந்து தான் உண்ண வேண்டும்.

மேற்கிந்திய காலாசாரம் வந்த பின், bed  காபி என்று வந்து விட்டது. பல் விளக்காமல், படுத்துக் கொண்டே , செய்தித் தாள் வாசித்துக் கொண்டே காபி குடிப்பது என்று வந்து விட்டது. நல்லவற்றை தெரியாமல் விட்டு விட்டோம். கெட்டவற்றை முனைந்து அறிந்து செய்கிறோம்.


உண்ணும்போது கிழக்கு திசையைப் பார்த்து அமர்ந்து உண்ண வேண்டும். உண்ணும் போது தளர்ந்து, தூங்கி விழுந்து கொண்டு இருக்கக் கூடாது. உணவைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. சாப்பிடும் போது எதையும் பேசக் கூடாது. உணவை சிந்தாமல், வீணாக்காமல் உண்ண வேண்டும்.  


பாடல்

உண்ணுங்கா னோக்குந் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிதியாது நோக்கா னுரையான் தொழுதுகொண்
டுண்க உகாஅமை நன்கு.

சீர் பிரித்த பின்

உண்ணுங் கால்  நோக்கும் திசை கிழக்குக் கண் அமர்ந்து 
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ - யாண்டும்
பிறிது யாதும்  நோக்கான்  உரையான்  தொழுது கொண்டு 
உண்க உகாமை  நன்கு.


பொருள்

உண்ணுங் கால் = உண்ணும் போது

நோக்கும் திசை  = பார்க்கும் திசை

கிழக்குக் கண் அமர்ந்து = கிழக்காக அமர்ந்து

தூங்கான் = தூங்காமல். அதாவது உணவில் மனம் செலுத்தாமல்

துளங்காமை = அசையாமல்

நன்கிரீஇ - நன்றாக அமர்ந்து

யாண்டும் = எப்போதும்

பிறிது யாதும்  நோக்கான் = வேறு ஒன்றையும் பார்க்காமல்

உரையான் = வேறு ஒன்றையும் பேசாமல்

தொழுது கொண்டு உண்க = உணவை தொழுது கொண்டு உண்க

உகாஅமை நன்கு.= சிந்தாமல், வீணாக்காமல் உண்பது நல்லது.

குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். முடிந்த வரை வீட்டில் இதை நடைமுறை  படுத்த முயலுங்கள். 

நல்லது நடக்கட்டும்.


இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அன்பின்றி ஆக்கம் இல்லை

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அன்பின்றி ஆக்கம் இல்லை 


எல்லா அற நூல்களும் புலனை அடக்கு, புலனை அடக்கு என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்கின்றன.

எல்லா புலன்களையும் அடக்கிய பின் என்ன வாழ்க்கை ? வாழ்க்கை என்பதே அனுபவிக்கத்தானே, புலன்களை எல்லாம் அடக்கிய பின் மரக்கட்டை மாதிரி, கல்லு மாதிரி வாழ்வது ஒரு வாழ்க்கையா என்ற கேள்வி எழும் அல்லவா ?

வசிட்டர் சொல்லுகிறார்....இந்த புலன்களை எல்லாம் அடக்க வேண்டாம்...அன்பு ஒன்றே போதும்....

எதுக்காக இந்த முனிவர்களும், தேவர்களும் இந்த புலன்களை கொல்லுவது எதற்காக ? முன்பும் இனியும் , இந்த மூன்று உலகத்திலும் அன்பை விட சிறந்தது ஒன்று உண்டா ?

பாடல்

என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம் 
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?

பொருள்

என்பு = எலும்பு

தோல் = தோல்

உடையார்க்கும் = உடையவர்களுக்கும் (எலும்பும் தோலுமாக உள்ள முனிவர்கள்)

இலார்க்கும் = இல்லாதவர்களுக்கும் (தேவர்களும் )

தம் = தங்களுடைய

வன் = வலிமையான

பகைப் = பகையான

புலன் = புலன்கள்

மாசு அற  = குற்றம் இல்லாமல்

மாய்ப்பது என்? = கொல்வது ஏன் ?

முன்பு பின்பு இன்றி = முன்பும், பின்பும் இன்றி

மூ உலகத்தினும் = மூன்று உலகத்திலும்

அன்பின் நல்லது = அன்பை விட

ஓர் ஆக்கம் உண்டாகுமோ? = ஒரு சிறப்பு உண்டாகுமோ ? உண்டாகாது என்பது அர்த்தம்.

சரி, அன்பு உயர்ந்ததுதான். அதுக்காக புலனடக்கம் இல்லாமல் கண்டதையும்  செய்யலாமா ?

ஒரே குழப்பமா இருக்கே ?

ஒரு குழப்பமும் இல்லை...

அன்பு முதலில் தன்னில் இருந்து தொடங்க வேண்டும்....தன் மேல் அன்பு உள்ள  ஒருவன் தனக்கு தீமை செய்வானா ? மாட்டான் அல்லவா ?

ஒழுங்காக உண்பது, உடலை பேணி காப்பது, தூய்மையாக வைத்து இருப்பது, ஒழுக்கமான  வழியில் செல்வது உடலின் மேல் கொண்ட அன்பின் வெளிப்பாடு .

தன் உடலைத் தாண்டி, அடுத்து தன் குடும்பத்தை நேசிப்பவன் உண்மையாக உழைப்பான், நேர்மையாக உழைப்பான்.

அதுத்து தன் குடும்பத்தை தாண்டி மற்றவர்களையும் நேசிப்பவன்  அவர்களுக்குத் துன்பம் செய்ய மாட்டான், கொலை, களவு, வன்முறை என்று மற்றவர்களை துன்பம் செய்ய மாட்டான்.

ஆழ்ந்து யோசித்தால் அனைத்து அறமில்லாத செயல்களுக்கும் காரணம் தன் மேலும் , பிறர் மேலும் அன்பு இல்லாததே என்று புரியும்.

இதையே வள்ளுவரும்

அன்பில் அதனை வெயில் போல் காயுமே
அன்பில் அதனை அறம்

என்றார்.

அன்பு கொள்ளுங்கள், அதைவிட பெரிய அறம் ஒன்று இல்லை.



குமர குருபரர் பாடல் - எது பெருமை ?

குமர குருபரர் பாடல் - எது பெருமை ?


சில பேர் பெரிய இடங்களுக்கு எளிதாகப் போய் வருவார்கள். அமைச்சரைப் பார்த்தேன், கலெக்டரைப் பார்த்தேன், கம்பெனி சேர்மனை பார்த்தேன், என்று பெருமை பேசுவார்கள்.

மற்றவர்கள் எவ்வளவோ கடுமையாக உழைத்தாலும், அறிவில், திறமையில் உயர்ந்து இருந்தாலும் பெரிய இடங்களுக்கு போக முடியாது.

பெரிய இடங்களுக்கு போவது ஒரு பெருமையா ? அப்படி போக முடியாமல் இருப்பது ஒரு சிறுமையா ?

குமர குருபரர் சொல்கிறார்....

அரண்மனையில், பூனை அந்தப்புரம் வரை சர்வ சாதாரணமாகப் போய் வரும். பட்டத்து யானை வெளியே கொட்டகையில் கட்டி கிடக்கும்.

அந்தப்புரம் போனதால் பூனைக்கு பெருமையா ? அரண்மனைக்கு உள்ளே போக முடியவில்லை என்பதால் யானையின் பெருமை குறைந்து போய் விடுமா ?

பாடல்

வேத்தவை காவார் மிகன் மக்கள், வேறு சிலர்
காத்தது கொண்டாங் குவப்பெய்தார் -மாத்தகைய
அந்தபுரத்து பூஞை புறங்கடைய

கந்துகொல் பூட்கை களிறு.

சீர் பிரித்த பின்

வேந்து  அவைக்கு ஆவார் மிகன் மக்கள், வேறு சிலர் 
காத்து அது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - மாத்தகைய 
அந்தபுரத்து பூனை புறம் கடை 
கந்துக் கொல் புட்டிய கை களிறு 


பொருள்


வேந்து = அரசனின்

அவைக்கு = அவைக்கு

ஆவார் மிகன் மக்கள் = போனால் தான் பெரியவர் என்று எண்ணி இருக்க மாட்டார்கள் பெரியவர்கள்

வேறு சிலர் = வேறு சிலரோ

காத்து அது கொண்டு = காத்து கொண்டு

ஆங்கு உவப்பு எய்தார் = அதனால் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்

 மாத்தகைய = மா + தகைய = பெருமை மிக்க

அந்தபுரத்து பூனை = அந்தப் புரத்து பூனை

புறம் கடை = வெளியில்

கந்துக் கொல் = காவல் கொண்டு

புட்டிய = கட்டப்பட்ட

கை களிறு = கையை உடைய யானை

அந்தப் புரம் செல்வதால் பூனையின் மதிப்பு உயர்ந்து விடுவதில்லை

அரண்மனைக்கு வெளியே இருப்பதால் யானையின் பெருமை குறைந்து விடுவதில்லை.

குமர குருபரர் பல அருமையான நூல்களை எழுதி உள்ளார்.



கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்

நேரமிருப்பின், இவற்றைப் படித்துப் பாருங்கள்.

வாழ்நாள் முழுவதும் படிக்க தமிழில் ஆயிரம் நூல்கள் உள்ளன.

Saturday, March 21, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு 


நல்லது வேண்டும் என்று சிலவற்றைச் செய்யத் தொடங்குகிறோம். ஆரம்பித்த சில நாட்களில் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் அதை விட்டு விடுகிறோம்.

ஒரு மாதமாக நடை பயிற்சி செய்கிறேன்....தொப்பை குறையவே மாட்டேன் என்கிறது. இது பிரயோஜனம் இல்லை என்று நிறுத்தி விடுவது.

பொறுமை கிடையாது. விடா முயற்சி கிடையாது.

இந்த மாதிரி சின்ன விஷயங்களுக்கே இப்படி என்றால், இறையருள் போன்ற விஷயங்களுக்கு எப்படி இருக்கும் ?

என்று வருமோ, எப்போது வருமோ...தெரியாது. நம்பிக்கையில் தொடர வேண்டியதுதான்.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.....

இன்றோ, நாளையோ, இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம்...எவ்வளவு நாள் ஆனால் என்ன, உன் அருள் எனக்கு கிடைத்தே ஆக வேண்டும். எனக்கும் உன்னை விட்டால் ஆள் இல்லை; உனக்கும் என்னை விட்டால் ஆள் இல்லை.

பக்தன் இல்லாமல் கடவுள் இல்லை.

கடவுள் இல்லாமல் பக்தன் இல்லை.


இறைவன் பெரியவன் தான். அளவற்ற ஆற்றல் உடையவன் தான். அன்பும் கருணையும் உடையவன்தான்.

இதை எல்லாம் வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வான் ?

அன்பையும், கருணையும் செலுத்த ஒரு ஆள் வேண்டாமா ?

இறைவா, உன் அருளைத் தர என்னை விட சிறந்த ஆள் உனக்குக் கிடைகப் போவது இல்லை....உனக்கும் என்னை விட்டால் வேறு ஆள் யாரும் இல்லை. அது போல இறை அருளைப் பெற உன்னைவிட்டால் எனக்கும் வேறு யாரும் இல்லை.

பாடல்

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.



பொருள்

இன்றாக = இன்றைக்கு

நாளையே யாக = இல்லேனா நாளைக்கு

இனிச்சிறிதும் நின்றாக = இன்னும் கொஞ்சல் நாளில்

நின்னருளென் பாலதே, = நின் அருள் என் பாலதே - உன் அருள் எனக்குத்தான்

நன்றாக = சரியாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய் = நான் உன்னை அன்றி வேறு இல்லை

நாரணனே = நாரணனே

நீயென்னை யன்றி யிலை = நீ என்னை அன்றி இல்லை


Tuesday, March 17, 2015

திருவாசகம் - திருச் சதகம் - நாடக வேஷம்

திருவாசகம் - திருச் சதகம் - நாடக வேஷம் 


ஒருவன் நாடகத்தில் இராஜா வேஷம் போடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்குத் தெரியும் அவன் இராஜா இல்லை என்று. அது ஒரு நடிப்பு என்று. உள்ளத்தில் ஒட்டாத ஒன்று. ஏதோ வருவான்,  நாலு வசனம் பேசுவான், அன்றைய நடிப்பு கூலியை பெற்றுக் கொண்டு போய் விடவேண்டும்.

தான் உண்மையிலேயே ஒரு இராஜா என்று அவன் நினைத்துக் கொண்டு, எங்கே என் படை, என் மாதிரி , என் செல்வம் என்று கேட்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும் ?

அது போல,

இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய்

என்று உருகுகிறார்  மணிவாசகர்.

பாடல்


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.


பொருள்

நாடகத்தால் = நடிப்பால்

உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல

நடித்து = நடித்து

நானடுவே = நான் நடுவே

வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே

புகுந்திடுவான் = புக வேண்டி

 மிகப்பெரிதும் = மிக வேகமாக

 விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்

ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன

மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே

இடையறா = இடைவிடாத

அன்புனக்கென் = அனுப்பு உனக்கு என்

ஊடகத்தே = உள்ளத்தில்

நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக

தந்தருள் = தந்து அருள்வாய்

எம் உடையானே.= என்னை உடையவனே

இறைவனை அடைய அறிவைக் கேட்கவில்லை, ஆற்றலை கேட்கவில்லை....உருகும் அன்பு வேண்டும் என்று  கேட்கிறார்.

"உள்ளம் உருகும் அன்பு படைத்தனை " என்பார் அபிராமி பட்டர்


(உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு 
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே 
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் 

துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.)

"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரி நாதர்


(நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.)

"உள்ளி உருகும் அவர்களுக்கு அருளும்" ...என்பார் வள்ளலார் 

உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு 
வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும் 
கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ 
எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.



இராமாயணம் - பதவி சுகமா ?

இராமாயணம் - பதவி சுகமா ?


இன்று பதவி என்றால் ஏதோ சுகம், அதிகாரம், பொருள் செய்யும் வழி என்று பலர் நினைக்கிறார்கள்.

பதவி என்பது எவ்வளவு பெரிய சுமை என்று அதை ஒழுங்காக செய்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஒவ்வொரு பதவியும் ஒரு சுமை.

கூரிய வாளின் மேல் நடப்பது மாதிரி என்கிறார் வசிட்டர். கொஞ்சம் நடை பிசகினாலும், காலை அறுத்து விடும்.

இத்தனை நாள் ஒழுங்காக நடந்தேனே, இன்று ஒரு நாள் சற்று பிசகி விட்டதே என்று சொன்னால் முடியுமா ? எல்லா நேரமும் எச்சரிக்கையோடு இருக்க
வேண்டும்.

வேலையின் பளு, மேலதிகாரிகளின் நெருக்கடி, பொது மக்களின் எதிர்பார்ப்பு என்று ஏகப்பட்ட சிக்கல்களுக்கு நடுவில் வேலை செய்ய வேண்டி வரும்.


சாதாரண பதவிக்கே இப்படி என்றால்,சக்கரவர்த்தி என்றால் எப்படி இருக்கும் ?

பாடல்

கோளும் ஐம்பொறியும் குறைய, பொருள்
நாளும் கண்டு, நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது,
வாளின் மேல் வரு மா தவம், மைந்தனே!

பொருள்

கோளும் = கோள்களைப் போல தத்தமது  வழியில் செல்லும்

ஐம்பொறியும் = ஐந்து பொறிகளும் (புலன்களும் )

குறைய = கட்டுப் பாட்டுக்குள் இருக்க

பொருள் = செல்வத்தை

நாளும் கண்டு =ஒவ்வொரு நாளும் பெருக்கி

நடுக்குறு நோன்மையின் = பகைவர்கள் கண்டு நடுங்கும்படி

ஆளும் அவ் அரசே அரசு = ஆளும் அரசே நல்ல அரசு

அன்னது = அது

வாளின் மேல் வரு மா தவம் = கூர்மையான கத்தியின் மேல் நடப்பது போன்ற பெரிய தவம்

மைந்தனே! = மைந்தனே

ஒரு தலைவனுக்கு முதலில் வேண்டியது அறிவு, ஆற்றல், எல்லாம் இல்லை. 

ஒரு தலைவனுக்கு முதலில் வேண்டியது புலனடக்கம். அது இல்லாவிட்டால் மற்றது எது இருந்தும் பலன் இல்லை. 

அடுத்து வேண்டியது , பொருளை பெருக்கும் வழி. 

மூன்றாவது, பகைவர் நடுங்கும் ஆற்றல் 

புலனடக்கம் இல்லாமல்  கெட்டான் இராவணன். அறிவு, ஆற்றல், தவ வலிமை  என்று எல்லாம் இருந்தும், புலனடக்கம் இல்லாததால் அழிந்தான். 


Saturday, March 14, 2015

இராமாயணம் - போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது

இராமாயணம் - போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது 


சில பேர் எதுக்கு எடுத்தாலும் வாதம் பண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

எதைச் சொன்னாலும் அது எப்படி, ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று வாதம் பண்ணுவார்கள்.

மேலும்  சிலர்  விவாதம் என்று வந்து விட்டால், எப்படியும் அந்த விவாதத்தில் வென்றே ஆக வேண்டும் கழுத்து நரம்பு எல்லாம் புடைக்க விவாதம் செய்வார்கள்.

வாதத்தில் வெற்றி பெறுவார்கள், ஆனால் யாருடன் விவாதம் பண்ணுகிறார்களோ அவர்களின் அன்பை, நட்பை, உறவை இழப்பார்கள்.

சண்டை போடாமல் வெற்றி கிடையாது என்று . நம்புகிறார்கள்.  நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் வேறு யாரவது ஒருவர் தோற்கத் தானே வேண்டும்.

வெற்றி பெறாமல் எப்படி புகழ் வரும் ?

எனவே சண்டை போட்டுக் கொண்டே இருப்போம் என்று பலர் நினைக்கலாம்.

அப்படி அல்ல என்கிறார் வசிட்டர்


யாரோடும் பகை இல்லை என்ற பின், போர் இல்லாமல் போகும். போர் இல்லை என்றால் படை வீரர்கள் சாக மாட்டார்கள். படையின் அளவு குறையவில்லை என்றால் படை பலம் பெருகும். படை பலம் பெருகினால் எதிரிகள் அஞ்சி போர் செய்ய வர மாட்டார்கள். அது மேலும் போர் வருவதை தடுக்கும்.

யாரும் சண்டைக்கு வர அஞ்சி, போர் செய்யாமல் இருந்தால், முழு நேரத்தையும்  நாட்டின் நிர்வாகத்தில் செலவிடலாம். அதனால் நல்ல பெயரும் புகழும்  கிடைக்கும்.

போர் ஒடுங்கும். புகழ் ஒடுங்காது.

பாடல்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? ‘

பொருள்

‘யாரொடும் = யாரோடும்

பகை கொள்ளலன்  என்ற பின் = பகை கொள்ளாமல் இருந்தால்

போர் ஒடுங்கும் = போர் என்பது இருக்காது

புகழ் ஒடுங்காது; = ஆனால் புகழ் ஒடுங்காது

தன் = தன்னுடைய

தார் ஒடுங்கல் செல்லாது; = மாலை கெடாது. அதாவது ஆட்சி ஒழுங்காகச் செல்லும்.

அது தந்தபின் = அது நிகழ்ந்த பின்

வேரொடும் = வேரோடு

கெடல் வேண்டல் உண்டாகுமோ?  = கெட வேண்டியது இருக்காது

போரை விட அமைதி முக்கியம்.

பகையை விட நட்பு முக்கியம்.



Wednesday, March 11, 2015

இராமாயணம் - துன்பம் வரும் வழி

இராமாயணம் - துன்பம் வரும் வழி 


எல்லா உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன. துன்பத்தை வெறுக்கின்றன.

ஆனாலும், அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு வழியில் துன்பத்தில் உழல்கின்றன.

துன்பம் எப்படி வருகிறது ? துன்பம் எங்கிருந்து வருகிறது ?

ஆழ்ந்து சிந்தித்தால் இன்று நமக்கு இருக்கும் துன்பத்திற்கு நாம் முன்பு செய்த அல்லது செய்யாமல் விட்ட ஏதோ ஒன்று காரணமாக இருக்கும்.

நான் முற்பிறவியில் செய்ததைப் பற்றி சொல்லவில்லை.

படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் இருந்தால் பின்னாளில் ஏழ்மை வரத்தான் செய்யும்.

இளமைக் காலத்தில் நல்லது சொன்னால் கேட்காமல் இருந்தால் பின்னாளில் துன்பப் படத்தான் வேண்டும்.

பொறாமை, பேராசை, போன்றவை அளவுக்கு மீறிய செயல்களை செய்யத் தூண்டும்...அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது, நிறைய வட்டி வரும் என்று எதிலோ பணத்தை போட்டு முதல் இழந்து வருந்துவது நிகழும்.

நீங்கள் இப்போது செய்யும், செய்யாமல் விடுவது பின்னாளில் உங்களுக்கு விளைவுகளைத் தரும்.

என்ன செய்கிறீர்கள் என்று அறிந்து செய்யுங்கள்.

வசிட்டர் சொல்கிறார்....இராமா இதுவரை நீ சூது முதலிய செயல்களில் ஈடுபடவில்லை.  எனவே,அதனால் வரும் துன்பங்கள் உனக்கு இல்லை. இருப்பினும், அனைத்து துன்பங்களுக்கும் சூது முதலிய கெட்ட செயல்களே காரணம். துன்பங்களுக்கு மூல காரணம் என்ன என்பதை அறிந்து செயல்படு  என்கிறார்.

பாடல்

‘சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்,
நீதி மைந்த! நினக்கு இலை; ஆயினும்,
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே.

பொருள்

‘சூது = சூது

முந்துறச் = அதற்கு முற்பட்ட தீய செயல்கள் 

சொல்லிய மாத் துயர் = சொல்லப் பட்ட பெரிய துன்பங்கள்

நீதி மைந்த! = நீதியின் மைந்தனே

நினக்கு இலை;= உனக்கு இல்லை

ஆயினும் = இருப்பினும்

ஏதம் என்பன யாவையும் = துன்பம் என்று சொல்லப்பட்டவை யாவையும்

எய்துதற்கு = அடைவதற்கு

ஓதும் மூலம் = சொல்லிய மூலம்

அவை என ஓர்தியே = அவை என்று உணர்

அவை என்று அவர் சொல்லி விட்டு விட்டார்.

அந்த 'அவை"யில் எது எது வரும் என்று நிறைய பட்டியல் தருகிறார்கள்...

சோம்பேறித்தனம், கள் உண்ணல் , காமம், கோபம், இன் சொல் சொல்லாமை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எதுவானாலும், துன்பத்திற்கு காரணம் நல்லன அல்லாத செயல்கள்.

அன்று செய்தது இன்று வந்தது.

இன்று செய்தால் நாளை கட்டாயம் வரும்.

நாளை துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இன்றை சரி செய்யுங்கள்.



திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - தேனீ 


அரும்பாடு பட்டு செல்வம் சேர்க்கிறோம்.

சேர்த்த எல்லாவற்றையும் நம்மால் அனுபவிக்க முடிகிறதா ? நாம் இறக்கும் போது எல்லாவற்றையும் செலவழித்து விட்டா போகிறோம் ? இந்த வீடு எங்கே இருக்கிறது, அதை நீ எடுத்துக் கொள், அந்த பெட்டகத்தில் உள்ள நகைகளை நீ எடுத்துக் கொள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் கொடுத்து விட்டு வெறுங் கையோடு செல்கிறோம்.

சரி, அதற்காக செல்வமே சேர்க்காமல் இருந்தால் சரி வருமா ? அப்படியே கொடுத்தாலும் யாருக்கு கொடுக்கிறோம் ... பெண்டாட்டி பிள்ளைகளுக்குத் தானே கொடுக்கிறோம்...அதில் என்ன தவறு.

தவறு செல்வம் சேர்பதில் அல்ல...

செல்வம் சேர்க்கும் முனைப்பில் உண்மை எது, வாழ்கை என்றால் என்ன, இதன் நோக்கம் என்ன, என்று  தன்னை அறியாமல் செக்கு மாடு போல சுத்தி சுத்தி வருவதுதான்....

செல்வம்  சேர்ப்பது மட்டும்தான் வாழ்க்கையா ?

கடைசி நேரத்தில் "அடடா வாழ் நாள் எல்லாம் வீணாக்கி விட்டோமே" என்று வருந்தி சாகக் கூடாது.

தேனீக்கள் அரும்பாடு பட்டு ஆயிரக்கணக்கான பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும். அது சேர்த்து வைத்த பின், அதனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாது. வலிமையான மனிதர்கள் வந்து அந்த தேனை கொண்டு செல்வார்கள்.

பாடல்

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்1
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொருள்


ஈட்டிய = சேர்த்த

தேன் = தேன்

பூ மணங்கண் = பூவின் மணமும்

 இரதமும் கூட்டிக் = தன் உமிழ் நீரையும் சேர்த்து  


கொணர்ந்தொரு = கொண்டு வந்து ஒரு

கொம்பிடை வைத்திடும் = மரக் கிளையில் வைத்திடும்

ஒட்டித்  துரந்திட் டது = பல விதங்களில் அந்த தேனீக்களை துரத்தி விட்டு

வலி யார்கொளக் = வலிமையானவர்கள் கொள்ள

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே = காட்டி கொடுத்து அது கை விட்டவாறே

இயற்கை பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.

விழித்துக் கொண்டால்  படிக்கலாம்.



Sunday, March 8, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - நான் புதியன், நான் கடவுள் 


கர்மாக் கொள்கை என்று ஒன்று வைத்து இருக்கிறோம்.

 அதன் மூலம், விதி என்ற ஒன்றை கண்டு பிடித்து இருக்கிறோம்.

நாம் முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு நல்லதும் தீயதும் இந்தப் பிறவியில் நிகழும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அது தான் நம் விதி என்று ஏற்றுக் கொள்கிறோம்.

 எனவே,நாம் செய்ய வேண்டியது ஒன்றும்  இல்லை. சும்மா இருந்தால் போதும். செய்த வினைகளுக்கு ஏற்ப ஏதோ ஒன்று நடக்கும்.

வாழ்க்கையில் முயற்சியின் பங்கு என்று ஒன்றும் கிடையாது. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

பாரதி சொல்கிறான்.


சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்”
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,

குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.

பொருள்

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; = பழைய வினைகளின் பயன்கள் என்னை தீண்டாது.

“ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ? = நானே ஸ்ரீதரன், நானே சிவ குமாரன்

நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன், = நன்றாக இந்த கணத்தில் பிறந்து விட்டேன்

நான்புதியன், = நான் புதியன்

நான்கடவுள் = நான் கடவுள்

நலிவி லாதோன் = எந்தக் குறையும் இல்லாதவன்

என்றிந்த வுலகின்மிசை = என்று இந்த உலகில் வானோர் போலே

இயன்றிடுவார் சித்தரென்பார்; = இயங்கிடுவார், சித்தரென்பார்

பரம தர்மக் குன்றின்மிசை = தர்மம் என்ற குன்றின் மேல்


யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து = ஒரே பாய்ச்சலாக பாய்ந்து


குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார் = குறிப்பு (நோக்கம் ) இல்லாமல், கேடு இல்லாமல், குலைதல் இல்லாமல் இருப்பார்
.

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - என்னது எது ?


எது நம்முடையது ?

செல்வம் நம்முடையதா ? நேற்று வரை யாரிடமோ இருந்தது ...இன்று நம்மிடம் இருக்கிறது...நாளை யாரிடம் இருக்குமோ ?

நம் மனைவி, கணவன், மக்கள் நம்முடையதா  ? இல்லை, அவர்களுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அவர்களுக்கென்று ஆசாபாசம் இருக்கிறது,  கனவுகள்,கற்பனைகள் என்று அவர்கள் வாழ்க்கை தனி.

அவர்கள் நம் சொத்து அல்ல.

சரி நம் நிழலாவது நமக்குச் சொந்தமா என்றால் அதுவும் இல்லை.

வெயிலில் நடந்து  போகிறோம்.கால் சுடுகிறது. நம் நிழல் நமக்கு உதவுமா ? உதவாது.

சரி, நம் உடம்பாவது நமக்குச் சொந்தமா என்றால் இல்லை. நாம் சொல்கிறபடி நம் உடல் கேட்குமா ? நரைக்காதே என்றால் கேட்கிறதா ? உதிராதே என்றால் உதிராமல் இருக்கிறதா ?

இந்த உயிர் நம் சொந்தமா ?

போகாதே என்றால் இருக்குமா ? அது பாட்டுக்கு போய் விடுகிறது.

பின் எதுதான் நம் சொந்தம் ?

பாடல்


தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்3
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள்

தன்னது சாயை = தன்னுடைய நிழல்

தனக்குத வாதுகண்டு = தனக்கு உதவாதது கண்டு

என்னது = என்னுடையது

மாடென் றிருப்பர்கள் = செல்வம் என்று இருப்பார்கள்

ஏழைகள் = ஏழைகள்

உன்னுயிர் போம் = உயிர் ஒரு நாள் போய் விடும்

உடல் ஒக்கப் பிறந்தது = உடலோடு கூடவே பிறந்தாலும், உயிர் போய் விடுகிறது.

கண்ணது காணொளி கண்டுகொ ளீரே = கண்ணால் பார்த்து கண்டு கொள்ளுங்கள்



இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - எல்லாம் செய்வது எதனால் ?

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - எல்லாம் செய்வது எதனால் ?


நாம் பல வேலைகள்  செய்கிறோம்.

படிக்கிறோம், தொழில் செய்கிறோம், அலுவகலத்தில் வேலை செய்கிறோம்..இது எல்லாம் எப்படி செய்கிறோம் ?

நம் திறமையாலா ? நம் அறிவாலா ? நம் முயற்சியாலா ?

இல்லை.

 நம்மை விடுங்கள்....

பிரம்மாவும், திருமாலும், சிவனும் எப்படி அவர்களது படைத்தல், காத்தல் , அழித்தல் என்ற முத்தொழில்களைச் செய்கிறார்கள் ?

அவர்களின் ஆற்றலால் அல்ல....

அறம் , செம்மையான மனம், மற்றும் அருள் - இந்த மூன்றினால் தான் அப்பேற்பட்ட மும்மூர்த்திகளும் தொழில் செய்ய முடிகிறது...

எனவே இராமா, நீ பெரிய சக்ரவர்த்தி ஆகிவிட்டால் என்ன வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும்  செய்து விடலாம் என்று நினைத்து விடாதே....

அறத்திற்கு புறம்பாக ஒன்றும் செய்ய முடியாது
மனதிற்கு வஞ்சனை செய்து ஒன்றும் செய்து விட முடியாது
அருள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

பாடல்

உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,
அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?



பொருள்

உருளும்  = சுற்றும்

நேமியும் = சக்கரமும்

ஒண் கவர் = (மூன்றாகப் ) பிரிந்த , கிளைத்த

எஃகமும் = திரி சூலமும்

மருள் இல் வாணியும் = மயக்கம் இல்லாத வாணியும் (சரஸ்வதி)

வல்லவர் =  இவற்றைக் கொண்ட

மூவர்க்கும் = மூன்று பேருக்கும் (திருமால், சிவன், பிரம்மா)

தெருளும் = தெளிந்த

நல் அறமும் =  நல்ல அறமும்

மனச் செம்மையும் = செம்மையான மனமும் (பொய் இல்லாத, வஞ்சனை இல்லாத, பொறாமை இல்லாத ...)

அருளும் = அருளும்

நீத்தபின் ஆவது உண்டாகுமோ? = விட்டு விட்டால் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது.

 அறம் , குற்றமற்ற மனம், அருள் - இந்த மூன்றும்தான் மிகப் பெரிய காரியங்களை  செய்ய உதவும்.

அறிவோ, பணமோ, செல்வாக்கோ, படை பலமோ, அதிகார பலமோ துணை நிற்காது.

எல்லாம் இருந்தும் இராவணன் அழிந்தான் - அறம் இல்லாத வழியில் சென்றதனால்.

அதிகாரம் வரும்போது அருள் போய் விடுகிறது. நல்லது செய்ய வேண்டும் என்று பதவிக்கு  வருபவர்கள் சுயநலத்தில் இறங்கி விடுகிறார்கள். ஏழைகள் மேல்  அருள் போய் விடுகிறது.

மனதில் வஞ்சம் , துவேஷம் வந்து வந்து விடுகிறது.

இதை மனதில் கொள் என்று இராமனுக்கு உபதேசிக்கிறார் வசிட்டர்.



Saturday, March 7, 2015

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம்

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை - நிலவு போன்ற செல்வம் 


நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. குளிர்ச்சியாக இருக்கிறது. பால் போல ஒளி தருகிறது.

நாளும் அது வளரும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முழு பௌர்ணமி அன்று மிக மிக அழகாக இருக்கும். கடற்கரையில், முழு நிலவின் அழகை இரசித்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த முழு நிலவு அப்படியே இருக்குமா ?

கொஞ்சம் கொஞ்சமாக தேயும். ஒளி மங்கும். ஒரு நாள் ஒன்றும் இல்லாத அம்மாவாசையாகி விடும். முற்றும் இருண்டு விடும்.

செல்வமும் அது போலத்தான். கொஞ்சம் கொஞ்சமாக வரும். வரும் போது சந்தோஷமாக இருக்கும்.

வாடகை வரும், வட்டி வரும், போட்ட முதல் நாளும் பெருகும் போது மனம் சந்தோஷப் படும்.

அது அப்படியே இருக்கும் என்று நினைக்காதே.

செல்வம் என்றால் "செல்வோம்" என்று தான் அர்த்தம் என்கிறார்  திருமூலர்.

வரும் போகும் செல்வத்தை விட்டு, அவனை நாடுங்கள். பெரு மழை போல அவன் கருணை பெருக்கெடுத்து வரும் என்கிறார்.

பாடல்

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே

 பொருள்

இயக்குறு திங்கள்  = உலவும் திங்கள்

இருட்பிழம் பொக்குந் = இருண்ட பகுதியை ஒக்கும்

துயக்குறு செல்வத்தைச்  = துன்பத்தைத் தரும் செல்வத்தை. துயங்குதல் என்ற சொல்லுக்கு தளர்வைத் தரும், ஆயாசத்தைத் தரும் என்று பொருள்  சொல்லலாம்.செல்வம் தேடித் தேடி தளர்ந்து போவோம்.

அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்பநீ அடியனேன் தன்னை விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் விடுதியோ விட்டிடு வாயேல் உடாத வெற்றரை நேர்ந் துயங்குவேன் ஐயோ உன்னருள் அடையநான் இங்கே படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் பாடெலாம் நீ அறியாயோ

என்பார்  வள்ளலார்.

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

என்பார் மணிவாசகர்.

சொல்லவும் வேண்டா = அதைப் பற்றி சொல்லவும் வேண்டாம். பார்த்தாலே தெரியும்

மயக்கற நாடுமின் = மயக்கம் இல்லாமல் நாடுங்கள்

வானவர் கோனைப் = வானவர்களின் அரசனை

பெயற்கொண்டல் போலப் = பெய்யும் முகில் போல

பெருஞ்செல்வ மாமே = பெரும் செல்வம் அதுவே



இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அந்தணரைப் பேணுதி

இராமாயணம் - வசிட்டர் உபதேசம் - அந்தணரைப் பேணுதி 


மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றில் ஆர்வம் இருக்கும். திறமை இருக்கும்.

சிலருக்கு பாட்டு வரும், சிலருக்கு வராது.

சிலருக்கு விளையாட்டு நன்றாக வரும், சிலருக்கு ஒரு எடுத்து வைக்க சோம்பேறித்தனமாக இருக்கும்.

சிலருக்கு உழைக்கப் பிடிக்கும்...அவர்களை கொண்டு போய் ஒரு அறையில் உட்கார வைத்து பெரிய கணக்கு புத்தகங்களைக் கொடுத்து நாள் முழுவதும் உட்கார்ந்து கணக்குப் பாரு என்றால் ஓடி விடுவார்கள்.

இப்படி ஒவ்வொருவர்க்கும் ஒரு குணம் இருக்கும்.

அந்தணர் என்பவர் யார் ?

படிப்பில் ஆர்வம் உள்ளவர், நல்லது கெட்டதுகளை ஆராய்வதில் முனைப்பு உள்ளவர்,  தேடுதல் மனம் படைத்தவர், வருவதை முன்கூட்டியே எப்படி அறிவது என்பதில்   ஆர்வம் உள்ளவர், அற நெறியில்  நிற்பவர்.

இப்படிப் பட்ட அந்தணர்கள் திருமாலை விடவும், சிவனை விடவும், பிரமாவை விடவும், ஐந்து பூதங்களை விடவும் உயர்ந்தவர்கள், அவர்களை மனதால் விரும்பு என்று உபதேசத்தை தொடங்குகிறார் வசிட்டர்.

பாடல்

‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

பொருள்

‘கரிய மாலினும் = கருப்பு நிறம் கொண்ட திருமாலினும்

கண்ணுத லானினும் = நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும்

உரிய தாமரை மேல் உரைவானினும் = தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும்

விரியும் பூதம் ஓர் ஐந்தினும் = நாளும் விரிந்து கொண்டே போகும் ஐந்து பூதங்களை விடவும்

மெய்யினும் = உண்மையைக் காட்டிலும்

பெரியர் அந்தணர் = பெரியவர்கள் அந்தணர்

பேணுதி உள்ளத்தால் = அவர்களை உள்ளத்தால் பேணுதி

பேணுதல் = விரும்புதல், விரும்பி காப்பாற்றுதல் என்றும் கூறுவர்

தந்தை தாய் பேண் 

கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுகன்நிறை கனி பேணி 

பிணை, பேண் என்ற சொற்கள் பெட்பு என்ற ஆசையை குறிக்கும்  என்பார் தொல்காப்பியர் 





பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - ஆன்மா உண்டா ? கர்மா உண்டா ?


இன்று புதியதாய் பிறந்தோம், சென்றது இனி மீளாது என்று பாரதி சொன்னான். (பார்க்க முந்தைய ப்ளாக்).

அப்படி என்றால் நாம் காலம் காலமாக கர்மா என்று சொல்லிக் கொண்டு வருகிறோமே அது என்ன ஆகும் ?

மறு ஜென்மம், பாவம்  புண்ணியம், இருவினை, எழு பிறப்பு, சொர்க்கம் , நரகம் என்றெல்லாம் சொல்லக்  இருக்கிறோமே அது எல்லாம் என்ன ஆயிற்று என்ற கேள்வி எழும் அல்லவா ?

பாரதி சொல்கிறான்....



மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே, மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.


பொருள்

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, .... மேலும் மேலும் நடந்தையே நினைத்து அழ வேண்டாம். தவறு செய்து  விட்டேன்,பாவம் செய்து விட்டேன், இதனால் என்ன ஆகுமோ என்று நினைத்து அழாதீர்கள்.



அந்தோ! .... ஐயோ

மேதையில்லா மானுடரே = அறிவு இல்லாத மானிடரே


மேலும் மேலும் = மேலும் மேலும்

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியகாற் றெம்முள் வந்து = புதிய காற்று எம்முள் வந்து

மேன்மேலும் = மேலும் மேலும்

புதியவுயிர் விளைத்தல் கண்டீர் = புதிய உயிர் விளைதல் கண்டீர்

ஆன்மாவென்றே = ஆன்மா என்றே

கருமத் தொடர்பை யெண்ணி = கருமத் தொடர்பை எண்ணி. அதாவது நல்லது செய்தால் நல்லது  நடக்கும்,தீமை செய்தால் தீமை நடக்கும், என்ற கருமத் தொடர்பை எண்ணி

அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே! = அறிவு மயக்கம் கொண்டு கெடுகின்றீரே

மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி = மான் போன்ற விழியுடைய சக்தி தேவி

வசப்பட்டுத் = அவள் வசப் பட்டு

தனைமறந்து வாழ்தல் வேண்டும். = தன்னை மறந்து வாழ வேண்டும்

ஆன்மா , கருமம் என்று மயக்கம் கொள்ளாதீர்கள் என்று  சொல்கிறார்.

நம்மால் ஒத்துக் கொள்ள முடியுமா ? எத்தனை வருடத்திய பழக்கம், படிப்பு.

அத்தனையும் வீண் என்று ஒத்துக் கொள்ள ஒரு தைரியம் வேண்டும். நம்மிடம் இருக்கிறதா  ? பாரதியார் அப்படித்தான்  சொல்லுவார்.நாம நம்ம வேலையப்  பார்ப்போம்  என்று கிளம்பி விடாமல் சற்று  சிந்திப்போம்.

ஒரு வேளை நாம் நம்பியவை தவறாக இருந்தால்...இன்றே மாற்றிக் கொள்ளலாமே ?





Friday, March 6, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - இன்று புதியதாய் பிறந்தோம் 


ஏன் குப்பை மூட்டையை தூக்கித் திரிகிரீர் என்று பாரதி, குள்ளச் சாமியை பார்த்து கேட்டான்.

அதற்கு, அந்த குள்ளச் சாமி, நானாவது வெளியே குப்பை மூட்டையை தூக்கித் திரிகிறேன். நீயோ, மனதுக்குள் எத்தனை குப்பை மூட்டைகளை தூக்கிக் கொண்டு திரிகிறாய் என்று திருப்பிக் கேட்டார்.

கேட்டது பாரதியிடம் அல்ல...நம்மிடம்.

மேலும் பாரதி சொல்லுகிறார்....

முட்டாள்களே, சென்றது இனி மீண்டு வராது. நீங்கள் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து வருந்துகிறீர்கள். சென்றதைப் பற்றி மறந்து விடுங்கள்.

இன்று புதியதாய் பிறந்தோம் என்று நெஞ்சில் உறுதியாக கொண்டு, தின்று, விளையாடி இன்பமாக  வாழ்வீர்.

பாடல்

சென்றதினி மீளாது; மூடரே நீர்
எப்போதும் சென்றைதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;


பொருள்

படிக்காமல் விட்ட பாடங்கள், வாங்காமல் விட்ட சொத்துகள், செய்த தவறுகள்,  பட்ட அவமானங்கள், அனுபவித்த துன்பங்கள், என்றோ எப்போதோ நடந்துவிட்ட தவறுகள்  என்று பழசை நினைத்தே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்.

இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள்  என்று அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ் காலத்தை வீணடிக்கிறோம்

சொல்லிக் கொடுத்தவை, படித்தவை, நாமாக நமக்குச் சொல்லிக் கொண்ட அனுபவப் பாடங்கள் நமக்கும் உண்மைக்கும் நடுவே நிற்கின்றன.


நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது.

இறந்த காலத்தை முற்றுமாக மறந்து விடுங்கள். இன்று புதியதாய் பிறந்தோம்  என்று எண்ணிக்  கொள்ளுங்கள்.

வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என்று எண்ணி ஆரம்பியுங்கள்....ஒவ்வொரு நாளும்.

பழைய குப்பைகளை தூக்கிப்  போடுங்கள்.

பிறந்த குழந்தைக்கு எதிர் காலம் மட்டும் தான் உண்டு....அதற்கு இறந்த காலம் என்பது இல்லை.

குழந்தைக்கு எல்லாமே புதிது....இந்த உலகமே புதிது....மனிதர்கள், உறவுகள், பொருள்கள, சப்தங்கள், காட்சிகள் என்று எல்லாமே புதிது....

அது போல, புத்துணர்வு கொண்டு உண்டு, விளையாடி, இன்பமாக இருங்கள்.

இதை விட உயர்ந்த  உபதேசம் கிடைத்து விடுமா என்ன ?

 


திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை

திருமந்திரம் - செல்வத்தின் நிலையாமை 


எவ்வளவு செல்வம் நமக்கு வேண்டும் ?

நாம் எதற்கு செல்வம்  சேர்கிறோம்.முதலில் தேவைக்கு சேர்கிறோம். பின் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று சேர்கிறோம்.

எவ்வளவு வேண்டும் எதிர் காலத்திற்கு ? சேர்த்துக் கொண்டே  போகிறோம்.

எவ்வளவு பணம் சேர்த்து வைத்தால் நம் எதிர் காலம் கவலை இன்றி கழியும் ?

நம் செல்வத்தை விடுங்கள்....ஒரு அரசனின் செல்வம் ஒன்றும் இல்லாமல் போகும் என்றால் நம் செல்வம் எந்த மூலை ?

சேர்த்த பொருளை அனுபவிக்கிறோமா என்றால் இல்லை. யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.  கொஞ்சம்  பிள்ளைகளுக்கு,கொஞ்சம் அரசாங்கத்திற்கு, கொஞ்சம் தான தர்மம் என்று யார் யாருக்கோ கொடுத்து விட்டுப் போகிறோம்.

இதற்கா இந்தப்  பாடு ? இதற்கா இத்தனை காலம் செலவழித்தோம் ?

திருமந்திரத்தில், திருமூலர் செல்வத்தின் நிலையாமை பற்றி  சொல்லுகிறார்.


அரச  பதவியும்,அதிகாரமும், ஆனையும் தேரும் பொருளும், பிறர் கொள்ளப் போவதற்கு முன், உயிரைத் தொடும் செல்வனை (இறைவனை ) அடையாமல் போனால் அது நல்ல தவமாகாது


பாடல்

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்1
தெருளும் உயிதொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.

பொருள்

அருளும் = அரச ஆணையும்

அரசனும் = அரசனும்

ஆனையுந் தேரும் = யானையும் தேரும்

பொருளும் = செல்வமும்

பிறர்கொள்ளப் போவதன் முன்னந் = பிறர் கொண்டு போவதன் முன்

தெருளும் = அறிவின் தெளிவோடு

உயிதொடுஞ்  = உயிரைத் தொடும்

செல்வனைச் சேரின் = செல்வனாகிய இறைவனை சேர்ந்தால்

மருளும் = மயங்கி 

பினையவன் = பிணைந்தால்

மாதவ மன்றே.= மாதவமாகாது


 

Thursday, March 5, 2015

இராமாயணம் - எது முன்னால் சென்றது

இராமாயணம் - எது முன்னால் சென்றது 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று முடிவு ஆகி  விட்டது.

தசரதன், வசிட்டனிடம் இரமானுக்கு வேண்டிய அறிவுரைகளை சொல்லச் சொன்னான். அது ஒரு பண்பாடு.

வசிட்டனும் மகிழ்வுடன் அந்தக் காரியத்தை செய்து முடிக்க விரைவாக இராமன் இருக்கும் இடம் தேடி செல்கிறான்.

வசிட்டன் முந்திப் போனானா அல்லது அவன் உவகை முந்திப் போனதா என்று யார் முன்னால் போனது என்று தெரியவில்லையாம்...

அவ்வளவு மகிழ்வு. நல்ல மாணவனுக்கு சொல்லித் தர வேண்டும் என்றால் ஆசிரியருக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கும்.

இராமனை விட நல்ல மாணவன் எங்கு கிடைக்கப் போகிறான் வசிட்டனுக்கு...

பாடல்

முனிவனும் உவகையும் தானும் முந்துவான்
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும்
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான்.


பொருள்

முனிவனும் = வசிட்ட முனிவனும்

உவகையும் = அவனுடைய உவகையும்

தானும் = அவனும்

முந்துவான் =  முந்திச் சென்றான். எது முந்தியது ?

மனுகுல நாயகன்  = மனு வம்சத்தின் நாயகன், தலைவன்

வாயில் முன்னினான்; = வாசலை அடைந்தான்

அனையவன் வரவு கேட்டு = வசிட்டனின் வரவு கேட்டு

அலங்கல் வீரனும் = மாலை அணிந்த வீரனான இராமனும்

இனிது எதிர்கொண்டு = இன்பத்தோடு எதிரில் சென்று

தன் இருக்கை எய்தினான்.= தன் ஆசனத்தில்  அமர்ந்தான்.

தான் ஒரு சக்ரவத்தி ஆகப் போகிறேன் என்ற ஆணவம் இல்லை இராமனிடம்.

ஆசிரியர் வருகிறார் என்றால் எழுந்து , எதிர் சென்று வரவேற்று அமரப்
பண்ணுகிறான். அந்த அடக்கம் வேண்டும். ஆசிரியர் மேல் மரியாதை.

நேரமோ இரவு  பின்னேரம்.

சொல்லித் தர ஆசிரியனுக்கு ஆவல்.

கற்றுக் கொள்ள மாணவனுக்கு ஆவல். வேண்டாம், நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று  இருவரும் சொல்லவில்லை.

சொல்லி இருந்தால் ஒன்றும் பண்ணி இருக்க முடியாது. இருந்தும் சொல்லவில்லை. எந்த ஒரு பண்பாட்டின் உச்சத்தில் நாம் இருந்திருக்கிறோம்.

இன்று எங்கிருக்கிறோம்....





பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பழங் குப்பை 


பாரதியார் திண்ணையில் அமர்ந்து இருக்கும் போது , அந்தப் பக்கம் குள்ளச் சாமி ஒரு பழங் கந்தை மூட்டையை சுமந்து  வந்தான்.

பாரதியார் கேட்டார் "என்னய்யா இது, இப்படி குப்பை மூட்டையை தூக்கிக் கொண்டு திரிகிரிறே "

அதற்கு அந்த குள்ளச் சாமி சிரித்துக் கொண்டே சொன்னான்,

"நானாவது பரவாயில்லை, அழுக்கு மூட்டையை வெளியே சுமந்து கொண்டு செல்கிறேன் ...நீயோ குப்பைகளை உள்ளே சுமந்து கொண்டு திரிகிறாயே "

யோசித்து பாப்போம்....

நமக்குள் தான் எவ்வளவு குப்பை மூட்டைகள்...அதுவும் மிக மிக பழைய குப்பைகள். மக்கிப் போனவை. துர் நாற்றம் அடிப்பவை.

ஒவ்வொருவனும் ஒரு ஒரு புத்தகத்தை தூக்கிக் கொண்டு  அலைகிறான்....நான் இந்த புத்தகத்தில் கூறியுள்ளபடி வாழ்கிறேன் என்கிறான்.

அந்தப் புத்தகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பெருமை கொள்கிறான்.

என் புத்தகம் 1000 ஆண்டுகள் பழமையானது என்று ஒருவன் பெருமை கொள்கிறான். இன்னொருவன், தன்னுடைய புத்தகம் 2000 ஆண்டு பழமையானது என்று பெருமை கொள்கிறான்.

பழங் குப்பைகளை தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்.

இவற்றை விட்டு விட்டு வாருங்கள் என்கிறார் பாரதி.

இந்தப் புத்தகங்கள் உங்களை சிறைப்  படுத்துகின்றன.உங்கள் சிந்தனைகளை தடைப் படுத்துக்கின்றன. உங்களை மூளைச் சலவை  செய்கின்றன.இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கிறார் பாரதியார்.

பாடல்

புன்னகைபூத்தாரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்தவனுமேகிவிட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தரெல்லாம மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்


பொருள் 

புன்னகை பூத்து ஆரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்து அவனும் ஏகி  விட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தர் எல்லாம் மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

உங்கள் பழம் நம்பிக்கைகளை, பொய்களை, விட்டு விடுதலை  பெறுங்கள்.

அது எப்படி பழசை எல்லாம் விட முடியும்  ? நம் முன்னவர்கள் என்ன முட்டாள்களா  ? அவர்கள் சொன்னதில் ஏதோ அர்த்தம் இருக்கும் ? அர்த்தம் இல்லாமலா  சொல்லி இருப்பார்கள் ? இத்தனை வருடம் அவற்றை நம்பி காரியங்கள்  செய்து வந்து இருக்கிறோம் ...

பாரதியார் அவற்றிற்கும் விடை தருகிறார்....


Tuesday, March 3, 2015

ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை - எப்படி உணவு உண்ண வேண்டும் ?



எப்படி உணவு உண்ண வேண்டும் என்று ஆசாரக் கோவை மிக விரிவாகச் சொல்கிறது.

அதில் முதல் பாடல்

பாடல்

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்
துண்டாரே யுண்டா ரெனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வ ரதுவெறுத்துக்
கொண்டா ரரக்கர் குறித்து.

பொருள்

நீராடிக் = குளித்து

கால்கழுவி = கால் கழுவி

வாய்பூசி = வாய் கொப்பளித்து

மண்டலஞ்செய்து = உண்ணுகின்ற இலையையோ, தட்டையா  சுற்றிலும் நீர் வலம் செய்து

உண்டாரே யுண்டா ரெனப்படுவர் = உண்டவர்களே, உண்டார் என்று சொல்லப் படுபவர்


அல்லாதார் = அப்படி இல்லாமல் உண்பவர்கள்

உண்டார்போல் = உணவு உண்டவர்களைப் போல

வாய்பூசிச் செல்வர் = வாய் கழுவி செல்வார்கள்

அவரதுவெறுத்துக் = அதை வெறுத்து

கொண்டா ரரக்கர் குறித்து. = கொண்டார் அரக்கர் குறித்து  (அவர்கள் உண்டதை அரக்கர்கள் குறித்து எடுத்துக் கொள்வார்கள் )

ஏன் இப்படி செய்ய வேண்டும் ?

நீராடி = புரிகிறது. உடலில் உள்ள அழுக்கு போன பின், புத்துணர்வோடு உண்பது ஒரு சுகம்.

கால் கழுவி = ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்னால் நீராட முடியாது. குறைந்த பட்சம் கால் கழுவ வேண்டும். கண்ட இடத்திலும் நடப்பதால், காலில் அசுத்தங்கள் ஒட்டி இருக்கலாம். அவை உணவோடு சேர்ந்து உள்ளே போகாமல்  இருக்க கால் கழுவி.

வாய் பூசி = உண்பதற்கு முன்னால் வேறு எதையாவது குடித்திருப்போம் (காப்பி, டீ ). அது நாவில் ஒட்டி இருக்கும். உணவின் சுவையை அறிய விடாது. வாய் கழவி விட்டால் , உணவின் சுவை நன்றாகத் தெரியும்.

நீர் வலம் செய்து = நீர் சுற்றிலும் இருந்தால் எறும்பு போன்ற ஜந்துக்கள் உணவை நாடி வராது. அதை விட முக்கியமானது, பசி அவசரத்தில் பக்கத்தில் நீர்  எடுத்து வைக்காமல் உண்ண ஆரம்பித்து விட்டால், திடீரென்று விக்கல் வந்தால்  நீர் இல்லாமல் சிரமப் படுவோம். முதலிலேயே நீர் வலம் செய்தால், அந்த நீர் இருக்கும் அல்லவா.

அப்படி எல்லாம் செய்ய வில்லை என்றால் அரக்கன் வந்து உங்கள் உணவை கொண்டு போய் விடுவான்  என்று சும்மா பயமுருதுரதுதான்....:)





பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - மூட்டை சுமந்திடுவதென்னே?

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் -  மூட்டை சுமந்திடுவதென்னே?


 இன்னொரு நாள், அந்தக் குள்ளச் சாமி பழைய கந்தைகள் கொண்ட ஒரு அழுக்கு மூட்டையை சுமந்து பாரதியின் முன்னால் வந்தான்.

அவனைக் கண்டு நகைத்து, பாரதி கேட்டான்,


பாடல்


பொய்யறியா ஞானகுரு சிதம்பரேசன்
 பூமிவிநாயகன்குள்ளச்சாமியங்கே
மற்றொருநாள் பழங்கந்தையழுக்கு மூட்டை
 வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
 கற்றவர்கள் பணிந்தேத்துங்கமலபாதக்கருணைமுனி
சுமந்துகொண்டென்னெதிரே வந்தான்
 சற்றுநகை புரிந்தவன்பால் கேட்கலானேன்
தம்பிரானே இந்தத் தகைமையென்னே?
 முற்றுமிது பித்தருடைச் செய்கையன்றொ?
 மூட்டை சுமந்திடுவதென்னே?

மொழிவாய் என்றேன்


பொருள்


பொய் அறியாத ஞான குரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச் சாமி அங்கே மற்றொரு நாள்  பழங்கந்தை அழுக்கு மூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின்  மீது கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாதம் கருணை முனி சுமந்து கொண்டு  என் எதிரே வந்தான்.

சற்று நகை புரிந்து அவன் பால் கேட்காலானேன், தம்பிரானே இந்தத் தகைமை  என்னே ? முற்றுமிது பித்தருடைய செய்கை அன்றோ ? மூட்டை சுமந்திடுவது என்னே ? மொழிவாய் என்றேன் ...


 அதற்கு   அந்த குள்ளச் சாமி சொன்னான் ....


இராமாயணம் - நல்லது செய்யும் முன்

இராமாயணம் - நல்லது செய்யும் முன் 


ஒரு நல்ல காரியம் நடக்கப்  போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு முன் என்ன செய்ய வேண்டும் ?

ஒரு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது, இன்னும் சிறிது நாளில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் நாம் என்ன செய்வோம் ?

மண்டபம் பாப்போம், பத்திரிகை அடிப்போம், சமையலுக்கு, பந்தலுக்கு என்று ஆள் தேடுவோம்.

வீடு வாங்க முன் பணம் கொடுத்து விட்டால் என்ன செய்வோம், வங்கியில் கடன் வாங்க விண்ணப்பம் செய்வோம்.

அந்தக் காலத்தில் , நம் முன்னவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

யாருக்கு நல்லது நடக்கப் போகிறதோ அவர்களுக்கு பெரியவர்களைக் கொண்டு நாலு நல்ல வார்த்தை சொல்லச் சொல்வார்கள்.

"பையனுக்கு / பெண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கிறோம்....அவனுக்கு/அவளுக்கு  நல்லது எடுத்துச் சொல்லுங்கள் " என்று வீட்டுக்கு வரும் பெரியவர்களை  வேண்டிக் கொள்வார்கள். அவர்களும் அந்த பெண்ணையோ, பையனையோ அழைத்து திருமணம் என்றால் என்ன, அதில் உள்ள நெளிவு சுழிவுகள் என்ன, எப்படி வாழ வேண்டும், எங்கே தவறு வரும், அதை எப்படி தடுப்பது என்றெல்லாம் தங்களது அறிவில் இருந்து அனுபவத்தில் இருந்து சொல்லித் தருவார்கள்.

பெண்ணும் மாப்பிளையும் திருமணம், முதலிரவு என்று மகிழ்ச்சியில் இருக்கும் போது அதையும் தாண்டி வாழ்வில் உள்ள கடமைகள் , திருமண வாழ்வில் உள்ள   சிக்கல்கள் இவை அவர்களுக்குத் தெரியாது. அது தெரிந்த பெரியவர்களைக் கொண்டு சொல்லச் சொன்னால் "ஓ, இப்படியெல்லாம் இருக்கிறதா " என்று அவர்கள் மனதில் தோன்றும். அவர்களை திருமண வாழ்விற்கு தயார் செய்யும்.

வீடு வாங்கப் போகிறாயா, வீடு எப்படி இருக்க வேண்டும், பத்திரத்தில் எதுவெல்லாம் இருக்க வேண்டும், எப்படி சிக்கனமாக இருந்து கடனை அடைக்க வேண்டும்   என்றெல்லாம் சொல்லித் தருவார்கள்.

ஒரு பத்து பேர் சொல்லும் போது , அதில் பொதுவான சில கருத்துகள் மீண்டும் மீண்டும் வரும். அது அவர்கள் (பெண்ணோ, பிள்ளையோ, வீடு வாங்குபவர்களோ) மனதில் ஆழமாக  பதியும்.


இங்கே,

இராமனுக்கு முடி சூட்டுவதாக முடிவு செய்து விட்டது. தசரதன் என்ன செய்தான் தெரியுமா, வசிட்டனை அழைத்து இராமனுக்கு அறிவுரை சொல்லச் சொன்னான்.

 பாடல்

‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது ‘எனத் தொழுது சொல்லினான்.

பொருள் 

தசரதன், வசிட்டனிடம் சொல்லுகிறான்

‘நல் இயல் மங்கல நாளும் நாளை = நாளையே நல்ல நாள்


அவ் = அந்த
வில் இயல் = வில்லை தன் இயல்பாகக் கொண்ட

தோளவற்கு = தோளை உடைய இராமனுக்கு

ஈண்டு = இப்போது

வேண்டுவ = தேவையானவற்றை

ஒல்லையின் இயற்றி = சீக்கிரமாக , விரைந்து சொல்வாயாக

நல் உறுதி = நல்ல, உறுதி வாய்ந்த

வாய்மையும் = உண்மையும்

சொல்லுதி பெரிது ‘ = விரிவாக எடுத்துச் சொல்

எனத் தொழுது சொல்லினான்.= என்று வணங்கி வேண்டினான்

மற்ற அரசர்களுக்கு ஓலை அனுப்ப வேண்டும், மண்டபத்தை தயார் செய்ய வேண்டும், சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வருபவர்களை தங்க வைக்க  இடம் சரி செய்து தர வேண்டும்....சக்ரவர்த்தி திருமகனின் முடி சூட்டு விழா...எப்படி இருக்க வேண்டும் ?

இதெல்லாம் இருக்க, தசரதன், வசிட்டனிடம் இராமனுக்கு அறவுரை சொல்லச் சொல்கிறான்.

நமகெல்லாம் ஒரு பாடம்.

நாளை நம் வீட்டில் ஒரு நல்லது நடக்க இருக்கிறது என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்  என்று கம்பன் பாடம் நடத்திவிட்டு போகிறான்.

பெரியவர்கள் அறவுரை சொல்லும் போது  இன்னொன்றும் நிகழும்.

நாளை அந்த பையனுக்கோ , பெண்ணுக்கோ ஒரு சிக்கல் வந்தால், "நாம் சொல்லி, வாழ்த்தி வந்த பையன்/பெண், அவர்களுக்கு ஒரு சிக்கல், நான் எப்படி  பார்த்துக் கொண்டு இருக்க முடியும் " என்று அந்த சிக்கலை சரி செய்ய உதவுவார்கள்.

பெரியாரைத் துணைகோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

வயதில் சிறியவர்கள், பெரியவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் ஆழத்தை  அறிய மாட்டார்கள். பெற்றோர்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்க,

இராமன் பெரிய ஞானி. அவனுக்குத் தெரியாதது இல்லை.

அவனுக்கு வசிட்டன் என்ன சொல்லி இருப்பான் ?

பார்ப்போம் ..



Sunday, March 1, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - காதல் ஒன்றே வாழும் நெறி 



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.



கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவான்;



குள்ளச்சாமி சொன்னது எல்லாம் சரிதானா ? அவை உண்மைதானா ?

மூச்சை கட்டுப் படுத்தி, யோகம் பயின்றால், அழியாத (மணல் போல) உண்மையை அறிய முடியுமா ?

பாரதி சொல்கிறான் , கையில் (வேத) நூல் ஏதும் இருந்தால், அதைப் பிரித்து அதில் அந்த குள்ளச் சாமி சொன்ன உபதேசம் எங்கே  இருக்கிறது என்று காட்டச் சொல்வேன். அவனும் அதைக் காட்டி இருப்பான்.

அதாவது, குள்ளச் சாமி சொன்னது எல்லாம் நம் வேத புத்தகத்தில் உள்ளதுதான் என்கிறார்.

மேலும்....


வானைக் காட்டி, மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,


வானத்தைக் காட்டி, அந்த வானத்து இருளை கண்ணின் மையாகக் கொண்ட அவளின் காதல் ஒன்றே இந்த உலகில் வாழும் வழி என்று காட்டி.

அவள் யார் ?

தாயா  ? காதலியா ? மனைவியா ?

தெரியவில்லை. ஆனால், அவளின் காதல் மட்டும்தான் வையகத்தில் வாழும் நெறி என்கிறார் பாரதியார்.

அவள், உங்களுக்கு யாரோ, அவள் தான் பாரதி சொன்ன அவள்.

அது மட்டும் அல்ல,

குள்ளச்சாமி எனக்கு பல குறிப்புகளை காட்டி, ஞானத்தைத் தந்தான் என்கிறார்.


ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,


அந்த குள்ளச் சாமி பொய் என்பதை அறியாதவன். சிதம்பரேசன், பூமியில் விநாயகன் அவனே (விநாயகன் = நாயகன் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் விநாயகன் )

பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்

பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.


அடுத்த நாள் பாரதி குள்ளச்சாமியை மீண்டும் சந்திக்கிறார் .....