கந்தரனுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
இறைவனை அடைய பல மார்கங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்று பல இருக்கின்றன. எது சிறந்தது, எது எளிதானது, எது யாருக்குச் ஏற்றது என்று அறிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது.
ஞான மார்க்கதின் உச்சம் தொட்ட மணிவாசகரும்
"அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து
சிந்தை மகிழ சிவா புராணம் தன்னை..."
என்பார்.
அது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்த உலகில் எவ்வளவோ துன்பங்கள் நிகழ்கின்றன. உயிருக்கு உயிரானவர்கள் அகாலத்தில் பிரிந்து போய் விடுகிறார்கள், நோய், வறுமை, வலி, பாலியல் வன் கொடுமைகள், போர், பெற்றோரை இழப்பது, பசி, உடல் ஊனம், ...இத்தனை துன்பதுக்கும் இறைவன்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? நல்லதுக்கும் மட்டும் அவன் அருள் என்று சொன்னால், துன்பதுக்கு யார் பொறுப்பு ஏற்பது? துன்பதுக்கு அவன் பொறுப்பு இல்லை என்றால், இன்பதுக்கும் அவன் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா?
இதை எப்படி விளங்கிக் கொள்வது ?
இன்பம், துன்பம்,
பாவம், புண்ணியம்,
வறுமை, செல்வம்,
இரவு, பகல்,
என்ற இருமைகள் எல்லாம் நம் அறிவின் ஆக்கம். இறைவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.
நம்மிடம் பணம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் அவனுக்கு என்ன?
நம்மிடம் ஓரிரு பட்டங்கள் இருந்தால் என்ன, அல்லது நாம் கை நாட்டாக இருந்தால் அவனுக்கு என்ன?
இந்தப் பிரிவுகள் எல்லாம் அவனை ஒன்றும் செய்வது இல்லை.
இன்பமும், துன்பமும் நாம் செய்த வினையால் வருகிறது. அதில் இறைவனின் பங்கு ஒன்றும் இல்லை.
இந்த இருவினை பிரிவுகள் கடந்த இடத்தில் அவன் இருக்கிறான்.
இறைவனை அறிந்தவர்கள், அவன் இந்த பிரிவுகளை கடந்தவன் என்று சொல்கிறார்கள்.
"தனிச் சிறப்பு கொண்ட வேலை கையில் கொண்ட முருகன், முனிவன், நமது ஞான குரு, என்று அவன் அருள் அன்றி அவனை அறிய முடியுமா? (முடியாது). அவன் உருவம் உள்ளவன் அல்ல, உருவம் இல்லாமலும் இல்லை, இருப்பவன் அல்ல, இல்லாமல் இருப்பவன் அல்ல, அவன் இருள் அல்ல, ஒளி அல்ல, என்று இருப்பவன்"
பாடல்
முருகன் தனி வேல் முனிநங் குருவென்
றருள் கொண்டறியா ரறியும் தரமோ
வுருவன் றருவன் றுளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே .
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html
(pl click the above link to continue reading)
முருகன் = முருகன்
தனி = தனிச் சிறப்பு வாய்ந்த
வேல் = வேலாயுதத்தை கொண்ட அவன்
முனி = முனிவன்
நங் = நம், நமது
குருவென் றருள் = குரு வென்று அருள்
கொண்டறியா ரறியும் = கொண்டு அறியார், அறியும்
தரமோ = தரமோ? முடியுமா?
வுருவன் றருவன் றுளதன்று இலதன்று = உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று
இருளன்று = இருள் அன்று
ஒளியன்று = ஒளியும் அன்று
என நின்றதுவே . = என்று நின்றதுவே
நாம் இந்த உலகை நமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி பிரித்து வைத்துக் கொண்டு துன்பப்படுகிறோம்.
அழகானது (பிடிக்கும்), அழகற்றது (பிடிக்காது), அறிவு, அறிவீனம், செல்வம், ஏழ்மை, வெள்ளை, கறுப்பு, உயரம், குட்டை,பருமன், மெலிந்து இருப்பது, என்று உலகை பிரித்துப் போட்டுவிட்டு, அல்லாடுகிறோம்.
இந்த இருமைகள் மறையும் போது, இறை உணர்வு மேலிடும்.
"ஒன்றாக காண்பதுவே காட்சி" என்பார் ஔவையார்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
என்பார் வள்ளல் பெருமான்.
சிந்திப்போம்.
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
]
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ReplyDelete