Saturday, November 26, 2022

கந்தரனுபூதி - எதிரப் படுவாய்

           

 கந்தரனுபூதி - எதிரப் படுவாய்


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கை முழுவதும் பயம் என்ற ஒரு பெரிய உணர்வால் உந்தப்பட்டே சென்று கொண்டு இருக்கிறது. 


பள்ளி நாட்களில் பள்ளிக் கூடம், ஆசிரியர், பாடம், பரீட்சை என்று பயம். 

பின், வேலை, மேலதிகாரி, செய்து முடிக்க வேண்டிய வேலைகள், வேலை போய் விடுமோ என்ற பயம்...


குடும்பம் என்று வந்துவிட்டால், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குடும்பம் என்ன ஆகும் என்ற பயம். 


இதற்கு நடுவில் நோய், விபத்து ,பிள்ளைகள் படிக்க வேண்டுமே, அவை நல்ல படியாக வளர வேண்டும் என்று ஆயிரம் கவலை, பயம். 


பயங்களில் பெரிய பயம் மரண பயம் . அனைத்து பயங்களுக்கும் மூல பயம் மரண பயம். 


சில பேருக்கு மரணம் என்று சொன்னாலே பிடிக்காது. முகம் சுளிப்பார்கள். அவ்வளவு பயம். 


மரண பயம் இருக்கும் வரை நம்மால் வாழ்கையை தெளிவாக அணுக முடியாது. எதை எடுத்தாலும் அந்த பயம் முன் வந்து நிற்கும். நேரடியாக, மறை முகமாக அது நம்மை பயப்படுதிக் கொண்டே இருக்கும். 


அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்று நினைத்தால், ஒரு நாள் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ வீடு வர நேரம் ஆனால், போன் சுவிட்ச் ஆப் என்று வந்தால், அன்று தெரியும். 


அந்த பயத்தை நீக்கி விட்டால்? 


"என் இறுதிக் காலத்தில், நான் மரணப் படுக்கையில் இருக்கும் போது , மிகவும் பயந்து போய் இருப்பேன். அப்போது, முருகா, நீ மயில் மேல் வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்" என்று வேண்டுகிறார். 



பாடல் 


கார்மா மிசைகா லன்வரிற் கலபத்

தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்

தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடுவே லவனே!


சீர் பிரித்த பின் 


கார் மாமிசை காலன் வரின் கலபத்து

ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்

 தார்மார்ப வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)



கார் = கரிய மேகம் போன்ற 


மாமிசை = (மா = விலங்கு, மாக்கள் = விலங்குகள்) = எருமை மேல் 


காலன் = எமன் 


வரின் = வரும் போது 


கலபத்து = கலபம் என்றால் தோகை.


ஏர் மாமிசை  = மயில் மேல் ஏறி 


வந்து = வந்து 


எதிரப் படுவாய் = என் எதிரில் வருவாய் 


தார்மார்ப = மாலை அணிந்த மார்பை உடையவனே 


வலாரி = வலன் என்ற அசுரனை கொன்ற இந்திரன் 


தலாரி = தலம் (இடம்) 


எனும் = என்ற தேவ லோகத்தை வென்ற 


சூர்மா = சூரன் என்ற அசுரன் 


மடியத் = அழியும் படி 


தொடு வேலவனே! = வேலை எடுத்தவனே 


மரண பயம் என்றால் என்ன? எதைப் பற்றி பயம்?  சிந்திப்போம். .


குடும்பத்தை தனியே விட்டு விட்டுப் போகிறோமே என்ற பயமா என்றால் இல்லை. அது கவலை. அது கூட கொஞ்ச வயது வரை. .என்பது வயதில் நம்மைச் சார்ந்து யாரும் இருப்பது இல்லை. 


சரி, அனுபவிக்காமல் விட்டு விட்டவைகள் காரணமாக இருக்குமா என்றால், என்பது தொண்ணுறு வயதில் எதை அனுபவிக்க முடியும்?


பின் எதுதான் மரண பயம் என்று கேட்டால் சரியான விடை கிடைத்தபாடில்லை. நசிகேதன் தொடங்கி இன்று வரை அந்தக் கேள்வி விடை வேண்டி நிற்கிறது. 


நாம் சேர்த்து வைத்த அனுபவங்களை விட்டு விட்டுப் போகிறோமே என்பதுதான் கவலை. தெரியாத ஒன்றை இழக்க முடியாது. அப்படியே இழந்தாலும் பயம் இருக்காது. இந்த தெரிந்த விடயங்கள்தான் கவலைக்குக் காரணம். பயத்தின் வித்து. 


அந்த பயத்தை போக்க வேண்டும் என்று வேண்டுகிறார். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html


]




No comments:

Post a Comment