Sunday, November 6, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் -2௦33 - குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே


(இதன் முந்தைய பதிவுகளை இந்த வலை தளத்தின் இறுதியில் காணலாம்) 


நாம் ஒருவரை நினைக்கிறோம்  என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில் நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார், அறிவாளி என்றெலாம் அவரின் குண நலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும். 


உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இள வயது புகைப் படத்தை பார்த்தால் நமக்கே சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்"  என்ற எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். 


குணம் மாறுவது இல்லை. 


நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், ,கறுப்பு வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை, என்றெல்லாம் நினைக்கிறோம். 


இறை என்பது நம் சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து. 


உருவம்

அரு உருவம் 

அருவம்

பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று நம் சிற்றறிவு அறியாது. 


"சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர். 


இங்கே, ஆழ்வார் சொல்கிறார், 


"நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத் தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார். 


பாடல் 


காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற


ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப


ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட


கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/233.html


(Please click the above link to continue reading)



காற்றினைப் = காற்றினை 


புனலைத் = நதியை, நீரை 


தீயைக் = தீயை 


கடிமதி ளிலங்கை  = காவல் பொருந்திய மதில்களை உடைய 


இலங்கைசெற்ற = இலங்கையை போரில் வென்ற 



ஏற்றினை = ஏறு போன்றவனை 


இமயம் மேய = இமயம் போல் 


எழில்மணித் திரளை = அழகிய மணி போன்றவனை 


இன்ப ஆற்றினை = பேரின்ப வெள்ளத்தினை 


அமுதந் தன்னை = அமுதத்தை 


அவுணனா ருயிரை யுண்ட = அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த 


கூற்றினை = கூற்றுவனை 


குணங்கொண் டு  = குணங்களைக் கொண்டு 


உள்ளம் = உள்ளமே 


கூறுநீ  = நீ சொல் 


கூறு மாறே. = கூறும் + ஆறு = கூறுகின்ற வழி அதுதான் 


வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். 


இந்த பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள்.


சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப் பட்டு ஞானேந்த்ரியங்கள், கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது. இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும் பொருள் சொல்லுவார்கள். 



ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன் (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும் கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம். 


நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே போகும். 





 








2032 - நெறிமையால் நினைய வல்லார்



https://interestingtamilpoems.blogspot.com/2022/11/232.html








1 comment:

  1. அருமையான உரை. ஒருவனை உய்விக்க உள்ள ஒரே வழி பகவான் நாமத்தை இடை விடாது ஜபித்து கொண்டும்,அவனின் கல்யாண குணங்களை நினைத்துக்கொண்டும் இருப்பது தான்.
    இந்த குரு சமாச்சாரம் தான் நெருடுகிறது.அவ்வளவு எளிது அல்ல கிடைப்பதற்கு.

    ReplyDelete