Wednesday, November 2, 2022

கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா

         

 கந்தரனுபூதி - மெய்ப் பொருள் பேசியவா


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நீங்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள் என்று கேட்டால் "என் சொந்த ஊர் இன்னது" என்று சொல்லுவார்கள். 


சொந்த வீடு இருக்கலாம், சொந்த கார் இருக்கலாம், சொந்த ஊர்? ஊரை வாங்கி வாங்க முடியுமா? 


ஊரின் மேல் அவ்வளவு பற்று. அது சொந்த ஊராகி விடுகிறது. 


அது போல், என் மனைவி, என் கணவன், என் பிள்ளை, என் சுற்றம் என்று நாம் சொந்தம் கொண்டாடுகிறோம்.  அவை நமதா?  நம் சொல்படி கேட்குமா? நம் விருப்பப்படி நடக்குமா? பாதியில் வந்த உறவுகள். போகிற வழியில் விட்டு விட்டுப் போய் விடும். அதை எல்லாம் நம் சொந்தம், நமது என்று நாம் நினைத்து துன்பப் படுகிறோம். 


இவை எல்லாம் நமது என்று நினைப்பதற்கு காரணம் ஒரு பிரமை. ஒரு தோற்றம். அவ்வளவுதான். 


அதெப்படி பிரமை ஆகும்? என் பிள்ளை என் சொந்தம் இல்லையா? என் கணவன் என் உரிமை இல்லையா? என்று கேட்கத் தோன்றும். இல்லை, இவை உனது இல்லை என்று யார் சொன்னாலும் புரியாது.  அதற்கு இறை அருள் இருந்தால்தான் முடியும். 


அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த பிரமை விலகும்படி முருகன் அவருக்கு உபதேசம் செய்தான் என்று. 


"ஊர், உறவு, இந்த உடம்பு என்ற இவை என்னது என்ற பிரமை போயகல எனக்கு உண்மையை விளக்கியவன் முருகன். அவன் யார் தெரியுமா, மலை அரசனின் மகளான பார்வதியின் மகன். எதிரிகளை போரில் வென்றவன்"



பாடல் 


அமரும் பதிகேள் அகமாமெனுமிப் 

பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா  

குமரன் கிரிராச குமாரி மகன் 

சமரம் பொரு தானவ நாசகனே . 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


(pl click the above link to continue reading)



அமரும் பதி = இருக்கின்ற ஊர். 


கேள்  = உறவினர் 


அகமாமெனுமிப்  = அகம் ஆம் எனும் = இந்த உடல் என்ற இவை 


பிமரம் = பிரமை 


கெட = அழிய 


மெய்ப் பொருள் = உண்மையான,நிலையான பொருளை 


பேசியவா   = உபேதேசம் செய்தவன் 


குமரன் = இளைஞன் 


கிரி = மலை 


ராச = அரசன் 


குமாரி  = மகள் 


மகன்  = மகன் 


சமரம் = சண்டை, போர் 


பொரு = புரிந்து 


தானவ நாசகனே .  = தானவர்கள் என்றால் அசுரர்கள். அவர்களை நாசம் செய்தவன். 


விரிவுரை 


பதி = பதி என்றால் ஊர். "பதி எழு அறியா பழங்குடி" என்று பேசும் சிலப்பதிகாரம்.  மக்கள் இருக்கின்ற ஊரை விட்டு அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம் அங்கே நல்ல வேலை வாய்ப்பு, சம்பளம், நல்ல வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதால். பூம்புகார் மக்கள் வேறு ஊருக்கு குடி பெயர்ந்து போக மாட்டார்களாம். காரணம், அந்த ஊர் அவ்வளவு சிறப்பான ஊர். 


கேள் = உறவினர். 


இராமன், குகனிடம் இருந்து விடை பெறும் போது சொல்லுவான், "அன்புள்ளவனே, இனி நாம் ஐவரானோம்" என்றான். 


இராமன் அதோடு நின்றிருந்தால் ஏதோ சமாதனம் சொல்கிறான் என்று ஆகி இருக்கும்.  இன்னும் ஒரு படி மேலே போகிறான். இந்த இலக்குவன் உனக்கு இளைய தம்பி என்கிறான். அது கூட பெரிய விடயம் இல்லை. 


"இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவு" என்கிறான். 


"நன்னுதல் அவள் நின் கேள்" - அழகான நெற்றியை உடைய இவள் உன் உறவுக் காரி என்கிறான். அந்த அளவுக்கு அந்த சகோதர வாஞ்சையை அழுத்தமாகச் சொல்கிறான் இராமன். 


‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;

முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 


அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்

என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்

நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்


மெய்ப் பொருள் = மெய் பொருள் என்றால் உண்மையான பொருள். நிலையான பொருள். என்றும் நிலைத்து இருக்கும் பொருள். அப்படி என்றால் இந்த ஊர், உறவு, உடம்பு என்பதெல்லாம் நிலையானவை அல்ல, உண்மையானவை அல்ல என்று புரிந்து கொள்ளல்லாம். 


"பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே"


என்பார் மணிவாசகர். 


இறைவன் தான் மெய் ஞானம். 


கிரிராச குமாரி மகன் = முருகன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை. பின் எப்படி கிரிராச குமாரி மகன் என்று சொல்கிறார். ஆண் எவ்வளவுதான் பலம் பொருந்தியவனாக இருந்தாலும், அவனை செயலாற்றும் சக்தி பெண்ணிடம்தான் உள்ளது என்பதை உணர்த்த பார்வதி மகன் என்றார். 


சமரம் பொரு தானவ நாசகனே = தானவர்கள் என்றால் அரக்கர்கள். 


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,

சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே

பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே


என்பார் அபிராமி பட்டர். 


"வானவர் தானவர்" என்றால் தேவர்களும், அசுரர்களும். 


அசுரர்களோடு சண்டை போட்டதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?  


நமக்குத் துன்பம் தரும் பல அசுரர்கள் உண்டு. எல்லாம் ஏதோ பெரிய உருவமாய், கறுப்பாய், மண்டை ஓட்டு மாலை அணிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். 


ஆணவம், பாசம், பற்று, பொறாமை, பேராசை, அதீத காமம், களவு, பொய் பேசுதல், என்று நமக்குள் ஆயிரம் அசுரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை விடாமல் துன்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்லது செய்வது போலத் தெரியும். அந்த இனிப்பைச் சாப்பிடு, இந்த காப்பியைக் குடி, ஐந்து மணி நேரம் டிவி பார், மதியம் உறங்கு, அரட்டை அடி, என்று நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் அசுரர்கள் ஆயிரம். அவர்களோடு நாம் தனித்துப் போரிட முடியாது. 


அசுரர்களை அழித்தது ஒரு குறியீடு. 

 

நம் மன மாசுக்கள்தான் அசுரர்கள். நம் போர் அவற்றோடுதான். வெல்ல முடியாமல் தவிக்கிறோம். முருகா, அருள் புரி என்று வேண்டுகிறார். 


மேலும் சிந்திப்போம். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html




]




1 comment:

  1. "நம் மன மாசுக்கள்தான் அசுரர்கள். நம் போர் அவற்றோடுதான். வெல்ல முடியாமல் தவிக்கிறோம். முருகா, அருள் புரி" - ஆழமான வார்த்தைகள் ! அபாரம் !!!

    ReplyDelete