Monday, July 22, 2013

தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே

தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே 


தாயின் கருவறையில் இருந்தோம். எவ்வளவு பெரிய இருட்டு அறை அது.

வெளிச்சம் கிடையாது, கருவில் இருக்கும் குழந்தைக்கு அறிவு கிடையாது. கண் பார்வை கிடையாது.

அது போல ஆன்மாக்களாகிய நாம், ஆணவம் என்ற இருண்ட கரு அறையில்  அகப்பட்டு கிடக்கிறோம். தெளிவாக பார்கின்ற பார்வை இல்லை. அறிவு இல்லை. அங்கும் இங்கும் போக முடியாமல் கட்டுண்டு இருக்கிறோம்.

குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் இன்னல்தான்.

பசி, பிணி, மூப்பு என்ற முப்பெரும் துயரிலே இந்த உயிர்கள் கிடந்து உழல்கின்றன.

இந்த இருளில் இருந்து, இந்த துயரில் இருந்து உயிர்கள் விடுபட்டு, பேரின்பத்தை அடையச் செய்பவன் இறைவன்.

அன்னை வடிவான அப்பனே என்று உருகுகிறார் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவன் தந்தையானவன்.  தாயும் ஆனவன்.

பாடல்

காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போற்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுதமூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற உறுக்கி இடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.

சீர் பிரித்த பின்

கார் இருள் இட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற 
கண்ணில்லாக் குழவியைப் போல் 
கட்டு உண்டிருந்த எம்மை வெளியில் விட்டு அல்லலாம்
காப்பிட்டு மெய்யென்று பேசும் பாழும் பொய் உடல் 
பலக்க விளைய அமுதம் ஊட்டி 
பெரிய புவனத்திடை போக்கும் வரவும் உறுகின்ற
பெரிய விளையாட்டு அமைத்திட்டே 
இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு 
இடருற  உருக்கி இடர் தீர்த்து 
இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் 
இசைந்து துயில் கொண்மின் என்று 
சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே 
சித்தாந்த முத்தி முதலே 
சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே 
சின்மயானந்த குருவே 


பொருள்

கார் இருள் இட்ட = கரு கும்முன்னு இருட்டு

ஆணவக் கருவறையில் =ஆணவமான கருவறையில்

அறிவற்ற  = அறிவு இல்லாத

கண்ணில்லாக் = கண்ணும் இல்லாத

 குழவியைப் போல் = குழந்தையைப் போல

கட்டு உண்டிருந்த = கட்டுப்பட்டு இருந்த

எம்மை = எங்களை 

வெளியில் விட்டு =   அந்தக் கருவறை விட்டு வெளியே வரவைத்து 

அல்லலாம் = துன்பம் என்ற

காப்பிட்டு = விலங்கை இட்டு

மெய்யென்று பேசும் = உண்மை என்று பேசும்

பாழும் பொய் உடல்  = பாழாய்ப்போன இந்த பொய்யான உடலை (இன்றிக்கும் நாளை போகும் பொய்யான இந்த உடலுக்கு மெய் என்று பெயர்  வைத்தது யார் )

பலக்க விளைய = பலமாகும்படி

அமுதம் ஊட்டி = அமுதம் ஊட்டி

பெரிய புவனத்திடை = பெரிய  உலகத்தில்

போக்கும் வரவும் உறுகின்ற = பிறந்து இறந்து வருகின்ற

பெரிய விளையாட்டு அமைத்திட்டே  = பெரிய விளையாட்டை அமைத்து

இட்ட தன் சுருதி மொழி தப்பில் = நாக்குக் குழறி, மொழி தப்பி

 நமனை விட்டு = எமனை விட்டு

இடருற  உருக்கி = துன்பங்களை உருக்கி

இடர் தீர்த்து  = துன்பங்களை தீர்த்து

இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் =  இரவும் பகலும் இல்லாத பேரின்ப வீட்டினில்

இசைந்து துயில் கொண்மின் என்று = நன்றாக சேர்ந்து தூக்கம் கொள்ளுங்கள் என்று

சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே  = சீரிய உலக அன்னையான  வடிவம் கொண்ட என் தந்தையே

சித்தாந்த முத்தி முதலே = அனைத்து சித்தாங்களும் ஆதி மூலமே

சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே  = தலையில் உள்ள புத்தி விளங்க வரும் தட்சிணா மூர்த்தியே

சின்மயானந்த குருவே = சின்முத்திரைகள் மூலம் உபதேசம் செய்யும் குருவே


2 comments:

  1. மிகவும் "கடா முடா" என்ற பாடல். ஒரு இனிமையே இல்லை.

    இரண்டாவது, மிகவும் pessimistic ஆன பாடல்.

    ReplyDelete
  2. அருமையான பாடல்

    ReplyDelete