Saturday, July 13, 2013

இராமாயணம் - கம்பனில் காமம்

இராமாயணம் - கம்பனில் காமம் 


காமம் ஒரு உக்கிரமான உணர்ச்சி. ஊரெங்கும், உலகெங்கும் எல்லா நேரமும் ஓயாமல் காமம் கரை புரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது. பேருந்தில், அலுவகலத்தில், இணைய தளங்களில், எங்கும் காமம் கசிந்து கொண்டே தான் இருக்கிறது.


ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை யாரும் படம் பிடித்து விடலாம் - கவிதையில், கட்டுரையில், கதைகளில்.

எங்கும் விரிந்து கிடக்கும் காமத்தை பற்றி சொல்லுவது கடினமான விஷயம்.

கம்பன் சொல்லுகிறான்....

கானகத்தில் காமத்தில் கண் சிவந்த சிங்கமும் அதன் துணையும் மலை குகைக்குள் செல்லுவதும், மலை போன்ற யானைகள் காம வசப் பட்டு அவற்றின் உடலில் இருந்து வழியும் மதன நீரால் மண் குழைந்து சகதியாக மாறி, அந்த சகதியில் செல்லும் தேர்கள் வழுக்கி விழுகின்றன.....

பாடல்


தழல்விழி ஆளியும் துணையும் தாழ்வரை
முழைவிழை, கிரிநிகர் களிற்றின் மும்மத
மழைவிழும் ,விழும்தொறும் மண்ணும் கீழுற
குழைவிழும் , அதில் விழும் கொடித்திண்தேர்களே!


பொருள்




தழல்விழி = நெருப்பு போன்ற விழிகள் (காமத்தால் சிவந்த விழிகள்)

ஆளியும் = சிங்கமும்

துணையும் = அதன் துணையும்

தாழ்வரை முழைவிழை = வரை என்றால் மலை. முழை என்றால் குகை. விழை என்றால் விரும்புதல். மலை அடிவாரத்தில் உள்ள குகைகளை விரும்பிச் செல்லும்

கிரிநிகர் = மலை போன்ற

களிற்றின் = யானையின்

மும்மத = மூன்று மதன நீர்கள்

மழைவிழும் = மழை போல் சொரியும்

விழும்தொறும் = அப்படி விழும் போது

மண்ணும் கீழுற = மண்ணில் குழி விழும்

குழைவிழும் = அந்த குழியில் தங்கிய நீரோடு சேர்ந்து மண் குழையும்

அதில் விழும் கொடித்திண்தேர்களே = அந்த குழைந்த சகதியில் வழுக்கி விழும் கொடிகளை கொண்ட திண்மையான தேர்களே

எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் காமத்தை பற்றிய கம்பனின் கண்ணோட்டம் இது.

நாவுக்கரசரும் இதைப் போல் பாடி இருக்கிறார். அது இன்னொரு ப்ளாகில்.



1 comment:

  1. சுவையான பாடல்.

    அனால், நான் "ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை யாரும் படம் பிடித்து விடலாம் - கவிதையில், கட்டுரையில், கதைகளில்" என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.

    ReplyDelete