Wednesday, July 24, 2013

இராமாயணம் - அவனா நீ ?

இராமாயணம் - அவனா நீ ?


இராமனும் இலக்குவனும்  மான் பின்னால் போன பின், இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் மெல்ல மெல்ல வருகிறான். அவன் எப்படி வந்தான் என்று முந்தைய ப்ளாக்கில் பார்த்தோம்.

அப்படி மெல்ல மெல்ல சீதை இருக்கும் குடிசையின் வாசலுக்கு வருகிறான்.

நாக்கு குழற, குரல் நடுங்க "யார் இங்க இருக்கா " என்று கேட்டான். அவன் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்தால் தேவர்கள் கூட இவன் இராவணன் என்று கண்டு பிடிக்க முடியாது.

பாடல்

தோம் அறு சாலையின்    வாயில் துன்னினான்; 
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்; 
'யாவர் இவ் இருக்கையுள்  இருந்துளீர்?' என்றான்- 
தேவரும் மருள்தரத் தெரிந்த மேனியான்.


பொருள்





தோம் அறு = தோம் என்றால் குற்றம். தோம் அறுஎன்றால் குற்றமற்ற

சாலையின் = வீட்டின்

வாயில் துன்னினான் = வாசலில் வந்து நின்றான்

நா முதல் குழறிட = நாக்கு குழற

நடுங்கும் சொல்லினான் = நடுங்கும் சொல்லோடு

'யாவர் இவ் இருக்கையுள்  இருந்துளீர்?' என்றான் = இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டான்

தேவரும் = தேவர்கள் கூட

மருள்தரத் தெரிந்த மேனியான் = மயங்கும் படி உள்ள மேனியை உடையவன். தேவர்களுக்கு இராவணனை நன்றாகத் தெரியும். .அதனால் "தெரிந்த மேனியான் " என்றார். மருள் தர என்றால் மயங்கும் படி என்று அர்த்தம். அவனை நன்றாகத் தெரிந்த தேவர்களுக்கே மயக்கம் - அவனா இவன் என்று.

பாவம் சீதை...அவளுக்கு எப்படி தெரியும்....



1 comment:

  1. நாக் குழறுவது வேடத்தாலா, அல்லது குற்ற உணர்வாலா?

    ReplyDelete