திருக்குறள் - அன்பு, உடல், உயிர்
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
அன்போடு சேர்ந்த நெறி என்பது உயிருக்கு எலும்போடு கொண்ட தொடர்பு போன்றது.
ஏதாவது புரியுதா ?
என்னமோ , அன்பு - எலும்பு என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிற மாதிரி இருக்குல ?
மற்றவர்கள் என்ன அர்த்தம் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த
பொருத்தமாகும் - இது கலைஞர் கருணாநிதி உரை
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர். - இது மு. வ எழுதிய உரை.
நாமும் கொஞ்சம் சிந்திப்போம்.
வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் உயிரை விட யாரும் அவ்வளவு எளிதில் நினைப்பது இல்லை. சிறை, சித்தரவதை, தாங்க முடியாத துக்கம் என்று எது வந்தாலும், இந்த உடலுக்கு உயிரின் மேல் உள்ள ஆசை போவது இல்லை.
உயிரும் உடலை அவ்வளவு எளிதில் விடுவது இல்லை.
வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லா உயிர்களிடத்திலும் மேலோங்கி இருக்கிறது.
ஹிட்லர் அப்பாவி மக்களை எப்படி எப்படி எல்லாமோ துன்பப் படுத்தினான். மக்கள் அதையும் சகித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள்.
உயிராசை. உயிர் பற்று அவ்வளவு ஆழமானது. எந்த காலத்திலும் விடாது.
நூறு வயது ஆன பாட்டிக்கோ, தாத்தாவுக்கோ கூட சாவதில் விருப்பம் இருப்பது இல்லை.
கால காலத்தில் போய் சேர வேண்டும் என்று வாய் சொல்லும், கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்தால் கூட ஊரை கூட்டி விடுவார்கள். ஆஸ்பத்திரி, மருந்து, உணவு, அது இது என்று பக்குவமாக இருப்பார்கள்.
போக மனசு வராது.
எப்படி இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு வலுவாய் இருக்கிறதோ, நம் வாழ்க்கையில் அன்பின் பிடிப்பு அவ்வளவு வலுவாய் இருக்க வேண்டும்.
இப்போது குறளை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
என்போ டியைந்த தொடர்பு.
கொஞ்சம் சீர்களை இடம் மாத்திப் போடுவோம் ....
ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்ப
அன்போடு இயைந்த வழக்கு
வழக்கு என்றால் நெறி, வழி
அன்போடு இயைந்த வழக்கு என்றால் அன்போடு சேர்ந்து அல்லது இணைந்த நெறி அல்லது வழி.
அன்போடு நாம் செல்லும் வழி எப்படி பட்டதாய் இருக்க வேண்டும் என்றால் ஆருயிர்க்கு எலும்போடு இயைந்ததைப் போல இருக்க வேண்டுமாம்.
வாழ்வில் எந்த வழியில் சென்றாலும் அன்பை விடக் கூடாது. கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். என்ன வந்தாலும் அன்பை விடக் கூடாது. எவ்வளவு கெட்டியாக என்றால் இந்த உடலும் உயிரும் எவ்வளவு கெட்டியாக ஒன்றை ஒன்று கட்டிப் பிடித்திருக்கிறதோ அப்படி.
உயிர், இந்த உடலை விட்டு விட்டால் உயிருக்கும் மதிப்பு இல்லை, உடலுக்கும் மதிப்பு இல்லை.
அது போல அன்பை விட்டு விட்டால், அன்புக்கும் மதிப்பு இல்லை, நாம் வாழும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இல்லாமல் போகும்.
இது எனக்கு தோன்றிய அர்த்தம். இலக்கணப் படி சரியாக வருமா அல்லது வராதா என்று தெரியாது.
கவிதை இலக்கணத்தை தாண்டியது என்பது என் எண்ணம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
I think you are amazing!
ReplyDeleteIncredible.
ReplyDeleteமிக நன்று. மிக நன்று.
ReplyDelete