Friday, June 11, 2021

கம்ப இராமாயணம் - செய்து மறந்த

கம்ப இராமாயணம் - செய்து மறந்த 


ஒரு அரசனின் பெருமையை சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லலாம்? 


இலக்கியங்களை படிக்கும் போது, ஒரு விடயத்தை நாம் சொல்ல வேண்டி இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மால் அந்த விடயத்தை எவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். பின், இலக்கியத்தைப் படிக்க வேண்டும். அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தின் பெருமை புரியும்.


தசரதனின் பெருமையை சொல்ல வருகிறார் கம்பர்.


ஒரு பேரரசனின் பெருமை என்றால் என்னவாக இருக்கும். பெரிய யாகங்களை செய்வது. அச்வதமேத யாகம் போன்ற யாகங்கள் செய்வது என்றால் மற்ற அரசர்கள் அந்த அரசனை பேரரசன் என்று ஏற்றுக் கொண்டு கப்பம் கட்ட ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த யாகம் செய்யும் அரசன் கப்பம் கட்ட மறுக்கும் அரசர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை வெல்ல வேண்டும். 


கடினமான செயல். 


நிறைய அரசர்கள் அதற்கு முயற்சி செய்வார்கள். எல்லோராலும் முடியாது. 


எனவே, கம்பன் என்ன சொல்லி இருப்பான்? தசரதன் பல அச்வேமேத யாகங்கள் செய்தான் என்று சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் அவன் ரொம்ப சாதாரண ஒரு கவிஞனாகி இருப்பான். 


கம்பன் சொல்கிறான். "பெரிய பெரிய யாகங்கள் எல்லாம் செய்ய வேண்டும் பல அரசர்கள் முயல்வார்கள். அந்த யாகங்கள் எல்லாம் தசரதன் என்றோ செய்து முடித்து, அப்படி ஒன்று நடந்ததையே மறந்தும் விட்டான்" என்று.  அவ்வளவு நாள் ஆகி விட்டதாம். "இதெல்லாம் நான் என்றோ செய்து முடித்து விட்டேன்...எப்ப என்று நினைவில் கூட இல்லை " என்று சொல்லும் அளவுக்கு தசரதன் இருந்தானாம்.  அவ்வளவு நாட்களுக்கு முன்னால் செய்திருந்தால், அதற்கு பின் எவ்வளவு காரியங்கள் செய்திருப்பான் என்பதை நம் கற்பனைக்கு விடுகிறான். 


அது மட்டும் அல்ல, தசரதன் நிறைய தான தர்மங்கள் செய்வான் என்று சொல்ல வந்த கம்பன் சொல்கிறான் "ஒவ்வொரு தரம் தானம் செய்யும் போதும் கையில் நீர் எடுத்து தாரை வார்த்துக் கொடுப்பான். அப்படி தசரதன் கையில் இருந்து வழியும் நீரால் நனையாத கைகளே இல்லை". அப்படி என்றால், அவனிடம் உதவி பெறாத நபர்களே இல்லை என்று அர்த்தம். 


பாடல் 


மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்

கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;

மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்

செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_11.html


(please click the above link to continue reading)


மொய் = சூழ்ந்த 


ஆர்கலி = கடல் 


சூழ் = சூழ்ந்த 


முது பாரில் =  முதிய உலகில்


முகந்து =  நீரை முகந்து 


தானக் = தானம்  செய்யும் 


கை ஆர் புனலால் = கையில் இருந்து வழியும் நீரால் 


நனையாதன கையும் இல்லை; = நனையாத கை என்று ஒரு கையும் உலகில் இல்லை 


மெய் ஆய  = உண்மையான 


வேதத் துறை = வேத வழியில் நடக்கும் 


வேந்தருக்கு = அரசர்களுக்கு 


ஏய்ந்த. யாரும் = பெருமை/பொருந்திய 


யாரும்  = அனைவரும் 


செய்யாத. யாகம் = செய்யாத யாகங்கள் 


இவன் = தசரதன் 


செய்து மறந்த மாதோ. = செய்து பின் நீண்ட ஆள் ஆனதால் மறந்து போன யாகங்கள். 


என்ன ஒரு கற்பனை. 



1 comment:

  1. ஆம், என்ன ஒரு கற்பனை!

    ReplyDelete