Monday, June 14, 2021

திருக்குறள் - அறத்தின் பயன்

 திருக்குறள் - அறத்தின் பயன் 


அறம் எப்படிச் செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும், எந்த அளவு செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பலன் என்றெல்லாம் சொல்லினார்.


அதெல்லாம் சரிங்க, நீங்க சொன்னா நாங்க நம்பிறனுமா...இதுகெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு ? நாங்க பாட்டுக்கு அறம் செய்து கொண்டே இருப்போம்....பலன் கிடைக்கும் என்பதற்கு என்ன உறுதி? என்று சிலர் கேட்கலாம். கேட்டால் தவறு இல்லை. 


அதற்கும் விடை தருகிறார் வள்ளுவர். 


நாம் எவ்வளவோ பேரை பார்க்கிறோம். சில பேர் நல்லா வசதியாக வாழ்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். சில பேர் வறுமையில் வாடுகிறார்கள். துன்பப் படுகிறார்கள். சில பேர் சுகமாக காரில் போகிறார்கள், சில பேர் வண்டி இழுத்துச்  சிரமப் படுகிறார்கள். 


இரண்டையும் பார். துன்பப் படுபவன் ஒன்றும் முட்டாள் இல்லை. அவன் முயற்சிக்கும் ஒரு குறைவும் இல்லை.  இன்பம் அனுபவிப்பவன் எல்லாம் பெரிய புத்திசாலி என்றும் சொல்ல முடியாது. ரொம்ப ஒன்றும் உழைப்பது மாதிரியும் தெரியவில்லை. 


பின் ஏன் இந்த வேறுபாடு? 


அறத்தினால் வந்த விளைவு என்கிறார். 


அறத்தின் விளைவு இன்னது என்று அறிய வேண்டுமா, பல்லக்கின் மேல் அமர்ந்து செல்பவனையும், பல்லக்கு தூக்குபவனையும் பார் , உனக்கே புரியும் என்கிறார். 


பாடல் 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_14.html


Please click the above link to continue reading



அறத்தாறு = அறத்தின் பயன் 

இது வென = இன்னது என்று 

வேண்டா = படித்து அறிய வேண்டாம் 

சிவிகை = பல்லக்கு 

பொறுத்தானோடு =  தூக்கிக் கொண்டு அதன் வலியை பொறுத்துக் கொண்டவன்  

 ஊர்ந்தான்  = அதன் மேல் அமர்ந்து செல்பவன் 

இடை = இடையே உள்ள வேறுபாடு


நாம் ஒரு உண்மையை  அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மூன்று வழிகள் இருக்கிறது. அவற்றை பிரமாணம் என்று கூறுவார்கள். 


காட்சிப் பிரமாணம் 

அனுமானப் பிரமாணம் 

ஆகமப் பிரமாணம் 


என்பவை. 


ஒன்றை புலன்களால் உணர்ந்து உண்மையை அறிந்து கொள்வது காட்சிப் பிரமாணம். 


அனுமானப் பிரமாணம் என்றால் ஊகித்து அறிவது. காலையில் எழுந்து பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. மரத்தில் இருந்து நீர் சொட்டுகிறது. இரவு மழை பெய்து இருக்கிறது என்று ஊகிக்கிறோம். கண்ணால் காணவில்லை ஆனால் அறிந்து கொள்கிறோம். 


இப்படி புலன்களாலும் அறியமுடியாமல், மனதால் ஊகித்தும் அறிய முடியாத போது, ஆகமங்கள் சொல்வதை வைத்து நாம் உண்மையை அறிகிறோம். பெரியவர்கள், உயர்ந்தவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது. 


வெளியூருக்கு காரில் போகிறோம். இதற்கு முன்னால் அந்த வழியில் சென்றது இல்லை. போகிற வழியில் ஒரு தகவல் பலகை இருக்கிறது. நாம் போகிற ஊரின் பேர் எழுதி, இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அதற்கு எந்தப் பக்கம் போக வேண்டும் என்று அம்புக் குறியும் போட்டு இருக்கிறது. 


நாம் பார்கவில்லை. நம்மால் அனுமானம் செய்ய முடியாது. அந்த பலகை சொல்வதை நாம் நம்புகிறோம். மாறாக, இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன், இதை எனக்கு நிரூபணம் செய்தால் தான் நான் மேற்கொண்டு நகர்வேன் என்று இருந்தால் இருக்க வேண்டியது தான். போகும் இடத்திற்கு போய் சேர முடியாது. 


இங்கே, இரண்டு நிரூபணங்கள் இருக்கிறது என்கிறார் பரிமேலழகர். 


நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர் கண்ணுக்குத் தெரிகிறது. 


ஒருவன் பல்லகில் அமர்ந்து செல்கிறான், ஒருவன் அதை தூக்கிச் சுமக்கிறான். இதை நாம் பார்க்க முடியும். அது காட்சிப் பிரமாணம் என்கிறார். பார்த்து தெரிந்து கொள். 


" இதுவென வேண்டா" என்று கூறும் போது இது எப்படி என்று நூல்களில் சென்று ஆராயாதே. நீ எவ்வளவு தோண்டினாலும் கிடைக்காது. நீயே நேரில் பார்த்து தெரிந்து கொள் என்கிறார். 


"'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். "


ஆகமங்களில் (புத்தகங்களில்) இன்ன அறத்துக்கு இன்ன பலன் என்று இருக்காது. நீயே நேரில் பார் என்கிறார். 


இலக்கணம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு ஒரு சில செய்திகளை சொல்கிறார் பரிமேலழகர். 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


என்ற குறளில். 


அறத்தின் பயன் இன்னது என்று தேட வேண்டாம் 

பல்லக்கின் மேல் ஏறியவன் , அதை தூக்கியவன் இடையில் உள்ள வேறுபாடு


இப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாத இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டு வரிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 


"உணரப்படும் என்பது சொல்லெச்சம்." என்கிறார். 


அதாவது, இரண்டு பேருக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தால் அறத்தின் பயன் இன்னது என்று புரியும் என்கிறார்.  இதில் "உணரப்படும்" என்ற சொல் குறளில் இல்லை. அது எச்சம், அதாவது மீதியாக இருக்கிறது. நீ புரிந்து கொள் என்கிறார். 


அதெல்லாம் சரிங்க, அவன் இராஜாவாக பிறந்தான், பணக்கார வீட்டில் பிறந்தான், காரில் போகிறான், பல்லக்கில் போகிறான். மற்றவன் ஏழை வீட்டில் பிறந்தான், துன்பப் படுகிறான். இதுக்கும் அறத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால், பணக்கார வீட்டில் பிறக்க அவன் இந்தப் பிறவியில் ஒன்றும் செய்யவில்லை. ஏழை வீட்டில் பிறக்க மற்றவனும் ஒன்றும் செய்ய வில்லை இந்தப் பிறவியில். 


பின் ஏன் என்றால், முந்தைய குறளில் சொன்னார் "பொன்றுங்கால் பொன்றாத் துணை". ஒருவன் செய்த அறம் அவனை விட்டு விலகாமல் எல்லா பிறவியிலும் தொடரும் என்றாரே அதற்கு நிரூபணம் இது.


குப்பத்தில் பிறந்து துன்பப் படுவதற்கும், கோடீஸ்வரன் வீட்டில் பிறந்து இன்பம் அனுபவிப்பதற்கும் முன் செய்த அறச் செயல்களே காரணம் என்றார். 


இனி வரும் பிறவிகளில் இன்பமாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


(தினம் தினம் திருக்குறள் தானா என்று சலிப்பு வருகிறதா ?)








4 comments:

  1. அதுதான் சேக்கிழைரையும் சொல்லப்போகிறீர்களே அண்ணா ...

    வரிசையாக சொல்லத் தொடங்கி விட்டீர்கள் ....படிக்கவும் தொடங்கி விட்டோம்...

    ஏன் சலிப்பு வரப் போகிறது ...

    நாளை சேக்கிழார் வருகிறார் என ஆவலோடுள்ளோம் அண்ணா

    ReplyDelete
  2. இதை விட அழகாகவும் எளிதில் புரியும் வண்ணம் எழுத முடியுமா? மிக்க நன்றி

    ReplyDelete
  3. விளக்கம் அருமை! எளிமை

    ReplyDelete
  4. "பெரியவர்கள், உயர்ந்தவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது" என்பதைக் கடைப்பிடித்தால், சூரியன் பூமியைச் சுற்றுவதாக இன்னும் சொல்லிக்கொண்டு இருப்போம். எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும். அதுவே முன்னேற்றத்துக்கு வழி.

    "எப்பொருள் யார் யார் வாய்..."

    ReplyDelete