திருக்குறள் - எப்போது அறம் செய்ய வேண்டும்
அறம் என்றால் என்ன (மனத்துக்கண் மாசிலன் ஆதல்), அதன் தன்மை, அதை எவ்வாறெல்லாம் (மனம், மொழி செயல்களால்), யார் செய்ய வேண்டும் (இல்லறத்தில் உள்ளவர்கள், துறவறத்தில் உள்ளவர்கள்), எவ்வளவு செய்ய வேண்டும் (இல்லறத்தில் இருப்பவர்கள் பொருள் வசதிக்கு ஏற்பவும், துறவறத்தில் இருப்பவர்கள் உடம்பின் வலிமையை நோக்கியும்) என்று கூறினார்.
எப்போது அறம் செய்ய வேண்டும் என்ற காலத்தை கூறவில்லை.
"இப்ப என்ன அவசரம். நிறைய சம்பாதித்து, வேண்டிய அளவு சொத்து சேர்த்து விட்டு, பிள்ளைகளுக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு, பின் மிஞ்சி உள்ளதை அறம் செய்யலாம். அதுக்கு நேரம் இருக்கு. எங்க ஓடியா போகப் போகுது" என்று சிலர் நினைக்கலாம்.
அது சரி அல்ல என்கிறார். வள்ளுவர்.
"பின்னால் செய்து செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இப்பவே அறம் செய்யுங்கள். அப்படிச் செய்தால் அது உயிருக்கு நீங்காத துணையாக இருக்கும்"
இதற்கு பரிமேலழகர் உரை அற்புதம்.
பாடல்
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_75.html
(Please click the above link to continue reading)
அன்றறிவாம் = அன்று செய்து கொள்ளலாம்
என்னாது = என்று எண்ணாமல்
அறம்செய்க = அறத்தினை செய்திடுக
மற்றது = அப்படிச் செய்த அறம்
பொன்றுங்கால் = அழியும் காலத்தில்
பொன்றாத் = அழிவில்லாத
துணை = துணையாக நிற்கும்
பரிமேலழகர் துணை இல்லாமல் இந்த குறளுக்கு உரை காண்பது கடினம்.
அன்றறிவாம் என்று குறளில் இருக்கிறது. அன்று செய்து கொள்ளலாம் என்பது அர்த்தம். என்று? என்ற கேள்விக்கு விடை இல்லை.
பரிமேல் அழகர் சொல்கிறார், அடுத்த வரியில் "பொன்றுங் கால்" அதாவது இறக்கும் தருவாயில் என்று வருகிறது அல்லவா, எனவே, அதைக் கொண்டு வந்து முன்னால் போடு.
சாகிற காலத்தில் அறம் செய்யலாம் என்று நினைக்காதே என்று பொருள் கொண்டு வருகிறார்.
சரி...அது என்ன பொன்றாத் துணை ?
உடம்பே அழியப் போகிறது. அப்புறம் என்ன துணை?
உயிர் உடலை விட்டுப் போகும். அது வேறு ஒரு உடம்பில் சென்று சேரும். இந்த உடம்போடு இருக்கும் போது செய்த அறம், புண்ணியமாக மாறி உயிரின் அடுத்த பிறவிக்கும் வரும். உயிர் எங்கெல்லாம் போகிறதோ, அங்கெல்லாம் வந்து இந்தப் பலனைத் தரும்.
சில பேர் ரொம்ப பாடு படாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள், சிலர் எவ்வளவு பாடு பட்டாலும் துன்பப் படுகிறார்கள், சிலர் அறம் அற்ற வழியில் சென்றாலும் அவர்களிடம் செல்வம் கொழிக்கிறது. சிலர் நேர்மையாக நடந்தாலும் வறுமை வாட்டுகிறது.
ஏன்?
முன் செய்த அறம்.
பொன்றா துணையாக கூடவே வரும்.
பின்னால் செய்து கொள்ளலாம் என்று இருந்தால், நாளை என்ன வரும் என்று யாருக்குத் தெரியும்? பின்னாளில் செய்ய முடியாவிட்டால்?
"செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது."
என்பது பரிமேலழகர் உரை.
"செய்த உடம்பு அழியவும்" நாம் இந்த உடம்போடு இருக்கும் போது செய்த அறம்தான். ஆனால், இந்த உடம்பு அழிந்து போகும்.
உயிரோடு ஒன்றி = அந்த அறம் நம் உயிரோடு ஒட்டிக் கொண்டு
ஏனை உடம்பினுட் சேறலின் = மற்ற உடம்போடு சேர்வதனால்
இதனான் = எனவே
இவ்வியல்பிற்றாய = இந்த உயிரோடு ஒட்டிக் கொண்டு செல்லும் இயல்பை உடைய
அறத்தினை = அறத்தினை
நிலையாத யாக்கை = நிலை இல்லாத உடம்பு
நிலையின பொழுதே = நிலத்து இருக்கும் போதே
செய்க = செய்க
என்பது கூறப்பட்டது. = என்று குறளில் கூறப் பட்டது
என்கிறார் பரிமேலழகர்.
பின்னாடி செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். இப்பவே செஞ்சுருங்க என்கிறார்.
எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
மலைப்பாக இருக்கிறது.
என்ன புண்ணியம் செய்தோமோ, இவை எல்லாம் படிக்கக் கொடுத்து வைத்து இருக்கிறது.
தமிழ் வாசிக்கத் தெரியும். திருக்குறள் இருக்கிறது. பரிமேலழகர் உரை இருக்கிறது. இதுக்கு மேல் என்ன சொத்து சேர்த்து விட முடியும்?
அருமை அண்ணா ....
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅறம் பற்றி அருமையான விளக்கம🙏
ReplyDelete