Sunday, June 20, 2021

திருக்குறள் - செய்வதும், ஒழிவதும்

 திருக்குறள் - செய்வதும், ஒழிவதும் 


அறம் செய்கிறேன், கூடவே கொஞ்சம் அறம் அல்லாததையும் செய்கிறேன். என்ன செய்வது? வாழ்க்கை நடைமுறை அப்படி இருக்கிறது. கொஞ்சம் கூட பாவம் செய்யாமல் வாழ முடியாது போல் இருக்கிறது. 


முழுக்க முழுக்க அறமே செய்து வாழ முடியுமா?  நடை முறை வாழ்க்கைக்கு அது ஒரு நல்ல வழிகாட்டியா? 


கொஞ்சம் செம்பு கலந்தல்தானே தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியும். 


இது ஒரு நடைமுறை சிக்கல். 


அதற்கும் பதில் சொல்ல வேண்டும். வள்ளுவர் சொல்கிறார். 


"ஏதாவது செய்வதாய் இருந்தால், அறம் செய். முடியாவிட்டால் பழிச் செயல்களை செய்யாமல் இரு" என்கிறார். 


பாடல் 


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_20.html


(please click the above link to continue reading)



செயற்பால = செய்யத் தகுந்தது 


தோரும் = ஓரும் என்பது அசைச் சொல். அர்த்தம் கிடையாது. 


அறனே ஒருவற்கு = அறம்தான் ஒருவருக்கு 


உயற்பால = விலக்க வேண்டியது 


தோரும் = ஓரும் என்பது அசைச் சொல். அர்த்தம் கிடையாது. 


பழி = பழிதரும் செயல்கள் 



செல்வதானால் அற வழியில் செல். இல்லையா, பழி வரும் பாதையில் போகாமளாவது இரு. 


"அறனே ஒருவற்கு" என்பதில் உள்ள ஏகாரம் தேற்ற ஏகாரம். அதைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது.  அறத்தைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது.


இந்தக் குறளோடு அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் முடிவடைகிறது. 


இந்த அதிகாரத்தோடு பாயிரவியல் முடிவடைகிறது. 


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 


என்ற இந்த நான்கு அதிகாரங்களும் பாயிரவியலில் அடங்கும். 


பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரை போன்றது. 


கடவுள் - அவர் கருணையால் பொழியும் மழை, அதில் இருந்து பிறக்கும் இயற்கை, இயற்கையின் ஊடே பொதிந்து கிடக்கும் அற இரகசியங்கள், அந்த இரகசியங்களை கண்டு சொல்லும் நீத்தார், அந்த நீத்தாரது பெருமை, அவர் சொல்லும் அறத்தின் முக்கியத்வம். 


இவற்றை இது வரை பார்த்தோம். 



நேரம் இருப்பின், இதுவரை வாசித்தவற்றை ஒரு மறுவாசிப்பு செய்து பாருங்கள். மனதில் ஆழப் பதியும். 


இனி, இந்த அறம் எவ்வாறு இல்லறம், துறவறம் எனப்  பிரிகிறது, அவற்றின் கூறுகள், முறைகள் என்ன என்பன பற்றி சிந்திக்க இருக்கிறோம். 




3 comments:

  1. திருக்குறள் ஒரு பெரும் கடல் மாதிரி இருக்கு. முழுக முழுக முத்துக்களஆக வருது. எங்களுக்கு இன்னும் வசதி. நாங்கள் கடலில் முழுகி கஷ்டப்படாமல் இந்த blog மூலம் முத்துகள் உள்ளங்கை யில் வந்து விழுகிறது.. நன்றி

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னபடி மறுபடியும் ஒரு தடவை சற்பறு வேகமாக படித்தால் தான் முழுவதையும்ஒன்றாக படித்த உணர்வு வரும்.
    புரிதலும் கூடும்

    ReplyDelete
  3. திரும்ப திரும்ப படிக்கத் தூண்டுகிறது

    ReplyDelete