திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை - பாகம் 1
வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது ஒரு முழு வாழ்க்கை நடைமுறை. அது ஒரு குடும்பத்தோடு நிற்கும் ஒன்று அல்ல.
வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது வீடு பேற்றை அடையும் வழி. இல்லறம் என்பது வீடு குடும்ப வாழ்க்கையோடு முடிவது அல்ல. அது முதல்படி. பெரும்பாலோனோர், இல்லறம் என்பது குடும்ப வாழ்கை என்று நினைப்பார்கள். அல்ல.
குடும்பம், சமுதாயம், துறவறம், வீடு பேறு என்று ஒரு நீண்ட பாதையின் முதல் படி இல்லறம்.
ஒவ்வொரு படியும் ஒரு அதிகாரம். ஒவ்வொரு அதிகாரமும் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குப் போகும் படி. திருக்குறளை மனம் போன படி படிக்கக் கூடாது. அதிகாரங்கள் என்பது ஒரு நெறியோடு ஒன்றின் பின் ஒன்றாக சொல்லப்பட்டு இருக்கிறது.
எனக்கு பிடித்த அதிகாரம் என்று ஏதோ ஒரு அதிகாரத்தை நடுவில் எடுத்துப் படிக்கக் கூடாது.
சரி, வள்ளுவர் காட்டும் இல்லறம் எப்படி விரிகிறது என்று அதிகார முறைமையால் பார்ப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1_25.html
(please click the above link to continue reading)
1. இல்வாழ்க்கை - திருமணம், குடும்பம், குடும்பத் தலைவனின் கடமைகள். இது தொடக்கம். பலருக்கு இதுவே முடிவாக தோன்றும்.
2. வாழ்க்கைத் துணை நலம் - மனைவியின் முக்கியத்துவம், அவள் பொறுப்புகள், இல் வாழ்க்கையில் அவளின் பங்களிப்புகள் பற்றி கூறுகிறார்.
3. புதல்வர்களைப் பெறுதல் - அன்பான இல்வாழ்வின் வெளிப்பாடு பிள்ளைகள். பிள்ளைகளின் கடமைகள், அவர்களால் பெறும் நன்மைகள்.
4. அன்புடைமை - கல்யாணம் பண்ணினோம், பிள்ளைகளப் பெற்றோம், வளர்த்தோம் என்று இல்லாமல், எப்படி இல்லறம் என்பது அன்பின் வெளிப்பாடு என்று கூறும் அதிகாரம். ஒருவர் மேல் அன்பு செலுத்தாத இல்லறம் என்ன இல்லறம்? திருமணம் ஆகாத ஒரு பிரம்மச்சாரிக்கு அன்பு என்றால் என்ன என்று எப்படித் தெரியும்? என் பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று தனக்குப் பிடித்ததை தான் உண்ணாமல் பிள்ளைக்கு கொடுத்து அது மகிழ்ச்சியாக உண்பது கண்டு மகிழும் மனம் இல்லறத்தில் உள்ளவனுக்குத்தான் வரும். அன்பு வளர வேண்டுமானால், இல்லறம் வேண்டும்.
5. விருந்தோம்பல் - கணவன், மனைவி, பிள்ளைகள், இது மட்டுமா இல்லறம். சுற்றமும், நட்பும் வேண்டாமா? அவர்களை வீட்டுக்கு அழைத்தல், அவர்களை உபசரித்தல், அவர்கள் மேல் அன்பு பாராட்டுதல் என்று பெரிய வளையம் வேண்டாமா. அது பற்றிக் கூறுவது விருந்தோம்பல். விருந்துக்குப் போவது என்றால் யார் வீட்டுக்குப் போக முடியும்? திருமணம் ஆகாத ஒரு பெண் தனித்து இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியுமா? அது போல் தான் தனியாக இருக்கும் ஒரு ஆண் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள்? அவன் என்ன செய்து வைத்து இருப்பானோ என்ற பயம் இருக்கும் அல்லவா?
6. இனியவை கூறல் - எப்படி விருந்தினை ஓம்புவது? போற்றுவது. வந்தவர்களுக்கு நிறைய சாப்பாடு போட்டால் போதுமா? அவர்களோடு எப்படி அன்பாகப் பேசுவது என்பது பற்றி கூறும் அதிகாரம்.
7. செய்நன்றி அறிதல் - விருந்தை போற்றி, இனியவை கூறினால், விருந்தினர்கள் அவர்களால் முடிந்த உதவியை நமக்குச் செய்வார்கள். அப்படி நன்றி செய்தால், அதை மறக்காமல் இருப்பது பற்றி கூறும் அதிகாரம்.
8. நடுவு நிலைமை - குடும்பம், கணவன், மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு என்று அமைந்து விட்டது. இதில் நமக்கு வேண்டியவர்களுக்கு இடையிலோ அல்லது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலோ ஏதோ ஒரு பிணக்கு வந்து விடலாம். எனக்கு பிடித்தவர்கள் என்று நடு நிலை மாறி பேசவோ செய்யக் கூடாது. அப்படி நடு நிலை மாறாமல் இருப்பவர்களை வீடும், நாடும் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். குடும்பத்தில் மூத்தவர், பெரியவர் , ஊருக்கு பெரிய மனிதர் என்று நல்லவர்கள் நடு நிலை தவராதவர்களை பற்றிக் கூறும் அதிகாரம்.
9. அடக்கம் உடைமை - நடுவு நிலை என்றால் யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று கூற வேண்டும். அதற்கு புலன் அடக்கம் வேண்டும். பற்று இருக்கக் கூடாது. எனவே அடுத்த அதிகாரம், அடக்கம் உடைமை.
10. ஒழுக்கம் உடைமை - நாடும், வீடும் நலமாக இருக்க வேண்டும் என்றால் குடிகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். புலன் அடக்கம் வந்தால் தான் ஒழுக்கம் வரும். எனவே, அடக்கம் உடைமைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறுகிறார்.
இன்னும், கொஞ்சம் அதிகாரங்கள் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள் இதுவே எவ்வளவு விரிவாக ஆழமாக இருக்கிறது என்று. நினைக்க நினைக்க பிரமிப்பு ஊட்டும் படைப்பு.
ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு அடியாக கை பிடித்து இனிய இல்லறம் நடத்த வழி சொல்லித் தருகிறார்.
இதற்கு மேல் சிந்திக்கவே முடியாது என்ற அளவுக்கு அனைத்தையும் தொகுத்து, வழிமுறைப் படுத்தி, ஒரு நேர்த்தியோடு, அழகோடு சொல்கிறார்.
குறள் படித்த பின் வேறு ஒரு நூலே தேவை இல்லை.
மற்ற அதிகாரங்களை பற்றி நாளை பட்டியல் இடுவேன். அதற்கு முன் ஒரு வார்த்தை.
வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது ஆண் மகனை தலைமை பொறுப்பில் அமர்த்துகிறது. ஆணுக்கு கடமைகளைச் சொல்லி, பெண் அவனுக்கு துணை செய்ய வேண்டும் வழி காட்டுகிறது. பெண்ணுக்குத் தலைமைப் பொறுப்பை தரவில்லை. அதற்காக அவளின் பெருமையை, பங்களிப்பை குறைக்கவில்லை. ஒரு நிறுவனம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தில் எல்லோரும் சிறப்பாக உழைக்க வேண்டும். அதற்காக எல்லோரும் தலைமை பொறுப்பில் (CEO) இருப்பேன் என்று சொல்லுவது அடாவடித்தனம் இல்லையா.
இன்றைய பெண்ணிய சிந்தனையாளர்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். தவறில்லை. பெண்ணை முதன்மை படுத்தி, ஆண் அவளுக்கு துணை செய்ய வேண்டும் என்று ஒரு குடும்ப கோட்பாடு வரையலாம்.
குறள் சிந்தனை தவறு என்று சொல்பவர்கள், அப்படி ஒரு கோட்பாட்டை வரையறுத்து, பாடல் எழுதி அதை பிரபலப் படுத்தலாம். அதை இந்த வருங்கால சமுதாயம் ஏற்றுக் கொண்டால், அப்படி ஒரு வாழ்க்கை முறை அமையலாம். தவறில்லை.
குறள் தவறு என்று சொல்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது, பரிமேலழகருக்கு ஒன்றும் தெரியாது, எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பவர்கள் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தி புதிய குறள் எழுத வேண்டும். அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.
மீதி அதிகாரங்களை நாளை பார்ப்போமா ?
நல்ல போடு போட்டுள்ளீர்கள் ....
ReplyDeleteபுதியதாக ஏதும் சொல்தலா ....கனவிலும் இயலாது ...
ஏதோ பேச வேண்டும் .
அதுவே நோக்கு ...அவர்கட்கு ...
போகட்டும் அண்ணா ...
நாம் படிப்போம்...வணக்கம்.
ஆணை முதலாகவும், பெண்ணைத் துணையாகவும் வைத்து வள்ளுவர் அமைத்த முறையிலிருந்து நமக்கு கற்றுக்கொள்ள எவ்வளவோ பாடங்கள் இருக்கும். அவற்றை இந்த BLOG மூலமாக அறிய ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteஆனால், "வள்ளுவர் சொல்லிவிட்டார், அதனால் மற்ற முறைகள் எல்லாம் தவறு" என்று எண்ணுவது தவறு.