பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர்
உயர்ந்த நூல்களைப் படிக்கும் போது நாம், நம் தரத்தை உயர்த்திக் கொள்ள பழக வேண்டும்.
சிலர் பெரிய நூல்களை, உயர்ந்த கருத்துகளை உள்ள நூல்களை எடுத்து வைத்துக் கொண்டு, இதை எழுதியவர் என்ன ஜாதி, என்ன குலம், அதனால்தான் இப்படி எழுதி இருக்கிறார் என்று தங்கள் சிறுமையை நூல்களின் மேல் ஏற்றத் தலைப் படுகிறார்கள்.
மேலும் சிலரோ, இது என்ன எதுகை, என்ன மோனை என்று இலக்கணம் படிக்க இறங்கி விடுகிறார்கள். நூலின் கருத்தை விட்டு விடுகிறார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கு பிடிக்காத கருத்துகள் இருந்தால், அந்தப் பகுதி இடைச் செருகலாக இருக்கும் என்று அதை புறம் தள்ளி விடுகிறார்கள். புதிதாக ஒரு அறிவும் உள்ளே வரக் கூடாது என்பதில் அப்படி ஒரு பிடிவாதம்.
சேக்கிழார் சொல்கிறார்,
"நான் சொல்லப் போகும் பொருளின் சிறப்புக் கருதி, நான் சொல்லும் சொல்லின் பொருளைக் கொள்வார்கள் மெய் பொருளை நாடுபவர்கள். என்னுடைய உரை சிறிதாக இருந்தாலும், பொருளின் பெருமை நோக்கி அதைப் பெரிதாக கொள்வார்கள்"
என்கிறார்.
யாரோ கொஞ்சம் நாயன்மார்கள், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள், பக்தி செய்தார்கள், முக்தி அடைந்தார்கள். அதை தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப் போகிறது. நமக்கு இருக்கு ஆயிரம் கவலை. ஞானசம்பந்தர் அழுதால் என்ன, பார்வதி வந்து பால் தந்தால் என்ன என்று நினைக்கலாம்.
கோவிலுக்குப் போகிற கூட்டம் போலத்தான்.
சிலர் பக்தியோடு போவார்கள், சிலர் அன்பினால், நன்றியால் போவார்கள், சிலர் தங்கள் துக்கத்தை சொல்லி முறையிட போவார்கள், சிலர் அங்கே தரும் சுண்டல், பொங்கல் வாங்கப் போவார்கள்.
சுண்டல் வாங்கப் போனாலும், நாளடைவில் அவர்களும் பக்தி நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது.
பக்தி, இறைவன், முக்தி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தமிழின் இனிமை கருதி படியுங்கள்.
சொல்லின் ஆழம், கருத்தின் செறிவு, சொல்லும் அழகு...இவற்றை கருதி கூட வாசிக்கலாம்.
யாருக்குத் தெரியும், எந்த பாதை எங்கே பிரியும் என்று.
பாடல்
செப்ப லுற்றா பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்
இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்
மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_15.html
(please click the above link to continue reading)
செப்ப லுற்றா = கூறிய
பொருளின் = பொருளின்
சிறப்பினால் = உயர்வால்
அப்பொ ருட்குரை = அந்த பொருளுக்கு உரை
யாவரும் கொள்வரால் = எல்லோரும் கொள்வார்கள்
இப்பொ ருட்கு = இந்தப் பொருளுக்கு
என் னுரை = என்னுடைய உரை
சிறி தாயினும் = அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும்
மெய்ப் பொருட்குரி யார் = மெய் பொருளை அறிந்து உணரும் பெரியவர்கள்
கொள்வர் மேன்மையால். = உயர்ந்த கருத்துகளை தங்களுடைய உயர்வால் கொள்வார்கள்.
சிறியார், தங்கள் உயர்வுக்கு ஏற்ப கொள்வார்கள் என்பது உணரக் கிடைப்பது.
"சரியா படிக்கலேனா மாடு மேய்க்கத் தான் போற" என்று அப்பா கடிந்து சொன்னால், அதன் அர்த்தம், அப்பா என்னை மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று கூறுகிறார், அவருக்கு என் மேல் அன்பு இல்லை என்று நினைத்தால் அந்தப் பிள்ளையை போல மடையன் உலகில் யார் இருப்பார்கள்.
என் மேல் உள்ள அன்பால், அக்கறையால், என் தந்தை இப்படி கூறுகிறார் என்று எடுக்கத் தெரிய வேண்டும்.
சொல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பொருள்தான் முக்கியம்.
சேக்கிழார் சைவ சமயத்தை சார்ந்தவர், நான் அந்த சமயம் அல்ல, நான் எதற்கு அதை படிக்க வேண்டும் என்று தள்ளக் கூடாது.
நல்லது எங்கிருந்தால் என்ன?
பொருளைப் பிடித்துக் கொள்வோம்.
என்ன, சரியா?
சரிதான் அண்ணா ....
ReplyDeleteபிடிப்போம் சிக்கென ....
நன்றி அண்ணா
உட்பொருளைக் காண வேண்டும் என்பதை படிக்கும்போது, "அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும், ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்ற வரி நினைவுக்கு வருகிறது.
ReplyDelete