Wednesday, June 16, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 1

 திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 1 


நாம் ஏதாவது ஒரு நெடுஞ் சாலையில் போய் கொண்டிருக்கும் போது, சில இடங்களில் பழைய பாலம் ஒன்று மிக பழுது பட்டு இருக்கும். அதில் செல்வது ஆபத்து என்பதால் அதன் அருகிலேயே புது பாலம் கட்டி இருப்பார்கள். தவறி யாராவது பழைய பாலத்தின் வழியில் சென்று விடக் கூடாது என்பதற்காக அதன் வழியில் பெரிய பாறைகளை போட்டு அந்த வழியை மூடி இருப்பார்கள். 


அது தான் வழி அடைக்கும் கல். 

அந்த வழியாக போக முடியாது. மாற்றுப் பாதையில் சென்று புதிய பாலத்தை  அடைந்து மேற் கொண்டு செல்ல வேண்டும். 


சில மலைப்பாங்கான இடங்களில், பாறைகள் உருண்டு வந்து பாதையில் விழுந்து விடும். பாதை அடைத்து விடும். மாற்று வழியும் இருக்காது. பின்னாலும் போக முடியாது. 


இது இன்னொரு வகையான வழி அடைக்கும் கல். 


நாம் பிறந்து, வாழ்ந்து, இறந்து, மீண்டும் பிறந்து என்று இந்தப் பாதையில் போய்க் கொண்டே இருக்கிறோம். இந்தப் பாதையை அடைக்கும் கல் ஏதாவது இருக்கிறதா. மீண்டும் பிறவி என்ற ஊருக்குப் போகாமல் தடுக்க ஏதாவது கல்லைப் போட்டு அடைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறார் வள்ளுவர். 


இடைவிடாமல் செய்யும் அறமே அந்த வழி அடைக்கும் கல் என்கிறார். 


பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 


பரிமேலழகர் இல்லாவிட்டால், வாழ்நாள் அடைக்கும் கல் என்பதற்கு வாழ்கையை முடித்து விடும் கல் என்று தவறாக பொருள் கொண்டிருப்போம். 


அதாவது, அறத்தை செய்யாத நாள் என்று ஒன்றே இருக்கக் கூடாதாம். எல்லா நாளும் செய்ய வேண்டும். ஏதோ ஒரு சில நாள், பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் என்று செய்தால் போதாது. அறம் செய்யாத நாள் என்றே ஒரு நாள் இருக்கக் கூடாதாம். 


இந்தப் பாடலுக்கு பரிமேலழகர் தரும் உரை பிரமிப்பைத் தரும். 


ஒருகணம் யோசித்துப் பாருங்கள். இந்தக் குறளில் இதற்கு மேல் என்ன உரை கண்டு விட முடியும் ?


இப்போது பரிமேலழகர் சொல்லும் உரையைக் காண்போம். 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


வாழ்நாள் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்.  வாழ்நாள் என்றால் இந்தப் பிறவியில் நாம் வாழும் நாள் என்று கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகப் போய் விடும். இப்பிறவியில் உள்ள வாழ் நாளை அடைக்கும் கல் என்று பொருள் வந்து விடும். 


இருப்பதே கொஞ்ச நாள் தான். அதையும் அடைக்கும் என்றால் எதற்கு அறம் செய்ய வேண்டும்?


வாழ்நாள் என்றால் இந்த உயிர் எத்தனை நாள் வாழுமோ அத்தனை நாள். 


புல்லாகி, புழுவாகி, மரமாகி, பல் மிருகமாகி...எத்தனை எத்தனை பிறவி இருக்கிறதோ அத்தனையும் வாழ்நாள் தான். 


அறம் இந்த வாழ் நாட்கள் மேலும் மேலும் செல்லாமல் அடைக்கும் கல். 


சரி. அப்ப இந்த வாழ்நாளை நீட்டும் கருவி எது. யார் அல்லது எது இந்த வாழ் நாளை நீட்டுகிறது?


அதை செய்யாமல் இருந்தாலே போதுமே? எதுக்கு அனாவசியமாக அறம் எல்லாம் செய்து துன்பப் பட வேண்டும்?


"ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. " என்கிறார். 


ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?



2 comments:

  1. தாங்கள் இது வரை கற்று கொடுத்ததுல் இருந்து ஊகித்தது... ஐந்து வித குற்றம் ஐம்புலன் வழியாக வருவது...இரண்டு வினை நல்வினை தீவினை.. வினைப் பயன்.. புண்ணியம் பாவம் / இன்பம் துன்பம்.. தவறாக இருப்பின் மன்னிக்கவும்.. நாளை அறிய ஆவலாக உள்ளேன். மிக்க ந‌ன்றி!

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக உள்ளது தங்களது இந்த பதிவுகள். நன்றி.

    ReplyDelete