Tuesday, June 8, 2021

திருக்குறள் - எப்படி அறம் செய்வது ?

 திருக்குறள் - எப்படி அறம் செய்வது ?


அறத்தினால் வரும் நன்மைகளையும், அதைக் கடைப் பிடிக்காவிட்டால் வரும் தீமைகளையும் முன் சொன்னார்.


சரி. 


அந்த அறத்தை எப்படிச் செய்வது?  அறம் என்பது இங்கே உதவி, பிறர்க்கு செய்யும் நன்மை, கொடை என்ற அர்த்தத்தில் வருகிறது. அதுவும் அற வினைதான்.


என்னிடம் அவ்வளவு செல்வம் இல்லை. இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்த்த பின் தான தர்மங்கள் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம். பிள்ளைகளை கட்டிக் கொடுத்து விட்டு, என் எதிர்காலத்துக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பின் அறம் பற்றி சிந்திக்கலாம் என்று இருக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம்.  தனக்கு மிஞ்சித் தானே தானமும் தர்மமும். எனக்கே யாராவது உதவி செய்தால் பரவாயில்லை என்று இருக்கிறேன்...இதில் நான் போய் யாருக்கு உதவி செய்வது? என்று சிலர் நினைக்கலாம். 


எல்லாவற்றிற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர். 


பாடல் 


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்  (33)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_8.html


(Please click the above link to continue reading)


ஒல்லும் வகையான் = செய்ய முடிந்த வரையில் 


அறவினை  = அறச் செயல்களை 


ஓவாதே = இடை விடாமல் 


செல்லும்வாய் எல்லாம் = எப்படியெல்லாம்  முடியுமோ 


 செயல்  = செய்க 


அறச் செயல்களை முடிந்த வரையில், எப்படி எல்லாம் முடியுமோ செய்க.


முதலில் நிறைய  பிரச்சனைகளை எழுப்பி, அதுக்கெல்லாம் வள்ளுவர் விடை சொல்கிறார் என்று கூறினீர்களே, இதில் ஒரு விடையும் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் இல்லாவிட்டால் நம்மால் அந்த விடைகளை இந்தக் குறளில் காணவே முடியாது. 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள். இந்தக் குறளில் இதற்கு மேல் என்ன அர்த்தம் இருந்து விட முடியும் என்று. 


இப்போது பரிமேலழகர் எப்படி உரை எழுதுகிறார் என்று பாருங்கள். 


"ஒல்லும் வகையான்" - முடிந்த வரை என்பதற்கு பரிமேலழகர் யாருக்கு முடிந்த வரை என்ற கேள்வியை எழுப்புகிறார். இது "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரம். எனவே உரையும் அதைப் பற்றியே இருக்க வேண்டும். அதற்கு சம்பந்தமில்லாமல் உரை எழுதக் கூடாது. எனவே, யார் என்ற கேள்விக்கு மக்களை இரண்டாக பிரிக்கிறார். மக்கள் இரண்டு விதமான அறங்களை பின் பற்றுகிறார்கள். இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்கள். 


எனவே, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவறத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை அறம் செய்ய வேண்டும்  என்று முதல் படி எடுக்கிறார். 


அடுத்தது, சரி, இதில் என்ன வேறுபாடு இருக்கிறது? இல்லறத்தில் இருப்பவனுக்கும், துறவறத்தில் இருப்பவனுக்கும் அறம் செய்வதில் என்ன வேறுபாடு என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் தருகிறார். 



"இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல்"



இல்லறத்தில் இருப்பவன், தன்னுடைய பொருள் வசதிக்கு ஏற்பவும், துறவறத்தில் இருப்பவன் தன்னுடைய உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்குமோ அந்த அளவும் என்கிறார். துறவறத்தில் இருப்பவனிடம் அதிகமாக பொருள் இருக்காது.  அவன் அதிகம் சாப்பிட்டு பெரிய உடல் வலிமையுடனும் இருக்க மாட்டான். எலும்பும் தோலுமாக இருப்பான். 



ஆண்கள் படித்தால் அழகு 


பெண்கள் மணந்தால் அழகு 


நான்கு கால் பிராணிகள் கொழுத்தால் அழகு 


துறவிகள் மெலிந்தால் அழகு 


என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. 


எனவே, துறவி முடிந்தவரை உடல் உழைப்பால் மற்றவர்களுக்கு அறம் செய்ய முடியும். 


சரி, இல்லறத்தில் இருக்கும் எல்லாரிடமும் செல்வம்  இருக்குமா ?


அதற்கும் விடை தருகிறார் 


"செல்லும் வாயெல்லாம் செயல்"...எப்படியெல்லாம் முடியுமோ, அப்படி செய்ய வேண்டும். 


அது என்ன எப்படியெல்லாம் முடியுமோ?


அறத்தை மூன்று வழிகளில் செய்யலாம் 


மனதால், வாக்கால், செயலால் 


பொருள் இருந்தால், பொருள் கொடுப்போம். 


பொருள் இல்லையா, வாக்கால் அறம் செய்வோம்.  ஒரு நெருங்கிய நண்பருக்கோ, உறவினருக்கோ ஒரு சிக்கல் வந்து விட்டது. அவரிடம் பணம் இருக்கிறது. இருந்தும் ஒரு துக்கம். என்ன செய்யலாம்? அவருக்கு இதமாக நாலு வார்த்தை சொல்லலாம். ஆறுதல் சொல்லலாம். அது பணத்தை விட உயர்ந்தது. 



சரி, நல்ல சொல்லும் சொல்ல வரவில்லை என்றால்? மனதால் அவர்கள் நன்மை அடைய வேண்டும் நினைத்தாலும் போதும்.  அதுகூடவா கடினம்?



அறம் செய்ய விரும்பு என்று மூன்று வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள் கிழவி.  விரும்புதல் மனதால் செய்தல். 


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

- திருமந்திரம்


என்பார் திருமூலர். 


ஒன்றும் முடியாவிட்டால் ஒரு இன்னுரை சொன்னால் போதும். 


'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் 

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர் 

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்'


என்பார் பாரதியார். 


முடிந்தால் பொன் கொடுங்கள். இல்லை என்றால் காசு கொடுங்கள், அதுவும் இல்லை என்றால் உடல் உழைப்பைத் தாருங்கள், அதுவும் இல்லை என்றால் வாய்ச் சொல் அருளீர் என்கிறார். 


மற்றவை எல்லாம் தாருங்கள் என்று சொன்னவர், வாய்ச் சொல்லை "அருளீர்" என்றார். 


இல்லறத்தான் - பொருளாலும் 


துறவறத்தான் - உடல் உழைப்பாலும் 


மனம், மொழி, வாக்கால் அறம் செய்ய வேண்டும் என்று எப்படி அறம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். 



யோசித்துப் பாருங்கள், பரிமேலழகர் இல்லை என்றால், இந்த அர்த்தம் நமக்கு புரிந்து இருக்குமா? 


2 comments:

  1. அழகர் இல்லையெனில் புரிதல் கடினமே ..அண்ணா ....
    தாங்களும் அப்படியே ...

    ReplyDelete
  2. மு.வ. போன்றோரின் உரையை விட, பரிமேல் அழகர் உரை எவ்வளவு ஆழமாக இருக்கிறது! ஆனால், அந்த உரையையும் நேரடியா எடுத்துப் படித்தால் நமக்குப் புரியாது - உரைக்கு உரை சொல்ல ஒருவர் தேவை. - அதுதான் இந்த blog. மிக்க நன்றி.

    ReplyDelete