Tuesday, June 8, 2021

குறுந்தொகை - நல்கலு நல்குவர்

குறுந்தொகை - நல்கலு நல்குவர் 


வேலை நிமித்தமாக வெளியூர் போயிருப்போம். நாட்கள் பல கழிந்திருக்கும். வீட்டு நினைப்பு வராமல் இருக்குமா?


அந்த ஊரில் தெருவில் ஒரு இளம் ஜோடி கை கோர்த்து நடந்து போவதை பார்க்கும் போது, மனைவியின் (அல்லது கணவனின்) நினைப்பு வரும் அல்லவா? 


அந்த ஊரில் ஒரு நல்ல உணவை இரசிக்கிறோம். அடா ...இந்த ஐஸ் கிரீம் அவளுக்கு பிடிக்குமே என்ற எண்ணம் வரும் அல்லவா? 


இந்த மாதிரி சேலை உடுத்தினால் அவள் அழகாக இருப்பாள் என்று தோன்றலாம். 


அது மனித இயற்கை. துணையை பிரிந்து வந்த பின், சுற்றுப் புற சூழ் நிலை நமக்கு நம் துணையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 


இது இன்று நேற்று அல்ல. சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது. 


தலைவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவளுக்கு ஆறுதலாக தோழி சொல்கிறாள் "கவல படாதடீ ...சீக்கிரம் வந்துருவார்" நு.


தலைவி: ஆமா நீ தான் சொல்ற. எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்ல. அவருக்கு வேலை தான் முக்கியம். என் நினைப்பு கூட இருக்குமோ இல்லையோ..


தோழி: அதெல்லாம் இல்லை...அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பா இருக்கும். 


தலைவி: அதெப்படி சொல்ற? 


தோழி: அவர் போகிற வழியோ பாலை நிலம். வெயில் சுட்டு எரிக்கும். அங்கு ஆண் யானையும், பெண் யானையும் சேர்ந்து செல்லும். தாகம் அதிகம் எடுக்கும். அப்போது, ஆண் யானை அங்குள்ள "யா" மர பட்டைகளை உரிக்கும். அதில் இருந்து நீர் வடியும். வடியும் நீரை தான் உண்ணாமல், பெண் யானை அருந்த, ஆண் யானை அதைப் பார்த்து மனம் மகிழும். 


அதை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பாய் வரும்.


ஏதோ, இன்று வரும் சினிமா பட காட்சி மாதிரி இருக்கிறது அல்லவா? 


கீழே உள்ள சங்க காலப் பாடலைப் பாருங்கள்.


பாடல் 


நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 

 பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

 மென்சினை யாஅம் பொளிக்கும் 

 அன்பின தோழியவர் சென்ற வாறே. 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_89.html

(please click the above link to continue reading)



நசை = அன்பு 


பெரி துடையர் = அதிகம் உடையவர் (உன்பால்) 


நல்கலு நல்குவர்  = அந்த அன்பை உன்னிடம் தருவார் 


 பிடி = பெண் யானை 


பசி களைஇய = பசியைப் போக்க 


பெருங்கை வேழம்  = பெரிய தும்பிக்கையை உடைய ஆண் யானை 


மென்சினை = மெல்லிய கிளையை 


யா = யா மரத்தின் 


அம் பொளிக்கும்  = உடைத்து, பியித்து 


அன்பின = அன்பை வெளிப்படுத்தும் 


தோழியவர் = தோழி, அவர் 


சென்ற வாறே.  = சென்ற வழி 


அவர் செல்கிற வழியில் இதை எல்லாம் பார்ப்பார். அப்போது அவருக்கு உன் நினைவு கண்டிப்பாக வரும். உன்னைக் காண சீக்கிரம் வந்து விடுவார் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். 


எவ்வளவு மென்மையான உணர்வுகள். அதை எவ்வளவு அழகாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள். 



3 comments:

  1. அன்பின் வெளிப்பாடு பலவிதம். இந்த பாடலும் விளக்கமும் மனதை தொட்டது.

    ReplyDelete
  2. காலங்கள் ஆயிரம் மாறினாலும், இந்த மனித உணர்ச்சிகள் மனதைப் பிழிகின்றன. அற்புதம். நன்றி.

    ReplyDelete