Pages

Wednesday, September 29, 2021

திருக்குறள் - எது இனிது?

 திருக்குறள் - எது இனிது?  


நம் குழந்தைகளின் மழலைச் சொல் கேட்க எவ்வளவு இன்பம்? அது சொல்லும் ம்ம்மா, பப்பா, அத்த்த்த என்று பேசும் போது எவ்வளவு இனிமையாக் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின் சில எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக வராது. அது கூட கேட்க்க இன்பமாகத்தான் இருக்கும். 


நம் குழந்தைகளின் மழலை மொழி குழலை விட, யாழை விட இனிமையாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_29.html


(Please click the above link to continue reading)



குழலினிது = புல்லாங்குழல் இனிமையாக இருக்கும் 


யாழினிது = யாழ் இனிமையாக இருக்கும் 


என்ப = என்று கூறுவார்கள், யார்?


தம் மக்கள் = தங்களுடைய குழந்தைகளின் 


மழலைச்சொல் = மழலை சொற்களை 


கேளா தவர் = கேட்காதவர்கள் 


மிக எளிமையான குறள். இருந்தும் அதில் எவ்வளவு நுணுக்கம் சேர்கிறார் வள்ளுவர். 


தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று, இலக்கணம் தெரியாமலேயே அதன் இலக்கணத்தின் பயன்பாட்டை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 


இங்கே, குழல் இனிது என்றால் என்ன அர்த்தம்? குழல் பார்க்க இனிது என்று அர்த்தமா? "குழல்" என்று சொல்வது இனிமையா?


இல்லை, குழலில் இருந்து வரும் ஒலி இனிமையானது என்று நமக்குப் புரிகிறது. 


எப்படி நாம் அதை புரிந்து கொள்கிறோம்?


யாராவது சொன்னார்களா? இல்லை? இருந்தும் தன்னிச்சையாக அது நமக்கு புரிந்து விடுகிறது. 


இலக்கணத்தில் இதற்கு ஆகு பெயர் என்று பெயர்.


ஒன்றின் சொல் மற்றதற்கு ஆகி வருகிறது. 


குழல் என்ற சொல் குழலில் இருந்து வரும் ஒலிக்கு ஆகி வருகிறது. 


இந்த இலக்கணம் நமக்குத் தெரியாமலேயே அது புரிந்து விடுகிறது. காரணம், தமிழ் இலக்கணம், பயன்பாட்டில் இருந்து பிறந்தது. அது இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள ரொம்ப சிரமப் பட வேண்டியது இல்லை. 


ஏன் முதலில் குழலைச் சொல்லி,பின் யாழைச் சொன்னார் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்கு நயம் பாராட்டுவார்கள். 


குழலில் இருந்து பிறக்கும் இசை இயற்கையாகவே வரும். மூங்கிலில் வண்டு துளைக்க, அதில் புகுந்து புறப்படும் காற்று புல்லாங்குழல் ஒலியாக வரும்.  புல்லாங்குழலுக்கு சுருதி கிடையாது. அதற்கு சுருதி பிடிக்க முடியாது. ஒவ்வொரு குழலும் ஒரு சுருதியில் இருக்கும். 


யாழ், நாம் செய்ய வேண்டும். அதற்கு சுருதி பிடிக்க வேண்டும். நரம்புகள் சரியானபடி இருக்க வேண்டும். 


குழந்தை முதலில் தானே பேச முயற்சி செய்யும். ம்மா...ப்பா, என்று முயற்சி செய்யும். 


பின் நாம் அதற்கு துணை செய்வோம். 


முதலில் இயற்கை, பின் மனித முயற்சி. 


எனவே, முதலில் குழல் என்றும் பின் யாழ் என்றும் கூறினார். 


"தம் மக்கள்" என்று கூறினார். அதே மழலையை பக்கத்து வீட்டு பிள்ளை பேசினால் "இனிமையாக" இருக்காது. நம் பிள்ளை பேசுவதுதான் நமக்கு இனிமை. 


கடைசி மூன்று குறள்களில் பிள்ளைகளின் இம்மைப் பயன் கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர்:


அதாவது, 


- மக்கள் சிறு கை அளாவிய கூழ் அமிழ்தினும் இனியது 

- அவர்கள் மெய் தீண்டல் உடலுக்கு இன்பம் ; அவர்கள் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் 

- மூன்றாவதாக இந்தக் குறளில் குழல், யாழை விட மழலை மொழி இனியது என்று கூறுகிறார். 


அது தான் மேலே சொன்ன இரண்டாவது குறளில் கூறியாகிவிட்டதே, 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


பின் எதற்கு 

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.


மழலை மொழியைப் பற்றி மீண்டும் கூற வேண்டும் என்ற கேள்வியை கேட்டு, அதற்கு பதிலும் தருகிறார் பரிமேலழகர். 


"இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு"


என்கிறார். 

முந்தைய குறளில் "சொற் கேட்டல் செவிக்கு இன்பம்" என்றார். அது மழலை மொழியாக இருக்க வேண்டும் என்று அல்ல. கல்லூரிக்கு செல்லும் பிள்ளை வந்து, கல்லூரியில் நடந்ததை சொல்வதை கேட்பதும் இன்பம் தான். 


பிள்ளைகள் பேசுவதை கேட்பது எப்போதும் இன்பம் தான் என்றாலும், மழலை இன்னும் சிறப்பு வாய்ந்தது என்பதற்காக அதை சிறப்பு வகையாலும் கூறினார் வள்ளுவர் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


எவ்வளவு ஆழமாக படித்து இருக்கிறார்கள். 


படிக்க படிக்க அத்தனை அழகு, ஆழம், இனிமை....


திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் ....அனுபவிப்போம்....





Tuesday, September 28, 2021

கம்ப இராமாயணம்

 கம்ப இராமாயணம் 


இந்த ப்ளாக் எந்த ஒரு பாடலையும் பற்றி அல்ல. ஒரு பொதுவான பார்வை. 


கம்ப இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் பற்றி சிந்தித்து கொண்டிருந்தேன். 


கம்ப இராமாயணத்தில் அப்பா - மகள்; அம்மா - மகள் உறவு என்று இல்லை. 


இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன்.  ஒரு சகோதரி கிடையாது.  சிந்தித்துப் பார்கிறேன்...ஒரு வேளை அவர்களுக்கு ஒரு சகோதரி இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்?


வாலிக்கு ஒரு மகன். மகள் இல்லை. 


இராவணனுக்கு மகன்கள் உண்டு. மகள் இல்லை. 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_9.html


(click the above link to continue reading)



ஜனகனுக்கு மகள் சீதை இருந்தாள். ஆனால், அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட மாதிரி தெரியவில்லை. கானகம் போன மகளைப் பற்றி ஜனகன் கவலைப் பட்ட மாதிரி தெரியவில்லை. 


சூர்பனகை ஒரு சகோதரி இருந்தாள். அவளும் காமம், பழி வாங்குதல் என்று போய் விட்டாள். 


இராமனும் வழி நெடுக ஆண்களை சந்திக்கிறான். எல்லோரையும் சகோதரர்கள் என்று அரவணைத்துக் கொள்கிறான். குகன், சுக்ரீவன், வீடணன் என்று. ஒரு பெண்ணைக் கூட சகோதரி என்று அவன் ஏற்றுக் கொண்டதாக இல்லை. 


அகலிகையை தாயாக நினைத்து தொழுது விட்டுப் போய் விடுகிறான். 


சபரி வந்து உபசாரம் பண்ணி, வழி காட்டிவிட்டு, வானகம் போய் விடுகிறாள். 


மற்ற பெண்களைப் பார்த்தாலும், பெரிய பங்களிப்பு இல்லை. 


புலம்புகிறார்கள். 


தாரை புலம்புகிறாள். 


மண்டோதரி புலம்புகிறாள். 


கைகேயி ஒரு சக்தி வாய்ந்த பாத்திரம். இன்றைய தொலைக்காட்சி சீரியல் வில்லி மாதிரி போட்டுத் தாக்கிவிட்டு காணாமல் போய் விடுகிறாள். 


கோசலையும் ரொம்ப சாதுவாக வந்துவிட்டு போகிறாள். 


சுமித்ரை ஏதோ ஒப்புக்கு, "அண்ணன் வந்தால் வா, இல்லை என்றால் முன்னம் முடி" என்று முலை பால் சோர நின்றதுடன் சரி. 


சீதை, பிராதன பாத்திரம். காட்டுக்குப் போகிறாள், சிறை எடுக்கப் படுகிறாள், புலம்புகிறாள், தற்கொலை வரை போகிறாள், பின் தீ குளிக்கிறாள், கடைசியில் இராமன் அவளை தனியே கானகம் அனுப்பி விடுகிறான். 


கைகேயி - கூனி - சூர்பனகை, கதையை நகர்த்த பயன்பட்டார்கள். 


இராமனுக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் தான். ஒரு பெண் பிள்ளை இல்லை. 


ஒரு மகள், ஒரு சகோதரி என்று இல்லாதது ஒரு குறை போலவே தெரிகிறது. 


சரி, இராமாயணம் தான் அப்படி இருக்கிறது. மற்ற காப்பியங்கள் எப்படி என்று பார்த்தால், அவையும் அப்படித்தான் இருக்கின்றன. 


பாரதத்தில், பாண்டவர் ஐவர். ஒரு பெண் உடன் பிறப்பு இல்லை. 


கௌரவர் நூறு பேர். ஒரு பெண் பிள்ளை இல்லை. 


பாஞ்சாலி, ஒரு சகோதரியாக இருந்தாள். ஆனால், அண்ணன் தங்கை உறவு வெளிப்படவில்லை. 


உப பாண்டவர்கள் பிறந்தார்கள், ஒரு பெண் பிள்ளை இல்லை. 


சிலப்பதிகாரத்தில்,  கோவலனுக்கும், கண்ணகிக்கும் உடன் பிறப்பு இல்லை. படம் பூராவும் அமைதியாக இருந்து விட்டு, கிளைமாக்ஸ் ல் bomb போட்டுவிட்டு கண்ணகி போய் விடுகிறாள். 


மணிமேகலை, துறவியாகப் போய் விட்டாள்.


உங்களுக்கு இது பற்றி ஏதேனும் சொல்ல இருந்தால், சொல்லுங்கள். அறிந்து கொள்ள ஆவல். 

முதுமொழிக் காஞ்சி - கல்வியா ஒழுக்கமா ?

 முதுமொழிக் காஞ்சி - கல்வியா ஒழுக்கமா ?


கல்வியா ? ஒழுக்கமா? இதில் எது உயர்ந்தது என்று கேட்டால், நம் இலக்கியம் அத்தனையும் ஒட்டு மொத்தமாக கூறுவது ஒழுக்கத்தைத்தான். 


எவ்வளவுதான் கல்வி கற்று இருந்தாலும், ஒழுக்கம் இல்லை என்றால் ஒருவனை நம் இனம் மதிப்பது இல்லை. 


இராவணன் கல்லாத கல்வியா ?  அவன் கல்வியை யாரும் மதிக்கவில்லை. காரணம், அவனின் ஒழுக்கக் குறைவு. 


பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள், மிகப் படித்தவர்கள் ஒழுக்கம் குறைந்து நடந்தால் நாம் அவர்களை மதிப்போமா? 


அடடா எவ்வளவு படித்த மனிதர், எவ்வளவு செல்வம், செல்வாக்கு, அதிகாரம் உள்ளவர் என்று நினைப்போமா அல்லது இவ்வளவு இருந்தும் அவனுக்கு புத்தி போகுது பாரு என்று ஏளனம் செய்வோமா? 


படிப்பு, எப்போதும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் சிறு வயதில் வந்தால்தான் உண்டு. அப்புறம் வராது. 


கற்ற கல்வி சில சமயம் மறந்து போய்விடும். தவறில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் போனால்?  அந்தப் பெண் இது வரை ஒரே ஒரு தரம்தான் கற்பு தவறி நடந்து இருக்கிறாள் என்றால் சரியாகிவிடுமா? 


பாடல் 


ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_28.html


(Please click the above link to continue reading)



ஆர்கலி யுலகத்து  = ஆரவாரமான ஒலியை உடைய கடல் சூழ்ந்த உலகில் 


மக்கட் கெல்லாம் = மக்களுக்கு எல்லாம் 


ஓதலிற் = படிப்பை விட, கல்வி அறிவை விட 


 சிறந்தன் றொழுக்க முடைமை. = சிறந்தது ஒழுக்கம் உடைமை 


கல்வியை விட உயர்ந்தது ஒழுக்கம் உடைமை. 


இதெல்லாம் சின்ன வயதில் சொல்லித் தர வேண்டும். 


twinkle twinkle litter star

baa baa black sheep

eating sugar...no papa 


என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


வாழ்நாள் பூராவும் ஒருவனுக்கு துணை செய்யும் ஆழமான, அறிவுபூர்வமான, அனுபவ பூர்வமான எளிய பாடல்களை விட்டு விட்டு 


rain rain go away 


என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


சிந்திக்க வேண்டிய விடயங்கள். 




Monday, September 27, 2021

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - இருமும்பொழுதேத்தி

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - இருமும்பொழுதேத்தி 


குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முதல் திருமொழி, பாசுரம் எண் 653 


பக்தி செய்ய வேண்டும். இறைவனைத் தொழ வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். 


முடியணுமே. எவ்வளவு வேலைகள் இருக்கிறது. அதெல்லாம் செய்து விட்டு, இறை வணக்கம் செய்வது என்பது  ஒரு நடவாத காரியமாகவே படுகிறது. 


சரி, எப்படியோ கொஞ்ச நேரம் ஒதுக்கி இறை வணக்கம் செய்யலாம் என்றால், மனம் எங்கே விடுகிறது. 


ஆயிரம் சிந்தனைகள், கவலைகள், கெட்ட எண்ணங்கள்...ஒன்றை அடுத்து ஒன்றாய் வந்து நிற்கின்றன. இதில் பக்தி எங்கே வரும். 


சரி, எப்படியோ மனதை கொஞ்சம் நிலைப் படுத்தினாலும், புலன்கள் விடுதா? பூஜை செய்யும் சமையல் வாசம் மூக்கைத் துளைக்கிறது, அருகில் யார் வீட்டிலோ உள்ள தொலைகாட்சி அலறுகிறது, அடுத்த வீட்டில் நடக்கும் சண்டை காதில் விழுகிறது...புலன்கள் தூண்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. 


நேரம் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் மனம் ஒன்றுவதில்லை, மனம் ஒன்றினாலும் புலன்கள் விடுவதில்லை...இதில் எங்கிருந்து பக்தி செய்வது?


இதற்குத்தான் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்றால்,  இறை வணக்கம் செய்வதற்கு என்று நேரத்தை ஒதுக்கினார்கள். அதுவும் ஒரு வேலை தான். மற்ற வேலைகளை செய்து முடித்து விட்டு ஒழிந்த நேரத்தில் பக்தி செய்வது என்று இல்லாமல், பக்திக்கு என்று நேரம் ஒதுக்கினார்கள். 


"உன்னுடைய அடியவர்களோடு கூடி, உன்னை நான் காண்பது எந்நாளோ" என்று கண்ணீர் மல்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_27.html


(Please click the above link to continue reading)



மறந்திகழு மனமொழித்து = மறம் திகழும் மனம் ஒழித்து. அறத்துக்கு எதிர் மறம். கோபம், காமம், போர்க் குணங்கள் கொண்ட மனதை மாற்றி 


வஞ்ச மாற்றி  = மனதில் உள்ள வஞ்சகங்களை அகற்றி 


ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி 


யிடர்ப் பாரத் துன்பம் துறந்து = இடர் பாரத் துன்பம் துறந்து = இடர் என்றால் தடை. பாரம் என்றால் பெரிய சுமை. எது பெரிய சுமை? நம் வினைப் பயன்தான் பெரிய சுமை. நினைத்தாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. எவ்வளவு துன்பம் என்றாலும் நாமே தூக்கி சுமக்க வேண்டியது தான். அதையும் துறக்க முடியும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 



இருமுப் பொழுதேத்தி = இரு + முப்பொழுது ஏத்தி. இரண்டு + மூன்று = ஐந்து பொழுதில் இறைவனைத் துதித்து 


யெல்லை யில்லாத் = எல்லை இல்லாத. இங்கே, தொடக்கம் இல்லாத என்று கொள்ள வேண்டும் 


தொன்னெறிக்கண் = பழைய வழியின் கண் 


நிலைநின்ற = நிலையாக நின்ற. எப்போதும் கடை பிடிக்கும் 


தொண்ட ரான = தொண்டர்களான 


அறம் திகழும்  மனத்தவர்தம் = மனதில் எப்போதும் அறம் நிலைத்து நிற்கும் அந்த அடியவர்களின் 


 கதியைப்  = இலக்கை, சென்று அடையும் இடத்தை 


பொன்னி  = காவிரி 


அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


நிறம் திகழும் = கரிய நிறத்தோடு திகழும் 


மாயோனைக் = மாயோனை 


கண்டென்  = கண்டு என் 


கண்கள் நீர்மல்க = கண்களில் கண்ணீர் பெருக 


என்றுகொலோ நிற்கும் நாளே = என்று வணங்கும் நாளோ? 


சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருப்பதால், இதன் தொடர்ச்சியை அடுத்த ப்ளாகில் காணலாம். 




Sunday, September 26, 2021

திருக்குறள் - உடலுக்கும் செவிக்கும் இன்பம்

 திருக்குறள் - உடலுக்கும் செவிக்கும் இன்பம் 


பாடல் 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_26.html


(Please click the above link to continue reading)



மக்கள் = குழந்தைகள் 


மெய் தீண்டல் = உடலைத் தீண்டல் 


உடற்கின்பம் = உடலுக்கு இன்பம் 


மற்று = மற்று 


அவர் = அவர்கள் 


சொற் கேட்டல் = சொல்லுவதைக் கேட்டல் 


இன்பம் செவிக்கு = செவிக்கு இன்பம் 


மிகவும் எளிமையான குறள். 


ஒரு சில நுணுக்கமான விடயங்கள். 


"மக்கள் மெய் தீண்டல்" என்றால், பிள்ளைகள் நம்மை தீண்டுவதா அல்லது நாம் பிள்ளைகளை தீண்டுவதா? பிள்ளைகள் ஓடி வந்து நம்மைக் கட்டிக் கொள்வது ஒரு சுகம். நாம் ஓடிச் சென்று பிள்ளையை வாரி அணைத்துக் கொள்வதும் சுகம்.  எப்படிப் பார்த்தாலும் மெய் தீண்டல் இன்பம் தான். 


"சொற் கேட்டல்"  என்று கூறினார். மழலைச் சொல் என்று சொல்லவில்லை.  குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னும், அவர்கள் சொல்வதைக் கேட்பது சுகம்தான்.  பிள்ளைகள் ஒவ்வென்றாக படித்து, அறிந்து, அனுபவம் கொண்டு வந்து சொல்வதும் இன்பம் தான். "இன்னிக்கு பள்ளிக் கூடத்தில் என்ன நடந்தது தெரியுமா" என்று விழி விரிய சொல்வதைக் கேட்பதும் இன்பம்.


பேசுவதைக் கேட்க ஆயிரம் தொழில் நுட்பம் வந்து விட்டது. 


மெய் தீண்டல் தான் இன்னும் முடியவில்லை.








Saturday, September 25, 2021

நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?

 நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?


படித்துக் கொண்டே இருக்கிறோம். 


இன்று புத்தகம், நாளை இன்னொன்று, நேற்று வேறு ஒன்று என்று படிக்க படிக்க புதிது புதிதாக ஏதேதோ தோன்றுகிறது. 


இதற்கு என்னதான் முடிவு? எவ்வளவு காலம்வரைதான் படிப்பது?


சரி, எவ்வளவு படித்தாலும், அதன் நோக்கம் என்ன? படித்து என்ன செய்யப் போகிறோம். 


"இது நன்றாக இருக்கிறது", "இது பரவாயில்லை" , "அது அப்படி ஒன்றும் சுவையானது இல்லை" "இதெல்லாம் நடை முறைக்கு சரிப்படாது" என்று ஏதோ நமக்குத் தோன்றிய விமரிசனத்தை முன் வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போவதற்கா இவ்வளவு நேரம் செலவழித்து படிப்பது?


ஔவையார் சொல்கிறார்,


"இளமை இருக்கும் போதே ஒரு பெண் தன் கணவனோடு இன்பங்களை அனுபவித்து விட  வேண்டும். அப்புறம் பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், முதுமை வந்து விடும்.  பின், அனுபவிக்க நினைத்ததாலும், முடியாது. கணவனுக்கும் வயது ஆகி விடும், உடலின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து போகும்..


அது போல, முப்பது வயதுக்குள் படிக்க வேண்டியவற்றை படித்து, இறைவனை அனுபவத்தால் அறிந்து விட வேண்டும். படித்து கொண்டே இருப்பேன் என்றால் பின் அனுபவம் வாய்க்காது" என்கிறாள். 


பாடல் 



 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

 தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்

 கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)


முப்பதாம்  = முப்பது


ஆண்டளவில் = வயதில் 


மூன்றற்று  = காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களை அறுத்து 


ஒருபொருளைத் = ஒரு என்றால் உயர்ந்த, தனித்த, சிறந்த என்று பொருள். உயர்ந்த, தனித்த சிறந்த பொருள் இறைவன். இறைவனை 


தப்பாமல் = தவறாமல் 


தன்னுள் = தனக்குள்ளே 


பெறானாயின் = அனுபவமாக ஒருவன் பெறவில்லை என்றால் 


செப்புங் = பேசுவதற்கு உதவும் 


கலையளவே ஆகுமாம் = அவன் படித்தவை 


காரிகையார் = பெண்கள் 


தங்கள் = அவர்களுடைய 


முலையளவே = மார்பின் அளவே 


ஆகுமாம் மூப்பு. = வைத்தே மூப்பு அறியப்படும் 


இதை ஒரு ஆண் புலவர் பாடியிருந்தால், பெண் விடுதலை சிந்தனையாளர்கள் கொடி பிடித்திருப்பார்கள் நல்ல வேளையாக பாடியது ஔவையார். 


கற்ற கலை இறை அனுபவத்தைத்  தரவில்லை என்றால், அது சும்மா பேசப் பயன்படுமே அல்லாமல் வேறு ஒன்றுக்கும் பயன் தராது. மேற்கோள் காட்டலாம். அந்த நூலில் அப்படிச் சொல்லி இருக்கிறது, இந்த நூலில் இப்படிச் சொல்லி இருக்கிறது என்று பேசப் பயன்படும்.


எல்லாக் கலையும் இறை அனுபவத்தைத் தர வேண்டும். 


ஔவையார் சொன்னது முப்பது வயது வரம்பு. 


அவருக்குப் பின், நம் வாழ்நாள் அளவு மிக நீண்டு விட்டது. ஒரு நாற்பது அல்லது ஐம்பது வைத்துக் கொள்ளலாம். 


நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? 


சாமாறே விரைகின்றேன்  என்றார் மணிவாசகர். ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறோம். 


எல்லா ஓட்டமும் இடுகாட்டுகுத் தான். 


உயரத்தில் ஒரு சினிமா படம் பிடிக்கும் புகைப் பட கருவியை (கேமரா) வைத்து அதில் வேகமாக படம் பிடித்தால் தெரியும், எல்லோரும் அன்னை வயிற்றில் இருந்து வந்து நேரே வேக வேகமாக ஓடிப் போய் சவக் குழியில் விழுவதைக் காணலாம். 


ஒருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. 


அதற்குள் அந்த அனுபவம் பெற வேண்டாமா?





Friday, September 24, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர் 


இறை உணர்வு என்பது ஒரு எளிமையான உணர்வு. அதை மிக மிக சிக்கலான ஒன்றாக ஆக்கிவிட்டோம். வேதம், புராணம், இதிகாசம், அவதாரம், உபநிடதம், சுருதி, ஸ்மிரிதி, பூஜை, ஆசாரம், நியமம், என்று பல விதங்களில் சிக்கலாக்கி விட்டோம். 



பத்தாக் குறைக்கு குழப்பும் தத்துவங்கள்...அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம், பரமாத்மா, ஜீவாத்மா, இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்று ஏகப்பட்ட சிக்கல்கள். 



இதை எல்லாம் படித்து, தெளிவதற்குள் நம் ஆயுள் முடிந்து விடும். ஒன்றைப் படித்தால் அதில் இருந்து ஆயிரம் சந்தேகம் வரும். என்று தெளிவு வர?



பக்தி செய்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் இல்லை. 



இறைவனை மிக மிக எளிதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


அவன் நின்றான், உட்கார்ந்தான், படுத்தான், நடந்தான் என்று சொன்னாலே நம் இடர், துன்பம் எல்லாம் போய் விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 



பாடல்  


வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத


பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்


நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,


என்றால் கெடுமாம் இடர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_24.html


(Please click the above link to continue reading)



வேங்கடமும்  = திரு வேங்கடம் (திருப்பதி) 


விண்ணகரும் = விண்ணில் உள்ள நகர், வைகுண்டம் 


வெஃகாவும், = திரு வெஃகாவும்


 அஃகாத = மாறாத 


பூங்கிடங்கில் = பூக்கள் நிறைந்த 


நீள் கோவல் = உயர்ந்த திருக் கோவலூர் 


பொன்னகரும் = என்ற பொன் போன்ற நகரமும் 


நான்கிடத்தும் = நான்கு இடத்திலும் 


நின்றா னிருந்தான் = நின்றான், (உட்கார்ந்து)  இருந்தான் 


 கிடந்தான் = (படுத்து) கிடந்தான் 


நடந்தானே = நடந்தான் 

 

என்றால் கெடுமாம் இடர். = என்று சொன்னால் நம் துன்பங்கள் எல்லாம் போய் விடும் 


துன்பம் போக வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள்? 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


பக்கம் பக்கமா பாராயணம் பண்ணி, ஒப்பிக்க வேண்டுமா? விரதம் இருக்க வேண்டுமா? ஆசாரம், அனுஷ்ட்டானம் எல்லாம் பண்ண வேண்டுமா?


ஒன்றும் வேண்டாம்...


நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் 


என்று சொன்னால் போதும். 


கடவுள் என்றால் ஏதோ சூப்பர் man மாதிரி ஏதாவது வித்தை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அல்ல. 


சும்மா நம்மை மாதிரி, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்றாலும் அவன் கடவுள்தான். 


அவ்வளவு ஒரு எளிமை. 


மனதில் பக்தி வேண்டும். அன்பு வேண்டும். 


மற்றவை எல்லாம் ஆடம்பரம். 

Thursday, September 23, 2021

திருக்குறள் - சிறுகை அளாவிய கூழ்

 திருக்குறள் - சிறுகை அளாவிய கூழ்


குழந்தைக்கு சோறு ஊட்டுவது இன்பம். குழந்தை ஒவ்வொரு கவளமாக உண்ணும் அழகே அழகு. அதன் சிறிய வாய், பல் இல்லாத அந்த பொக்கை வாய் அல்லது பல் முளைக்க இருக்கும் அந்த எயிறு, வாயின் ஓரம் வழியும் அந்த எச்சில்...எல்லாமே அழகுதான்.


சில சமயம் பிள்ளைக்கு சோறு ஊட்டும் போது, குழந்தையும் சோற்றில் கை வைத்து எடுத்து உண்ண பார்க்கும். அது கூட பரவாயில்லை. உணவு தோய்ந்த கையை நமக்கு ஊட்ட முயற்சி செய்யும். அதன், அந்த சின்ன கையில் ஒட்டியிருக்கும் ஓரிரண்டு பருக்கைகள்...அதற்கு அமுதமும் ஈடாகாது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்



பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_23.html


(Please click the above link to read further)



அமிழ்தினும் = அமுதத்தை விட 


ஆற்ற இனிதே = கொல்வதற்கு இனிதானது 


தம் மக்கள் = தங்கள் பிள்ளைகள் 


சிறுகை  = சிறிய கையில் 


அளாவிய கூழ் = விரவிய சோறு 



மூன்று விடயங்களை நாம் உன்னிப்பாக கவனித்தால், இன்னும் இரசிக்கலாம். 


முதலாவது, "தம் மக்கள்". நம்ம பிள்ளை கையில் அளாவிய சோறு தான் அமுதை விட இனிமையாக இருக்கும். பக்கத்து வீட்டு பிள்ளை சோறு நமக்கு இனிமையாக இருக்குமா? 


இரண்டாவது, "சிறு கை": கை அளாவிய என்று சொல்லவில்லை. சிறு கை என்று சொல்கிறார். நம் பிள்ளைதான் என்றாலும் முப்பது வயதில், சோற்றை அளாவித் தருகிறேன் என்றால் சுவைக்குமா? அந்த வயதில் அது சுவையாக இருக்கும். 


மூன்றாவது, "கூழ்". கூழ் என்பதற்கு சோறு என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். அதாவது மிக எளிமையான ஒரு உணவு கூட, குழந்தையின் கை பட்டால் அமுதம் மாதிரி இருக்கும் என்கிறார். 


அனுபவித்தால் அன்றிப் புரியாது. 


அனுபவித்தவர்கள், ஒரு முறை அதை நினைத்து புன்னகை பூக்கலாம். 


மற்றவர்கள், அந்த அனுபவத்துக்காக காத்து இருக்கலாம். 



Wednesday, September 22, 2021

மணிமேகலை - அறவிலை பகர்வோர்

 மணிமேகலை - அறவிலை பகர்வோர் 


சமயம் சார்ந்த பண்டிகைகள், திருமண நாள், பிறந்த நாள் போன்ற நல்ல தினங்களில் வீட்டில் விசேடமாக பலகாரங்கள் செய்து அக்கம் பக்கம், தெரிந்தவர், உறவினர், நண்பர்களுக்கு வழங்குவது வழக்கம். அது நல்ல பழக்கம்தான். 


ஆனால், அது ஏதோ பெரிய அறச் செயல், புண்ணிய காரியம் என்று நினைக்கக் கூடாது. "நாலும் கிழமையும்னா நாலு பேருக்கு வீட்டுல செஞ்ச பலகாரங்களை தவறாமல் அனுப்பி விடுவேன்" என்பதில் பெருமை கொள்ளக் கூடாது. 


மணிமேகலை சொல்கிறது, "பொருள் உள்ளவர்களுக்கு நாம் அளிக்கும் எதுவும் அறத்தை விலை பேசுவது மாதிரித்தான்" என்று. 


ஒரு வியாபாரி மற்றவருக்கு ஒரு பொருளை கொடுக்கிறான் என்றால் அதற்கு காரணம் அதில் அவனுக்கு ஒரு இலாபம் வரும் என்ற எதிர்பார்ப்பு தான். அது ஒரு அறச் செயலா? இல்லையே. அது இலாபம் நோக்கிய வாணிபம். 


அது போல பொருள் உள்ளவர்களுக்கு செய்வது, அவர்களால் பின்னால் நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. அது அறத்தை விலை பேசி விற்பது போல என்கிறது மணிமேகலை. 


பாடல் 


ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்

மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_22.html


(click the above link to continue reading)


ஆற்றுநர்க் களிப்போர் = ஆற்றுனற்கு அளிப்போர் = பொருள் உள்ளவர்களுக்கு கொடுப்பவர்கள் 


அறவிலை பகர்வோர் = அறத்தினை விலை கூறுபவர்கள் 


ஆற்றா = ஆற்ற முடியாத 


மாக்க ளரும் = மக்களின் கொடிய 


பசி களைவோர் = பசியை போக்குபவர் 


மேற்றே = அவர்கள் கண்ணதே 


யுலகின் = இந்த உலகின் 


மெய்நெறி = உண்மையான வழியில் செல்லும் 


வாழ்க்கை = வாழ்கை 


மண்டிணி = மண்ணால் திணித்து அடர்நத 


ஞாலத்து = உலகில் 


வாழ்வோர்க் கெல்லாம் = வாழ்வோருக்கு எல்லாம் 


உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே = உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - உணவு கொடுத்தவர், உயிரை கொடுத்தவருக்கு சமம். 


உணவைக் கொடுப்பது, உயிரைக் கொடுப்பது மாதிரி. 


உணவு கொடுக்கும் போது ஏதோ உணவைக் கொடுக்கிறோம் என்று நினைக்கக் கூடாது. ஒருவருக்கு உயிரைக் கொடுக்கிறோம் என்று நினைக்க வேண்டும்.  


ஏதோ நாம் கொடுத்த உணவால் அவர் உயிர் பிழைத்தார் என்று அல்ல. நம்மால் அவர் இன்னும் சிறிது காலம் வாழ்வார்  என்று நினைக்க வேண்டும். 


செல்வர்களுக்கும், பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தருவது, அறவிலை பகர்வதுதான்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள் நம்மவர்கள்!



Monday, September 20, 2021

நாலடியார் - பெரியார் வாய்ச் சொல்

 நாலடியார் - பெரியார் வாய்ச் சொல் 


எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தெரியமலேயே, ஏதோ மனதுக்கு சரி என்று பட்டதை செய்து கொண்டும், சரி அல்ல என்று பட்டதை முடிந்த வரை தவிர்த்தும் வாழ்கிறோம். ஆனால், நாம் செய்பவை சரி தானா, செய்யாமல் விட்டது உண்மையிலேயே தீமைதானா ? தெரியாது நமக்கு. 


அது போன்ற குழப்பங்கள் வரும் போது, நம் அற நூல்கள் வழி காட்டுகின்றன. அவை நம் சிக்கல்களை முழுவதுமாக தீர்த்து விடாது. வழி காட்டும். 


அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று நாலடியார். 


"எதை அறிய வேண்டும் ? எதற்கு அஞ்ச வேண்டும்? எப்போது பொறுமையாக இருக்க வேண்டும் ? எதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் ? எதை வெறுக்க வேண்டும் ? எதை எப்போதும் கை விடக் கூடாது?"


இந்தக் கேள்விகளை கேட்டு, பதிலும் தருகிறது கீழே உள்ள நாலடியார் பாடல் . 


பாடல் 


அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_20.html


(Please click the above link to continue reading)


அறிமின் அறநெறி = அறம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்


அஞ்சுமின் கூற்றம்: = எமனுக்கு அஞ்ச வேண்டும்.  மரணம் எப்போதும் வரும் என்ற பயத்தில் நல்லது செய்ய வேண்டும், நல்லவற்றை படிக்க வேண்டும், தீயவற்றில் இருந்து விலகி நடக்க வேண்டும். 

பொறுமின் பிறர்கடுஞ்சொல் = பிறர் சொல்லும் கடிய சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். 


போற்றுமின் வஞ்சம் = வஞ்சம் மனதில் புகுந்து விடாதபடி மனதை போற்றி பாதுகாக்க வேண்டும். 


வெறுமின் வினைதீயார் கேண்மை = தீய செயல் செய்பவர்களின் நட்பை வெறுக்க வேண்டும் 


எஞ்ஞான்றும் = எப்போதும் 


பெறுமின் பெரியார்வாய்ச் சொல். = பெரியவர்கள் சொல்லும் சொற்களை 


மற்றவற்றில் சில சமயம் நாம் வழுவினாலும் வழுவுவோம். பெரியார் சொல்வதை கேட்பதில் இருந்து ஒரு காலும் வழுவக் கூடாது என்பதற்காக "எஞ்ஞான்றும்" என்ற சொல்லைப் போட்டு இருக்கிறார்.


ஒரு போதும் அவர்கள் சொல்வதை கேட்காமல் இருக்கக் கூடாது. 


அறிவிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்களை கண்டு பிடிப்பதுதான் சிரமமாக இருக்கிறது. 


இரண்டும் ஒரு சேர அமையப் பெற்றவர்கள் நாளும் அருகி வருகிறார்கள். 


தேடி கண்டு பிடிக்க வேண்டும். 


உயர்ந்த நூல் ஆசிரியர்கள்தான் எனக்குப் பெரியவர்கள். எப்போதும் உயர்ந்த விடயங்களை சொல்லித் தர தயாராக இருப்பார்கள். 


எடுக்கணும். படிக்கணும். அவ்வளவுதான். 




Sunday, September 19, 2021

ஒன்பதாம் திருமுறை - கொண்டும் கொடுத்தும்

 ஒன்பதாம் திருமுறை  - கொண்டும் கொடுத்தும் 


கடவுளை நம்புகிறவர்கள், நம்பி விட்டுப் போக வேண்டியது தானே. கடவுளை நம்பாதவர்களிடம் சென்று வாக்கு வாதம் செய்ய வேண்டியது. இவர்கள் நாலு கேள்வி கேட்க, அவர்கள் நாற்பது பதில் சொல்லுவார்கள். அந்த பதிலில் இருந்து நூறு கேள்வி பிறக்கும். இறுதியில் இருவரும் தங்கள் கொள்கைகளில் இருந்து மாறப் போவது இல்லை. மாறாக, அனாவசியமான சண்டையும், சச்சரவும், மனக் கசப்பும் மட்டுமே மிஞ்சும். 


ஆசிரியர் சொல்கிறார் "நீ கடவுளை நம்பவில்லையா, தள்ளிப் போ" என்று எதுக்கு அனாவசியமான தர்க்கம். நம்புகிறவர்கள் வாருங்கள். நம்பாதவர்கள் போய் விடுங்கள் என்கிறார். 


மேலும், நம் பண்பாட்டில், எந்த உறவாக இருந்தாலும், அது கொடுத்து வாங்கித்தான் பழக்கம். 


இறைவனாகவே இருந்தாலும், அவனிடம் எல்லாம் இருந்தாலும், நம்மிடம் இருப்பது எல்லாம் அவன் தந்தது என்றாலும், பக்தர்கள் இறைவனிடம்ஒன்று கேட்பதற்கு முன்னால், அவனுக்கு ஒன்றைத் தந்துவிட்டுத் தான் கேட்பார்கள். 


பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் 

இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம் செய் 

துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா 


என்பது ஔவையின் பாட்டு. 


நான் உனக்கு நாலு தருகிறேன், நீ பதிலுக்கு மூன்று தா என்று வேண்டுகிறாள். 

கேட்பது, வாங்குவது எல்லாம் கேவலம் என்று நினைக்கிறார்கள். 


அல்ல. கேட்டு, வாங்கிப் பாருங்கள். உறவு பலப்படும். நான் கொடுத்துக் கொண்டே இருப்பேன், கேட்க மாட்டேன். கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்றால் உறவு பலவீனப் பட்டு விடும். 



கணவன், மனைவி உறவு என்றால் கூட, அன்பை கேட்டுப் பெற வேண்டும். நான் கேட்க மாட்டேன், நீயாகத் தர வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டு நின்றால் அன்பு ஒருகாலும் கிடைக்காது. 



சில பேர் கொடுத்தால் கூட வாங்குவது இல்லை. 



திருமணம், அல்லது வேறு ஏதாவது விசேடம் என்றால், அழைப்பிதழில் "நன்கொடை ஏற்றுக் கொள்ள பட மாட்டாது" (gifts not accepted) என்று அச்சடிக்கிறார்கள். 



அது சரி அல்ல. நான் தருவதை நீ ஏற்றுக் கொள்ளவிட்டால், நீ தரும் உபசரிப்பை நான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? 



இறைவனுக்கு ஒரு பழம், ஒரு வெற்றிலை, ஒரு ரூபாய் உண்டியலில் போடுவது என்று ஏதோ ஒன்றை கொடுக்கும் குணம் உள்ளவர்கள் நம்மவர்கள். 



இறைவனோடு அப்படி ஒரு அன்யோன்ய உறவு.  ஒன்றும் இல்லை என்றால், முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். நம் முடியை வைத்து இறைவன் என்ன செய்யப் போகிறான்? அது அல்ல கேள்வி. 


நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அடையாளம். என்னையே உன்க்குத் தருகிறேன் என்பதன் குறியீடு. மொட்டை அடித்தால் அடையாளம் மாறிப் போய் விடுகிறது அல்லவா?



"கொண்டும் கொடுத்தும் வழி வழியாக இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள்" என்கிறார். 


பாடல் 


மிண்டு மனத்தவர் போமின்கள்

    மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்

    செய்மின் குழாம்புகுந்

தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்

    ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே

    பல்லாண்டு கூறுதுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_19.html


(Please click the above link to continue reading)




மிண்டு = எதிர் வாதம் பேசுபவர்கள். இன்றும் கூட மலையாளத்தில் "நீ மிண்டாதிரு" என்று கூறுவார்கள். நீ எதிர் பேசாமல் இரு என்று பொருள். 


மனத்தவர் = எதிர்வாதம் பேசும் மனம் உள்ளவர்கள். 


போமின்கள் = போய் விடுங்கள். உங்களோடு பேச எங்களுக்கு ஒன்றும் இல்லை 


மெய்யடியார்கள் = உண்மையான அடியவர்கள் 


விரைந்து வம்மின் = விரைந்து வாருங்கள் 


கொண்டும் = பெற்றுக் கொண்டும் 


கொடுத்தும் = கொடுத்தும் 


குடிகுடி = வழி வழியாக 


யீசற்காட் செய்மின் = ஈசனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்யுங்கள் 


 குழாம்புகுந்து  = கூட்டமாகச் சென்று 


அண்டங் கடந்த பொருள் = அண்டங்களை கடந்த அந்தப் பரம் பொருள் 


அள வில்லதோர் = அளவிட முடியாத 


ஆனந்த வெள்ளப்பொருள் = ஆனந்த வெள்ளமான அந்தப் பொருள் 


பண்டும் = பழம் காலம் தொட்டும் 


இன்றும் = இன்றும் 


என்றும் = என்றும் 


உள்ளபொருள் = நிரந்தரமாய் உள்ள பொருள் 


என்றே = என்று 


பல்லாண்டு கூறுதுமே  = பல்லாண்டு கூறுங்கள். 



ஆழ்ந்த கருத்துகள் கொண்ட பாடல்களை கொண்டது ஒன்பதாம் திருமுறை. பல அடியார்கள் எழுதியவற்றின் தொகுப்பு. 


மூல நூலை தேடி படித்துப் பாருங்கள். 


அத்தனையும் தேன்.


Friday, September 17, 2021

திருக்குறள் - பிள்ளைகளால் வரும் பயன்கள்

திருக்குறள் - பிள்ளைகளால் வரும் பயன்கள் 


பிள்ளைகளை எதற்கு பெற்றுக் கொள்ள வேண்டும்? இல்லறம் சரி. அதை நடத்த ஒரு துணை வேண்டும் சரி. பிள்ளைகள் எதற்கு ?


இதற்கு பரிமேலழகர் வழியில் சென்று அறிவோம். 


எந்த ஒரு செயலுக்கும் ஒரு பயன் வேண்டும். பயனில்லாத காரியத்தை செய்யவே கூடாது. 


திருக்குறள் முழுவதிலும் இரண்டு விதமான பயன்களைப் பற்றி வள்ளுவர் கூறுவார். 


ஒன்று இம்மைப் பயன். மற்றது மறுமைப் பயன். 


ஒன்று இந்தப் பிறவியில் பயன் தர வேண்டும். அல்லது மறு பிறவியில் பயன் தர வேண்டும். இரண்டிலும் தந்தால் ரொம்ப நல்லது. 


குறள் 


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_56.html


(Please click the above link to continue reading)



தம்பொருள் = ஒருவருடைய பொருள்


என்ப  = என்று கூறுவார்கள் 


தம் மக்கள் = ஒருவருடைய பிள்ளைகளை 


அவர் பொருள் = அந்தப் பிள்ளைகளின் பொருள் 


தம்தம் = அவர்கள் செய்யும் 


வினையான் வரும் = வினையால் வரும் 


ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா? 


பெரும் பெரும் உரை ஆசிரியர்களும் குழம்பி இருக்கிறார்கள் இந்தக் குறளில். பல் வேறு விதமான உரைகள் இருக்கின்றது இந்தக் குறளுக்கு. 


நாம் பரிமேலழகரை பிடித்துக் கொள்வோம். 


ஒருவனுக்கு பொருள் என்று சொன்னால் அது அவனது பிள்ளைகள் தான். இங்கே பொருள் என்பது ஏதோ திடப் பொருள் அல்ல. இங்கே பொருள் என்பது அர்த்தம் என்று கொள்ள வேண்டும். 


"போற்றி என் வாழ் முதலாகிய பொருளே "


என்பார் மணிவாசகர். 


அது வரை புரிகிறது. 


"அவர் பொருள் தம் தம் வினையான் வரும் " 


என்றால் என்ன அர்த்தம்?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதெல்லாம் புரியாது. 


"அவர் பொருள்" என்றால் அந்தப் பிள்ளைகளின் பொருள் 


அந்தப் பிள்ளைகளின் பொருள் அவர்கள் செய்யும் நல் வினையால் ஒருவனுக்கு வந்து சேரும் என்கிறார்.


ஒரு தந்தை இருக்கிறார். அவருக்குப் பின், அவரது மகன் பல நல்ல காரியங்களைச் செய்கிறான். அந்த நல்ல காரியத்தின் பலன் தந்தைக்கும் வந்து சேரும் என்கிறார். 


அவர் பொருள் (மகனின் பொருள்)

தம் தம் வினையான் (அவர்கள் செய்யும் நல் வினையால்)

வரும் (தகப்பனிடம் வரும்)


என்று பொருள் கொள்ள வேண்டும். 


தந்தை இறந்து பின் மறு பிறவி எடுத்து இருக்கலாம். அந்தத் தந்தையின் மகன் தற்போது செய்யும் நல்ல வினைகளின் பலன், மறு பிறவியில் உள்ள தந்தைக்குப் போய்ச் சேரும் என்கிறார். 


இது மறுமைப் பயன். 


இதற்கு முந்தைய குறளில் 


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.


என்றார். ஏழு பிறப்பும் தீமை தீண்டாது என்று அங்கும் மறுமைப் பயன் பற்றிக் கூறினார். 


எனவே இந்த இரண்டு குறளிலும், நன் மக்களைப் பெறுவதின் மறுமைப் பயன் பற்றிக் கூறி உள்ளார் என்று கொள்க. 


இது என்னய்யா பெரிய ரீல் ஆக இருக்கிறது. 


மறு பிறவி, நல் வினை, ஏழு பிறப்பு...இதெல்லாம் நம்பும் படியே இல்லையே.  திருக்குறள் ஏதோ மூட நம்பிக்கையின் இருப்பிடம் மாதிரி தெரிகிறதே என்று சிலர் நினைக்கலாம். 


நம்ப வேண்டாம். 


பெற்று வளர்த்த பெற்றோரின் நினைவாக ஒரு சில நல்ல காரியம் செய் என்று வள்ளுவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளலாமே. பலன் பெற்றோருக்கு கிடைக்கிறது, கிடைக்காமல் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்லது செய்தால் என்ன குறைந்து விடப் போகிறோம்?


என்ன சரிதானே?



நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?

 நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?


சில சமயம் நமக்கு சில செயல்களை செய்வதில் ஒரு தயக்கம் இருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா, இதைச் சொல்லலாமா கூடாதா என்று ஒரு தயக்கம் இருக்கும்.  சரி போலவும் தெரியும், தவறு போலவும் தெரியும். செய் என்று ஒரு மனம் கூறும். செய்யாதே என்று இன்னொரு மனம் கூறும். 


எப்படி முடிவு எடுப்பது?


அந்த நேரத்தில், ஒரு நொடியில் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். 


அது பற்றி முன்பே சிந்தித்து இருந்தால், பழக்கம் இருந்தால் முடிவு எடுப்பது எளிதாக இருக்கும். இல்லை என்றால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு, அது சரிதானா என்று குழம்பிக் கொண்டே இருப்போம். 


அந்த மாதிரி சமயங்களில் நமக்கு உதவி செய்ய தமிழில் ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. அவற்றை நன்றாகப் படித்து இருந்தால், தேவையான சமயத்தில் குழப்பம் இல்லாமல் முடிவு எடுக்க முடியும். 


நம்முடைய நண்பர் ஒருவர், அவருடைய நண்பரின் வீட்டு விசேடத்துக்கு அழைத்துச் செல்கிறார். நண்பரின் நண்பரோ பெரிய அரசியல் செல்வாக்கு உள்ள நபர். போன இடத்தில் நமக்கு ஒரு பெரிய பரிசு தருகிறார். அதை ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா? 


அலுவலகத்தில் கீழே வேலை பார்ப்பவர். ஏதோ ஒரு நெருக்கடியில் நம்மைப் பற்றி கொஞ்சம் தரக் குறைவாக பேசி விட்டார். அவரோடு சண்டை போட்டு, அவரை வேலையை விட்டு தூக்கி விடலாமா?


நமக்கு, நம்முடைய நண்பரின் பையனைப் பற்றி ஒரு செய்தி வருகிறது. அது நல்ல செய்தி அல்ல. அந்த செய்தி சரியா தவறா என்று நம்மால் தீர்மானிக்க முடியவில்லை. அந்தச் செய்தியை நண்பரிடம் சொல்லலாமா கூடாதா? 


பாடல் 



எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_17.html


(Please click the above link to continue reading)



எள்ளற்க = கேலி பேசாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் றென்பெறினும் = நம்மை விட எளியவர் ஏதாவது சொன்னாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா  = பெறக் கூடாதவர்கள் கையில் இருந்து 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க  = கோபம் கொள்ளக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = வறுமை உள்ள குடும்பத்தில் பிறந்தவரை 


கூறற்க = சொல்லாமல் இருக்க 


கூறல் லவற்றை விரைந்து = எதைச் சொல்லக் கூடாதோ அதை அவசரப் பட்டு 


நம்மை விட வலிமை குன்றியவர்களை பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. பணத்தில், பதவியில், படிப்பில் நம்மை விட கீழே உள்ளவர்களைப் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. 


தீயவர்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது. இன்று ஒரு பொருளைக் கொடுப்பான். நாளை அதற்கு பதிலாக சட்டத்துக்கு புறம்பான காரியம் ஒன்றைச் செய்யச் சொல்வான். எவ்வளவு பெரிய விலை மதிக்க முடியாத பொருளாக இருந்தாலும், தீயவர்கள் கையில் இருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. விலை மதிக்க முடியாத பொருளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்றால், அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்கள் கையை எதிர் பார்க்கலாமா? தீயவர்கள் எதையாவது கொடுத்து மயக்கி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


வறுமையில் பிறந்தவர்கள் தங்கள் ஆற்றாமையில் ஏதாவது சொல்லி விடலாம். அதை பெரிது படுத்திக் கொண்டு அவர்களோடு மலுக்கு நிற்கக் கூடாது.  பாவம், அவன் வறுமை அவனை அப்படி பேசச் சொல்கிறது என்று பரிதாப்பட்டு மேலே சென்று விட வேண்டும். 


நல்ல செய்தி இல்லை என்றால் அதை அவசரப்பட்டு சொல்லக் கூடாது. ஆற அமர யோசித்து, அதன் தன்மை அறிந்து, தெளிவாக சொல்ல வேண்டும். மோசமான செய்திகளை யாரும் விரும்புவது இல்லை. 


இப்படி ஒரு நூறு பாடல்கள் இருக்கின்றன. 


மெனக்கெட்டால் ஓரிரு மணியில் படித்து முடித்து விடலாம். 


படித்து விடுவீர்கள்தானே ?



Thursday, September 16, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத் தழும்பு ஏறி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருமொழி - நாத்  தழும்பு ஏறி 


தொடர்ந்து ஒரு வேலையை செய்து கொண்டு இருந்தால், செய்யும் உறுப்பு காய்த்துப் போகும். 


சிலருக்கு பேனா பிடித்து எழுதி எழுதி விரல் காய்த்துப் போகும். 


சிலருக்கு வண்டியில் ஸ்டீரிங் வீலை பிடித்து பிடித்து கை காய்த்துப் போகும். 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், கடவுள் நாமத்தைப் நாக்கு தழும்பு  ஏற பாடி, கை கொண்டு மலர் தூவும் நாள் எந்நாளோ என்று உருகுகிறார். 


நாக்கில் தழுப்பு ஏறுவது என்றால் எவ்வளவு தரம் ஒரே நாமத்தை திருப்பி திருப்பி சொல்ல வேண்டி இருக்கும். 


அது பக்தி. 


ஏதோ அவசரத்தில், வாயில் முணு முணு என்று சொல்லிவிட்டுப் போவதா பக்தி. 


இதெல்லாம்  பக்தியின் வேறு தளம். இப்படி நினைக்கக் கூட நம்மால் முடியாது. 


பாடல் 


மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி


ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்


பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_16.html


(Please click the above link to continue reading)


மாவினைவாய் = குதிரை வடிவில் வந்த ஒரு அரக்கனின் வாயை 


பிளந்துகந்த = பிளந்து + உகந்த = பிளந்து மகிழ்ந்த 


மாலை = திருமாலை 


வேலை வண்ணணை = வேலை என்றால் கடல். கடல் வண்ணனை 


என் கண்ணணை = என் கண்ணனை 


வன் = பெரிய, கடினமான 


குன்ற மேந்தி = மலையை கையில் ஏந்தி 


ஆவினை = பசுக் கூட்டங்களை 


யன் றுயக்கொண்ட = அன்று உய்யக் கொண்ட = அன்று காப்பாற்றிய 


ஆய ரேற்றை = ஆயர்களின் தலைவனை 


அமரர்கள்தந் = தேவர்களின் 


தலைவனை = தலைவனை 


அந் தமிழி னின்பப் = அந்த தமிழ் இன்பப்


பாவினை = பாடலை 


அவ் வடமொழியைப் = அந்த வட மொழியை 


பற்றற் றார்கள் = பற்று இல்லாதவர்கள் 


பயிலரங்கத் தரவணையில் = இருக்கும், திருவரகத்தில் பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 



கோவினை = தலைவனை 


நா வுறவழுத்தி = நாக்கு தழும்பு ஏற பாடி 


என்றன் = என்னுடைய 


கைகள் = கைகள் 


கொய்ம்மலர்தூய் = கொய்த மலரை தூவி 


என்றுகொலோ  = எப்போதோ 


கூப்பும் நாளே = கூப்பும் நாள் ?


இறை அனுபவம் எப்படி இருக்கும் என்று கேட்டால், ஒரு இனிமையான தமிழ் பாடலை கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார். 


தமிழின் இனிமை, வட மொழியின் இனிமை எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என்கிறார். 


பாட்டின் இனிமை என்பது உணர்வு சார்ந்தது. அது இன்னது என்று சுட்டிக் காட்ட முடியாது. 


இசையின் இன்பத்தைப் போல. 


சிலருக்கு இசையை கேட்கும் காது வாய்த்து இருக்கும். அவர்களுக்கு இசையின் இன்பம் புரியும். இசை தெரியாதவர்களுக்கு சொன்னாலும் புரியாது. 


பல பாட்டுப் போட்டியில் நடுவர்கள் "..அங்கங்கே கொஞ்சம் சுருதி விலகி இருந்தது" என்று சொல்லுவார்கள். நமக்கு எங்கே சுருதி விலகியது என்றே தெரியாது. எல்லாம் சரியாக இருப்பது போலவே தெரியும். (பெரும்பாலானவர்களுக்கு).  அந்த சுருதியை அறியும் செவி வாய்க்கவில்லை. 


அது போல, பக்தி இன்பம் என்கிறார். 


எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. 






Wednesday, September 15, 2021

நாலடியார் - சொர்கமும் நரகமும்

 நாலடியார் - சொர்கமும் நரகமும் 


சொர்கமும் நரகமும் எப்படி இருக்கும்? அதுக்காக உயிரை விட்டு அங்கே போய்த்தான் அறிய வேண்டும் என்று இல்லை. இங்கேயே, இந்த உலகிலேயே அவற்றை நாம் அனுபவிக்கலாம். 


"நுண்ணிய உணர்வு உள்ளவர்களோடு கூடி அவர்களின் அறிவை, உணர்வை பகிர்ந்து கொள்ளுதல் சொர்க்கம் போன்றது. நுண்ணிய நூல்களின் உணர்வு இல்லாதவரோடு பழகுதல் நரகத்தில் இருப்பது போன்றது"


பாடல் 


நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்

உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்

புணர்தல் நிரயத்து ளொன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_15.html


(Please click the above link to continue reading)



நுண்ணுணர்வி னாரொடு = நுட்பமான உணர்வினை உடையவர்களோடு 



கூடி = ஒன்று சேர்ந்து 



நுகர்வுடைமை = அவர்களின் அறிவை, உணர்வை பகிர்ந்து கொள்ளுதல் என்பது 



விண்ணுலகே யொக்கும் = சொர்க்கத்தைப் போன்று 



விழைவிற்றல் = விருப்படக் கூடியது 



நுண்ணூல் = நுட்பமான நூல்களை 



உணர்வில ராகிய = அறிந்து, உணரும் ஆற்றல் இல்லாதவர்களின் 



ஊதிய மில்லார்ப் =  பயன் இல்லாதவர்கள் 



புணர்தல் = சேர்ந்து இருத்தல் 



நிரயத்து ளொன்று. = நரகத்தில் இருப்பதற்கு சமம் 



முதலில் நுண்ணர்வு என்றார் பின் நுண்ணூல் உணர்வு என்றார். 



நுண்ணிய நூல்களை படித்து, அறிந்து, உணர்ந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 


அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லையே. எல்லோரிடமும் பழகுகிறோம், ஒருவரிடம் பழகுவது சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகமாகவும், இன்னொருவரிடம் பழகுவது நரகம் போல் துன்பமாகவும் இல்லையே என்று சிலர் கருதலாம். 


அவர்கள் நுண்ணிய உணர்வுடையவர்களை இதுவரை காணவில்லை என்றே சொல்ல வேண்டும். சிறந்த அறிவுடையவர்களை கண்டு, அவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாலும் தெரியும் அதன் இனிமை. அப்படி ஒரு இனிமையான அனுபவம் வாய்க்கவில்லை என்றால், அவர்கள் அப்படிப் பட்ட மனிதர்களை இது வரை கண்டு பிடிக்கவில்லை என்றே அர்த்தம். 


சொர்க்கம் எது என்று தெரியாததால், நரகம் எது என்றும் தெரியவில்லை. 


எப்போதும் ஒரே விதமான காப்பியை குடித்துக் கொண்டு இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் மிக சுவையான காப்பி ஒன்றை குடிக்கும் அனுபவம் நிகழ்கிறது. "ஆஹா, இதுவல்லவோ காப்பி" என்று இரசித்து குடிக்கிறோம். அதற்குப் பின், மறு நாள் பழைய காப்பியை குடிக்கும் போது "சே இது என்ன காப்பி ...நேத்து குடித்தேனே அதுவல்லவோ காப்பி" என்று தோன்றும் அல்லவா?


நுண்ணறிவாளர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். 

Tuesday, September 14, 2021

திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம்

 திருவாசகம் - குழந்தை கையில் பொற்கிண்ணம் 


நமக்கு நம்மிடம் இருப்பதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின் தான் அதன் அருமை தெரிகிறது. 


அப்பா, அம்மா, கணவன், மனைவி, ஆரோக்கியம், இளமை,  ஞாபகம், என்று பல விடயங்கள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. அது நம்மை விட்டுப் போன பின், அடடா என்று ஏங்குகிறோம். 


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, எவ்வளவு பெரிய நீ, மானிட வடிவம் கொண்டு எனக்காக வந்தாய். குழந்தையின் கையில் உள்ள பொற்கிண்ணம் போல, உன் அருமை தெரியாமல் உன்னை விட்டு விட்டேன். பொய்கள் நிறைந்த இந்த உலகில் என்னை உழல விட்டு விட்டு நீ போய் விட்டாய். உனக்கு இது சரிதானா" 


என்று உருகுகிறார். 


சின்ன பிள்ளையின் கையில் ஒரு விலை உயர்ந்த பொற்கிண்ணத்தைக் கொடுத்தால், அந்த பிள்ளைக்கு அதன் அருமை தெரியுமா? ஏதோ விளையாட்டுச் சாமான் என்று விளையாடிவிட்டு தூர போட்டுவிட்டுப் போய் விடும். 


பாடல் 


மையி லங்குநற் கண்ணி பங்கனே

வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்

கையி லங்குபொற் கிண்ண மென்றலால்

அரியை என்றுனைக் கருது கின்றிலேன்

மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்

மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்

பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ

போவ தோசொலாய் பொருத்த மாவதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_14.html


(Please click the above link to continue reading)



மையி லங்கு  = மை படர்ந்த 

நற் கண்ணி = அழகிய கண்களை கொண்ட உமா தேவியை 

பங்கனே = ஒரு பாகத்தில் கொண்டவனே 

வந்தெ னைப் = வந்து என்னை 

பணி கொண்ட = ஆட்கொள்ள வந்த 

பின் = பிறகு 

மழக் = மழலையின் (குழந்தையின்) 

கையி லங்கு = கையில் விளங்கும் 

பொற் கிண்ண மென்றலால் = பொன் கிண்ணம் போல 

அரியை = அருமையானவன், கிடைத்தற்கு அரியவன் 

என்றுனைக் = என்று உன்னை 

கருது கின்றிலேன் = நினைக்காமல் 

மெய்யி லங்கு = உடல் முழுவதும் 

வெண் ணீற்று மேனியாய் = திரு வெண்ணீறு பூசியவனே 

மெய்ம்மை அன்பர் = மெய்யான உன் அடியார்கள் 

உன் = உன்னுடைய 

மெய்ம்மை மேவினார் = உண்மையை அறிந்து, உன்னை அடைந்தார்கள் 

பொய்யி லங்கெனைப் = பொய்மை மிகுந்த இந்த உலகில் என்னை 

புகுத விட்டுநீ = செல்லும் படி விட்டு விட்டு 

போவ தோ = நீ போகலாமா ?

சொலாய் = நீயே சொல் 

பொருத்த மாவதே. = இது உனக்கு பொருந்திய செயலா? 


நான் தான் சிறு பிள்ளை போல உன்னை விட்டு விட்டேன் என்றால், நீயும் அப்படி இருக்கலாமா? என்று கேட்கிறார். 


கடவுளை நேரில் பார்த்து பேசுவது போல இருக்கும் பாடல்கள். 


இவ்வளவு இனிமையான பாடல், எவ்வளவு எளிமையாக இருக்கிறது. 


என்ன தாமதம்? உடனே திருவாசகத்தை முழுவதும் படித்து விடுங்கள். எவ்வளவு பெரிய பொக்கிஷம். 



Monday, September 13, 2021

கம்ப இராமாயணம் - உயிர் உண்டு எனின் துயர் உண்டு

 கம்ப இராமாயணம் - உயிர் உண்டு எனின் துயர் உண்டு 


அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதை புலம்புகிறாள். அவளுடைய துயருக்கு எல்லை இல்லை. 



என் உயிர் இருக்கும் வரை இந்தத் துன்பம் இருக்கும் இருக்கும் போல் இருக்கிறது. என் உயிர் போகும் போதுதான் இந்தத் துயர் விலகி, "சீதை உயிரை விட்டாள்" என்ற புகழ் வரும் போல் இருக்கிறது என்று புலம்புகிறாள். 



பாடல் 


என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,

மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;

'ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்; யான்

பொன்றும்பொழுதே, புகழ் பூணும்' எனா,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_13.html



(Please click the above link to continue reading)



என்று என்று = எப்போது எப்போது என்று 


உயிர் விம்மி = உயிர் விம்மி 


இருந்து அழிவாள் = நினைந்து வருந்துவாள் 


மின் துன்னும் = மின்னலைப் போன்ற 


மருங்குல் = இடையை 


விளங்கு = கொண்ட 


இழையாள் = சீதை 


'ஒன்று என் உயிர் = என்னுடைய உயிர் 


உண்டு எனின் = உண்டு என்றால் 


உண்டு இடர் = துன்பம் உண்டு 


யான் = நான் 


பொன்றும்பொழுதே = இறக்கும் பொழுதே 


புகழ் பூணும் = புகழ் அடையும் 


எனா = என்று 


உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவளின் துயரம் அவளை வருத்துகிறது. 



Sunday, September 12, 2021

திருக்குறள் - ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது

 திருக்குறள் - ஏழு பிறப்பும் தீயவை தீண்டாது 


சில சமயம் பெரிய துன்பம் வந்து விடும். நாம் யாருக்கும் ஒரு கெடுதலும் மனதால் கூட நினைத்து இருக்க மாட்டோம். இருந்தும், நமக்கு ஒரு பெரிய துன்பம் வந்து சேர்ந்து விடும். 


இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? 


அறிவியல் பூர்வமாக சிந்தித்தால், "காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை. அது பாட்டுக்கு நிகழ்கிறது. ஒரு random event" என்று சொல்லி விடலாம். 


இலக்கியமும், சமயமும் அப்படிச் சொல்வதில்லை. உனக்கு ஒரு பெரிய துன்பம் வருகிறதா, அதற்குக் காரணம், நீ முன்பு செய்த தீ வினை காரணம் என்று சொல்கின்றன. 


சொல்வது மட்டும் அல்ல, அவற்றில் இருந்து எப்படி தப்புவது என்றும் சொல்கின்றன. 


இராமன் என்ன பாவம் செய்தான்? ஏன் கானகம் போய் படாத பாடு பட்டான்?


இராமனே சொல்கிறான் 


"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த, விதியின் பிழை" 


என்று. 


பட்டினத்தார் போன்ற பெரும் துறவியை திருட்டுப் பட்டம் கட்டி கழுவேற்று என்று தண்டனை கொடுத்து விட்டான் அரசன். 


அப்போது பாடுகிறார் 


"என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே

உன்செய லெயென்றுணரப் பெற்றேன் இந்தஊனெடுத்த

பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்குமுன்செய்த 

தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே"


பிறந்த பின் செய்த தீவினை என்று ஒன்றும் இல்லை. ஒரு வேளை பிறப்பதற்கு முன் செய்த தீவினை இங்கு வந்து மூண்டதுவோ 


என்கிறார். 


அப்படி ஒருவன் முன் செய்த தீவினைகள், நல்ல புதல்வர்களை பெறுவதன் மூலம் தீரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_12.html


(Please click the above link to continue reading)



எழுபிறப்பும் = ஏழு பிறப்பும் 


தீயவை = தீயவை 


தீண்டா  = அணுகாது 


பழிபிறங்காப் = பழிக்கு ஆளாகாத


பண்புடை  = பண்புள்ள 


மக்கட் பெறின் = மக்களைப் பெற்றால் 


"எழு பிறப்பு" என்ற சொல்லுக்கு பல உரைகள் சொல்கிறார்கள். 


பொதுவாக உரை சொல்லும் போது, மூல நூல் ஆசிரியரின் மனக் கருத்தை அறிந்து அதன் போக்கில் சொல்ல வேண்டும். 


நம் கருத்தை நூலின் மேல் ஏற்றக் கூடாது. 


மறு பிறவிக் கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் "எழு பிறப்பு" என்பதற்கு "எழுந்த பிறப்பு"  என்று உரை சொல்வது சரியா?


வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை, நல் வினை, தீ வினை, மறு பிறப்பு என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது. எனவே, குறள் உரையை அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது தான் சரியாக இருக்கும். 


ஏழு பிறவியிலும் துன்பம் தீண்டாது என்று எப்படிச் சொல்லலாம்?  


நல்ல பிள்ளைகள், தங்கள் பெற்றோரை நினைத்து பல நல்ல காரியங்களை செய்வார்கள். அவர்கள் பெயரில் தானம் தர்மம் செய்வார்கள். அறக் கட்டளைகள் நிறுவுவார்கள். நாலு ஏழை பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள். இப்படி, அந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை நினைந்து செய்யும் நல்ல காரியங்கள், அந்தப் பெற்றோர் இப்போது எங்கு எப்படி பிறந்து இருந்தாலும் அங்கு போய் நன்மை செய்யும் அல்லது தீமையில் இருந்து காக்கும். 


எப்போதாவது, மயிரிழையில் தப்பித்தேன், அந்த விபத்துக்குள்ளான வண்டியில் நான் போயிருக்க வேண்டியது, என்று சில சமயம் அது எப்படி நிகழ்ந்தது என்று வியப்போம் அல்லவா? அப்படி நம்மை தீயவற்றில் இருந்து காப்பது, நம் முற்பிறவி பிள்ளைகள் நம்மை நினைத்து செய்யும் நல்ல காரியத்தின் பலன் என்கிறது வள்ளுவம்.



அப்படி எங்கே குறளில் இருக்கிறது? 


"பண்புடை மக்கட் பெறின்"


இங்கே பண்பு என்பது அவர்கள் தங்கள் பெற்றோரை நினைந்து செய்யும் நல்ல காரியகளை குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பண்பு என்பது அந்த செயலினால் வரும் நன்மையை குறிக்கும். 


"பண்பு என்ற காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது"


பண்பு என்பது காரணம். அந்தப் பண்பினால் விளையும் காரியம் நன்மை. இங்கே காரணத்தை , காரியத்தின் மேல் ஏற்றிக் கூறினார் என்கிறார். 


வாழ்வில் முன்னேற வேண்டுமா, நல்லா படி 


என்று கூறினால்,  படித்தால் எப்படி முன்னேற முடியும்?


படித்தால் நல்ல மதிப்பெண் வரும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும், நிறைய பொருள் சம்பாதிக்கலாம், வீடு வாசல் என்று வாங்கலாம், படிப்படியாக முன்னேற்றம் வருகிறது அல்லவா? 


படித்தல் காரணம். 


முன்னேற்றம் காரியம் 


சரி, இந்த பிள்ளைகள் எப்படி "பழி பிறங்கா நன் மக்களாக" இருப்பார்கள்?


அது ரொம்பக் கடினம் என்பதால் "பெறின்" என்று கூறினார். 


அப்படி அமைந்தால், உனக்கு ஏழு பிறவியிலும் துன்பம் தீண்டாது.


கடின முயற்சி செய்தால், இமய மலை மேல் ஏறி விடலாம் என்று கூறினால், அவ்வளவு முயற்சி செய்வது கடினம் என்று புரிகிறது அல்லவா?  


பிள்ளைகள் அப்படி இருக்கும் படி பெற்றோர் வளர்க்க வேண்டும். 


எப்படி, பெற்றோர், அவர்களது முன்னோர்களை நினைந்து நல்ல காரியம் செய்தால், பிள்ளைகளும் அதை கடைப் பிடிப்பார்கள். 


உங்களுக்கு, பின் வரும் பிறவியில் தீயவை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், பிள்ளைகளை நல்ல விதமாக வளருங்கள் என்கிறார் வள்ளுவர். 


நீங்கள் மறு பிறவியை நம்புகிறீர்களோ இல்லையோ, பாவ புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, 


உங்கள் பெற்றோரை, முன்னோரை நினைத்து நாலு நல்ல காரியம் செய்வது அவர்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன் என்று நினைத்துக் கூட செய்யலாமே. 


என்ன குறைந்து விடப் போகிறது ?



Saturday, September 11, 2021

நாலடியார் - அப்புறம் செய்யலாம்

நாலடியார் - அப்புறம் செய்யலாம் 


ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று நினைக்கும் போது அதற்கு முன் செய்ய வேண்டிய பல காரியங்கள் மனதில் தோன்றும். அந்த மற்ற காரியங்களை எல்லாம் செய்து விட்டு பின் நல்ல காரியத்தை தொடங்கலாம் என்று நினைப்போம். 


காசிக்குப் போகணும், அம்பது திவ்ய தேசமாவது சேவித்து வர வேண்டும், ஒரு தர்ம நிலையத்துக்கு நன்கொடை கொடுக்க வேண்டும், துன்பத்தில் இருக்கும் ஒரு உறவினருக்கு உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று பல அறக் காரியங்கள் தோன்றும்...


ஆனால்,


அதற்கு முன்னால்....


பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா அப்புறம் எல்லாம் நிதானமா செய்யலாம்...


பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்...அது மட்டும் அமைஞ்சுருச்சுனா அப்புறம், பத்தாயிரம் என்ன பெருசு, ஒரு இலட்சம் கூட நன்கொடை கொடுக்கலாம் 


என்று நினைப்போம். 


இல்லத்துக்கு வேண்டிய கடமைகளை எல்லாம் முடித்து விட்டு நல்ல காரியங்களை செய்யலாம் என்று நினைப்பது, அலை நின்ற பின் கடலில் குளிப்பது மாதிரி என்கிறது நாலடியார். 


அலை எப்ப ஓய தலை எப்ப முழுக....


பாடல் 


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_11.html


(Please click the above link to continue reading)


பெருங் = பெரிய 


கட லாடிய = கடலில் நீராடச் 


சென்றார் = சென்றவர்கள் 


ஒருங்குடன் = ஒட்டு மொத்தமாக 


ஓசை அவிந்தபின் = அலை ஓசை எல்லாம் நின்ற பின் 


ஆடுது மென்றற்றால் = நீராடுவோம் என்று நினைத்தல் 


இற்செய்  = இல்லத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை 


குறைவினை நீக்கி  = குறை ஒன்றும் இல்லாமல் நீக்கிய பின் 


அறவினை = அறம் சார்ந்த வினைகளை 


மற்றறிவாம்  = மற்றபடி அறிவோம், (செய்வோம்) 


என்றிருப்பார் மாண்பு. = என்று இருப்பவர்களின் பண்பு 


அலை ஓயப் போவதும் இல்லை. தலை முழுகப் போவதும் இல்லை. 


இல்லறக் கடமைகள் முடியப் போவதும் இல்லை. நல்ல வினைகளை செய்யப் போவதும் இல்லை. 


அற வினைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால், செய்து விட வேண்டும். அதுக்கு அப்புறம் இதைச் செய்யலாம் என்றால் செய்யவே மாட்டோம். 




Thursday, September 9, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2

 திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை இந்த ப்ளாகின் கடைசியில் உள்ள இணைய தளத்தில் காணலாம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 




(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள்.



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை "அறிவார்ந்த"
மக்கட்பேறு அல்ல பிற


என்று சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.


"அறிவறிந்த மக்கட்பேறு" என்று கூறுகிறார்.


அது என்ன அறிவறிந்த?


பிறக்கும் போதே எல்லாவற்றையும் யாரும் அறிந்து கொண்டு பிறப்பதில்லை. அறிவான பிள்ளைகளை பெறுவது என்றால் என்ன அர்த்தம்? அது சரி வராது அல்லவா? பிறந்த உடனேயே தெரியுமா ஒரு பிள்ளை அறிவுள்ளதா அல்லது அறிவு இல்லாதாத என்று. பின் ஏன் வள்ளுவர் அப்படிச் சொன்னார்?


பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரியாது. 


"அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை"


அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மக்கள் என்கிறார்.


பெரும்பாலும் என்ன நடக்கிறது?  எது எல்லாம் அறியத் தேவை இல்லையோ, அவற்றை அறிந்து கொண்டு இருக்கிறோம்.  


யோசித்துப் பாருங்கள், கடந்த ஒரு ஆண்டில் நீங்கள் புதிதாக அறிந்தவற்றில் எத்தனை அறிய வேண்டியவை, எத்தனை வெறும் குப்பைகள் என்று? 


எது எதையோ படித்துக் கொண்டு இருக்கிறோம். 


அவை எல்லாம் அறிவு என்று மண்டைக்குள் திணித்துக் கொண்டு இருக்கிறோம். 

வள்ளுவர் சொல்கிறார் - இரண்டு விடயங்கள்.


ஒன்று எதை அறிய வேண்டும் என்ற அறிவு. 


இரண்டாவது, எதை அறிய வேண்டுமோ அதை அறிந்து கொள்ளும் அறிவு.


இந்த இரண்டும் வேண்டும். அப்படிப்பட்ட பிள்ளைகளை பெறுவதை விட பெரிய சிறப்பான ஒன்று இல்லை என்று கூறுகிறார். 


பரிமேலழகர் ஒரு படி மேலே [போகிறார். 


" 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது"


அறிவறிந்த என்று கூறியதால் அது ஆண்களையே குறிக்கிறது. பெண்களை அல்ல என்றும் எனவே மக்கட்பேறு என்பது புதல்வர்களைப் பெறுவது என்றும் கூறுகிறார். 


பெண் பிள்ளைகள் தேவை இல்லையா? வள்ளுவரும், பரிமேலழகரும் இப்படி ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்களே என்று கொடி பிடிக்கலாம்.


சிந்திப்போம். 



மனிதர்களுக்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. 


ஒன்று அறிவு, இன்னொன்று உணர்ச்சி. 


இன்றைய அறிவியல் Intelligent quotient (IQ) and Emotional Quotient (EQ) என்று குறிப்பிடுகிறது.  மேலும், வாழ்வில் வெற்றி பெற EQ தான் மிக முக்கியம் என்கிறது. 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். (அது பற்றி மேலும் அளவலாவ ஆர்வம் இருந்தால், பின் தனியே சிந்திப்போம்).


பொதுவாக, ஆண்கள் எதையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் இயல்பு உடையவர்கள். பெண்கள் எதையும் உணர்வு பூர்வமாக அணுகுவார்கள். இதில் சில  விதி விலக்குகள் இருக்கலாம். 


அப்படி அறிவும், உணர்வும் தனித்து இருப்பதால்தான் இல்லறம் இனிமையாக இருக்கிறது. 


இருவரும் தர்க்க ரீதியாக பேசுவோம் என்றாலோ, அல்லது இருவரும் உணர்ச்சி வசப் பட்டு பேசுவோம் என்றாலோ சிக்கல்தான். 


அப்படி என்றால் ஆண்களுக்கு உணர்சிகள் கிடையாதா, பெண்களுக்கு அறிவு கிடையாதா என்று கேட்க்கக் கூடாது. 


பெண்களுக்கு உணர்சிகள் அதிகமாக இருக்கும். சட்டென்று அழ முடியும், உடனுக்குடன்  மன நிலை மாறும், உள்ளுணர்வு அதிகமாக இருக்கும், காரணம் சொல்லத் தெரியாது, ஆனால் முடிவு மட்டும் வரும். ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்றால், விளக்கத் தெரியாது. 


ஆண்கள் அப்படி அல்ல. அறிவின் தாக்கம் அதிகம் இருக்கும். உணர்சிகளை தள்ளி வைத்து விட்டு, நீண்ட தொலை நோக்கோடு சிந்திக்க  முடியும் அவர்களால். 


இரண்டும் வேண்டும் வாழ்வில். ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இல்லை. 


"அறிவறிந்த" என்றதனால், அது ஆண் பிள்ளைகளையே குறிக்கும் என்கிறார் பரிமேலழகர். பெண் பிள்ளைகளை அல்ல என்பது அவர் முடிவு. 


ஏற்றுக் கொல்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்.


சரி இல்லை என்று தோன்றினால், பரிமேலழகர் உரையை தள்ளி விட்டு, புது உரை எழுதலாம். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டால், பின் அதுவே நிலைக்கும்.  முயற்சி செய்வதில் தவறில்லை. 






இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 


நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி 2 - அடியார் கூட்டு 


நம்மை அறியாமலேயே நாம் நமக்கு செய்து கொள்ளும் நன்மையும் தீமையும் நம்மை சுற்றி உள்ளவர்களை  தேர்ந்து எடுப்பதுதான். 


நம்மை அறியாமலேயே நம்மை சுற்றி உள்ளவர்களின் குணம், அறிவு, பழக்க வழக்கங்கள் நம்மை பிடித்துக் கொள்ளும்.. 


படிக்கிற கூட்டத்தோடு இருந்தால், என்ன படிக்கலாம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, இதில் எப்படி சொல்லி இருக்கிறது என்றே எண்ணம் போகும்.


இசை அறிந்தவர்கள் கூட்டத்தில் இருந்தால் பாடல்களின் நயம், இசையின் நுணுக்கம் எல்லாம் தெரிய வரும்.


பக்தி வர வேண்டும் என்றால்?


எந்தக் கூட்டத்தோடு சேர வேண்டும்?  அடியவர்கள் கூட்டத்தில் சேர்ந்தால் பக்தி, இறை உணர்வு, ஆன்ம முன்னேற்றம் எல்லாம் வரும். 


குலசேகராழ்வார் சொல்கிறார் 


"பண்புகளில் சிறந்த திருமாலை, நான்முகன் தன்னுடைய நான்கு நாவினாலும், நான்கு முகத்தில் உள்ள எட்டு கண்களோடும் தொழுது, போற்றி நிற்கின்றான். திருமாலின் நாபிக் கமலம் தோன்ற, திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளை, மலர்கள் இட்டு பக்தி செய்யும் அடிவர்களோடு என்று சேர்ந்து இருப்பேன்"


என்று. 


பாடல் 


எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு


எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்


அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/2.html


(Please click the above link to continue reading)


எம்மாண்பின் அயன் = மாண்புமிகு பிரமன் 


நான்கு நாவி னாலும் = நான்கு நாவினாலும் 


எடுத்தேத்தி = போற்றிப் பாடி 


ஈரிரண்டு  = இரண்டு இரண்டு , நான்கு 


முகமுங் கொண்டு = முகத்தில் 


எம்மாடு மெழிற்  = அனைத்துப் பக்கங்களிலும் 


கண்க ளெட்டி னோடும் = க் கண்கள் எட்டினோடும் 


தொழுதேத்தி = தொழுது போற்றி 


யினிதிறைஞ்ச = இனிமையாக வேண்ட 


நின்ற = நின்ற 


செம்பொன் = சிவந்த பொன்னைப் போன்ற 


அம்மான்றன் = அம்மான் தன் 


மலர்க்கமலக் = தாமரை மலர் போன்ற 


கொப்பூழ் தோன்ற = நாபிக் கமலம் தோன்ற 


அணியரங்கத் தரவணையில் = பாம்பை (ஆதி சேஷன் ) படுக்கையாகக் கொண்டு 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டுள்ள 


அம்மான்றன் =அம்மான் தன்


அடியிணைக்கீழ் = திருவடிகழுக்கு கீழே 


அலர்கள்  = மலர்கள் 


இட்டு = தூவி 


அங்கு = அங்கே 


அடியவரோ டென்று = அடியவரோடு என்று 


கொலோ = அசை நிலை 


அணுகும் நாளே = சேரும் நாளே 


நம்ம whatsapp contact லிஸ்டில் பார்த்தால் தெரியும் எத்தனை பேர் உண்மையான ஆன்மீக தாகம் கொண்டவர்கள் என்று. 


நாம் எத்தனை whatsapp குழுவில் உறுப்பினராக இருக்கிறோம் என்று பார்த்தால் தெரியும், நாம் யாருடைய தொடர்பில் இருக்கிறோம் என்று. 


யாருடன் பழகுகிறோமோ, அவர்கள் குணம் தானே நமக்கும் வரும். 


தெரிந்தெடுத்து பழகுங்கள். நல்லதே நடக்கட்டும். 


Wednesday, September 8, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - பாகம் 1 



அது என்ன புதல்வரைப் பெறுதல் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்? அப்படி என்றால் புதல்விகளை பெறுதல் இல்லறத்தில் வராதா? இது ஒரு ஆணாதிக்க சிந்தனை அல்லவா? வள்ளுவர் காலத்தில் அப்படி ஒரு சமுதாயம் இருந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் இன்று பெண்ணுரிமை, சம உரிமை, என்று போராடிக் கொண்டு இருக்கிறோம். இப்ப வந்து, இந்த மாதிரி ஆணாதிக்க சிந்தனை உள்ள நூல்களை பற்றிச் சொல்லி கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று சிலர் கொடி பிடிக்கலாம். 


இந்தத் தலைப்பு பல உரை ஆசிரியர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எப்படியாவது வள்ளுவரை இந்த குற்றச் சாட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள். 


புதல்வர் என்பது தவறு "மக்கட் பேறு" என்று தான் முதல் குறள் ஆரம்பிக்கிறது. அதே போல் முந்தைய அதிகாரத்தில் "நன் கலம் நன் மக்கட் பேறு " என்று தான் முடிந்தது. அங்கு, நன் புதல்வர் பேறு என்று முடியவில்லை. 


மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.



எனவே, இந்த அதிகாரத்தின் தலைப்பை "மக்களைப் பெறுதல்" என்று மாற்ற வேண்டும் என்று தமிழ் படித்த அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள். 


எனக்கு அதில் உடன்பாடு இல்லை. 


வள்ளுவரை நாம் காப்பாற்ற வேண்டியது இல்லை. நம்மால் முடியவும் முடியாது. 



ஒரு மரம் இருக்கிறது என்றால், அதன் வேர், கிளை, இலை, காய், கனி என்று எல்லாம் இருக்கும். "நாங்கள் மட்டும் ஏன் நிலத்துக்கு அடியிலேயே கிடந்து துன்பப் பட வேண்டும். நாங்களும் இந்த பூ மாதிரி மேலே வருவோம்" என்று வேர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்தால், மரம் பட்டுப் போகும். 


ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் மண்ணுள் புதைந்து தான் கிடக்கும். அது யார் கண்ணுக்கும் தெரியாது.  " முடியாது,  நாங்களும் மேலே வருவோம்" என்று அஸ்திவாரங்கள் தொடங்கினால் ?


ஒரு சமுதாயத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது. 


நான் அந்த வேலையை செய்ய மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மற்றவர்களை அந்த வேலையை செய்யச் சொல் முடியாது. உன்னால் முடியாது என்றால், சரி. வேறு வேலையைப் பார். அல்லது வேறு வேலை ஒன்றும் தெரியாது என்றால் என்ன செய்வது என்று அவரவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். 



இல்லறம் நடத்தும் பொறுப்பை ஆணிடம் கொடுத்தது நம் சமுதாயம். அவனுக்கு துணை செய்ய மனைவி என்று அமைத்தது. 


அந்த முறை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் அதை மாற்றி "இல்லறப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லலாம். அது வரை சரி.  அப்படி ஒரு சமுதாயத்தை அவர்கள் படைத்துக் காட்டிவிட்டு பின் வள்ளுவர் தவறு என்று சொல்லலாம். அது வரை, வள்ளுவர் காட்டியதுதான் வழி. 



மேலும், பெண் என்பவள் திருமணம் ஆன பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறாள். ஒரு ஆணின் இல்லறக் கடமைகளில் ஒன்று "தென் புலத்தார்" பேணுதல். அதாவது, முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்வது. 


ஏன் பெண்கள் செய்யக் கூடாதா ? ஆண்கள் தான் சிரார்த்தம் செய்ய வேண்டுமா? நாங்களும் மொட்டை போட்டு,  ஈமக் கிரியைகள் செய்வோம், வருடா வருடம் சிரார்த்தம் செய்வோம் என்று ஒரு கூட்டம் கிளம்பலாம். 


சொல்வது எளிது. செய்வது கடினம். 


பாடல் 



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற



பொருள் 



(Please click the above link to continue reading)


பெறுமவற்றுள்  = ஒருவன் பெறக் கூடியவற்றில் 


யாமறிவது = யாம் அறிவது 


இல்லை = இல்லை 


அறிவறிந்த = அறிவு அறிந்த 


மக்கட்பேறு = மக்கட் பேறு 


அல்ல பிற =  மற்றவை அல்ல 


மிக ஆழ்ந்த குறள். ஏற்கனவே ப்ளாக் நீண்டு விட்டதால், இதன் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் காண்போம். 




Monday, September 6, 2021

திருவாசகம் -திருச்சதகம் - வித்தின்றி விளையச் செய்வாய்

திருவாசகம் -திருச்சதகம் -  வித்தின்றி விளையச் செய்வாய் 


இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள் என்று பல கேள்விகள் இருக்கின்றன. 


ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா?


அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். 


எது ஒன்று தோன்றுவதற்கும், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். எனவே, இந்த உலகைப் படைத்தது இறைவன் என்று பக்திமான்கள் கூறுகிறார்கள். 


அவர்கள் அதோடு நின்று விடுகிறார்கள். எதை ஒன்றை தோற்றுவிப்பதற்கும் அதை உண்டாக்கிய ஒருவன் வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தது யார் என்ற பதில் கேள்வி எழும். 


இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை, அவன் தானே தோன்றி விட்டான் என்று கூறினால், இந்த உலகமும் தானே தோன்றியது என்றும் கூறலாம். .


சரி, இறைவன் தோற்றிவித்தான் என்றால் எதில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தான் என்ற கேள்வி வரும். எதில் இருந்தோ என்றால் அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வரும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"நீ உலகை இரண்டு விதத்தில் படைப்பாய். ஒன்று விதை இல்லாமல் விளைவு செய்வாய். இன்னொன்று இருக்கின்ற உலகை வைத்துக் கொண்டு மேலும் பலப் பல செய்வாய். அப்பேற்பட்ட நீ, என்னை உன் கோவில் வாசலில் பித்தனாக நிற்க வைத்தாய். உன் அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டாய். தாம் நட்ட மரம் விஷ மரம் என்று தெரிந்தாலும், நட்டவர்கள், அந்த மரத்தை அழிக்க மாட்டார்கள். நானும் அந்த மாதிரி ஒரு விஷ மரம்தான். என்னையும் அழித்து விடாதே "


என்று உருகுகிறார். 


பாடல்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_6.html


(Please click the above link to continue reading)



விச்ச தின்றியே விளைவு செய்குவாய்‌ 

விண்ணு மண்ணக முழுதும்‌ யாவையும்‌ 

வைச்சு வாங்குவாய்‌ வஞ்ச கப்பெரும்‌ 

_ புலைய னேனையுன்‌ கோவில்‌ வாயிலில்‌ 

பிச்ச னாக்கினாய்‌ பெரிய வன்பருக்‌ 

குரிய னாக்கினாய்‌ தாம்வ ளார்த்ததோர்‌ 

ரச்சு மாமர மர்யி னுங்கொலார்‌ 

நானு. மங்ஙனே யுடைய நாதனே. 


பொருள் 




விச்ச தின்றியே = விதை இன்றியே 


விளைவு செய்குவாய்‌  = விளைய வைப்பாய் 


விண்ணு மண்ணக முழுதும்‌ = விண்ணும், மண்ணும்


யாவையும்‌  = முழுவதும் 


வைச்சு வாங்குவாய்‌ = செய்வாய், பின் அவற்றை உன்னுள் அடங்கப் பண்ணுவாய் 


வஞ்ச கப் = வஞ்சக மனம் கொண்ட 


பெரும்‌  = பெரிய 


புலைய னேனை = கீழான என்னை 


யுன்‌ = உன் 


கோவில்‌ வாயிலில்‌  = கோவில் வாசலில் 


பிச்ச னாக்கினாய்‌  = பித்தனாக்கினாய் 


பெரிய = மதிப்புள்ள 


வன்பருக்‌ குரிய = அன்பருக்கு உரியவன் 


னாக்கினாய்‌ = ஆக்கினாய் 


தாம் வ ளார்த்ததோர்‌  = தாம் வளர்த்த 


ரச்சு = நச்சு 


மாமர மர்யி னுங்கொலார்‌  = மா மரமாயினும் வைத்தவர்கள் அதை கொல்ல மாட்டார்கள் 


நானு. மங்ஙனே யுடைய நாதனே.  = நானும் அப்படித்ததான், எல்லாம் உடைய நாதனே 



என்ன ஒரு பாடல். எவ்வளவு பொருள் செறிவு. 


பிள்ளை பிறந்து வளர்ந்து விட்டான். சேராத இடம் சேர்ந்து, கெட்டுப் போய் விட்டான். பெற்ற தாய், அந்தப் பிள்ளையை வெறுப்பாளா? ஊருக்கு அவன் கெட்டவனாக இருக்கலாம். ஆனால் , அவனைப் பெற்ற தாய்க்கு அவன் செல்லப் பிள்ளைத் தான். 


சிலர் மரம் வைத்து வளர்ப்பார்கள். வளர்ந்த பின்தான் தெரியும், அந்த மரம் நச்சு கனிகளை கொடுக்கும் மரம் என்று. அதற்காக அதை வெட்டி விட மாட்டார்கள். அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். 


அப்படி இருந்தது நம் பண்பாடு. 


இப்போது என்னடா என்றால், சாலை போடுகிறேன், வீடு கட்டுகிறேன், தொழிற்சாலை கட்டப் போகிறேன் என்று நூற்றுக் கணக்கில் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள்.


நச்சு மரத்தை கூட வெட்டாமல் வளர்த்த கருணை நிறைந்த பரம்பரை நம்முடையது. 


இறைவன், ஒன்றும் இல்லாததில் இருந்து இந்த உலகை தோற்றுவித்தான். விதை இல்லாமல் செடி வளர்ப்பவன் என்கிறார் மணிவாசகர். அது எப்படி முடியும் என்றால், நமக்குத் தெரியாது. மணிவாசகருக்கு தெரிந்து இருக்கிறது. 


இல்லை என்றால் வேலை மெனக்கெட்டு "விதை இல்லாமல் விளையச் செய்வாய்" என்று சொல்லுவாரா. நம் அறிவுக்கு எட்டவில்லை. அவ்வளவுதான். 


அது மட்டும் அல்ல, பின்னால் "விண்ணையும் மண்ணையும் வைத்து வாங்குவாய்" என்கிறார். 


இதை சைவ சித்தாந்தம் முதலுர்பவம், புனருற்பவம் என்கிறது. ஆதியில் தொடங்கிய உற்பத்தி, அப்புறம் பின்னால் தோன்றிய உற்பத்தி. 


மெய்கண்டர் உரை எழுதும் போது கூறுவார் 


"பிரபஞ்சம்‌ அகாதியாகலின்‌ அம்முதற்கோடி ஈம்மனோரான்‌ அறியவாராமை 

யானும்‌"

என்றார். நம்மால் அறிய முடியாது என்கிறார். 


நட்ட மரம் நச்சு மரமாயினும் நட்டவர்கள் எப்படி வெட்ட மாட்டார்களோ, அது போல, என்னை நீ தான் படைத்தாய். நான் சரி இல்லை என்றால், அதற்கு நீ தான் பொறுப்பு. எனவே, என்னை ஏற்றுக் கொள் என்கிறார். 


இதெல்லாம் படிக்கணுமா இல்லையா? 





Sunday, September 5, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம் 


இல்லறம் என்பது வீடு பேற்றை நோக்கிய ஒரு படி. அதுவே முடிவு அல்ல. 


வீடு பேறு வேண்டும் என்றால் துறவு வேண்டும். 


துறவு வேண்டும் என்றால் அருள் வேண்டும். 


அருள் வேண்டும் என்றால் அன்பு வேண்டும். 


அன்பு வேண்டும் என்றால் அன்பு செய்ய ஆள் வேண்டும். 


முதலில் கணவன், மனைவி. அவர்களுக்குள் அன்புப் பரிமாற்றம் நிகழும்தானே. என்னதான் சண்டை சச்சரவு என்றாலும் என் மனைவி, என் கணவன் என்ற உரிமையும், அதனால் பிறக்கும் அன்பும் இருக்கும் தானே?


அந்த மேலும் தொடர குழந்தைகள் அவசியம். 


கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், அதில் ஒரு பிரதி பலன் இல்லாமல் இல்லை. ஒன்றை நோக்கிய அன்பு அது. 


பிள்ளையின் பால் செலுத்தும் அன்பு என்பது, அதற்கு அடுத்த கட்டம். ஒரு பிரதி பலனும் எதிர்பாராமல் செய்யும் அன்பு. தன் பிள்ளை என்ற ஒன்றைத் தவிர அதில் ஒரு பிரதி பலன் இல்லை. 


எனவே, வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் புதல்வர்களை பெறுதல் என்ற அதிகாரத்தை வைத்ததார். 


அதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரைப் பாயிரம் மிக ஆழமானது. 


உரைப் பாயிரத்தை இன்று காண்போம். 


உரைப் பாயிரம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_5.html


(Please click the above link to continue reading)


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது."



பொருள் 



தமிழ்தான். அந்தக் காலத்து தமிழ். 


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்":  பொதுவாக இருபிறப்பாளர் என்று அந்தணர்களை குறிப்பது உண்டு. 


நாம் பிறக்கும் போது, நமக்கு ஒரு நோக்கமும் கிடையாது. எதற்காக பிறந்தோம். ஏன் பிறந்தோம் என்று தெரியாது. கொஞ்சம் வளர்ந்து, அறிவு வந்த பின், நான் இன்னது செய்யப் போகிறேன் என்று முடிவு எடுக்கிறோம். ஒரு விரதம் பூணுகிறோம். அப்படி ஒரு விரதம் பூணுவதற்கு அடையாளமாக, அதை எப்போதும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அணியும் நூல் தான் பூணூல். விரதம் பூண்டதை நினைவு படுத்தும் நூல்,பூணூல். 


அந்தக் காலத்தில் அந்தணர், சத்ரியர் மற்றும் வைசியர்கள் பூணூல் அணிந்தார்கள்.  நான்காம் வர்ணத்தவர் அணியவில்லை. 


இப்போது ஆரம்பத்தை வாசிப்போம். 


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்" அதாவது இருபிறப்பாளர் என்று சொல்லப் படும் பிராமண, க்ஷத்ரிய மற்றும் வைசியர் என்ற அந்த மூவாராலும். 


விளங்கி விட்டதா?


மேலே செல்வோம். 


"இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் "  நாம் மூன்று பேருக்கு எப்போதும் கடன் பட்டிருக்கிறோம். அந்தக் கடனை தீர்க்க வேண்டும். அது என்ன மூன்று பேருக்கு உள்ள கடன் என்றால் ....


"முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்."


நமக்கு பல அறிவு நூல்களைத் தந்தவர்கள் முனிவர்கள். அந்த முனிவர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். ரொம்ப வேண்டாம், திருவள்ளுவருக்கு நாம் கடன் பட்டு இருக்கிறோமா இல்லையா? கட்டாயம் கடன் பட்டு இருக்கிறோம். அந்த கடன் எப்படி தீரும் என்றால், அந்த நூல்களை கேட்டு அறிவதால் தீரும். அவர் பாட்டுக்கு எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, நாலு மதிப்பெண் வாங்கினால் போதும் என்று இருக்கக் கூடாது. ஐயம் திரிபு அறக் கற்பதுதான் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு. 


முனிவர் கடன் படிப்பதால் தீரும். 


"தேவர் கடன் வேள்வியால்": நாம் தேவர்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம். மழை, வெயில், என்று பல தேவதைகள் இருக்கின்றன. அவை நமக்குச் செய்யும் உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு வேள்விகள். 


"தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் " நம் முன்னோர்களுக்கு நாம் பட்ட கடனை திருப்பிச் செலுத்துவது என்பது அவர்களுக்கு திவசம்/சிரார்த்தம் என்பன செய்வதன் மூலம். நாம் இன்று இருக்கிறோம் என்றால் நமக்கு முன்னால் எத்தனையோ முன்னோர்கள் வாழ்ந்து இருக்க வேண்டும். 


என் தந்தை, என் தாத்தா, அவருடைய தந்தை, தாத்தா என்று என் பரம்பரை மேல் நோக்கி போய் கொண்டே இருக்கிறது அல்லவா. அத்தனை பேருடைய கூட்டு முயற்சிதான் நான். 


அவர்களுக்கு பட்ட கடனை திருப்பிச் செய்வது என்பது நீர்க்கடன் கழிப்பது என்று சொல்லுவார்கள். அதைச் செய்ய "நல்ல" புதல்வர்கள் வேண்டும். 


பிள்ளை எதற்கு என்றால் சேர்த்து வைத்த சொத்தை அனுபவிக்க என்கிறார்கள். அதற்கு அல்ல பிள்ளைகள். 


அந்த நீர்க் கடனை கழிக்க நல்ல பிள்ளைகளை பெற வேண்டும்.


பிள்ளை வேண்டும் என்றால் மனைவி வேண்டும். 


எனவே, வாழ்கை துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் இந்த அதிகாரத்தை வைக்கிறார் 


இனி அதிகாரத்துக்குள் நுழைவோம். 





Saturday, September 4, 2021

கம்ப இராமாயணம் - கொடியான் வரும்

 கம்ப இராமாயணம் - கொடியான் வரும் 


அசோகவனத்தில் உள்ள சீதை தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள்.



"இந்த இராமன் இருக்கிறானே எவ்வளவு கொடியவன் தெரியுமா. தசரத சக்கரவர்த்தி இறந்த போதும், உலகம் எழும் துயர் கொண்டு இராமனை மீண்டும் நாட்டுக்கு வரும்படி வேண்டியபோதும் வராமல் காட்டுக்குச் சென்ற கல் நெஞ்சக் காரன். அவன் வந்து நம்மை மீட்பான் என்று நீங்கள் (மனமும் உயிரும்) அவனோடு குலாவுகிரீர்களா....அவனை இன்னுமா நம்புகிறீர்கள்" 


என்கிறாள் 


பாடல் 


'முடியா முடி மன்னன் முடிந்திடவும்

படி ஏழும் நெடுந்துயர் பாவிடவும்,

மடியா நெறி வந்துவனம் புகுதும்

கொடியார் வரும் என்று, குலாவுவதோ ?'


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_4.html


(Please click the above link to continue reading)


முடியா = முடிவே இல்லாத 


முடி மன்னன் = முடி தரித்த மன்னன் தசரதன் 


முடிந்திடவும் = இறந்த போதும் 


படி ஏழும் = ஏழு உலகமும் 


நெடும் துயர்   = பெரிய துயர் 


பாவிடவும் = பரவிடவும் 


மடியா  = முடிவற்ற 


நெறி வந்து  = வழியில் வந்து 


வனம் புகுதும் = கானகம் புகுந்ததும் (அறிந்த நீங்கள்) 


கொடியார் வரும்  = கொடியவனான இராமன் வருவான் 


என்று, குலாவுவதோ ?' = என்று அவனோடு கொஞ்சி குலாவுகிரீர்களா? 


சீதை ஏதோ கோபித்து சொல்வது மாதிரி இருக்கும். 


பெண்கள் குணம் அப்படி. 


எதையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லும் இயல்பு. 


அவன் செய்தது சரி என்று அவளுக்குத் தெரியும். தெரியாமலா அவனோடு கானகம் வந்தாள். 


இப்போது பிரிவு.  அவன் வரவில்லையே என்ற ஏக்கம். தவிப்பு. 


யோசித்துப் பார்க்கிறாள். 


அவங்க அப்பா அவ்வளவு சொல்லியும்,உயிரை விட்டபோது கூட இராமன் அவன் கொண்ட கொள்கையில் பின் வாங்கவில்லை. 


உலகமே அவனை வருந்தி அழைத்த போதும் அவன் திரும்பிப் போக வில்லை. 


அவர்களுக்கெல்லாம் இரங்காத அவன், எனக்கு மட்டும் இரங்குவானா? என் மேல் மட்டும் எப்படி அன்பு இருக்கும் என்று கவலைப் படுகிறாள். 


தேவை இல்லாதவற்றை இழுத்து வைத்துக் கொண்டு, தானும் துன்பப்பட்டு, மற்றவர்களையும் துன்பப்படுத்துவது என்பது பெண்ணின் குணம் போலும். 


சந்தேகம். 


சீதைக்கே இருந்திருக்கிறது. இராமன் தன் மேல் காதல் உள்ளவனா என்று. 


"கொடியான்" என்று சொன்னது ஒரு உரிமையில் இருக்கலாம். சந்தேகம் என்னவோ உண்மைதான். 


அது சீதைக்கு வந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. 


சீதைக்கு வந்திருக்கலாம் என்று கம்பன் நினைத்து பாடிய பாடல், சரியாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று நம்மை நம்ப வைக்கிறதே. 


அதுதான் கம்பனின் வெற்றி. 


பாத்திரங்களின் உள் நின்று பேசும் கம்பன். 


இதெல்லாம் படிக்க வேண்டாமா?


Friday, September 3, 2021

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா 


இறைவன் உயிரை எடுத்து உண்டு விடுவானாம். உயிர் + உண்ணி (உண்ணுதல், சாப்பிடுதல்). அதாவது, உயிர்களை தனக்குள் அடக்கிக் கொள்வான் என்று பொருள். 


இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா? எங்கே போய் தேடுவது? 


மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார். நாம் செய்யும் வினகைளை தடுத்து, மறு பிறவி வாராமல் காப்பவன் அவன். 


"நீ எனக்குள்ளே இருக்கிறாய். நான் உன்னை எவ்வாறு காண்பேன், உன்னைப் பார்த்தேன் என்று எப்படி மற்றவர்களிடம் சொல்லி பெருமிதம் கொள்வேன்" என்கிறார். 


பாடல் 


பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாக மதாய்என்

மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப பாகா

செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்

எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_3.html


(Please click the above link to continue reading)


பைந்நாப் = பசிய நாவினை உடைய 


பட = படத்தைக் (பாம்பின் படம்) கொண்ட 


அர = அரவு, பாம்பு, 


ஏர் அல்குல்  = அழகிய அல்குல் உடைய 


உமைபாகம் அதாய்  = உமை அம்மையை பாகமாக உடையவனே 


என் மெய்ந்  = என் உடலில் 


நாள்தொறும் = எப்போதும் 


பிரியா = பிரியாமல் இருப்பவனே 


வினைக் கேடா = வினைகளை அறுப்பவனே 


விடைப பாகா = எருதை வாகனமாகக் கொண்டவனே 


செந்நாவலர் = சிறந்த புலவர் 


பரசும் =போற்றும் 


புகழ்த் = புகழ் கொண்ட 


திருப்பெருந்துறை = திருப்பெருந்துறை என்ற திருத் தலத்தில் 


உறைவாய் = எழுந்து அருளி இருப்பவனே 


எந்நாட்களித்து = உன்னை கண்டு களித்து 


எந்நாள் = எப்போது 


இறு மாக்கேன் = பெருமிதம் கொள்வேன் 


இனி யானே. =இனிமேல் நானே 


நீயோ என்னுள் இருக்கிறாய். உன்னை வெளியில் கண்டதாய் சொல்லி நான் எப்படி பெருமிதம் கொள்வேன். 


"நீர் பெரிய பக்திமான் என்கிறீரே, நீர் கடவுளை கண்டதுண்டா? " என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன். "ஆமாம், நான் பார்த்து இருக்கிறேன்" என்று இறுமாப்போடு சொல்ல முடியாதே. 


கோவிலுக்குப் போவதும், புனித நீராடுவதும் தவறல்ல. இறைவனை தனக்குள்ளே அறிய அவை படிகள். படிகளை ஏற பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், படியே முடிவு என்று ஆகி விடக் கூடாது. 


சாகும் வரை, கோவில் குளம் என்று அலைந்து கொண்டு இருந்தால் என்ன செய்வது? 


நான்காம் வகுப்பு நன்றாக இருக்கிறது என்று ஆயுள் பூராவும் நான்காம் வகுப்பே படித்துக் கொண்டு இருக்க முடியுமா? 


படிப்பவை நம்மை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.