Friday, September 17, 2021

நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?

 நான்மணிக்கடிகை - எதைச் செய்யக் கூடாது ?


சில சமயம் நமக்கு சில செயல்களை செய்வதில் ஒரு தயக்கம் இருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா, இதைச் சொல்லலாமா கூடாதா என்று ஒரு தயக்கம் இருக்கும்.  சரி போலவும் தெரியும், தவறு போலவும் தெரியும். செய் என்று ஒரு மனம் கூறும். செய்யாதே என்று இன்னொரு மனம் கூறும். 


எப்படி முடிவு எடுப்பது?


அந்த நேரத்தில், ஒரு நொடியில் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். 


அது பற்றி முன்பே சிந்தித்து இருந்தால், பழக்கம் இருந்தால் முடிவு எடுப்பது எளிதாக இருக்கும். இல்லை என்றால் தட்டுத் தடுமாறி ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு, அது சரிதானா என்று குழம்பிக் கொண்டே இருப்போம். 


அந்த மாதிரி சமயங்களில் நமக்கு உதவி செய்ய தமிழில் ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. அவற்றை நன்றாகப் படித்து இருந்தால், தேவையான சமயத்தில் குழப்பம் இல்லாமல் முடிவு எடுக்க முடியும். 


நம்முடைய நண்பர் ஒருவர், அவருடைய நண்பரின் வீட்டு விசேடத்துக்கு அழைத்துச் செல்கிறார். நண்பரின் நண்பரோ பெரிய அரசியல் செல்வாக்கு உள்ள நபர். போன இடத்தில் நமக்கு ஒரு பெரிய பரிசு தருகிறார். அதை ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா? 


அலுவலகத்தில் கீழே வேலை பார்ப்பவர். ஏதோ ஒரு நெருக்கடியில் நம்மைப் பற்றி கொஞ்சம் தரக் குறைவாக பேசி விட்டார். அவரோடு சண்டை போட்டு, அவரை வேலையை விட்டு தூக்கி விடலாமா?


நமக்கு, நம்முடைய நண்பரின் பையனைப் பற்றி ஒரு செய்தி வருகிறது. அது நல்ல செய்தி அல்ல. அந்த செய்தி சரியா தவறா என்று நம்மால் தீர்மானிக்க முடியவில்லை. அந்தச் செய்தியை நண்பரிடம் சொல்லலாமா கூடாதா? 


பாடல் 



எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_17.html


(Please click the above link to continue reading)



எள்ளற்க = கேலி பேசாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் றென்பெறினும் = நம்மை விட எளியவர் ஏதாவது சொன்னாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா  = பெறக் கூடாதவர்கள் கையில் இருந்து 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க  = கோபம் கொள்ளக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = வறுமை உள்ள குடும்பத்தில் பிறந்தவரை 


கூறற்க = சொல்லாமல் இருக்க 


கூறல் லவற்றை விரைந்து = எதைச் சொல்லக் கூடாதோ அதை அவசரப் பட்டு 


நம்மை விட வலிமை குன்றியவர்களை பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. பணத்தில், பதவியில், படிப்பில் நம்மை விட கீழே உள்ளவர்களைப் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. 


தீயவர்களிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது. இன்று ஒரு பொருளைக் கொடுப்பான். நாளை அதற்கு பதிலாக சட்டத்துக்கு புறம்பான காரியம் ஒன்றைச் செய்யச் சொல்வான். எவ்வளவு பெரிய விலை மதிக்க முடியாத பொருளாக இருந்தாலும், தீயவர்கள் கையில் இருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. விலை மதிக்க முடியாத பொருளையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்றால், அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்கள் கையை எதிர் பார்க்கலாமா? தீயவர்கள் எதையாவது கொடுத்து மயக்கி விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


வறுமையில் பிறந்தவர்கள் தங்கள் ஆற்றாமையில் ஏதாவது சொல்லி விடலாம். அதை பெரிது படுத்திக் கொண்டு அவர்களோடு மலுக்கு நிற்கக் கூடாது.  பாவம், அவன் வறுமை அவனை அப்படி பேசச் சொல்கிறது என்று பரிதாப்பட்டு மேலே சென்று விட வேண்டும். 


நல்ல செய்தி இல்லை என்றால் அதை அவசரப்பட்டு சொல்லக் கூடாது. ஆற அமர யோசித்து, அதன் தன்மை அறிந்து, தெளிவாக சொல்ல வேண்டும். மோசமான செய்திகளை யாரும் விரும்புவது இல்லை. 


இப்படி ஒரு நூறு பாடல்கள் இருக்கின்றன. 


மெனக்கெட்டால் ஓரிரு மணியில் படித்து முடித்து விடலாம். 


படித்து விடுவீர்கள்தானே ?



1 comment:

  1. உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete