Saturday, September 25, 2021

நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?

 நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?


படித்துக் கொண்டே இருக்கிறோம். 


இன்று புத்தகம், நாளை இன்னொன்று, நேற்று வேறு ஒன்று என்று படிக்க படிக்க புதிது புதிதாக ஏதேதோ தோன்றுகிறது. 


இதற்கு என்னதான் முடிவு? எவ்வளவு காலம்வரைதான் படிப்பது?


சரி, எவ்வளவு படித்தாலும், அதன் நோக்கம் என்ன? படித்து என்ன செய்யப் போகிறோம். 


"இது நன்றாக இருக்கிறது", "இது பரவாயில்லை" , "அது அப்படி ஒன்றும் சுவையானது இல்லை" "இதெல்லாம் நடை முறைக்கு சரிப்படாது" என்று ஏதோ நமக்குத் தோன்றிய விமரிசனத்தை முன் வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போவதற்கா இவ்வளவு நேரம் செலவழித்து படிப்பது?


ஔவையார் சொல்கிறார்,


"இளமை இருக்கும் போதே ஒரு பெண் தன் கணவனோடு இன்பங்களை அனுபவித்து விட  வேண்டும். அப்புறம் பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், முதுமை வந்து விடும்.  பின், அனுபவிக்க நினைத்ததாலும், முடியாது. கணவனுக்கும் வயது ஆகி விடும், உடலின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து போகும்..


அது போல, முப்பது வயதுக்குள் படிக்க வேண்டியவற்றை படித்து, இறைவனை அனுபவத்தால் அறிந்து விட வேண்டும். படித்து கொண்டே இருப்பேன் என்றால் பின் அனுபவம் வாய்க்காது" என்கிறாள். 


பாடல் 



 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

 தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்

 கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)


முப்பதாம்  = முப்பது


ஆண்டளவில் = வயதில் 


மூன்றற்று  = காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களை அறுத்து 


ஒருபொருளைத் = ஒரு என்றால் உயர்ந்த, தனித்த, சிறந்த என்று பொருள். உயர்ந்த, தனித்த சிறந்த பொருள் இறைவன். இறைவனை 


தப்பாமல் = தவறாமல் 


தன்னுள் = தனக்குள்ளே 


பெறானாயின் = அனுபவமாக ஒருவன் பெறவில்லை என்றால் 


செப்புங் = பேசுவதற்கு உதவும் 


கலையளவே ஆகுமாம் = அவன் படித்தவை 


காரிகையார் = பெண்கள் 


தங்கள் = அவர்களுடைய 


முலையளவே = மார்பின் அளவே 


ஆகுமாம் மூப்பு. = வைத்தே மூப்பு அறியப்படும் 


இதை ஒரு ஆண் புலவர் பாடியிருந்தால், பெண் விடுதலை சிந்தனையாளர்கள் கொடி பிடித்திருப்பார்கள் நல்ல வேளையாக பாடியது ஔவையார். 


கற்ற கலை இறை அனுபவத்தைத்  தரவில்லை என்றால், அது சும்மா பேசப் பயன்படுமே அல்லாமல் வேறு ஒன்றுக்கும் பயன் தராது. மேற்கோள் காட்டலாம். அந்த நூலில் அப்படிச் சொல்லி இருக்கிறது, இந்த நூலில் இப்படிச் சொல்லி இருக்கிறது என்று பேசப் பயன்படும்.


எல்லாக் கலையும் இறை அனுபவத்தைத் தர வேண்டும். 


ஔவையார் சொன்னது முப்பது வயது வரம்பு. 


அவருக்குப் பின், நம் வாழ்நாள் அளவு மிக நீண்டு விட்டது. ஒரு நாற்பது அல்லது ஐம்பது வைத்துக் கொள்ளலாம். 


நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? 


சாமாறே விரைகின்றேன்  என்றார் மணிவாசகர். ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறோம். 


எல்லா ஓட்டமும் இடுகாட்டுகுத் தான். 


உயரத்தில் ஒரு சினிமா படம் பிடிக்கும் புகைப் பட கருவியை (கேமரா) வைத்து அதில் வேகமாக படம் பிடித்தால் தெரியும், எல்லோரும் அன்னை வயிற்றில் இருந்து வந்து நேரே வேக வேகமாக ஓடிப் போய் சவக் குழியில் விழுவதைக் காணலாம். 


ஒருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. 


அதற்குள் அந்த அனுபவம் பெற வேண்டாமா?





2 comments:

  1. நாற்பதிலிருந்து ஐம்பதிற்குள் இறை அனுபவம் பெற தொடர வேண்டும் என்பது சரியான அளவு. கஷ்டமும் இல்லை

    ReplyDelete