Wednesday, September 15, 2021

நாலடியார் - சொர்கமும் நரகமும்

 நாலடியார் - சொர்கமும் நரகமும் 


சொர்கமும் நரகமும் எப்படி இருக்கும்? அதுக்காக உயிரை விட்டு அங்கே போய்த்தான் அறிய வேண்டும் என்று இல்லை. இங்கேயே, இந்த உலகிலேயே அவற்றை நாம் அனுபவிக்கலாம். 


"நுண்ணிய உணர்வு உள்ளவர்களோடு கூடி அவர்களின் அறிவை, உணர்வை பகிர்ந்து கொள்ளுதல் சொர்க்கம் போன்றது. நுண்ணிய நூல்களின் உணர்வு இல்லாதவரோடு பழகுதல் நரகத்தில் இருப்பது போன்றது"


பாடல் 


நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை

விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல்

உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்

புணர்தல் நிரயத்து ளொன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_15.html


(Please click the above link to continue reading)



நுண்ணுணர்வி னாரொடு = நுட்பமான உணர்வினை உடையவர்களோடு 



கூடி = ஒன்று சேர்ந்து 



நுகர்வுடைமை = அவர்களின் அறிவை, உணர்வை பகிர்ந்து கொள்ளுதல் என்பது 



விண்ணுலகே யொக்கும் = சொர்க்கத்தைப் போன்று 



விழைவிற்றல் = விருப்படக் கூடியது 



நுண்ணூல் = நுட்பமான நூல்களை 



உணர்வில ராகிய = அறிந்து, உணரும் ஆற்றல் இல்லாதவர்களின் 



ஊதிய மில்லார்ப் =  பயன் இல்லாதவர்கள் 



புணர்தல் = சேர்ந்து இருத்தல் 



நிரயத்து ளொன்று. = நரகத்தில் இருப்பதற்கு சமம் 



முதலில் நுண்ணர்வு என்றார் பின் நுண்ணூல் உணர்வு என்றார். 



நுண்ணிய நூல்களை படித்து, அறிந்து, உணர்ந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 


அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லையே. எல்லோரிடமும் பழகுகிறோம், ஒருவரிடம் பழகுவது சொர்க்கத்தில் இருப்பது போன்று சுகமாகவும், இன்னொருவரிடம் பழகுவது நரகம் போல் துன்பமாகவும் இல்லையே என்று சிலர் கருதலாம். 


அவர்கள் நுண்ணிய உணர்வுடையவர்களை இதுவரை காணவில்லை என்றே சொல்ல வேண்டும். சிறந்த அறிவுடையவர்களை கண்டு, அவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாலும் தெரியும் அதன் இனிமை. அப்படி ஒரு இனிமையான அனுபவம் வாய்க்கவில்லை என்றால், அவர்கள் அப்படிப் பட்ட மனிதர்களை இது வரை கண்டு பிடிக்கவில்லை என்றே அர்த்தம். 


சொர்க்கம் எது என்று தெரியாததால், நரகம் எது என்றும் தெரியவில்லை. 


எப்போதும் ஒரே விதமான காப்பியை குடித்துக் கொண்டு இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் மிக சுவையான காப்பி ஒன்றை குடிக்கும் அனுபவம் நிகழ்கிறது. "ஆஹா, இதுவல்லவோ காப்பி" என்று இரசித்து குடிக்கிறோம். அதற்குப் பின், மறு நாள் பழைய காப்பியை குடிக்கும் போது "சே இது என்ன காப்பி ...நேத்து குடித்தேனே அதுவல்லவோ காப்பி" என்று தோன்றும் அல்லவா?


நுண்ணறிவாளர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். 

1 comment:

  1. ரொம்ப நாட்கள் வர முடியாமல் போய்விட்டது. விட்டு போனதையெல்லாம் படித்து விடுகிறேன்
    இந்த கவிதைக்கு நல்ல விளக்கம சுவையான காபி போல. நன்றி

    ReplyDelete