Saturday, September 11, 2021

நாலடியார் - அப்புறம் செய்யலாம்

நாலடியார் - அப்புறம் செய்யலாம் 


ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று நினைக்கும் போது அதற்கு முன் செய்ய வேண்டிய பல காரியங்கள் மனதில் தோன்றும். அந்த மற்ற காரியங்களை எல்லாம் செய்து விட்டு பின் நல்ல காரியத்தை தொடங்கலாம் என்று நினைப்போம். 


காசிக்குப் போகணும், அம்பது திவ்ய தேசமாவது சேவித்து வர வேண்டும், ஒரு தர்ம நிலையத்துக்கு நன்கொடை கொடுக்க வேண்டும், துன்பத்தில் இருக்கும் ஒரு உறவினருக்கு உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று பல அறக் காரியங்கள் தோன்றும்...


ஆனால்,


அதற்கு முன்னால்....


பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா அப்புறம் எல்லாம் நிதானமா செய்யலாம்...


பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும்...அது மட்டும் அமைஞ்சுருச்சுனா அப்புறம், பத்தாயிரம் என்ன பெருசு, ஒரு இலட்சம் கூட நன்கொடை கொடுக்கலாம் 


என்று நினைப்போம். 


இல்லத்துக்கு வேண்டிய கடமைகளை எல்லாம் முடித்து விட்டு நல்ல காரியங்களை செய்யலாம் என்று நினைப்பது, அலை நின்ற பின் கடலில் குளிப்பது மாதிரி என்கிறது நாலடியார். 


அலை எப்ப ஓய தலை எப்ப முழுக....


பாடல் 


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_11.html


(Please click the above link to continue reading)


பெருங் = பெரிய 


கட லாடிய = கடலில் நீராடச் 


சென்றார் = சென்றவர்கள் 


ஒருங்குடன் = ஒட்டு மொத்தமாக 


ஓசை அவிந்தபின் = அலை ஓசை எல்லாம் நின்ற பின் 


ஆடுது மென்றற்றால் = நீராடுவோம் என்று நினைத்தல் 


இற்செய்  = இல்லத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை 


குறைவினை நீக்கி  = குறை ஒன்றும் இல்லாமல் நீக்கிய பின் 


அறவினை = அறம் சார்ந்த வினைகளை 


மற்றறிவாம்  = மற்றபடி அறிவோம், (செய்வோம்) 


என்றிருப்பார் மாண்பு. = என்று இருப்பவர்களின் பண்பு 


அலை ஓயப் போவதும் இல்லை. தலை முழுகப் போவதும் இல்லை. 


இல்லறக் கடமைகள் முடியப் போவதும் இல்லை. நல்ல வினைகளை செய்யப் போவதும் இல்லை. 


அற வினைகள் செய்ய வேண்டும் என்று நினைத்தால், செய்து விட வேண்டும். அதுக்கு அப்புறம் இதைச் செய்யலாம் என்றால் செய்யவே மாட்டோம். 




No comments:

Post a Comment