Pages

Thursday, September 29, 2022

திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1

        

திருவாசகம் - திரு அம்மானை  -   பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1 



திருவாசகத்தில் உள்ள அத்தனை பாடல்களும் உள்ளத்தை உருக்குபவைதான் என்றாலும், சில பாடல்கள் ஒரு முறை படித்தவுடனேயே நாக்கில் ஒட்டிக் கொண்டு சொல்லும் போதெல்லாம் ஏதோ செய்யும். 



அப்படிப்பட்ட பாடல்களில் இன்று நாம் காண இருக்கும் பாடலும் ஒன்று. 


பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம். 


பாடல் 



பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!



பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன். 


இப்படி எல்லாம் பொருள் சொன்னால் அது திருவாசகத்துக்கு செய்யும் தீமை ஆகும். 


எப்படிச் சொல்வது? எப்படிச் சொல்வது?


பாண்டிய மன்னன் பொருள் கொடுத்து குதிரை வாங்கி வரும்படி மாணிக்கவாசகரிடம் சொன்னான். அவரோ, குதிரை வாங்காமால் அந்தப் பணத்தில் கோயில் கட்டிவிட்டார். சினம் கொண்ட பாண்டியன் அவரை சிறையில் போட்டு விட்டான்.  பின் சிவனே குதிரை கொண்டு வந்து கொடுத்தார். பாண்டியன் மணிவாசகரை விடுவித்தான். ஆனால், சிவன் கொண்டு வந்த குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன. இதனால் கோபம் கொண்ட பாண்டியன், மணிவாசகரை மீண்டும் பிடித்து வந்து வைகை ஆற்றில், சுடு மணலில் நிற்க வைத்தான். சிவன் வைகையில் வெள்ளம் வரச் செய்தார். வெள்ளம் கரையை உடைத்து கொண்டு ஊருக்குள் வந்து விடும் போல் இருந்தது. வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பி கரையை உறுதிச் செய்ய பாண்டியன் உத்தரவு போட்டான். 

மதுரையில் வந்தி என்ற பிட்டு விக்கும் கிழவிக்கு யாரும் இல்லை. அவளாலும் வேலை செய்ய முடியாது. சிவன், கூலி ஆள் போல் வந்து, வந்தியிடம் "உனக்கு பதில் நான் போகிறேன், கூலிக்கு பதில் உதிர்ந்த புட்டுகளை தா" என்று வாங்கிக் கொண்டு சென்றார். போன ஆள் வேலை செய்யாமால் தூங்கிக் கொண்டு இருக்கவே, அது கண்டு பாண்டியன் வந்திருக்கும் கூலித் தொழிலாளி சிவன் என்று அறியாமல் அவர் முதுகில் பிரம்பால் அடித்தான். 


அதுவரை கதை. 


எல்லோரும் அறிந்தது. 



அது ஒரு புறம் இருக்கட்டும். 



(pl click the above link to continue reading)



சில சமயம் வீட்டில் சின்னப் பிள்ளை தவழ்ந்து தவழ்ந்து சென்று அருகில் உள்ள அடுப்பில் கை வைக்க போய் விடும், அல்லது fan ஐ இழுத்து விடப் போகும்....அதைக் கண்டு பதறிப் போய் தாய் ஓடி வந்து பிள்ளையை சட்டென்று இழுத்து "ஒரு இடத்துல இருக்க மாட்டியா" என்று பதற்றத்தில் ஒரு அடி போட்டு விடுவாள். அவளுக்கு ஆதங்கம். பிள்ளை ஆபத்தில் மாட்டிவிடுவானே என்ற பயம். 


கொஞ்ச நேரம் கழித்து பதற்றம் எல்லாம் தணிந்த பின், பிள்ளை அது பாட்டுக்கு தூங்கும். அம்மா அருகில் சென்று பார்ப்பாள். முதுகில் அவள் கை பட்டு அடித்தஇடம் சிவந்து இருக்கும். அவளுக்குத் தாங்காது. அதை மெல்ல தடவிக் கொடுப்பாள்.பெரிய அடி ஒன்றும் இல்லை. பிள்ளை அதை மறந்து தூங்கிக் கொண்டு இருக்கும்.



ஆனால், அவள் மனம் தாங்காது. 


பிள்ளைக்கு ஒரு சின்ன துன்பம் என்றாலும் அவளால் பொறுக்க முடியாது. 


அவ்வளவு அன்பு. பாசம். காதல். 


சிவன் முதுகில் பாண்டியன் ஒரு அடிதான் அடித்தான். அதில் ஒன்றும் பெரிதாக புண் வந்திருக்காது. இருந்தும் மணி வாசகருக்கு தாங்கவில்லை. 



"புண் சுமந்த பொன் மேனி"


என்று  உருகுகிறார். 





இதன் தொடர்ச்சியை நாளைய பதிவில் காண்போம் 











(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:பா

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை



)


நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெலிந்த பொழுது

     

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   மெலிந்த பொழுது 


இந்த வெற்றிப் பாசுரங்களில் நம்மாழ்வார் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை பற்றி கூறுகிறார். பாற்கடலை கடைந்தது, குருக்ஷேத்திர போர்,ஊழிக் காலம் என்று நம் கற்பனைக்கு எட்டாத மிகப் பிரமாண்டமான விடயங்களை கூறிக் கொண்டு வருகிறார். 


அடுத்தது,



அந்தி நேரம். இரத்தத்தை அள்ளி விசிறி அடித்த மாதிரி வானம் சிவந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு மலை. அந்த மலை மேல் ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து இருக்கிறது. மலை உச்சியில் உள்ள சிங்கம் கீழே தெளிவாகத் தெரிவது என்றால் அது எவ்வளவு பெரிய சிங்கமாக இருக்க வேண்டும். அது அமர்ந்து இருப்பதைப் பார்த்தால் ஏதோ அது அந்த மலையை அடக்கி அதன் மேல் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது. ஒரு கம்பீரம், ஒரு வசீகரம். 



பாடல் 



போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை

சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை

கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்

ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.


பொருள் 




(pl click the above link to continue reading)




போழ்து = பொழுது 


மெலிந்த = மெலிந்து, உக்கிரம் குறைந்து, மாலை வேளை 


புன் = குறைந்த, அதாவது ஒளி குறைந்த 


செக்கரில் = சிவந்த 


வான்திசை = வானத்தின் திசைகள்


சூழு = சூழ 


மெழுந்து = எழுந்து 

உதிரப்புனலால் = இரத்த ஆறு ஓடியது போல 


மலை கீழ்து  = மலையை கீழே கொண்டு  


பிளந்த = அதை பிளந்த 


சிங்கம் = சிங்கம் 


ஒத்த தால் = போல் ஒத்து இருந்து 


அப்பன் = திருமால் 


ஆழ் = நீண்ட பெரிய 


துயர் செய்த  = துன்பங்களை செய்த 


அசுரரைக்கொல்லு மாறே. = அசுரர்களை கொல்வதைப் போல் 




நரசிம்ம அவதாரம் கொண்டு , இரணியனை மாலை வேளையில், படியில், மடியில் கிடத்தி, அவன் உடலைப் பிளந்து, இரத்தம் பீறிட்டு எழ அமர்ந்து இருந்த கோலம் நினைவுக்கு வருகிறது நம்மாழ்வாருக்கு. 


மாலையில், சிவந்த வானத்தின் அடியில், மலை மேல் அமர்ந்து இருக்கும் சிங்கம் போல இருந்தது அந்தக் காட்சி என்கிறார். 


இரணியன் எவ்வளவு பெரிய பலம் கொண்டவன். பிரகலாதனுக்கு எவ்வளவோ துன்பங்கள் தந்தான். பிர்கலாதான் தானே போராடி இரணியனை வெல்ல முடியாது. அதற்காக அவன் சோர்ந்து விடவில்லை. திருமாலை நம்பினான். 



அவ்வளவு பலம் பொருந்திய, இரணியனை தன் வெறும் கையால் கொன்றார். 


அதைப் பார்க்கும் போது நம் துன்பம் எல்லாம் பெரிய துன்பமா? நம் துன்பங்களை துடைக்க அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது என்பது அவர் கருத்து. துயர் துடைத்து வெற்றிகளைத் தருவான் என்கிறார். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்

)


Tuesday, September 27, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6

     

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 6


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


1. நாதம் , 2. விந்து .  3. சதாக்கியம்,  4. ஈஸ்வரம்,  5. சுத்த வித்தை.


அதை அடுத்து, இறைவன் உயிர்களை செயப்பட ஆயதம் செய்வான்.  அவை முறையே 6. காலம்,  7. நியதி, 8. கலை, 9. வித்தை , 10. இராகம்/அராகம் , 11. புருடன் 


என்றும் சிந்தித்தோம் 


36 தத்துவங்களில் 11 தத்துவம் பற்றி சிந்தித்தோம்.இனி மீதி உள்ள 25 தத்துவங்களை பற்றிச் சிந்திப்போம். 


முதல் 5 தத்துவங்கள் சிவ தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  இது இறைவன் உயிரை செயல்படுத்த தயாராகும் நிலை. 


அடுத்த 6 தத்துவங்கள் உயிர்கள் செயல்பட உண்டான தத்துவங்கள். இவை வித்யா தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


இறைவன் தயார், உயிர்கள் தயார். 


இனி இந்த உயிர்கள் செயல்பட வேண்டும். 


எங்கே, எப்படி செயல்படும் என்பதைப் பற்றி விளக்குபவை  மீதி உள்ள 24 தத்துவங்களும். 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

(pl click the above link to continue reading)





உயிர்கள் செயல்பட ஒரு உடல் வேண்டும். உயிர் சூக்கும பொருள். அது நேரடியாக இயங்க முடியாது. மின்சாரம் சக்திதான். அது இயங்க பல்பு, டிவி, grinder, mixie என்ற கருவிகள் வேண்டி இருக்கிறது அல்லவா?  அது போல உயிர்கள் இயங்க இறைவன் நான்கு விடயங்களை படைக்கிறான்.  


அவை 


தனு, கரண, புவன,  போகம் என்று அழைக்கப்படுகின்றன. இவை தத்துவங்கள் அல்ல. 


தனு என்றால் உடம்பு. 

வெறும் உடம்பு செயல் பட முடியாது. அது செயல்பட அவயங்கள் வேண்டும். கை, கால் போன்ற கருவிகள் இருந்தால்தான் அது செயல்பட முடியும்.  அந்தக் கருவிகளுக்கு கரணங்கள் என்று பெயர். 


உடம்பு இருக்கிறது, கருவிகள் (கரணங்கள்) இருக்கின்றன. உடம்பு எங்கே இயங்கும்? அது இயங்க ஒரு இடம் வேண்டும். அதற்கு புவனம் என்று பெயர். 


சரி, உடம்பு இயங்க வேண்டும் என்றால் இடம் மட்டும் போதாது. அனுபவம் வேண்டும்.  உடம்பு இருக்கிறது, வயிறு இருக்கிறது, கை இருக்கிறது, சாப்பாடு இருக்கிறது. சாப்பிட முடியுமா?  பசி வேண்டாமா? பசிக்காமல் சாப்பிட முடியுமா? பசியும் இருக்கிறது. உணவில் ஒரே உப்பு, அல்லது அதீத காரம். சாப்பிட முடியுமா? உணவில் சுவை இருக்க வேண்டும். அந்த பசி, சுவை போன்றவைதான் அனுபவங்கள். அவற்றை போகங்கள் என்கிறார்கள். 


தனு, கரண, புவன, போகம் என்பது இதைத்தான். இவை தத்துவங்கள் அல்ல.இவற்றிற்கு உள்ளே இருக்கின்றன தத்துவங்கள். 


ஏ அப்பா, எவ்வளவு ஆழமாகப் போகிறது என்று நீங்கள் வியக்கலாம். சிந்தித்து இருக்கிறார்கள்.  


தத்துவங்களுக்கு போவதற்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு. 


நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்? உங்கள் உடன் பிறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறீர்கள்? நேற்றுவரை கூடவே இருந்த பிள்ளை இன்று எங்கோ கடல் கடந்து போய் விட்டது. ஏன்?


அது அதற்கு விதித்த புவனம். இது உங்களுக்கு விதித்த புவனம். 


இந்த வேறுபாடுகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இனி தத்துவத்துக்குள் செல்வோம். 


உடல் செயல்பட உடலை ஏதாவது ஒன்று தூண்ட வேண்டும். போய் சாப்பிடு, அலுப்பாக இருக்கிறது போய் தூங்கு, சினிமாவுக்குப் போ, வேலைக்குப் போ என்று உடம்பை தூண்ட வேண்டும். 


முதலில் எண்ணம் வர வேண்டும். அது பின் உடல் மூலமாக செயலாக்கப்படும். இந்த எண்ணங்கள் பிறக்கும் இடத்துக்கு சித்தம் என்று பெயர். சித்தத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்குகிறது. 


 12 சித்தம். இது பன்னிரண்டாவது தத்துவம். 


சித்தம் ஓடி ஓடி களைத்துப் போகும்.அதை களைப்படையாமல் இருக்கச் செய்வது அகங்காரம் என்ற அடுத்த தத்துவம். 


13 அகங்காரம். நான் என்ற உணர்வு,எனது என்ற உணர்வு இருப்தால்தான் செயல்கள் இடை விடாமல் இருக்கின்றன. என் மனைவி, என் பிள்ளை, என் வீடு, என் வேலை என்ற எண்ணம் வரும் போதுதான் அதை காப்பாற்ற வேண்டும், அவற்றை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது. இல்லை என்றால் யார் அல்லது எது எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்று இருந்து விடலாம் அல்லவா?


இந்த அகங்காரம் மூன்று விதமாக பிரிகிறது.  


இராஜசம், தாமசம், சாத்வீகம் என்று. 


அவற்றை விளக்காமல் மேலே போவோம் 


இந்த சாத்வீக அகங்காரத்தில் இருந்து புத்தி, மனம் என்ற அடுத்த இரண்டு தத்துவங்கள் பிரக்கின்ன்றன. 


14. புத்தி 


15  மனம் 


இந்த சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்ற நான்கு கரணங்களும் அந்தக் கரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 


நமக்கு உள்ளே நிகழும் அனுபவம் ஏதோ மூளையில் நிகழ்வதாக நாம் நினைக்கிறோம்.  நம் சமய கோட்பாடுகள் அது நான்கு நிலைகளில் நிகழ்வதாகக் கூறுகிறது. 


சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்று ஒவ்வௌன்றுகும் ஒரு செயல்பாடு உண்டு, இவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவவை. அவற்றை விளக்க புகுந்தால் இன்னும் விரியும்.  மிக ஆழமான தத்துவங்கள் என்று புரிந்து கொள்வோம். ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலைத் தொடரலாம். 




உள்ளே இருப்பவை. உடம்பை பிரித்துப் பார்த்தாலும் தெரியாது. 


எனவே, 15 தத்துவங்கள் பார்த்து விட்டோம். 


மேலும் 21 இருக்கின்றன. 


அவற்றை அடுத்த பதிவில் சிந்திப்போம். 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html




]




Sunday, September 25, 2022

திருக்குறள் - வெஃகாமை - நடுவின்றி நன்பொருள் வெஃகின்

 

 திருக்குறள் - வெஃகாமை - நடுவின்றி நன்பொருள் வெஃகின்


ஒருவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்ள "நினைத்தால்" என்ன ஆகும்? எடுத்தால் அல்ல, எடுக்க நினைத்தால் என்ன ஆகும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


"அறம் இன்றி இன்னொருவன் பொருளை எடுத்தால், எடுத்தவனின் குடி கெடுவது மாத்திரம் அல்ல அவனுக்கும் பல குற்றங்கள் வந்து சேரும்" 


பாடல் 


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)



நடுவின்றி = நடுநிலைமை இல்லாமல் 


நன்பொருள் = நல்ல பொருளை 


வெஃகின் = எடுத்துக் கொள்ளக் கருதினால் 


குடிபொன்றிக் = குடியை கெடச் செய்து 


குற்றமும் = குற்றத்தையும் 


ஆங்கே தரும் = ஆங்கே தரும் 


"நன் பொருளை வெஃகின்" என்று போட்டு இருக்கலாம். ஆனால் "நடுவு இன்றி நன் பொருளை வெஃகின்" என்று சொல்லி இருக்கிறார். 


வெஃகுதல் = விரும்புதல், தீய வழியில் கொள்ள நினைத்தல். 


ஒருவனிடம் ஒரு நல்ல கார் இருக்கிறது. அது போல நமக்கும் ஒன்று வேண்டும் என்று நினைப்பது குற்றம் அல்ல. நல்ல பொருளை விரும்புவதே குற்றம் அல்ல. நடுவு இன்றி, நல்ல பொருளை விரும்புவது குற்றம். 


சரி, தவறு ; ஞாயம், அநியாயம், தர்மம், அதர்மம் பார்த்து நடு நிலையில் நில்லாமல் தவறான ஒன்றின் பால் சார்ந்து அதை விரும்புவது தவறு என்கிறார். 


""பொருளை விரும்பின்"  என்று ஏன் சொன்னார்?


"நன் பொருளை" என்று ஏன் சொன்னார்? வெறுமனே "பொருளை" என்று சொல்லி இருக்கலாமே? பொருள் நல்லது செய்யும். இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை செய்யும். எனவே நன் பொருள் என்றார். இல்லறத்தில் இருப்பவனுக்கு பொருள் அவசியம். 


இரண்டுவிதமான சிக்கல்கள் வரும் என்கிறார். .


ஒன்று, குடி பொன்றும். 


மற்றது, குற்றமும் ஆங்கே தரும். 


குடியை கெடச் செய்து என்று உரை செய்வார் பரிமேலழகர். .ஒருவன் மற்றவன் பொருளை தவறான வழியில் அடைய நினைத்தால் அது அவனை மட்டும் கெடச் செய்யாது. அவன் குடியையே நாசம் செய்யும். 


தவறாக நினைப்பவன், அதை ஒரு நாள் செய்யவும் செய்வான். அப்படிச் செய்தால் உலகம் அவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே தூற்றும். 


குற்றமும் ஆங்கே தரும் என்றார். ஆங்கே என்றால் அங்கேயே, உடனேயே தரும். கொஞ்ச நாள் எல்லாம் ஆகாது. உடனுக்கு உடனேயே தரும். 


குற்றமும் என்பதில் உள்ள உம்மை முற்றும்மை. அதாவது அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை. எல்லா தீயவரையும் தரும் என்பது பொருள். 


ஒரு விரலில் மோதிரம் போட்டேன், இரண்டு விரலில் போட்டேன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பத்து விரலிலும் போட்டேன் என்றால் மொத்தம் அவ்வளவுதான். பதினோராவது விரல் இல்லை என்று பொருள். 


குற்றமும் தரும் என்றால், எல்லாம் தந்தாச்சு, இனி இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று அர்த்தம். 


முதல் குறளிலேயே பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார் வள்ளுவர். 


மேலும் சிந்திப்போம். 


[

முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html

]


Friday, September 23, 2022

திருவாசகம் - திரு அம்மானை - தாயான தத்துவனை

       

திருவாசகம் - திரு அம்மானை  -   தாயான தத்துவனை


திருவாசகத்தில் உள்ள பாடல்களை படித்தால் மிக எளிமையாக இருக்கும். பெரிய சொற் சிக்கல்கள் இருக்காது. சரி, இவ்வளவுதானே. இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று எண்ணி மேலே போய் விடுவோம். போய் இருக்கிறேன். 


பின்னாளில் அப்படிப்பட்ட பாடல்களுக்கு மிக ஆழமான, விரிவான அர்த்தங்களை கேட்டு வியந்தது மட்டும் அல்ல, இப்படி எத்தனை பாடல்களை நுனிப் புல் மேய்ந்து விட்டு வந்தேனோ என்ற கவலையும் பட்டிருக்கிறேன். 



சரி, எனக்குத் தெரிந்தது அவ்வளவு, இந்த உரை ஆசிரியருக்கு தெரிந்தது இவ்வளவு. இதுக்கு மேலேயும் பொருள் இருக்கலாம் அல்லவா என்றும் தோன்றும். எதுதான் மணிவாசகர் நினைத்த பொருள் என்ற ஏக்கம் வரும். 



திருவாசகத்துக்குப் பொருளை மணிவாசகரிடமே கேட்டார்கள். இறைவன் திருவடியைக் காட்டி,"இதுதான் பொருள்" என்று கூறி அதில் ஐக்கியமாகி விட்டார் என்பார்கள். 



எனவே, எத்தனை உரை படித்தாலும், அது எதுவும் முழுமையானது அல்ல. உங்கள் தேடல்தான், அனுபவம்தான் உண்மையான பொருளை உணர்த்த முடியும். 



அடுத்த பாடல் 


"எப்போதும் மனதில் நினைப்பவர்கள் உள்ளத்தில் இருப்பவனை, நினனையாதவர்களுக்கு எட்டாமல் இருப்பவனை, திருபெருந்துறையில் உறைபவனை, வேதங்களால் போற்றப் படுபவனை, பெண்ணை பாதியாகக் கொண்டவனை, நாய் போன்ற நம்மையும் ஆட்கொண்ட நாயகனை, தாய் போன்றவனை, உலகை எல்லாம் தானாக இருந்து, அவற்றை ஆள்பவனை, அம்மானைப் பாட்டில் பாடுவோம்"

என்கிறார். 

இது என்ன பெரிய விடயமா. எப்போதும் உள்ளதுதானே என்று நினைப்போம். 


பாடல் 


ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் 


பொருள்  




(pl click the above link to continue reading)


ஓயாதே = ஓயாமல், இடை விடாமல், அலுப்பு இல்லாமல் 


உள்குவார் = உள்ளத்தில் நினைப்பார் 


உள்ளிருக்கும் = உள்ளுக்குள் 


உள்ளானைச் = இருப்பவனை 


சேயானைச் = தூரத்தில் இருப்பவனை 


சேவகனைத்  = சேவகம் செய்பவனை 


தென்னன் = தென்னாடு உடையவனை 


பெருந்துறையின் = திருபெருந்துறையில் 


மேயானை = உறைபவனை 


வேதியனை = வேதங்களால் போற்றப்படுபவனை 


மாதிருக்கும் பாதியனை = பெண்ணை பாதியாகக் கொண்டவனை 


நாயான நந்தம்மை = நாய்போன்ற நம்மை எல்லாம் 


ஆட்கொண்ட நாயகனைத் = ஆட்கொண்ட நாயகனை 


தாயான தத்துவனைத் = தாய் போன்றவனை 


தானே உலகேழும் = அவனே உலகம் எழும் 


ஆயானை = ஆனவனை 

ஆள்வானைப் = ஆட்சி செய்பவனை 


பாடுதுங்காண் அம்மானாய்  = அம்மானையில் பாடுவோம் 



கொஞ்சம் உள்ளே போவோம். 


"ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்" - உள்குதல் என்றால் நினைத்தல், மனதில் நிறுத்துதல் என்று பொருள் சொல்லலாம். மனத்து அழிதல் என்று பொருள் சொல்கிறார்கள். அதாவது, அந்த ஒன்றைத் தவிர வேறு எதையும் மனம் நினைக்காது. அப்படி இருந்தால், அது எதை நினைக்கிறதோ, அதாகவே ஆகிவிடுகிறது. "ஓயாமல்" என்றால் விடாமல். அப்படி விடாமல் நினைப்பவர்களுக்கு அவன் "உள்ளவன்", அதாவது வெளிப்பட்டு தெரிவான். அப்படி நினைக்காதவர்களுக்கு தெரிய மாட்டான் என்பது குறிப்பு.  


அதைத்தான் அடுத்த சொல்லில் கூறுகிறார்.


"சேயானை" - தூரத்தில் இருப்பவன். கண்ணுக்குத் தெரிய மாட்டான். ஓயாமல் உள்ளத்தில் நினையாதவர்களுகுத் தெரியமாட்டான். தெரியமாட்டான் என்றால் இல்லாதவன் என்று பொருள் இல்லை. தூரத்தில் இருப்பான். புளுட்டோ போன்ற கோள்கள் நம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. அதற்காக அது இல்லை என்று சொல்ல முடியாது. 



இந்த உலகை யார் படைத்தார்கள் என்று கேட்டால் "இறைவன் படைத்தான்" என்று சொல்லிவிடுவார்கள். அப்படி என்றால் இந்த உலகம் வேறு, இறைவன் வேறா என்ற கேள்வி வரும். உலகம் என்பது இறைவனுக்கு வெளியே உள்ள ஒன்று என்று ஆகி விடுமே? 


மணிவாசகர் சொல்கிறார் 


"தானே உலகேழும் ஆயானை"


இந்த உலகம் முழுவதும் அவனே தான். தானே உலகமாய் ஆனான். அவன் வேறு, உலகம் வேறு அல்ல.  இரண்டும் ஒன்று தான். 


சரி, அவனே உலகம் ஆனான் என்றால் அதை நடத்துவது யார்? 


"ஆள்வானை"


தானே உலகங்கள் அனைத்தும் ஆகி, அவற்றை வழி நடத்துகிறான். 



"சேவகனை". இறைவன் எப்படி சேவகன் ஆவான் ? அவன் தான் உலகம் அனைத்தையும் ஆள்பவனாயிற்றே. 


இருந்தாலும், தன் அடியவர்களுக்காக அவன் குதிரை ஓட்டும் சேவகனாக, பிட்டுக்கு மண் சுமக்கும் கூலித் தொழிலாளியாக, வந்து சேவகம் செய்திருக்கிறான். எனவே "சேவகனை".  ஒரு தாய் தன் பிள்ளைக்கு ஆயிரம் சேவை செய்கிறாள். அதற்காக அவள் வேலைக்காரியா? இல்லை, அவள் செய்வது அன்பின் காரணமாக. 

அதை அடுத்த வரியில் சொல்கிறார் 


"தாயான தத்துவனை".  பேசாமல் தாயானவனை என்று சொல்லி இருக்கலாமே?  தாய் பிள்ளை மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பாள். இருந்தும் அவளுக்கு பல பிள்ளைகள் இருந்தாலோ, அல்லது வயதாகி விட்டாலோ,அல்லது பிள்ளை வேறு இடத்துக்குப் போய் விட்டாலோ அவளால் பிள்ளைக்கு உதவி செய்ய முடியாது. இருந்தும்அவள் மனம் எல்லாம் பில்லையிடம்தான் இருக்கும். உடலால் இல்லாவிட்டாலும், உள்ளாதால் இருந்து கொண்டே இருப்பாள். அவன் அன்பு கண்ணுக்குத் தெரியாமல் கசிந்து கொண்டேதான் இருக்கும். எனவே தான் "தாயான தத்துவனை" என்றார்.தத்துவம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அது செயல் பட்டுக் கொண்டே இருக்கும். 


ஒரு ஆண், பெண் இல்லாமல் முழுமை பெறுவது இல்லை.  முழுமை பெறாத ஒருவரால் இறைவனை அடைய முடியாது. தானே ஒரு அரைகுறை. எப்படி முழுமுதலான இறைவனை அடைவது?  


"மாதிருக்கும் பாதியானை".  அவனே பெண் பாதி இல்லாமல் முழுமை அடைய மாட்டான் என்றால் நாம் எம்மாதிரம். 



என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பெண் என்றால் ஏதோ மனைவி, காதலி என்று  ஒரு உருவம் அல்ல.  பெண் தன்மை. அன்பு, அருள், கருணை, பாசம், இரக்கம் போன்ற குணங்கள். அந்தக் குணங்கள் இல்லாதவரை  இறை அனுபவம் கிட்டாது. 


 பிள்ளை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தாயின் அன்பு ஒரு போதும் குறையாது. அது போல இறைவனும், நம் தகுதி பார்த்து ஆட்கொள்வதில்லை. 


"நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்" 


நாம் யாராக இருந்தாலும், நம்மை ஆட்கொள்வான். 


படிக்க படிக்க அதன் எளிமையும், அழகும், மனதை அப்படியே கரைத்து விடும். 



பாடலை இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை. 




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html



)


Thursday, September 22, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 5

    

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 5


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


நாதம் , விந்து .  சதாக்கியம்,  ஈஸ்வரம்,  சுத்த வித்தை.


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 


இனி உயிர்கள் இயங்க வேண்டும். இயங்க என்ன வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


(pl click the above link to continue reading)



நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு இடத்துக்கும் நடுவில் இடை வெளி வேண்டும். அப்போதுதான் நகர முடியும்.


அது எளிதாகப் புரிகிறது. 


ஆனால், நகர இன்னொன்றும் வேண்டும். அதுதான் "காலம்" .



நீங்கள் பிறந்த ஊரில் இருந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்து இருகிறீர்கள். அந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள  தூர வித்தியாசம் உங்களுக்குப் புரிகிறது. 



நீங்கள் பிறந்ததில் இருந்து இன்று வரை உள்ள காலம்? அது புரிவது இல்லை. ஏன் என்றால் அது ஒரு பருப் பொருள் அல்ல. தொட்டு உணர முடியாது. இருந்தும் காலம் வேண்டும் என்று புரிகிறது அல்லவா. 


எனவே, முதலில் இறைவன் அசுத்த மாயையில் இருந்து "காலம்" என்ற தத்துவத்தை தோற்றிவித்தான். 


காலம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?  தோற்றம் இல்லை, வளர்ச்சி இல்லை, மறைவு இல்லை, ஒன்றும் இருக்காது. எனவே முதல் தத்துவமாக கால தத்துவத்தை இறைவன் படைக்கிறான். 


காலம் தோன்றி விட்டது. 


காலத்துக்குள் உயிர்கள் இயங்க வேண்டும். 


எப்படி இயங்க வேண்டும்? 


அவைகள் முன் செய்த வினைகளின் படி இயங்கும். ஒரு பிறவியில் செய்த நன்மை தீமைகள், பாவ- புண்ணியங்களாகி, பின் இன்ப-துன்பமாக வந்து சேரும். 


ஒரு பிறவி, மறு பிறவி என்பது காலத்தின் அடிப்படையில் வருவது. 


இவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் நியமிக்கிறான். 


அதை "நியதி" தத்துவம் என்கிறார்கள். 


அது இரண்டாவது தத்துவம். நியமிக்கப்படுதல்.  உனக்கு இது தான் என்று நியமித்தல். இதை நாம் ஊழ் என்கிறோம், விதி என்கிறோம். 



அடுத்து என்ன?


உயிர்கள் இயங்கும் காலத்தையும், அவை செய்ய வேண்டிய கால அளவையும் நிர்ணயம் செய்தாகி விட்டது. இனி அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களை கொஞ்சம் எழுப்பி விட வேண்டும். அவற்றின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும். 


எனவே மூன்றாவது தத்துவம் "கலை" என்று அழைக்கப் படுகிறது. திருப்பள்ளி எழுச்சி அது. 


காலம்

நியதி

கலை 


உயிர்கள தூக்கம் கலைந்து எழுகின்றன. எழுந்தவுடன், நான் யார், எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்ற கேள்வி பிறக்கும். கேள்விக்கு விடை அறிய முற்பட்டும்.  அதை அறிவு அல்லது "வித்தை " என்கிறார்கள். உயிர்கள் எவ்வாறு ஞானம் அடைகின்றன என்பது பற்றிய தத்துவம் அது.  வித்யா தத்துவம். உயிர்கள் உண்மையை தேடி அலைகின்றனவா இல்லையா? 


காலம்,

நியதி,

கலை,

வித்தை 


அறிவு தேடலின் நடுவே, ஆசை பெருகும். அறிய அறிய ஆசை வரும். தெரியாத ஒன்றின் மேல் ஆசை வராது. தெரிய வரும் போது எனக்கும் அது போல ஒன்று வேண்டும் என்ற ஆசை வரும். அந்த ஆசை மேலும் கர்மத்தைத் தூண்டும். ஆசைக்கு "இராகம்" என்று பேர் சொல்கிறார்கள். 


காலம்

நியதி 

கலை

வித்தை 

இராகம் 


இந்த ஐந்தையும் கஞ்சுகம் (ஆடை) என்பார்கள்.  ஆன்மா அணிந்து கொள்ளும் ஆடை. ஏன் ஆடை என்றால், ஆன்மாவுக்கு வடிவு கிடையாது. இந்த ஐந்து குணங்களும் சேர்ந்த பின் ஆன்மா ஒரு வடிவு கொள்ளும். 


அப்படி ஒரு வடிவு கொண்ட ஆன்மாவுக்கு "புருடன்" என்று பெயர். 


குணம், காலம், அறிவு என்று ஒன்றும் இல்லாத ஆன்மா அறிவு, ஆசை, காலம் எல்லாம் பெற்று ஒரு வரையறைக்குள் செயல்படத் தொடங்க தயாராக இருக்கும். அப்படிப்பட்ட ஆன்மாவுக்கு புருடன் என்று பெயர். 


காலம்

நியதி

கலை

வித்தை 

இராகம்/அராகம் 

புருடன் 


இனியும் ஆன்மா இயங்காது. ஆன்மா இயங்க வேண்டும் என்றால் அது தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும். 


என் பெற்றோர், என் மனைவி, கணவன், பிள்ளைகள், வீடு, வாசல், வேலை, என்று தன்னைச் சுற்றி ஒரு பின்னலை ஏற்படுத்திக் கொள்ளும், அதற்கு பிரகிருதி மாயை என்று பெயர். 


நேற்றுவரை யாரோவாக இருந்த இரண்டு பேர் இன்று முதல் அவன் தான் என் உயிர், அவள் இல்லாமல் நான் இல்லை என்று சொல்ல வைப்பது இந்த மாயை. தந்தை, தாய், பிள்ளை என்பதெல்லாம் கற்பித்துக் கொண்டது. அந்தப் பிணைப்பு இருந்தால் தான் செயல் பட முடியும். 



காலம்

நியதி

கலை

வித்தை 

இராகம்/அராகம் 

புருடன் 

பிரகிருதி மாயை 


என்ற இந்த ஏழு தத்துவங்களை வித்யா தத்துவங்கள் என்று சொல்கிறார்கள். 


இதில் ஒவ்வொன்றும் இதற்கு முன் உள்ள சிவ தத்துவத்தில் இருந்து எப்படி வந்தன என்று விளக்கங்கள் இருக்கிறது. சொல்லின் விரியும். 


சிவ தத்துவம் 5, வித்யா தத்துவம் 7 ஆக பன்னிரண்டு தத்துவங்கள் பற்றி சிந்தித்தோம். 


இன்னும் 24 தத்துவங்கள் இருக்கின்றன. 


மேலும் சிந்திப்போம். 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html




]




Wednesday, September 21, 2022

திருக்குறள் - வெஃகாமை - முன்னுரை

 திருக்குறள் - வெஃகாமை - முன்னுரை 


பொறாமை பற்றி முந்தைய அதிகாரத்தில் படித்தோம். 


பொறாமை வந்தால் என்ன ஆகும்?


மற்றவன் பெற்ற ஆக்கத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாது. அது அவனுக்கு இல்லாமல் போக வேண்டும் என்று நினைவு வரும். "பெரிய வண்டி வாங்கிடானாம்...வேகமா போய் எங்காவது விபத்து நடந்து மருத்துவ மனையில் கட்டுப் போட்டு கிடந்தாதான் அவன் ஆணவம் அடங்கும்" என்று மனதுக்குள் சாத்தான் ஓதும். 


இல்லை என்றால் அவன் பொருள் தனக்கும் வேண்டும் என்று ஆசை வரும். 


அவன் பொருளை தான் எப்படி கொள்ள முடியும்?



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_21.html


(Please click the above link to continue reading)



அதிகாரம் இருந்தால், மிரட்டி வாங்கிவிடலாம்.  பல அரசியல்வாதிகள் சாதாரண மக்களின் நிலத்தை, வீட்டை, தொழில் நிறுவனங்களை மிரட்டி வாங்கிவிடுவதை பற்றி செய்திகள் படிக்கிறோம். 


அதிகாரம் இல்லாவிட்டால், ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாமா என்று நினைப்பது. 


பொருள் மட்டும் அல்ல, மற்றவனுக்கு ஒரு அழகான மனைவி இருந்தால் அவள் மேல் ஆசைப் படுவது.


இராவணன் பட்ட மாதிரி, இந்திரன் ஆசை கொண்ட மாதிரி. 


ஒருவன் புகழை அழிக்க நினைப்பது. 


ஒருவன் கருத்தை களவாடி தன் கருத்துப் போல சொல்லுவது. 


இப்படி இந்த பொறாமை பல விதங்களில் வெளிப்படும். 


அதில் ஒன்று பற்றி அடுத்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


 வெஃகாமை 


பிறனுடைய பொருளை நடுவு நிலைமை இன்றி கவர நினைத்தல். 


கவர்வது குற்றம். அதற்கு சட்டப்படி தண்டனை உண்டு. 


கவர நினைப்பது கூட குற்றமாம். நினைப்பதற்கு சட்டப்படி தண்டனை கிடையாது. ஆனால், அதுவும் குற்றம்தான். 


"வவ்வக் கருதாமை" என்பார் பரிமேலழகர். 


 வெஃகாமை பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் இந்த  வெஃகாமை இருக்கக் கூடாது. அவனுக்கு கிடைத்தது அவனுக்கு. நமக்கு கிடைத்தது நமக்கு என்று இருக்க வேண்டும். 


பிறன் பொருளை கவர நினைத்தால், இல்லறம் சிதையும். நீ அவன் பொருளை எடுக்க நினைக்கும் போது, உன் பொருளை வேறொருவன் எடுக்க நினைப்பான். எங்கு போய் முடியும் இது?


இல்லறத்தில் இருப்பவன் இதை தவிர்க் வேண்டும். 



மேலும் சிந்திப்போம். 






நாலாயிர திவ்ய பிரபந்தம் - (3598) - ஒலிகள்

    

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  (3598) - ஒலிகள் 



ஒரு பக்கம் பாண்டவர் சேனை. 


இன்னொரு பக்கம் கௌரவர் சேனை. 


கடல் போல் படைகள் இருபுறமும். பெரிய பெரிய ஆண்மை  வீரர்கள் இரண்டு புறமும்.


பெரிய மாமிச மலை போன்ற வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்கிறார்கள். அந்த ஒலி.


யானைப் படைகள். குதிரைப் படைகள். காலாட் படைகள். ஆயுந்தங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஒலி. வீரர்கள் எழுப்பும் ஒலி. யானைகளும், குதிரைகளும் எழுப்பும் ஒலி. எவ்வளவு பேரிரைச்சலாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 


அது மட்டும் அல்ல,  


இந்த போரின் நாயகன் கண்ணன்தான். அவன் தான் யுத்தத்துக்கு முதல் சங்கை ஊதினான். அவன் நேரடியாக சண்டை செய்யா விட்டாலும் அவன் அறிவும், அருளும் தான் அந்த யுத்தத்தை வழி நடத்தியது. 


கண்ணனே போர்க் களத்தில் நிற்கிறான் என்றதும் அதைக் காண விண்ணில் தேவர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள். கண்ணன் நகர்த்தும் காய்களை கண்டு அவர்கள் வியந்து ஆஹா ஓஹோ என்று ஒலி எழுப்புகிறார்கள். 


மண்ணும் விண்ணும் அதிர்கிறது. 


நம்மாழ்வார் அதை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். 


பாடல் 


ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்

ஆணுடை சேனை நடுங்கு மொலி,விண்ணுள்

ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்

காணுடைப் பாரதம் கையரைப் போழ்தே.


பொருள் 


(pl click the above link to continue reading)




ஊணுடை = பெரிய உடலை உடைய 

மல்லர் = மல்லர்கள் 

ததர்ந்த வொலி = சண்டையிடும் ஒலி 


மன்னர்  = மன்னர்கள் 


ஆணுடை = ஆண்மை உடைய, அதாவது வீரம் நிரம்பிய 


சேனை = சேனைகள் 


நடுங்கு மொலி = நடுங்கும் ஒலி. கண்ணன் எதிர்புறம் நிற்கிறான். நாம் எங்கே பிழைக்கப் போகிறோம் என்று கௌரவ சேனைகள் நடுங்குகின்றனவாம். 



விண்ணுள் = வானில் 



ஏணுடைத் = உயர்ந்தவர்களாக எண்ணப்படும்  


தேவர் = தேவர்கள் 


வெளிப்பட்ட வொலி = வெளிப்பட்டு உண்டாக்கிய ஒலி 


அப்பன் = திருமால், கண்ணன் 


காணுடைப்  = காண்பதற்கு உரிய 


பாரதம் = பாரதப் போரை 


கையரைப் = அறைகூவி அழைத்த 


போழ்தே. = அந்த நேரத்தில் 


அர்ஜுனனோ, தர்மனோ, பீமனோ, பீஷ்மரோ, துரோனாச்சரியரோ அல்ல பாரதப் போரை நடத்தியது. அது பூபாரம் தீர்க்க கண்ணன் நடத்திய மாபாரதப் போர் என்பர் ஆன்றோர். 


அத்தனை ஒலியையும் நமக்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நம்மாழ்வார். 


ஏன்?


அவ்வளவு பெரிய போரை நடத்தி வெற்றி பெற்றவன். நம் துன்பங்களை துடைத்து நமக்கு வெற்றியைத் தரமாட்டானா? இதெல்லாம் அவனுக்கு ஒரு சிறு வேலை. கட்டாயம் செய்வான். 



வெற்றிப் பாசுரத்தில் ஐந்தாவது பாசுரம் இது. 


மேலும் பயணிப்போம். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


)


Tuesday, September 20, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4

   

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 4


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன 


நாதம் 

விந்து 

சதாக்கியம் 

ஈஸ்வரம் 

சுத்த வித்தை.


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும்.  முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 



மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


(pl click the above link to continue reading)


இனி உயிர்கள் செயல்படத் தொடங்க வேண்டும். உயிர்கள் செயல்பட என்ன வேண்டும் என்று அறிந்து, அவற்றை இறைவன் உருவாக்குகிறான். 


ஒரு பெரிய வீடு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டைப் பார்த்து இரசிக்கிரோம். அடடா எவ்வளவு அழகாக இருக்கிறது. எவ்வளவு பெரிய வீடு என்று.


வீட்டினுள் சென்று பார்க்கிறோம். பெரிய முன் அறை, மூன்று படுக்கை அறை, பெரிய சமையல் அறை, மூன்று குளிப்பறை என்று நன்றாக இருக்கிறது. 


சற்று சிந்திப்போம். வீடு என்பது ஒரு பொருள் அல்ல. பல பொருள்களின் தொகுதி. அவ்வளவே. ஒவ்வொன்றாகச் சொல்ல முடியாது என்பதால் எல்லாவற்றையும் சேர்த்து வீடு என்று ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். .


உண்மையில் அது சிமென்ட், இரும்பு கம்பிகள், மணல், கல், கண்ணாடி, மரம், துணி என்பவற்றின் தொகுதி. எல்லாவற்றையும் பிரித்துப் போட்டால், அவ்வளவு பெரிய வீடு, ஒரு மூலையில் குவிந்து கிடக்கும். 


அதில் இன்னும் உள்ளே போவோம். 


அங்கே உள்ள மேஜை, நாற்காலி எல்லாம் பிரித்துப் போட்டால் மரம் மிஞ்சும். 


படுக்கை, தலையணை, போர்வை, படுதா இவற்றை பிரித்தால் துணியும் நூலும் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் நூல், சாயம் மிஞ்சும். 


அதை இன்னும் பிரித்தால் பஞ்சு மிஞ்சும். 


இப்படி உள்ளே போய் கொண்டே இருக்கலாம். 


தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், எந்த பெரிய பொருளும் ஏதோ நுண்ணிய பொருள்களின் தொகுதி என்று. 


மனிதன் என்றால் உறுப்புகள், அதற்கு கீழே தோல், எலும்பு, இதயம் என்று அங்கங்கள், அவற்றிக்கு உள்ளே திசுக்கள், அவற்றிற்கு உள்ளே செல்கள் என்று போய்க் கொண்டே இருக்கும். 


ஏதோ ஒரு நுண்ணிய பொருளில் இருந்து பெரிய பொருள்கள் உருவாகின்றன என்று புரிகிறது அல்லவா?


அந்த நுண்ணிய பொருளை பிரித்தால் உள்ளே இன்னும் போகும். 


இப்படி போய்க் கொண்டே இருந்தால், இறுதியில் ஒரு மிக மிக நுண்ணிய பொருள் ஒன்று இருக்கும். அதை கண்ணால் காண முடியாது, காதால் கேட்க முடியாது. புலன்களுக்கு பிடிபடாது. அவ்வளவு நுண்மை வாய்ந்தது 


அந்த நுண்மையான ஒன்றை மாயை என்று சொல்கிறார்கள். மிக மிக நுண்மையானது. அதை விட நுண்மையான ஒன்று இல்லை என்றால் அது எவ்வளவு நுண்மையானது என்று சிந்திக்க முடியும்.  



அந்த மாயையில் இருந்து இறைவன் உலகைப் படைத்தான். 


இந்த மாயையை இரண்டாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த மாயை, அசுத்த மாயை என்று. 


அப்படியானால் இரண்டு மாயை உண்டா என்றால் இல்லை. 


என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா?  


இது இரண்டு உதாரணங்கள் மூலம் விளக்கப்படுகிறது. 


குன்றிமணி என்று ஒரு விதை உண்டு. அது ஒரு புறம் கறுப்பாக இருக்கும், மறு புறம் சிவப்பாக இருக்கும். இந்தப் பக்கம் பார்பவர்கள் அதை கறுப்பு என்பார்கள். மறு புறம் பார்பவர்கள் அது சிவந்த நிறம் உடையது என்பார்கள். அது ஒன்றுதான், இரண்டும் தான். 


நம் காற்று மண்டலம் இருக்கிறதே, ,அது பூமிக்கு அருகில் மாசு உடையதாக இருக்கும். குப்பைகள், புகை, தூசி என்று. மேலே போகப் போக சுத்தமாக இருக்கும். ஒரே மண்டலம் தான் கீழே அசுத்தம், மேலே சுத்தம். அது போல 


ஒரே மாயை தான், இரண்டு பிரிவுகள். 


இந்த அசுத்த மாயையில் இருந்து இறைவன் ஏழு தத்துவங்களை தோற்றுவிக்கிறான். அவை இல்லாமல் இந்த உயிர்கள் செயல் பட முடியாது. உயிர் அசைய முதலில் அவை வேண்டும். 


அவை என்னென்ன என்று நாளை பார்ப்போமா?


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3


]https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html





Sunday, September 18, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

   

 திருக்குறள் - அழுக்காறாமை -   பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் 


இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளுக்கு வந்து விட்டோம். 


எல்லோருக்கும் வேண்டியது என்ன -  வாழ்க்கையில் முன்னேற்றம். நாளும் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நேற்றை விட இன்று சிறப்பாக இருக்க வேண்டும். அதுதானே சுகம்? 


ஒருவனிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. முயன்று, கொஞ்சம் கொஞ்சமாக பொருள் சேர்த்து அதை பத்தாயிரம் ரூபாய் வரை கொண்டு வந்து விட்டான். அது வளரும் போது ஒவ்வொரு நாளும் அவனுக்கு மகிழ்ச்சிதான். 



மற்றொருவன் இருபதாயிரம் வைத்து இருந்தான். அது நாளும் தேய்ந்து பத்தாயிரத்தில் வந்து நின்றது. 



இருவரும் இறுதியில் அடைந்த இடம் பத்தாயிரம். முதலாமவன் உயர்ந்து அங்கு வந்தான். இரண்டாமவன் தாழ்ந்து அங்கு வந்தான். 



எவ்வளவு இருக்கிறது என்பதல்ல கேள்வி. எப்படி நாம் அங்கு வந்து சேர்ந்தோம் என்பதில் இருக்கறது பெருக்கமும், சுருக்கமும். 



வள்ளுவர் சொல்கிறார் 


பொறாமை கொண்டவன் ஒரு காலும் பெருக்கம் அடைய மாட்டான். என்ன சம்பாதித்தாலும் அவனுக்கு ஒரு திருப்தி கிடையாது. தான் வளர்ந்து விட்டோம் என்று அவன் ஒரு காலும் நினைக்க மாட்டான். எப்போதும் யாருடனாவது தன்னை ஒப்பிட்டு, ஐயோ நான் அந்த அளவுக்கு இல்லையே என்று வருந்திக் கொண்டே இருப்பான். 

மாறாக, பொறாமை இல்லாதவன், என்ன கிடைத்தாலும், அவனுக்கு மகிழ்ச்சிதான்.யாருக்கு எவ்வளவு கிடைத்தது என்று அவன் சிந்திக்க மாட்டான். எனக்கு இவ்வளவு கிடைததது. சந்தோஷம் என்று மகிழ்ச்சியாக இருப்பான். 


எனக்கு தெரிந்து சிலர் இருக்கிறார்கள்.  தினமும் பங்கு சந்தை எண்களை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். கோடிக் கணக்கில் அவர்களிடம் பங்குகள் இருக்கும். அதில் ஒரு இலட்சம் குறைந்து விட்டால், ஏதோ வாழ்வே பறி போனது போல வருந்துவார்கள்.  ஏன் என்றால், அவர்களுக்கு இலக்கு வேறு. எட்டு கோடி இருந்தால், அதை எப்படியாவது பத்து கோடி ஆக்க வேண்டும். அவனை விட பெரிய ஆளாக வேண்டும். இவனை விட பெரிய ஆளாக வேண்டும். என்று சதா சர்வ காலமும் அதே நினைப்பு. 


சற்று கடினமான குறள். 



பாடல் 

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்


பொருள் 




(Pl click the above link to continue reading) 






அழுக்கற்று  = பொறாமை கொண்டு 


அகன்றாரும் = அகன்ற செல்வதை, ஆக்கத்தை அடைந்தவர் 


இல்லை = யாரும் இல்லை 


அஃது இல்லார் = அந்த பொறாமை குணம் இல்லாதவர் 


பெருக்கத்தில்  = செல்வப் பெருக்கில் 


தீர்ந்தாரும் இல் = அடையாமல் இல்லாமலும் இல்லை 





"பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்லை " - பொறாமை இல்லாதவர்களின் பெருக்கம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். 


எனவே, அதன் எதிர்பதம் 


பொறாமை கொண்டவர்களின் ஆக்கம் முடிவில்லாமல் தேய்ந்து கொண்டே போகும் என்பது. 



இதுக்கு மேல பொறாமை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. 



பொறாமை எதிரிகள் மேல் மட்டும் அல்ல. நெருங்கிய நண்பர்கள் மேல், உறவுகள் மேலும் கூட வரலாம்.  அதெல்லாம் இல்லை என்று சொல்லுவதை விட, அப்படி இருக்குமா என்று ஆராய்ந்து பார்த்து சரி செய்து கொள்வது நலம். 




(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 163:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 164: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 165: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 166: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 167: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html


குறள்  எண் 168 :உய்த்துவிடும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html


குறள்  எண் 169  : நினைக்கப்படும் 


திருவாசகம் - திரு அம்மானை - காட்டாதன எல்லாம் காட்டி

      

திருவாசகம் - திரு அம்மானை  -   காட்டாதன எல்லாம் காட்டி


"கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத குருக்கள் வானம் கீறி வைகுந்தம் காட்டுவாராம்" என்று ஒரு பழமொழி உண்டு. 


வைகுந்தம் எப்படி போவது என்று நாள் கணக்கில் சொல்லுவார். வைகுந்தம் போவது என்பது எளிதான காரியமா? அவ்வளவு கடினமான வேலையை செய்து முடிக்க வழி தெரிந்தவருக்கு கூரையின் மேல் ஏறி கோழியை பிடிக்கத் தெரியாதா? இது கூட தெரியாத ஆள் எப்படி நம்மை வைகுந்தம் கூட்டிப் போகப் போகிறார்? என்பது கேள்வி. 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


பக்தி மார்கத்தில் உள்ள பல பேர், இந்த சிற்றின்பம், ஆண் பெண் உறவு என்றால் முகம் சுளிப்பார்கள்.  "சீ ...அதை எல்லாம் பேசிக்கிட்டு" என்று சங்கடத்தில் நெளிவார்கள். 


இந்த சிற்றின்பமே பிடிபடவில்லை என்றால், பேரின்பம் எப்படி பிடிபடும்? 



பெரிய சங்கீத வித்வானாக வேண்டும். ஆனால் இந்த சுருதி, இலயம், தாளம் எல்லாம் என்னத்துக்கு என்று கேட்பது போல. 

சிற்றின்பம் புரிந்தால்தான் பேரின்பம் புரியும். ஆரம்பப் பள்ளி முடித்தால் தான் உயர் கல்விக்குப் போக முடியும். 


நமது பக்தி இலக்கியத்தில் சிற்றின்பம் சேர்ந்து இருப்பது ஆச்சரியமான விடயம். வேறு எந்த மதத்திலாவது இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. 


நாயகன் நாயகி பாவம் என்பது பக்தி இலக்கியத்தின் ஒரு பகுதி. அதைக் கண்டு யாரும் முகம் சுழிப்பது இல்லை. 



அவள் ஒரு இளம் பெண். இந்த ஆண் பெண் உறவு பற்றியெல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரியாது. உடலின் மாற்றங்கள் புரிகிறது. ஆனாலும் அது முழுமையாகத் தெரியவில்லை. அவளுடைய காதலனோ இதில் தேர்ந்தவன். ஒரு நாள் அவளை தனியே அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்குகிறான். அவளுக்கு கூச்சம், பயம், வெட்கம், படபடப்பு, சந்தோஷம் எல்லாம் ஒன்றாக வருகிறது. 

பின் வீட்டுக்கு வந்து விட்டாள். தோழி கேட்கிறாள். "என்னடி என்னவோ போல இருக்க. முகமே சரியில்லை...என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா" என்று கேட்கிறாள் 

அவள் சொல்கிறாள் 


"என் தோழியே கேள்.  என் காதலன் இருக்கிறானே அவன் என்னை மயக்கி தனியே அழைத்துச் சென்று எது எதையோ காட்டினான், அதை எல்லாம் வெளியே சொன்னால் எல்லாரும் சிரிப்பார்கள். அதை எப்படிச் சொல்வேன்..."


என்று தன் தலைவனோடு ஒன்றியதை, அவனோடு ஒன்றாகக் கலந்ததை சொல்லி முடிக்கிறாள். 



சரி, அதுக்கும் இந்த அம்மானை பாடலுக்கும் என்ன சம்பந்தம்?


பாடல் 



கேட்டாயோ தோழி! கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ், தென்னன் பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய, நாம் மேலை வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண்; அம்மானாய்!



பொருள் 


(pl click the above link to continue reading)



கேட்டாயோ தோழி! =கேள் என் தோழியே 

கிறி செய்த ஆறு = கிறி செய்தவாறு = கிறி என்றால் மயக்கம், மாயை, வஞ்சனையாக என்று பொருள். இங்கே, மயக்கி என்று கொள்ளல்லாம் 

ஒருவன் = தன்னிகரற்ற ஒருவன் 


தீட்டு ஆர் மதில் = தீட்டு என்ற சொல்லுக்கு கூர்மையான என்ற பொருள் உண்டு. வேல், ஈட்டி, அம்பு போன்ற கூரான ஆயுதங்கள் நிறைந்த மதில் (சுவர்) 


புடை சூழ் = படைகள் சூழ 


தென்னன்  = தென்னாட்டின் தலைவன் 



பெருந்துறையான், = திருப்பெருந்துறையில் உறைபவன் 



காட்டாதன எல்லாம் காட்டி  = இதுவரை காட்டதவற்றை எல்லாம் காட்டி 




சிவம் காட்டி, = சிவம் காட்டி. சிவமாகும் தன்மை காட்டி 



தாள் தாமரை காட்டி = தாமரை போன்ற திருவடிகளைக் காட்டி 



தன் கருணைத் தேன் காட்டி, = தன் கருணை என்ற தேனைக் காட்டி 



நாட்டார் நகை செய்ய = நாட்டில் உள்ளவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்க 



நாம் மேலை வீடு எய்த = நாம் வீடு பேற்றினை அடைய 



ஆள் தான் கொண்டு  = இதில் 'தான்' என்பது அசைச் சொல். ஆள் கொண்டு என்பது ஆட்கொண்டு 



ஆண்டவா = என்னை ஆள்பவனை 



பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 



தன்னை ஒரு இளம் பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டு, ஒரு பெண் தன் தலைவனிடம் அடையும் இன்பம், பின் அவனே எல்லாம் என்று அவனோடு ஒன்று படும் அந்த நிலை என்று சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்துக்கு வழி காட்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html

)


Saturday, September 17, 2022

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?

கம்ப இராமாயணம் - பெண்களும் ஜொள்ளு விடுவார்களா ?


எப்பப் பார்த்தாலும் திருக்குறள், பிரபந்தம், தேவாரம், திருவாசகம் என்று இல்லாமல், இடை இடையே கொஞ்சம் வேறு விடயங்களையும் பார்ப்போம். 


எவ்வளவுதான் மனதில் காதலும், காமமும் இருந்தாலும் பெண்கள் அதை வெளியே சொல்லுவது இல்லை. தமிழ் இலக்கியம் முழுவதையும் அலசி ஆராய்ந்தாலும், பெண்கள் தங்கள் உணர்சிகளை வெளிப்படுத்திய இடங்கள் மிகக் குறைவு. பெண்களின் எழுத்துக்களில், ,பெண் உணர்வுகள் வெளிப்படும் இடங்கள் மிகக் குறைவு. 


தற்காலத்தில், புதுக் கவிதைகள் எழுதுகிறார்கள். 


கம்ப இராமாயணத்தில், கம்பன் பெண்களின் மன உணர்வுகளை பல இடங்களில் மிக அழகாக படம் பிடிக்கிறான். 


அதில் ஒரு இடம், சூர்பனகை இராம இலக்குவனர்களை கண்டு காமம் கொண்டு தன் உள்ளத்தை வெளிபடுத்தும் இடம். 


இராமன் கானகத்தில் இருக்கிறான். அவன் இருக்கும் வனப் பகுதி சூர்பனகைக்கு சொந்தமான இடம். அங்கு வந்த சூர்பனகை இராமனைப் பார்க்கிறாள். 


இராமனின் அழகில் மயங்குகிறாள். சொக்கிப் போகிறாள். மனதில் காதலும், காமமும் எழுகிறது. 


அவளுக்குத் தோன்றுகிறது....


"அந்தக் காலத்தில் சிவ பெருமான் தவம் செய்து கொண்டிருந்த போது அவரின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனை அனுப்பினார்கள். அவனும் சிவன் மீது மலர்க் கணைகளை தொடுத்தான். தவம் கலைந்த சிவன் சினம் கொண்டு மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கி விட்டார். பின், இரதிதேவி வேண்ட, யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான், உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவான் என்ற வரத்தைத் தந்தார்.அந்த மன்மதன், நீண்ட காலம் தவம் செய்து எல்லோரு கண்ணிலும் படும்படி வரம் வாங்கி வந்துவிட்டானோ....இவனைப் பார்த்தால் மன்மதன் போல இருக்கிறதே " என்று ஜொள்ளுகிறாள் .



பாடல் 


 'கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்

இற்றவன், அன்று தொட்டு  இன்றுகாறும், தான்

நல் தவம் இயற்றி, அவ்  அனங்கன், நல் உருப்

பெற்றன னாம்' எனப்  பெயர்த்தும் எண்ணுவாள்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_17.html


(please click the above link to continue reading)




 'கற்றை அம் சடையவன் = சடை முடி உடைய அந்த சிவன் 


கண்ணின் காய்தலால் = நெற்றிக் கண்ணால் எரித்ததால் 


இற்றவன் = அழிந்தவன் 


அன்று தொட்டு = அன்று முதல் 


இன்றுகாறும் = இன்று வரை 


தான் = அவன் 


நல் தவம் இயற்றி = பெரிய தவங்களைச் செய்து 


அவ் அனங்கன் = அந்த அங்கம் இல்லாதவன், அதாவது உருவம் இல்லாதவன் 


நல் உருப் பெற்றன னாம்' எனப் = நல்ல வடிவைப் பெற்றான் போலும் 


பெயர்த்தும் எண்ணுவாள் =  மீண்டும் நினைப்பாள் 


எந்தக் கதை எப்படி வந்து நிற்கிறது..


எங்காவது வாய்ப்புக் கிடைத்தால் போதும், கம்பன் இராமனை இரசிக்கத் தவறுவது இல்லை. 


சூர்பனகை மூலம் கம்பன் இராமனை அனுபவிக்கிறான்.


கம்பன் மூலம் நாமும் அந்த இரசனையில் பங்கு கொள்வோம். 




Friday, September 16, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3

  

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 3


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம். 


ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம், 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


(pl click the above link to continue reading)


இப்படித் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்ய இறைவன் அவற்றின் மேல் கருணை கொண்டு தன் நிலையில் இருந்து இறங்கி வருவான். 


ஏன் இறங்கி வர வேண்டும் ? அவன் நினைத்தால் அந்த உயிர்களை ஒரு நொடியில் பாசத்தில் இருந்து விடுவிக்க முடியாதா என்று என்னைப் போல ஒரு சிற்றறிவு உள்ளவன் கேட்கக் கூடும். .


செய்யலாம் செய்ய முடியும். ஆனால், ஏன் செய்ய வேண்டும்?  அப்படிச் செய்வதாக இருந்தால் இறைவனுக்கு ஒரு விருப்பு, வெறுப்பு இருக்க வேண்டும். ஒரு விருப்பும், வெறுப்பும் இல்லாதவன் எப்படிச் செய்வான். உயிர்கள் வெளிவருவதும், வெளி வரதாதும் அவற்றின் விருப்பம். ஆண்டவனுக்கு ஒரு விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. 


எனவே, அவன் நேரடியாக செயலில் இறங்கி தனக்கு வேண்டியதை செய்து கொள்வது இல்லை.  மாறாக, உயிர்கள் செயல் படும் ஒரு சூழலை உருவாக்கித் தருவான். என்ன செய்வது என்பது உயிர்களின் பாடு.


ஒரு ஆசிரியர், பாடம் எடுப்பார், சந்தேகம் வந்தால் சொல்லிக் கொடுப்பார். அவரே பரிட்சையும் எழுதினால் என்ன என்று கேட்கக் கூடாது. அவருக்கு விடை தெரியும். அவர் பரீட்சை எழுதினால் மாணவனுக்கு அறிவு முதிர்ச்சி எப்படி வரும்?


எனவே, உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் இறங்கி வரும் படிகள் இருக்கின்றன. 


இந்த படிகளை மொத்தம் 36 படிகளாக பிரிக்கிறார்கள். இதை 90, 96 என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இப்போதைக்கு 36 என்ன என்பதைப் பார்ப்போம். 


இந்த 36 படிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். 


சுத்த தத்துவம் 

அசுத்த தத்துவம் 

பிரகிருதி தத்துவம் 


என்று 


முதலில் சுத்த தத்துவத்தை எடுத்துக் கொள்வோம். 


இதில் மொத்தம் 5 படிகள். 


முதல் படி - நாதம். 


நாதம் என்றால் என்ன? இது அறிவின் பூர்ண வடிவம். அறிவே உருவானது. நம்மால் சிந்தித்து உணர முடியாதது. நனவிலி நிலை என்கிறார்கள். முயற்சி செய்யாதே. உன்னால் அதை அறிந்து கொள்ளவே முடியாது. இதை சைவ சித்தாந்தம் பரசிவம் என்பார்கள். நாம் பார்க்கும் வடிவங்கள் அல்ல. வடிவம் அற்ற ஒன்று அது. 


இரண்டாம் படி - விந்து 


விந்து என்றால் என்ன? இது அருள் சக்தி. ஏனைய தத்துவங்கள் பிறக்க வழி செய்யும் படி. இதை கிரியா சக்தி என்றும் சொல்லுவார்கள்.  இதுவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. 


மூன்றாவது படி - சதாக்கியம் அல்லது சதாசிவம் - அறிவும் செயலும் சேரும் இடம். ஏனைய தத்துவங்களை தூண்டும் இடம். சிவ சக்தி இணையும் இடம். 


நான்காவது படி - ஈஸ்வரம் 


ஈஸ்வரம் என்றால் என்ன ?


இந்த நிலையில் இறைவன் உயிர்களில் கலந்து நிற்பான். ஆனால், உயிர்கள் அதை அறிய மாட்டா. இதைத்தான் மறைத்தர் தொழில் என்பார்கள். மறைத்தல் என்றால் பிள்ளைகள் பொருளை மறைத்து வைத்து கண்டுபிடிக்கும் விளையாட்டுப் போல அல்ல. தான் உயிர்களில் கலந்து நிற்பதை உயிர்கள் அறியாமல் மறைப்பது. 


ஐந்தாவது தத்துவம் - சுத்த வித்தை.


சுத்த வித்தை என்றால் என்ன?  படைத்தல், காத்தல், அழிதல் என்ற முத்தொழில் தொடங்கும் இடம். இறை சக்தி முழுமையாக வெளிப்படும் இடம். இந்த இடத்தில் தான் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்று இறை சக்தி வெளிப்படும். இதை அறிந்து கொள்ளாமல், உருத்திரன் உயர்ந்த கடவுள், திருமால் உயர்ந்த கடவுள் என்று சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


இந்த ஐந்து தத்துவங்களும் சுத்த தத்துவம் என்று அழைக்கப்படும். 


மிக மிக மேலோட்டமாக சொல்லி இருக்கிறேன்.  ஆர்வம் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்க. 


புரிந்து சொல்லவில்லை. தெரிந்ததை சொல்லி இருக்கிறேன். மிக ஆழமான விடயம். 


மொத்தமாக இவை என்ன என்று புரிந்து கொள்வோம். பின் அதற்கு உள்ளே செல்லலாம். 


முப்பத்தாறு தத்துவங்களில் ஐந்து பார்த்து விட்டோம். 


மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம். 







[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html



]


Wednesday, September 14, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - நினைக்கப்படும்

  

 திருக்குறள் - அழுக்காறாமை -   நினைக்கப்படும் 


வள்ளுவர் ஆயிரம்தான் சொல்லட்டும், ஊருக்குள்ள பார்த்தால் அயோக்கியன், இலஞ்சம் வாங்குபவன், ஊரை அடித்து உலையில் போடுபவன்,பொய் சொல்லுபவன், சட்டத்தை மீறுபவன் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.நீதி, நேர்மை, ஞாயம் என்று இருப்பவன் வறுமையில், துன்பத்தில் வாடுகிறான். 


என்ன பெரிய அறம். அற வழியில் நின்றால் இன்பம், மகிழ்ச்சி வரும் என்றால் எல்லோரும் அந்த வழியில் தானே வந்து விட்டுப் போகிறார்கள். 


அறவழியில் சென்றால் துன்பம்தான என்றால் யார் அந்த வழியில் செல்வார்கள்.  இதெல்லாம் சரிப்படாது. திருக்குறள் எல்லாம் சும்மா படிக்கலாம். நல்லா இருக்கும். நடைமுறைக்கு ஒத்து வராது என்று நினைக்கத் தோன்றும். 



இந்த பிரச்சனையை வல்லுவரிடமே கேட்டு இருப்பார்கள் போல் இருக்கிறது. 


அதற்காக ஒரு குறளில் பதிலும் சொல்லி இருக்கிறார். 


பாடல் 


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_14.html


(Pl click the above link to continue reading) 


அவ்விய = மனக் கோட்டம், பொறாமை உள்ள 


நெஞ்சத்தான் = நெஞ்சத்தை உடையவன் 


ஆக்கமும் = அவன் பெற்ற செல்வமும் 


செவ்வியான் = செம்மையாக வாழ்பவன் 


கேடும்  = பெற்ற துன்பங்களும் 


நினைக்கப் படும். = நினைக்கப்படும் 



இந்தக் குறளுக்கு பரிமேல் அழகரும், கி ஆ பெ விஸ்வநாதம் அவர்களும் செய்திருக்கும் உரை பிரமிக்கத் தக்கது. நம்மை ஒரு தனி உலகுக்கே கூட்டிச் செல்கிறார்கள். 


முதலாவது, "அவ்விய நெஞ்சத்தான்" என்றவர் "செவ்விய நெஞ்சத்தான்" என்று சொல்லவில்லை.  "செவ்வியான்" என்று நிறுத்தி விட்டார்.  அதை செவ்விய நெஞ்சத்தான் என்று நீயே புரிந்து கொள் என்கிறார் கி ஆ பெ. 


இரண்டாவது, அவ்வியம் என்றால் வளைந்த, கோணலான, என்று பொருள். இந்த அதிகாரத்தில் வருவதால் நாம் அதை "பொறாமை" குணம் உள்ள என்று எடுத்துக் கொள்ளலாம். 


மூன்றாவது,  இந்தக் குறளில் "உளவாயின்" என்ற சொல் எஞ்சி நிற்கிறது என்கிறார் பரிமேலழகர்.  எப்படி என்றால் பொறாமை குணம் உள்ளவனுக்கு செல்வமும், நேர்மையான மனம் உள்ளவனுக்கு கெடுதலும் "உளவாயின், உண்டானால்" அது நினைக்கப்படும்  என்று கொள்ள வேண்டும். அதில் உளவாயின் என்ற சொல் மறைந்து நிற்கிறது என்கிறார். அப்படி எல்லாம் நடக்காது, ஒரு வேளை நடந்தால், அது நினைக்கப்படும். 


நான்காவது, "நினைக்கப்படும்" என்றால் யாரால் நினைக்கப்படும்? அறிவு உள்ளவனால்தான் சிந்திக்க முடியும். எனவே, அறிவுள்ள சான்றோரால் இது சிந்திக்கப்படும் என்கிறார். 


ஐந்தாவது, என்ன சிந்திப்பார்கள்? 


பொறாமை குணம் உள்ளவனிடம் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அதை அவன் பெரிதாக நினைக்க மாட்டான். தன்னைவிட மற்றவர்கள் அதிகம் வைத்து இருக்கிறார்களே என்று எண்ணியே பொறாமைப்பட்டுக் கொண்டு இருப்பான். அவன் செல்வதை அவனே பெரிதாக நினைக்காத போது, நீ ஏன் அவன் செல்வம் வைத்து இருக்கிறான், மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைக்கிறாய்?


அதே போல், பொறாமை இல்லாதவன், இருக்கிறதைக் கொண்டு சந்தோஷமாக இருப்பான். அவனுக்கு யார் மேலும் பொறாமை இல்லை. அவன், அவனுக்கு கிடைத்ததைக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறான். அவனே வருந்தாத போது நீ ஏன் அது கேடு என்று நினைக்கிறாய் என்று "நினைத்துப் பார்" என்கிறார். 


பொறாமை உள்ளவன் செல்வம் சேர்க்கலாம். அதை செல்வழிப்பானா? அதன் பலனை அனுபவிப்பானா? நாலு பேருக்கு கொடுத்து மகிழ்வானா? மாட்டான்.   மேலும் மேலும் வேண்டும் என்றே அலைந்து கொண்டிருப்பான்.  அந்த செல்வதால் அவனுக்கு ஒரு பலனும் இல்லை.  யோசித்துப் பார் என்கிறார். 


மாறாக, பொறாமை இல்லாதவன் தன் செல்வதை தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்வான். யோசித்துப் பார். 


பொறாமை கொண்டவன், தன் அவசரத்தில் ஏதேதோ செய்து செல்வம் சேர்ப்பான். பல குருக்கு வழிகளில் சென்று செல்வம் சேர்ப்பான். அது நல்லதா? அது நன்மை பயக்குமா? 



பொறாமை குணம் உள்ளவனுக்கு நன்மையும், நல்லவனுக்கு தீமையும் வராதே. எப்படி வந்தது? சிந்தி. 


கெட்டவனுக்கு உள்ள ஆக்கம் ஒரு ஆக்கமா? சிந்தி. 


கெட்டவனின் ஆக்கமும், நல்லவனின் வறுமையும் ஒன்றா ? சிந்தி.


எது உயர்ந்தது, எது தாழ்ந்தது சிந்தி. 


இப்படி நிறைய சிந்திக்கலாம். 


வள்ளுவர் "நினைக்கப்படும்" என்று ஏன் சொன்னார் என்றால் 


உலகம் இப்படிதான் இருக்கிறது. நல்லவனுக்கு காலம் இல்லை. கெட்டவனுக்குத்தான்  காலம் என்று தீய காரியங்கள் செய்ய இறங்கி விடாதே. சிந்தித்துப்பார்.  அப்படி இருக்க வழி இல்லை. யோசி என்கிறார். 


துன்பம் எல்லாம் துன்பம் இல்லை. இன்பம் எல்லாம் இன்பம் இல்லை. 


பள்ளிக் கூடம் போகாமல் 'கட்' அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும், நாள் பூராவும் படிப்பதும்....எது இன்பம், எது துன்பம்? நினைக்கப்படும். 


இன்பமும், துன்பமும் நிரந்தரமா? மாறுமா?  நினைக்கப்படும். 


சிந்திக்காமல், தவறான முடிவை எடுத்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். 








நான்காவது, 






(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html


குறள்  எண் 167 :உய்த்துவிடும்  

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html

)


Monday, September 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)

   

நாலாயிர திவ்ய பிரபந்தம் - உலகம் உண்ட ஊண் (3596)



காலம் என்றால் என்ன?


மிகக் கடினமான கேள்வி. 


காலம் என்றால் வருடம், மாதம், வாரம், நாள், பகல், இரவு, மணி, நிமிடம், நொடி என்று சொல்லலாம். அவை காலங்கள் அல்ல. அவை கால இடைவெளிகள். இரண்டு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள அளவைகள் அவை. சூரியன் உதித்து, மறைந்து மீண்டும் உதிக்கும் அந்த இரண்டு உதயங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி ஒரு நாள். நாளின் பகுதி பகல், இரவு. பகல் இரவின் பிரிப்பு மணி, நிமிடம் என்பது எல்லாம். 


நமக்கு ஒரு நாள் என்பது இருபத்தி நாலு மணி நேரம். ஆனால், செவ்வாயிலோ, வியாழன் கிரகத்திலோ இருபத்தி நான்கு மணியைவிட அதிகம் இருக்கும். அது, அந்தந்த கிரகங்கள் சுற்றும் வேகத்தைப் பொறுத்தது. 


யோசித்துப் பாருங்கள், சூரியன் இல்லாவிட்டால் நம் நாள் கணக்கு என்ன ஆகும். நாளும் இல்லை, பகலும் இல்லை. கோடை, குளிர் போன்ற காலங்கள் இல்லை. இராகுகாலம், எமகண்டம் போன்றவை இல்லை.


காலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இல்லை என்று ஆகும். ஜோதிடம் கணிக்க முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் வாழும் இந்த பூமி வெகு வேகமாக சுற்றுகிறது. அது தன்னைத் தானே சுற்றுவது மட்டும் அல்ல, சூரியனையும் சுற்றுகிறது. பூமியும் சூரியனும் சேர்ந்து சுற்றுகின்றன. இப்படி எத்தனை சுற்றுகள் இருக்கிறதோ தெரியாது. ஆனால், நமக்கு ஏதாவது தெரிகிறதா? 


இவ்வளவு பெரிய பூமி, இவ்வளவு வேகமாக சுற்றினாலும், ஒன்றும் இடத்தை விட்டு அசைவது இல்லை. 


நம் வீடு அதே இடத்தில் தான் இருக்கிறது.நம் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில், தபால் நிலையம், கடைகள் எல்லாம் அந்தந்த இடத்தில் அப்படியே இருக்கின்றன. 



யோசித்துப் பாருங்கள், காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடு ஒரு ஐநூறு கிலோமீட்டர் வடக்கே நகர்ந்து போய் விடுகிறது, உங்கள் ஊருக்கு வெளியே இருந்த மலையைக் காணோம், புதிதாக உங்கள் வீட்டு வாசலில் ஒரு நதி ஓடுகிறது. எப்படி இருக்கும்?


சரி, அதுவும் ஒரு புறம் இருக்கட்டும். 


அது மட்டும் அல்ல, கடல் பொங்குகிறது, சூரியன் கொஞ்சம் நெருங்கி வந்ததில் பூமி பயங்கர சூடாகி எல்லாம் தீ பற்றி எரிகின்றன, கடல் நீர் உலை நீர் போல் கொதிக்கிறது...இதெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும். 


விண்மீன்கள் இடம் மாறிப் போகின்றன. அண்ட வெளியில் பூமிப் பந்து எங்கோ பறந்து கொண்டிருக்கிறது. 


அந்த பிரமாண்டத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? கண் மூடி ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


உலகமே கலங்குவதை உங்கள் கற்பனையில் நினையுங்கள். 


நம்மாழ்வார் சொல்கிறார் 


"காலம் என்ற ஒன்று மாறிப் போனது. கடல் நீர் இடம் மாறிப் போனது. ஊரெல்லாம் கடல் நீர். விண்ணில் கோள்கள் இடம் மாறிப் போயின. காற்று புயலாக அடிக்கிறது.  மலைகள் அடியோடு புரள்கின்றன. சூரிய, நட்சத்திரம் போன்றவை திசை கெட்டுத் திரிகின்றன."

"இது எப்போ ?" என்று கேட்டால்


ஊழிக் காலத்தில், இந்த உலகம் அனைத்தையும் திருமால் உண்டு தன் வயிற்றில் அடக்கிய அந்த நாளில். 



பாடல் 


நாளு மெழநில நீரு மெழவிண்ணும்

கோளு மெழேரி காலு மெழ,மலை

தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்

ஊளி யெழவுல கமுண்ட வூணே.



சீர் பிரித்த பின் 


நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்

கோளும்  எழ காலும் எழ  மலை

தாளும் எழ சுடர் தானும் எழ  அப்பன்

ஊளி எழ உலகம் உண்ட ஊண் 


பொருள் 





(pl click the above link to continue reading)




நாளும் எழ  = நாள், வாரம், மாதம் போன்ற காலங்கள் கலங்கி எழ 


நில நீரும் எழ  = நிலமும், நீரும் கலங்கி எழ 


விண்ணும், கோளும்  எழ = அண்ட வெளியும், அதில் உள்ள கோள்களும் எழ 


காலும் எழ = காற்று எழ 


மலை தாளும் எழ = மலைகளின் அடிவாரங்கள் (தாள் = அடி) பெயர்ந்து எழ 


 சுடர் தானும்  எழ  = சூரியன், நட்சத்திரம் போன்றவை எழ 


அப்பன் = என் தந்தை திருமால் 


ஊளி எழ = ஊழிக் காலத்தில்  


உலகம் உண்ட ஊண்  = இந்த உலகம் அனைத்தையும் ஒரு உணவாக வாயில் போட்டு விழுங்கிய போது 



உண்மையோ, பொய்யோ, அது ஒரு புறம் இருக்கட்டும். 



எவ்வளவு பெரிய, விரிந்த, பிரமாண்டமான கற்பனை. 




அவர் காட்டும் அந்த நிகழ்வை மனதில் ஓட விட வேண்டும். 


இல்லாத ஒன்றை நினைக்க முடிகிறது அல்லவா?


நிகழாத ஒன்றை கற்பனை செய்ய முடிகிறது அல்லவா?


ஒரு பாடகர் கல்யாணி இராகத்தில் ஒரு பாடல் பாடுகிறார். எனக்கு இசை அறிவு இல்லை. எனக்கு அது கல்யாணி என்று தெரியாது. இசை தெரிந்தவருக்கு அது கல்யாணி என்று புரியும். 


எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அது கல்யாணி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும். 


காதில் ஒலி விழுகிறது. காது நன்றாகக் கேட்கிறது. இருந்தும் கல்யாணி புரியவில்லை. 


இசை அறிவு பெருகினால், அது புரியும். 


அவர் ஏதோ சொல்கிறார். எனக்குப் புரியவில்லை.  


உங்களுக்கு?


(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html



)


Sunday, September 11, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2

 

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 2 


(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 



உலகில் நிரந்தரமானவை, தோற்றமும், அழிவும் இல்லாதவை மூன்று என்று பார்த்தோம்.  (https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html)


அவை பதி,பசு, பாசம் என்பன. 


பதி - இறைவன். 

பசு - உயிர்கள் 

பாசம் - கயிறு 


ஆச்சரியமான விடயம் என்ன என்றால், உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்பதுதான். இறைவன் என்று உண்டோ, உயிர்களும் அன்றே உண்டு. 


"என்று நீ அன்று நான்" என்பார் தாயுமானவர். 


உயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், பின் யார் படைத்தார்கள் என்றால், யாரும் படைக்கவில்லை என்பதுதான் பதில். அது என்றும் உள்ளது. சீரணிக்க சற்று கடினம்தான். இப்போதைக்கு அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

(pl click the above link to continue reading)


இந்த மூன்றில் பதியும், பசுவும் அறிவு உள்ளவை. பாசம் அறிவு இல்லாதது. 


இறைவன் - பேரறிவாளன்

உயிர்கள் - சிற்றறிவு உள்ளவை 


இதுவரை விளங்கி விட்டது அல்லவா? 


இனி அடுத்த கட்டம் நோக்கி நகர்வோம். 


இந்த உயிர்கள், நியாமாகப் பார்த்தால், இறைவனை நோக்கித்தான் நகர வேண்டும். அறிவு, அறிவோடு சேர்வதுதானே இயற்கை. 


மாறாக, இந்த உயிர்கள் இறைவனை விடுத்து பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன. ஆணவம் என்ற பாசத்தில் கட்டுண்டு விடுகின்றன.நான், எனது என்ற ஆணவத்தில் உயிர்கள் சிக்கி விடுகின்றன. 


சிக்கிவிட்டால் அவற்றால் அதில் இருந்து வெளிவர முடிவதில்லை. அறியாமை என்ற இருளில் மூழ்கிப் போய், திக்கு திசை தெரியாமல் மாட்டிக் கொள்கின்றன. சுற்றிலும் இருட்டு. பாதை எது என்று தெரியவில்லை. எந்தப் பக்கம் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று தெரியாமல் திகைத்து உறைந்து போய் நிற்கின்றன. 


இப்படி கொஞ்ச காலம் போன பின்னால், இந்த அறியாமை இருளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. 


இந்த ஆசைதான் மூல கன்மம் (கர்மம்) என்கிறார்கள். 


கர்மா கொள்கையை படிப்பவர்கள், ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்தால் தோன்றுகிறது என்றால் முதன் முதலில் தோன்றிய கர்மம் எதனால் தோன்றியது என்று கேட்பார்கள். அதற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மூல கன்மம் என்பது உயிர்களின் ஆசை. அறியாமையில் இருந்து வெளிப்பட்டு அறிவை அடைய வேண்டும் என்ற ஆசை. அதில் இருந்து வந்ததுதான் எல்லாம். அது ஏன் வந்தது என்று பார்த்தோம். 


சரி, உயிர்களுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை மட்டும் போதுமா? எப்படி அதை அடைவது?


அவை தானே வெளிவர முடியாது. 


உயிர்களின் துன்பத்தைக் கண்டு இறைவன் அவற்றின் மேல் இரக்கம் கொண்டு உதவி செய்ய நினைக்கறான். 


அவன் அப்படி செய்ய நினைத்த உதவியின் வெளிப்பாடுதான் இந்த 36 தத்துவங்களும். 


நான் முன்பே சொன்னது போல, இது எல்லாம் நான் அறிந்து, புரிந்து, அனுபவத்தில் தெளிந்து சொல்லவில்லை.இது என்ன என்ற ஆர்வத்தில், நான் வாசித்ததை, ,கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இவை நான் கண்டு பிடித்ததோ அல்லது நான் புரிந்து கொண்டதோ அல்ல. 



உங்களுக்கு பல சந்தேகங்கள் வரலாம். உங்கள் தேடலை தொடங்குங்கள். அதுதான் உண்மையான ஞானத்தின் அடிப்படை. 


[

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


]


Saturday, September 10, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - உய்த்துவிடும்

 

  திருக்குறள் - அழுக்காறாமை -   உய்த்துவிடும்  


என்ன முயற்சி செய்தாலும், பொறாமை வரத்தானே செய்கிறது. பொறாமை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது? அதுபாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்கிறது. என்ன செய்வது? 


பொறாமை வந்து விட்டால் என்ன ஆகும்? அதனால் என்ன தீமை? பொறாமை பட்டு மற்றவர்களைப் போல நானும் முன்னேறுவேன், இல்லையெனில் பொறாமை பட்டுக் கொண்டே இருப்பேன். இதனால் யாருக்கு என்ன நட்டம்? 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ பொறாமை கொண்டால் யாருக்கும் ஒரு தீமை விளையுமா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உனக்கே பெரிய தீமை வருமே. அது பரவாயில்லையா? 


என்ன தீமை தெரியுமா?   


இந்தப் பிறவியில் உன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் அழித்து, பின் மறு பிறவியில் உன்னை நரகத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்...இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும் ஒன்று உனக்குத் தேவையா?" என்று வள்ளுவர் கேட்கிறார். 


பாடல் 


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 


அழுக்காறு = பொறாமை 


எனஒரு = என்ற ஒரு 


பாவி = பாவி 


திருச்செற்றுத் = செல்வதை (திரு) அழித்து (செற்று )


தீயுழி = தீயில் 


உய்த்துவிடும் = தள்ளிவிடும் 


தீயில் தள்ளுவது என்றால் இந்தப் பிறவியில் ஏதோ தீயில் தள்ளுவது அல்ல. இறந்த பின், நரகத்தில் உள்ள தீயில் தள்ளிவிடும். 


அது எப்படி செல்வதை அழிக்கும், நரகத்தில் தள்ளும்?


என்னிடம் கொஞ்சம் செல்வம் இருக்கிறது. அதை நான் இன்பமாக அனுபவிக்க முடியும். ஆனால், அடுத்தவனிடம் என்னைவிட அதிகம் செல்வம் இருக்கிறதே என்ற பொறாமை வந்துவிட்டால் என்ன நிகழும்?


அவனை விட அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை வரும். இருக்கிற பணத்தை செலவழிக்க மனம் வராது. நல்ல வீடு, கார், உடை, குடும்பத்தோடு பயணம், நல்ல உணவு என்று ஒன்றிலும் செலவு செய்ய மனம் வராது. பணம் இருந்தும், பணம் இல்லாத ஏழையைப் போல தரித்திரன் போல இருப்பான். 


இருக்கு,, ஆனால் இல்லை. 


இன்னும் சில பேர் என்ன செய்வார்கள் என்றால், மற்றவனுக்கு நான் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று காட்ட கடன் வாங்கி செலவழிக்க நினைப்பார்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பின் வட்டி கட்டியே இருக்கிற செல்வம் அழியும். 


வேறு சிலரோ, இப்படி வேலைக்கு போய் சம்பாதித்தால் காரியம் ஆகாது என்று குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டு, மானம் போய், இருக்கிற வேலையும் போய், செல்வம் எல்லாம் கரைந்து அவதிப் படுவார்கள். 


வேறு சிலரோ, தொழில் தொடங்கினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத தொழில் இறங்கி நட்டப்பட்டு முதல் இழப்பார்ர்கள். 


இன்னும் கொஞ்சம் பேர், இந்த மாதிரி வங்கிகளில் போட்டு வைத்தால் நிறைய வட்டி கிடைக்காது என்று அதிக வட்டி தரும் நிருவனங்களி ல் பணத்தைப் போட்டு முதல் இழப்பார்கள். 


காரணம் என்ன, மற்றவன் தன்னைவிட அதிகம் சேர்த்து விட்டானே என்ற பொறாமையால் வந்த பதற்றம். 


இருக்கிற பணமும் போகும். "திரு செற்று" 


இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், தவறான வழியில் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். சட்டத்துக்கு, நீதிக்கு புறம்பான செயல்களை செய்து பணம் சம்பாதித்து விடலாம். அந்தப் பணத்தைக் கொண்டு தண்டனையில் இருந்தும் தப்பி விடலாம். 


நரகம் என்று  ஒன்று இருக்கிறது. இங்கே தப்பலாம். அங்கே முடியாது என்கிறார் வள்ளுவர். 


பொறாமையால் எவ்வளவு துன்பம். 


தேவையா? 


பொறாமை என்பது ஒரு குணம். ஆனால் வள்ளுவர் "அழுக்காறு எனஒரு பாவி" என்கிறார். பாவி என்றால் ஒரு ஆள். குணம் எப்படி ஆள் ஆக முடியும்?


ஒரு திருடன், கொள்ளைக்காரன், அயோக்கியன் நமக்கு என்னவெல்லாம் தீமை செய்யக் கூடுமோ, அதை எல்லாம் இந்த பொறாமை நமக்குச் செய்யும் என்பதால் பொறாமையை "பாவி" என்று உருவகம் செய்தார். 


ஒரு மோசமான கொள்ளைக்காரன் என்ன செய்வான்? 


நம்மை அடித்து, துன்புறுத்தி, நம் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொண்டு நம்மையும், நம் குடும்பத்தையும் நடுத் தெருவில் நிறுத்தி விடுவான் அல்லவா? அதையேதான் இந்த பொறாமையும் செய்யும் என்கிறார். 



(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html





)