கந்தரனுபூதி - பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
பெரிய வீடு வேண்டும், வங்கியில் பல கோடிக்கு பணம் வேண்டும், பெரிய கார் வேண்டும், வருடத்துக்கு நாலு அயல் நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும், போட்ட பணத்துக்கு ஒன்றுக்கு பத்து வட்டி வேண்டும், அந்த நடிகர்/நடிகை போல் அழகாக இருக்க வேண்டும்...இப்படி எல்லாம் ஆசைப்படாதவர் யார்?
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நம் புராணங்களில் அரக்கர்கள் என்று சிலர் வருவார்கள். அவர்களின் குணத்தை ஆராய்ந்தால் ஒன்று பொதுவான குணமாகப் படும்.
உலகை எல்லாம் கட்டி ஆள வேண்டும், எல்லோரும் தனக்கு அடிபணிய வேண்டும், சாகா வரம் இல்லாவிட்டாலும் மிக மிக நீண்ட நாள் வாழும் வரம் வேண்டும், தேவர்களும் தனக்கு அடி பணிய வேண்டும்....என்று அவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
ஆசை. பேராசை.
யார் உன்னை வணங்கினால் என்ன, வணங்காவிட்டால் என்ன? அதனால் உனக்கு என்ன பலன்?
அவன் பலத்துக்கு அவன் பேராசை. நம் பலத்துக்கு நாம் ஆசைப் படுகிறோம். வேண்டுமானால் நம்மை குட்டி அரக்கர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.
அந்த அரக்கர்கள் கொண்ட பேராசையால் விளைந்தது என்ன? அவர்கள் கேட்டது எல்லாம் கிடைத்தது. அத்தனை உலகையும் ஆண்டார்கள். ஆனால், இறைவனை விட்டு வெகு தூரம் போய் விடுகிறார்கள். இறுதியில் வரம் தந்த இறைவனே அவர்களை அழிக்கிறான். அது நான் நிகழும்.
ஆசை, பேராசை இறைவனை விட்டு நம்மை வெகு தூரம் கொண்டு சென்று விடும். அதனால் வரும் துன்பங்கள், பின் அழிவு.
அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனை குறித்து தவம் இருந்து, வரங்களைப் பெற்று, அதனாலேயே அவர்கள் அழிந்தார்கள்.
இன்றும் அது நடக்கிறது. கோவிலுக்கு நடையாக நடக்கிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள்...
இலக்கியம் கொஞ்சம் மிகைப் படுத்தித் தான் சொல்லும். அதன் உள்ளே உள்ள பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அருணகிரிநாதர் சொல்கிறார்
"பேராசை என்ற பிணியால் கட்டப்பட்டு நான் துன்பத்தில் தவிப்பது சரியா? சூரனின் மலை அழிய வேலை விடுத்தவனே, தேவ லோக அதிபதியே, என்னை இந்த பேராசைப் பிணியில் இருந்து காத்தருள்வாய்" என்று.
பாடல்
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ,
ஓரா வினையேன் உழலத் தகுமோ ?
வீரா ! முதுசூர் படவேல் எறியும்
சூரா ! சுரலோக துரந் தரனே .
பேராசை = பேராசை
எனும் = என்ற
பிணியில் = நோயில்
பிணிபட்டு , = கட்டப்பட்டு
ஓரா = சிந்திக்கும் திறன் அற்ற
வினையேன் = வினை உடையவனான நான்
உழலத் தகுமோ ? = துன்பப் படுவது தகுமோ ?
வீரா ! = வீரனே
முதுசூர் = சூரர்களில் மூத்தவனான பத்மாசுரன்
பட = மேலே படும் படி
வேல் எறியும் = வேலை எறிந்த
சூரா ! = சூரனே
சுரலோக = தேவர் உலகை
துரந் தரனே . = காப்பவனே
தமிழில் நோய், பிணி என்று இரண்டு சொற்கள் உண்டு.
நோய் என்றால் மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும்.
பிணி என்றால் குணமாகாது. சர்க்கரை நோய், கான்சர் போல. குறையும், பின் வந்து விடும். போகாது.
பசியைப் பிணி என்று சொல்லுவார்கள். காலையில் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும் மதியம் வந்து விடும். மதியம் சாப்பிட்டால் பசி குறைந்த மாதிரி இருக்கும், இரவு பசிக்கும். விடாது.
பிறவிப் பிணி என்பார்கள். விடாது தொடரும்.
அருணகிரி நாதர் பேராசை எனும் பிணி என்கிறார். அது விடாது. ஒன்றைக் கொடுத்தால் அடுத்தைக் கேட்கும். நூற்றி எட்டு அண்டம் கொடுத்தால் ஆயிரத்து எட்டு அண்டத்தையும் கொடு என்று கேட்கும்.
நம் துன்பத்துக்கு எல்லாம் காரணம் இந்த பேராசைதான்.
அதை அறியாமல் எதை எதையோ நினைத்து புலம்புகிறோம்.
"ஓரா வினையேன்" என்றார். சிந்திக்கும் திறன் இல்லாதவன். நான் கொண்ட பேராசையால் எனக்கு துன்பம் வந்தது என்று அறியாமல் இருக்கிறேனே என்கிறார்.
முருகா, நீ சூரபத்மனின் கிரௌஞ்ச மலையை உன் வேலால் அழித்தவன். என் பேராசையை உன்னால் அழிக்க முடியும். எனவே, என் ஆசைகளை அழித்து என்னையும் காப்பாற்று என்று வேண்டுகிறார்.
நாம் எல்லாம் நம் ஆசைகளை நிறைவேற்றி வை என்று ஆண்டவனை வேண்டுவோம்.
அருணகிரிநாதர், அவர் ஆசைகளை நீக்கி விடு என்று ஆண்டவனை வேண்டுகிறார்.
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html
முருகன் கழல் பெற்று உய்வாய்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html
என்று அருள்வாய் ?
]
No comments:
Post a Comment