Tuesday, January 15, 2013

புற நானூறு - இன்றும் வரும் கொல் ?


புற நானூறு - இன்றும் வரும் கொல் ?

இன்னைக்கும் வருவார்களா ?

அவன் பெரிய கொடையாளி. எல்லோருக்கும் இல்லாருக்கும் உதவி செய்பவன். நல்ல வீரனும் கூட. ஒரு நாள், அவன் ஊரில் உள்ள பசுக்களை பக்கத்து நாட்டு அரசனின் படைகள் கவர்ந்து சென்று விட்டன. அதை கேள்விப் பட்டு, இவன் சண்டைக்குப் போனான். சண்டையில் இவன் பக்கம் வெற்றி பெற்றாலும், அவன் சண்டையில் இறந்தான். அவனை அடக்கம் பண்ணி, அடக்கம் பண்ணிய இடத்தில் ஒரு கல்லை நட்டு வைத்தனர். அந்த கல்லை பூவாலும், மயில் சிறகாலும் தடவிக் கொடுத்தனர். அப்போது அங்கே வந்த புலவர் ஒருவர் நினைக்கிறார், இவன் இப்படி இறந்து போனது ஊருக்குள் தெரியுமோ தெரியாதோ...இவனிடம் உதவி பெற இன்னைக்கும் வருவார்களா என்று துக்கம் இதயத்தை நிறைக்க நினைத்துப் பார்க்கிறார்.....

பாடல்


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

பொருள்




பரலுடை = பரல் என்றால் கல். கற்களை உடைய

மருங்கிற் = பக்கத்தில்

பதுக்கை = உயர்ந்த இடம், மேடு, குன்று, மலை

சேர்த்தி = சேர்த்து

மரல் = பட்டை உரிக்கும் மரம். நார் உள்ள மரம்

வகுந்து தொடுத்த = சேர்த்து தொடுத்த

செம்பூங் கண்ணியொடு = சிவந்த பூக்களை கொண்டு கட்டிய மாலையோடு

அணிமயிற் பீலி சூட்டிப், =  அழகிய மயில் இறகையும் சூட்டி

பெயர்பொறித்து = அவன் பெயரை பொறித்து

இனிநட் டனரே! கல்லும் = கல்லை நட்டு விட்டார்களே

கன்றொடு = கன்றோடு

கறவை தந்து = பசு மாட்டையும்

பகைவர் ஓட்டிய = பகைவர்கள் ஓட்டிய

நெடுந்தகை = பெரியவன், சான்றோன், வீரன், தலைவன்

கழிந்தமை அறியாது = இறந்ததை அறியாது

இன்றும் வருங்கொல் = இன்றும் வருவார்களோ ?

பாணரது கடும்பே = பாணரும், அவன் சுற்றாதரும்

1 comment:

  1. பாணர்கள் பாடல் பாடிப் பரிசு பெற்று வாழ்பவர்கள் அல்லவா? இந்தப் புலவரும் அப்படிதான் வந்தார் போலும். வரும் வழியில், கல்லறையைப் பார்த்துவிட்டு, தன்னைப்போல் இன்னும் பாணர்கள் வந்தால் எல்லோரும் ஏமாற்றம் அடைவரே என்று பாடுகிறார்.

    என்ன அழகான பாடல்!

    பக்தி இலக்கியம் தவிர்த்து, வேறு பாடல் தந்ததற்கு நன்றி!

    ReplyDelete