Sunday, January 6, 2013

பிரபந்தம் - அறிவின் பயன்


பிரபந்தம் - அறிவின் பயன்


எவ்வளவு படித்தாலும் அதன் பயன் என்ன ? பணம் சம்பாதிப்பது - சொத்து சேர்ப்பது - சேர்த்த சொத்தை அனுபவிப்பது அவ்வளவுதானா ? இதைத் தாண்டி எதுவும் இல்லையா ?

அறிவு பெற்றதின் பலன் மீண்டும் பிறவாமை என்ற நிலை அடைதல். 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

என்பார் வள்ளுவர். மற்று ஈண்டு (இங்கு) வாரா நெறி...இங்கு வரதா முறையை காண்பது மெய்பொருள் கண்டவர்களின் கடமை.  

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர். 

இன்னுமோர் கருப்பையூர் வாராமற் கா என்று புலம்புகிறார் பட்டினத்தார் ....

இங்கு நம்மாழ்வார் இறைவன் தான் அறிவு பெற்றதின் பயன் என்கிறார். இறைவனை அறிதல், பிறவி என்னும் கடலை நீந்தி, அவனை அடைதல் இந்த அறிவு பெற்றதின் பலன்.

எனக்கு தொல்லை தரும் வினைகள் என்னை எப்போதும் என்னை சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. நீ என் அருகில் இருந்தால் அவற்றிற்கும் எனக்கும் உள்ள தொடர்பை அறுத்து, உன் அடி சேர அருள் புரிவாய். இந்த உடல் புலன்களின் ஆசையின் பின்னே சென்று கொண்டு இருக்கிறது. நெய் கொண்டு தீயை அவிப்பதைப் போல, இந்த புலன்கள் கேட்பதை எல்லாம் கொடுத்து அவற்றின் ஆசைகளை நிறைவேற்றப் பார்க்கிறேன். மேலும் மேலும் வேண்டும் என்று அவை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அடியில்லாக் குழியில் எவ்வளவு போட்டாலும் அது நிறையாது. அது போல, எவ்வளவு தந்தாலும் இந்த புலன்கள் இவற்றின் ஆசைகளில் இருந்து திருப்தி அடைவதே இல்லை. இப்படி ஆசைகளின் பின்னே போய் இன்னும் எத்தனை நாள் உன்னை விட்டு விலகி இருப்பேன் ?

உன் திருவடியையை அடையும் பேரை எனக்கு அருள்வாயா என்று வேண்டுகிறார். 

பாடல் 

சூழ்கண் டாயென் தொல்லை வினையை
  அறுத்துன் அடிசேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து
  எனைநாள் அகன்றிருப்பன்?
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்.
  வானோர் கோமானே,
யாழி னிசையே! அமுதே! அறிவின்
  பயனே! அரியேறே.


பொருள்

சூழ் கண்டாய் = என்னை சூழ்ந்து, என்னை அடுத்து 

என் தொல்லை வினையை = எனக்கு தொல்லை தரும் வினையை

அறுத்து = அறுத்து

உன் அடிசேரும் = உன்னுடைய திருவடியை சேரும் 

ஊழ் = வினைபயன், விதி

கண்டிருந்தே = கண்டு 

தூராக் குழிதூர்த்து = அடைக்க முடியாத குழியை அடைக்க நினைத்து

எனைநாள் அகன்றிருப்பன்? = எத்தனை நாள் உன்னை விட்டு விலகி இருப்பேன் ?

வாழ் = எப்போதும், நீண்ட நாளாய் இருக்கும்

தொல் புகழார் = புகழை உடைய
 
குடந்தைக் கிடந்தாய் = குடந்தையில் சயனம் கொண்டு இருக்கும்

வானோர் கோமானே = வானோர்களின் தலைவனே

யாழி னிசையே! = யாழின் இசை போல் இனிமையானவனே

அமுதே! = அமுதம் போன்றவனே
 
அறிவின்   பயனே! = அறிவு பெற்றதின் பயனே

அரியேறே = சிம்மமும் ஏறு போன்றவனே 

No comments:

Post a Comment