Tuesday, January 8, 2013

பிரபந்தம் - எவன் அவன் ?


பிரபந்தம் - எவன் அவன் ?


நம்மாழ்வார் இறைவனை பற்றி சொல்ல வருகிறார். 

அவன் உயர்ந்த குணங்களை உடையவன் என்று சொல்லலாம். ஆனால் உயர்ந்த என்று சொன்னால் எதை விட உயர்ந்த என்ற கேள்வி வரும். ஏதோ ஒன்றை அல்லது யாரோ உருவரை காட்டி அதை விட அல்லது அவரை விட உயர்ந்த குணங்கள் உள்ளவன் இறைவன் என்று சொல்லலாம். அது சரியாக இருக்குமா ? மனிதர்களோடு வைத்து இறைவனின் குணங்களை எடை போட முடியுமா ? எனவே,  இறைவன் உயர்வு என்று எதை எல்லாம் சொல்கிறோமோ அதையும் விட உயர்ந்த குணங்களை உடையவன். உயர்வு + அற , உயர்வு என்ற ஒன்றே அற்றுப் போகும் படி உயர்ந்த குணங்களை உடையவன். உயர்வு என்று சொல்லே அவனுக்கு பொருந்தாது. அவ்வளவு உயர்ந்தவன். உயர்வு என்ற எந்த ஒன்றோடும் ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு உயர்ந்தவன் அவன்.  

நாம் பல சமயம் எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று அறியாமல் குழம்புகிறோம். அறிவு மயக்கம் கொள்கிறது. அந்த மயக்கம் அற்றுப் போகும் படி நமக்கு நல்ல புத்தியையை அருளுபவன் அவன்.

அயர்வு என்றால் மறதி. யார் இதற்க்கெல்லாம் மூல காரணம் என்பதை சில சமயம் மறந்து நாம் தான் எல்லாம் என்று நினைக்கத் தலைப் படுகிறோம். என்னால் தான் எல்லாம், என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இங்கே என்று ஆணவம் சில சமயம் தலைக்கு ஏறலாம். நாம் எப்படி இருந்தோம், எங்கிருந்து வந்தோம், என்ன ஆவோம் என்று தெரிந்து இருந்தாலும் அவற்றை மறந்து விடுகிறோம். அந்த மறதியையை போக்குபவன் அவன்.    

வாழ்வில் எத்தனை துயர் வந்தாலும் அவற்றை அறுத்து நமக்கு ஆறுதல் தரும் அவனுடைய ஜோதிமயமான திருவடிகளை தொழு என் மனமே 

என்று தன் மனதிற்கு சொல்கிறார் நம்மாழ்வார். 

(யாரை தொழும்படி நம்மாழ்வார் தன் மனதிற்கு கட்டளை இடுகிறார் - +2 வினாத்தாள் - 5 மதிப்பெண்கள் ...:))

பாடல் 


உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே


பொருள்

உயர்வற = உயர்வு + அற

உயர்நலம் = உயர்ந்த நலன்களை

உடையவன் யவன் = உடையவன் எவன் ? 

அவன் = அவன் 

மயர்வற = மயக்கம் அற்றுப் போகும்படி 

மதிநலம் அருளினன் = நல்ல புத்தியையை அருளியவன்

யவன் = அப்படி அருளினவன் எவன் ?

அவன் = அவன் வேறு யாரும் அல்ல

அயர்வறும் = மறதி உறும் 

அமரர்கள் அதிபதி யவன் = அமரர்களின் அதிபதி அவன்

அவன் துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே = துயரங்களை அறுக்கும் அவன் சுடரொளி வீசும் திருவடிகளை தொழுது எழு என் மனமே

9 comments:

  1. கடவுளை ஏன் யவன் அவன் என்று மரியாதை இல்லாமல் எழுதினார்? இல்லை அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் இறைவனை அவன் இவன் என்று தான் எழுதுகிறார்கள்...அவன் அருளாலே அவன் thaazh வணங்கி என்கிறார் மணிவாசகர்.
      அருணகிரி ஒரு படி மேலே போய் - வண்டமிழால் அன்று வைதாரையும் வாழ வைப்போன் என்கிறார்.
      காளமேகம் - ஏன் எல்லோரும் கடவுளை இப்படி திட்டுகிறார்கள் என்றால் அவனுக்கு அன்னை தந்தை யாரும் இல்லாததால் என்கிறார்

      Delete
    2. கட + உள் = தம் உள்ளே சென்று கடவுளை பார்க்கவேண்டும்

      Delete
  2. If you had written the answer like this, you would have scored 100 out of 5 marks.

    ReplyDelete
  3. அருமை.நன்றி ஐயா.

    ReplyDelete
  4. இறைத்தன்மையை உடையவன் இறைவன். தெய்வ குணங்களையும் கொண்டு வாழ்தல் இனிது.. அவனே மனிதன்.

    ReplyDelete
  5. மிக அருமை

    ReplyDelete