Tuesday, January 8, 2013

இராமாயணம் - சிரஞ்சீவி அனுமன்


இராமாயணம் - சிரஞ்சீவி அனுமன் 


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் கொடுத்தாள். இந்த ஏழேழு உலகம் வீழ்ந்த போதும் நீ இருப்பாய் என்று அவனை வாழ்த்தினாள். அதாவது சிரஞ்சீவியாக இரு என்ற வரம் தந்தாள். 

வீரம் நிறைந்த பனை மரம் போன்ற உறுதியான தோள்களை உடையவனே, நான் எந்த துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது வந்து என் துயர் தீர்த்த வள்ளலே, நான் குற்றமற்ற மனம் உள்ளவள் என்பது உண்மையானால், ஓர் ஊழிக் காலம் ஒரு பகலாய் மாறி , இந்த உலகம் அத்தனையும் அழிந்த போதிலும் இன்று போல் நீ இருப்பாய் என வாழ்த்தினாள் 

பாடல் 


பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த 
வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின், 
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் 
ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 



பொருள்

பாழிய = வீரம் பொருந்திய

பணைத் தோள் வீர! = பனை மரம் போல் உறுதியான தோள்களை கொண்ட வீரனே

துணை இலேன் = ஒரு துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருந்தேன்

பரிவு தீர்த்த = வருத்தம் தீர்த்த
 
வாழிய வள்ளலே! = வாழிய வள்ளலே (உயிர் கொடுத்த வள்ளல்)

யான் = நான்

மறு இலா மனத்தேன்என்னின் = கறை படியாத மனம் உள்ளவள் எனின் 
 
ஊழி = ஊழிக் காலம்

ஓர் பகலாய் ஓதும் = ஒரு பகலாய் இருக்கும்

யாண்டு எலாம் = இங்கு உள்ள எல்லாம்

உலகம் ஏழும் ஏழும் = ஏழேழு உலகமும்

வீவுற்ற ஞான்றும் = வீழுகின்ற போதும்

இன்று என இருத்தி' என்றாள் = இன்று போல் இருப்பாய் என்று வாழ்த்தினாள்

எழுபது என்பது வயது ஆகும் போது உடம்பிற்கு அத்தனை நோயும் வந்து விடுகிறது....கற்ப கோடி ஆண்டு வாழ்ந்தால் உடம்பு எப்படி இருக்கும்...பல் விழுந்து, தோல் சுருங்கி, கண் பார்வை இழந்து, ஞாபகம் அற்றுப் போய்...அது ஒரு வரமா ? எனவே சீதை "இன்று என இருத்தி" என்றாள்.  இன்று போல் ஆரோக்கியமாக இரு என்று வாழ்த்தினாள்.

இதற்க்கு முன்னால் அனுமனை "அப்பா" என்று சீதை அழைத்தால்...அது எப்படி தெரியுமா ?

 

1 comment:

  1. "இன்று போல் என்றும் வாழ்க" என்று வாழ்த்துவது கேட்டிருக்கிறேன்; ஆனால், அதைப்பற்றி எண்ணிப் பார்த்ததில்லை. இப்போது புரிகிறது.

    அருமையான கவிதை.

    ReplyDelete