Friday, January 25, 2013

கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


கலித்தொகை - எழுத இடமா இல்லை ?


தோழி: என்னடி, ரொம்ப dull -ஆ இருக்க ? உடம்பு கிடம்பு சரியா இல்லையா ?

அவள்: இல்லையே, நான் நல்லாதானே இருக்கேன்...

தோழி: மூஞ்சி, உன்னை பார்த்தாலே தெரியுது..என்னமோ சரி இல்ல..சொல்லு என்ன விஷயம்...

அவள்: ஒண்ணும் நேத்து அவன் கோவிச்சிக்கிட்டு போய்ட்டான்....

தோழி: அதச் சொல்லு முதல்ல...என்ன ஆச்சு...நீ என்ன சொன்ன 

அவள்: பின்ன என்ன..எப்ப பார்த்தாலும் சின்ன பையன் மாதிரி...ஒரு வயசுக்குத் தகுந்த பேச்சு வேண்டாம்...

தோழி: என்ன சொல்லிட்டானு நீ இப்படி குதிக்கிற....

அவள்: நேத்து சாயங்காலம் ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும்... பொழுது போகாம நம்ம friends  க கூட மண்ணு வீடு கட்டி விளையாடிகிட்டு இருந்தோம்...தொரை அப்படியே அந்த பக்கம் வந்து "...என்ன வீடு கட்டி விளையாடுறீங்களா ...நானும் வரட்டுமா வீடு கட்ட" அப்படினான்....

தோழி: அதுக்கு நீ என்ன சொன்ன ?

அவள்: இருக்க ஒரு சொந்த வீடு இல்ல...இங்க வீடு கட்ட வந்துடியாக்கும் ...அப்படின்னு சொன்னேன் 

தோழி: உனக்கு இது தேவையா ? அப்புறம் ?

அவள்: இந்தா பூ...உன் தலைல வச்சு விட்டா என்று ஆசையோடு கேட்டான்...

தோழி: சரின்னு சொல்ல வேண்டியது தானே...நீ என்ன சொன்ன ?

அவள்: யாரோ கொடுத்த பூவை கொண்டுவந்து என் தலைல ஒண்ணும் வைக்க வேண்டாம், அப்படின்னு சொன்னேன் 

தோழி: பாவம்டி அவன்...மூஞ்சியே வாடி போயிருக்குமே அவனுக்கு ...

அவள்: யாருக்கு அவனுக்கா ? ஒண்ணும் இல்ல...அதுக்கு அப்புறம் என்ன சொன்னான் தெரியுமா...வெட்கம் கேட்டவன்...இந்த ஆம்பிளைகளுக்கு வெட்கமே கிடையாதா...சீ சீ....

தோழி: என்ன தான் சொன்னான்...முத்தம் தரட்டுமானு கேட்டானா ?

அவள்: அப்படி கேட்டிருந்தால் கூட பரவாயில்ல...சொல்லவே என்னவோ போல இருக்கு...உன் மார்பின் மேல் என் பேரை எழுதட்டுமா ? அப்படின்னு கேக்குறான்...அவனுக்கு எழுதுறதுக்கு வேற இடமா இல்ல...சரியான ஜொள்ளு பார்ட்டி 

தோழி: உன்கிட்ட தான கேட்டான்...சரின்னு சொல்லிருக்க வேண்டியது தான....அப்புறம் நீ என்ன தான் சொன்ன ?

அவள்: எனக்கு வந்த கோவத்திற்கு....அது எல்லாம் முடியாது...கல்யாணத்திற்கு அப்புறம் தான் எல்லாம் அப்படின்னு கண்டிப்பா சொல்லிட்டேன் 

தோழி: ஐயா உடனே கோவிச்சிக்கிட்டு போயிட்டாராக்கும் ? அம்மாவுக்கும் மூடு அவுட்டா ? 

அவள்: அவன் அப்படி கேட்டிருக்கக் கூடாது தானே ? நீ என்ன சொல்ற ?

தோழி: நான் என்ன சொல்ல...சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப வந்து என் கிட்ட யோசனை கேக்குற...

அவள்: எனக்காக அவன் கிட்ட சொல்லி, முறைப்படி எங்க வீட்டுல வந்து பொண்ணு கேக்க சொல்லுவியா...ப்ளீஸ் டி...எனக்காக....

(சொன்னா  நம்பணும்...இது கலித்தொகையில் வரும் பாடல்....பாடல் கீழே...)
 
 
 
   

தீம் பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால் தோழி! நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது?' என்றான்; எல்லா! நீ,
"பெற்றேம் யாம்" என்று, பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன். 'முற்றிழாய்!
தாது சூழ் கூந்தல் தகை பெறத் தைஇய
கோதை புனைகோ, நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன். 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலைமாதோ; விடுக!' என்றேன். தையலாய்!
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான்; அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவைமன்

1 comment:

  1. அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு டயலாக் பாட்டா?! சூப்பர்.

    இந்தப் பாட்டுக்கு சொற்பொருள் தரவும். நன்றி.

    ReplyDelete