Wednesday, January 30, 2013

இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


இராமாயணம் - இராமாயாணத்தில் பிழை செய்தவர்கள்


நண்பர்களின் பிள்ளைகளிடம் நாம் எவ்வளவு தூரம் உரிமை எதுத்துக் கொள்ள முடியும் ?

அதிகமாக இருமை எடுத்துக் கொண்டால் முதலில் நண்பர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா ? அடுத்து அவர்களின் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்களா ?

நண்பர்களின் பிள்ளைகளை நம் பிள்ளைகள் போல் நினைத்து அவர்களை திருத்தவோ, பாராட்டவோ செய்வது என்றால் நண்பர்களுக்கு இடையே முதலில் அன்யோன்யம் வேண்டும். 

தசரதனின் நண்பன் ஜடாயு. 

சீதைக்காக, தசரதனின் மருமகளுக்காக சண்டையிட்டு உயிர் விடும் தருணத்தில் இருக்கிறான். 

இராமனும் லக்ஷ்மணனும் ஜடாயுவைப் பார்க்கிறார்கள். ஜடாயுவை தாக்கிய இராவணன் மீது இராமனுக்கு கோவம் வருகிறது. 

அப்போது ஜடாயு சொல்லுவான்....

"...ஏண்டா இராமா, ஒரு பெண்ணை தனியாக காட்டில் வைத்து விட்டு மானைப் பிடிக்கிறேன் என்று இரண்டு  பேரும் கிளம்பி விட்டீர்கள்...அப்படி ஒரு பெண்ணை தனியாக விட்டு விட்டுச் செல்வது எவ்வளவு பெரிய பிழை ? தப்பு எல்லாம் உங்க பேர்ல ... நீங்க என்னடாவென்றால் மற்றவர்கள் மேல் பிழை காண்கிறீர்கள் .."

என்று அவர்கள் மேல் உரிமையுடன் கோவித்துக் கொள்கிறான்.

இராமன் பிழை செய்தான் என்று சொல்லவும் ஒரு உரிமை வேண்டுமே ?

பாடல் 


வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

பொருள் 

வம்பு இழை = வம்பு செய்கின்ற 

கொங்கை = கொங்கை

வஞ்சி = வஞ்சிக் கொடிபோன்ற சீதையை

வனத்திடைத் = காட்டிற்குள்

தமியள் வைக = தனியாக வைத்து விட்டு 

கொம்பு இழை = கொம்பு இழைக்கின்ற 

மானின் பின் போய் = மானின் பின்னால் போய்

குலப் பழி கூட்டிக் கொண்டீர் = குலத்திர்க்கே பழியை கூட்டிக் கொண்டீர்கள் 

அம்பு இழை = அம்பு இழைக்கும் 

வரி வில் செங் கை = வில்லை கையில் கொண்ட 

ஐயன்மீர்! = ஐயா 

ஆயும் காலை = ஆராய்ந்து பார்க்கும் போது

உம் பிழை என்பது அல்லால், = உங்களுடைய பிழை அல்லாமல் 

உலகம் செய் பிழையும் உண்டோ? = உலகம் செய்யும் பிழை ஏதாவது உண்டோ ? இல்லை 

தவறு இராம இலக்குவர்கள் மேல் என்று ஜடாயு உரிமையுடன் கடிந்து கொள்கிறான்.

ஜடாயுவிற்கு தசரதன் பால் எத்தனை நட்பு இருந்திருக்க வேண்டும். 

இராமனும் இலக்குவனும் கூட ஜடாயுவை தங்களின் தந்தையாகவே நினைத்தார்கள்....

அது பற்றி மேலும் பார்ப்போம்...


1 comment:

  1. அது எல்லாம் சரி, அது என்ன "வம்பு இழை கொங்கை"???

    ReplyDelete