Sunday, January 20, 2013

குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில்


குறுந்தொகை - அணில் ஆடும் முன்றில் 


அது ஒரு சின்ன கிராமம். ஒரு காலத்தில் இங்கு நிறைய மக்கள் இருந்தார்கள். ஊரில் திருவிழாக்கள், கூத்து என்று அந்த ஊர் எப்போதும் கல கல என்று மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆனா, இப்ப அப்படி இல்ல. மழை தண்ணி இல்லாததால, வெவசாயம் இல்ல. ஊரு சனம் எல்லாம் ஒவ்வொன்னா ஊரைக் காலி பண்ணிட்டு போயிருச்சு. 

ஊரே வெறிச்சோடி கிடக்கிறது. எல்லா வீடும் காலியா கிடக்கு. வீடு முற்றத்தில் அணில்கள் இறங்கி வந்து விளையாடி கொண்டு இருக்கின்றன. 

அப்படி ஒரு தனிமை போல் இருக்கிறது அவன் இல்லாத தனிமை. 

அணில்லாடும் முன்றில் என்ற குறுந்தொகை பாடல்.....



காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.  

கொஞ்சம் சீர் பிரிப்போம் 

காதலர் உழையராக பெரிது உவந்து 
சாறு கொள் ஊரிற் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அந்த குடி சீறூர் 
மக்கள் போகிய அணில் ஆடும்  முன்றில் 
புல்லப்பு இல் போல  புல்லென்று 
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே 

பொருள் 


காதலர் = என் காதலன்

உழையராக = அருகில் இருக்கும் போது

பெரிது உவந்து = பெரிதும் மகிழ்ந்து இருந்தேன்

சாறு கொள் ஊரிற் = மகிழ்ச்சி உள்ள ஊராரைப் போல

புகல்வேன் = மகிழ்ந்து இருப்பேன்
  
மன்ற = உறுதியாக  

அத்தம் நண்ணிய = அத்தம் என்றால் கடினமான என்று ஒரு பொருள். வாழ்கை ரொம்ப கடினமாகி விட்டது அந்த ஊரில். கஷ்டம் வந்து சூழ்ந்து கொண்டது. 

அந்த குடி சீறூர் = அந்த சிறிய ஊரில் 
 
மக்கள் போகிய = மக்கள் எல்லாம் போன பின் 

அணில் ஆடும்  முன்றில்  = அணில் ஆடும் முற்றத்தில் 
 
புலப்பு இல் போல = தனிமையான வீட்டைப் போல 

புல்லென்று = அழகு இழந்து 
 
அலப்பென் தோழி = வருந்துவேன் தோழி 

அவர் அகன்ற ஞான்றே = அவர் பிரிந்து சென்ற பொழுது 

  
நா முத்துகுமார் இந்த அணில் ஆடும் முன்றிலை தமிழ் திரைப் பட பாடல்களில்  பயன் படுத்தி இருக்கிறார்....அந்த பாடல் எது தெரியுமா..மிக சமீபத்தில் வந்த படம் 

2 comments:

  1. என்ன அருமையான பாடல்!

    நா. முத்துக்குமார் பாடல் எது?

    ReplyDelete
  2. "அந்தகுடி" என்ற இடத்தில் ,"அம் குடிச்" என வர வேண்டும்

    ReplyDelete