Thursday, January 31, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் பெற்ற செல்வம்



இராமானுஜர் நூற்றந்தாதி -  நான் பெற்ற செல்வம் 


இறைவன் பெரியவனா அடியார்கள் பெரியவர்களா என்றால் எல்லா மதமும் அடியவர்கள் தான் என்று கூறும் 


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர். மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர். 

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

மற்ற மதங்களை காட்டிலும் வைணவம் ஒரு படி மேலே. அடியவர்களையும் ஆசாரியர்களையும் அது மிகவும் கொண்டாடுகிறது. 

அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம். எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும். அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...ஏன் என்றால் குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....
பாடல் 

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள் 



எனக்குற்ற செல்வம் = எனக்கு உற்ற செல்வம் = எனக்கு கிடைத்த செல்வம் 

இராமா னுசனென்று = இராமானுசன் என்று 

இசையகில்லா = என்னோடு இசையாத, ஒத்துப் போகாத 

மனக்குற்ற மாந்தர் = மனதில் குற்றம் உள்ள மாந்தர்கள் 

பழிக்கில் = பழி சொன்னால் 

புகழ் = அதுவும் எனக்கு புகழ் தான் 

அவன் = இராமானுசன் 

மன்னியசீர் = நிலைத்த பெருமை 

தனக்குற்ற அன்பர் = அவனுடைய அன்பர்கள் 

அவந்திரு நாமங்கள் = அவனுடைய (இராமானுசனின்) நாமங்கள் 

சாற்றுமென் = சாற்றும் என்  = சொல்லும் என்னுடைய  

பா இனக்குற்றம் = பாவின் (பாடலின் ) குற்றம் 

 காணகில் லார் = காண மாட்டார்கள் 
 பத்தி ஏய்ந்த = பக்தி நிறைந்த, ஏறிய 

இயல்விதென்றே = இயல்பு இது என்றே.


1 comment:

  1. what a Bhakthi!Your quotes from Abirami Andhadhi makes the poem more interesting to read.Thank you very much.

    ReplyDelete