Thursday, September 29, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெலிந்த பொழுது

     

நாலாயிர திவ்ய பிரபந்தம் -   மெலிந்த பொழுது 


இந்த வெற்றிப் பாசுரங்களில் நம்மாழ்வார் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை பற்றி கூறுகிறார். பாற்கடலை கடைந்தது, குருக்ஷேத்திர போர்,ஊழிக் காலம் என்று நம் கற்பனைக்கு எட்டாத மிகப் பிரமாண்டமான விடயங்களை கூறிக் கொண்டு வருகிறார். 


அடுத்தது,



அந்தி நேரம். இரத்தத்தை அள்ளி விசிறி அடித்த மாதிரி வானம் சிவந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு மலை. அந்த மலை மேல் ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து இருக்கிறது. மலை உச்சியில் உள்ள சிங்கம் கீழே தெளிவாகத் தெரிவது என்றால் அது எவ்வளவு பெரிய சிங்கமாக இருக்க வேண்டும். அது அமர்ந்து இருப்பதைப் பார்த்தால் ஏதோ அது அந்த மலையை அடக்கி அதன் மேல் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது. ஒரு கம்பீரம், ஒரு வசீகரம். 



பாடல் 



போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை

சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை

கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்

ஆழ்துய ர் செய்தசு ரரைக்கொல்லு மாறே.


பொருள் 




(pl click the above link to continue reading)




போழ்து = பொழுது 


மெலிந்த = மெலிந்து, உக்கிரம் குறைந்து, மாலை வேளை 


புன் = குறைந்த, அதாவது ஒளி குறைந்த 


செக்கரில் = சிவந்த 


வான்திசை = வானத்தின் திசைகள்


சூழு = சூழ 


மெழுந்து = எழுந்து 

உதிரப்புனலால் = இரத்த ஆறு ஓடியது போல 


மலை கீழ்து  = மலையை கீழே கொண்டு  


பிளந்த = அதை பிளந்த 


சிங்கம் = சிங்கம் 


ஒத்த தால் = போல் ஒத்து இருந்து 


அப்பன் = திருமால் 


ஆழ் = நீண்ட பெரிய 


துயர் செய்த  = துன்பங்களை செய்த 


அசுரரைக்கொல்லு மாறே. = அசுரர்களை கொல்வதைப் போல் 




நரசிம்ம அவதாரம் கொண்டு , இரணியனை மாலை வேளையில், படியில், மடியில் கிடத்தி, அவன் உடலைப் பிளந்து, இரத்தம் பீறிட்டு எழ அமர்ந்து இருந்த கோலம் நினைவுக்கு வருகிறது நம்மாழ்வாருக்கு. 


மாலையில், சிவந்த வானத்தின் அடியில், மலை மேல் அமர்ந்து இருக்கும் சிங்கம் போல இருந்தது அந்தக் காட்சி என்கிறார். 


இரணியன் எவ்வளவு பெரிய பலம் கொண்டவன். பிரகலாதனுக்கு எவ்வளவோ துன்பங்கள் தந்தான். பிர்கலாதான் தானே போராடி இரணியனை வெல்ல முடியாது. அதற்காக அவன் சோர்ந்து விடவில்லை. திருமாலை நம்பினான். 



அவ்வளவு பலம் பொருந்திய, இரணியனை தன் வெறும் கையால் கொன்றார். 


அதைப் பார்க்கும் போது நம் துன்பம் எல்லாம் பெரிய துன்பமா? நம் துன்பங்களை துடைக்க அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது என்பது அவர் கருத்து. துயர் துடைத்து வெற்றிகளைத் தருவான் என்கிறார். 






(முந்தைய பதிவுகள்

பாசுரம் 3594 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 3595 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html


பாசுரம் 3596 - நான்றில 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


பாசுரம் 3597 - உலகம் உண்ட ஊண்

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596_12.html


பாசுரம் 3598  - ஒலிகள்

)


No comments:

Post a Comment