Sunday, September 18, 2022

திருவாசகம் - திரு அம்மானை - காட்டாதன எல்லாம் காட்டி

      

திருவாசகம் - திரு அம்மானை  -   காட்டாதன எல்லாம் காட்டி


"கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத குருக்கள் வானம் கீறி வைகுந்தம் காட்டுவாராம்" என்று ஒரு பழமொழி உண்டு. 


வைகுந்தம் எப்படி போவது என்று நாள் கணக்கில் சொல்லுவார். வைகுந்தம் போவது என்பது எளிதான காரியமா? அவ்வளவு கடினமான வேலையை செய்து முடிக்க வழி தெரிந்தவருக்கு கூரையின் மேல் ஏறி கோழியை பிடிக்கத் தெரியாதா? இது கூட தெரியாத ஆள் எப்படி நம்மை வைகுந்தம் கூட்டிப் போகப் போகிறார்? என்பது கேள்வி. 


அது ஒருபுறம் இருக்கட்டும். 


பக்தி மார்கத்தில் உள்ள பல பேர், இந்த சிற்றின்பம், ஆண் பெண் உறவு என்றால் முகம் சுளிப்பார்கள்.  "சீ ...அதை எல்லாம் பேசிக்கிட்டு" என்று சங்கடத்தில் நெளிவார்கள். 


இந்த சிற்றின்பமே பிடிபடவில்லை என்றால், பேரின்பம் எப்படி பிடிபடும்? 



பெரிய சங்கீத வித்வானாக வேண்டும். ஆனால் இந்த சுருதி, இலயம், தாளம் எல்லாம் என்னத்துக்கு என்று கேட்பது போல. 

சிற்றின்பம் புரிந்தால்தான் பேரின்பம் புரியும். ஆரம்பப் பள்ளி முடித்தால் தான் உயர் கல்விக்குப் போக முடியும். 


நமது பக்தி இலக்கியத்தில் சிற்றின்பம் சேர்ந்து இருப்பது ஆச்சரியமான விடயம். வேறு எந்த மதத்திலாவது இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. 


நாயகன் நாயகி பாவம் என்பது பக்தி இலக்கியத்தின் ஒரு பகுதி. அதைக் கண்டு யாரும் முகம் சுழிப்பது இல்லை. 



அவள் ஒரு இளம் பெண். இந்த ஆண் பெண் உறவு பற்றியெல்லாம் அவளுக்கு ஒன்றும் தெரியாது. உடலின் மாற்றங்கள் புரிகிறது. ஆனாலும் அது முழுமையாகத் தெரியவில்லை. அவளுடைய காதலனோ இதில் தேர்ந்தவன். ஒரு நாள் அவளை தனியே அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்குகிறான். அவளுக்கு கூச்சம், பயம், வெட்கம், படபடப்பு, சந்தோஷம் எல்லாம் ஒன்றாக வருகிறது. 

பின் வீட்டுக்கு வந்து விட்டாள். தோழி கேட்கிறாள். "என்னடி என்னவோ போல இருக்க. முகமே சரியில்லை...என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா" என்று கேட்கிறாள் 

அவள் சொல்கிறாள் 


"என் தோழியே கேள்.  என் காதலன் இருக்கிறானே அவன் என்னை மயக்கி தனியே அழைத்துச் சென்று எது எதையோ காட்டினான், அதை எல்லாம் வெளியே சொன்னால் எல்லாரும் சிரிப்பார்கள். அதை எப்படிச் சொல்வேன்..."


என்று தன் தலைவனோடு ஒன்றியதை, அவனோடு ஒன்றாகக் கலந்ததை சொல்லி முடிக்கிறாள். 



சரி, அதுக்கும் இந்த அம்மானை பாடலுக்கும் என்ன சம்பந்தம்?


பாடல் 



கேட்டாயோ தோழி! கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ், தென்னன் பெருந்துறையான்,
காட்டாதன எல்லாம் காட்டி, சிவம் காட்டி,
தாள் தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி,
நாட்டார் நகை செய்ய, நாம் மேலை வீடு எய்த,
ஆள் தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண்; அம்மானாய்!



பொருள் 


(pl click the above link to continue reading)



கேட்டாயோ தோழி! =கேள் என் தோழியே 

கிறி செய்த ஆறு = கிறி செய்தவாறு = கிறி என்றால் மயக்கம், மாயை, வஞ்சனையாக என்று பொருள். இங்கே, மயக்கி என்று கொள்ளல்லாம் 

ஒருவன் = தன்னிகரற்ற ஒருவன் 


தீட்டு ஆர் மதில் = தீட்டு என்ற சொல்லுக்கு கூர்மையான என்ற பொருள் உண்டு. வேல், ஈட்டி, அம்பு போன்ற கூரான ஆயுதங்கள் நிறைந்த மதில் (சுவர்) 


புடை சூழ் = படைகள் சூழ 


தென்னன்  = தென்னாட்டின் தலைவன் 



பெருந்துறையான், = திருப்பெருந்துறையில் உறைபவன் 



காட்டாதன எல்லாம் காட்டி  = இதுவரை காட்டதவற்றை எல்லாம் காட்டி 




சிவம் காட்டி, = சிவம் காட்டி. சிவமாகும் தன்மை காட்டி 



தாள் தாமரை காட்டி = தாமரை போன்ற திருவடிகளைக் காட்டி 



தன் கருணைத் தேன் காட்டி, = தன் கருணை என்ற தேனைக் காட்டி 



நாட்டார் நகை செய்ய = நாட்டில் உள்ளவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்க 



நாம் மேலை வீடு எய்த = நாம் வீடு பேற்றினை அடைய 



ஆள் தான் கொண்டு  = இதில் 'தான்' என்பது அசைச் சொல். ஆள் கொண்டு என்பது ஆட்கொண்டு 



ஆண்டவா = என்னை ஆள்பவனை 



பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானாய் 



தன்னை ஒரு இளம் பெண்ணாகக் கற்பனை செய்து கொண்டு, ஒரு பெண் தன் தலைவனிடம் அடையும் இன்பம், பின் அவனே எல்லாம் என்று அவனோடு ஒன்று படும் அந்த நிலை என்று சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்துக்கு வழி காட்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html

)


No comments:

Post a Comment