கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 5
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நிரந்தரமானவை, தோற்றமும், முடிவும் இல்லாதவை, இதில் பதியும், பசுவும் உயிர் பொருள்கள், அறிவு உள்ளவை, பாசம் என்பது உயிர் அற்றது, அறிவும் அற்றது என்று பார்த்தோம்.
ஆணவத்தின் காரணமாக பசு, பதியைப் பற்றாமல் பாசத்தில் அகப்பட்டுக் கொள்கிறது என்றும், அந்த அஞ்ஞான இருளில் அது தவித்து வெளி வர நினைக்கும், அந்த எண்ணமும், முயற்சியும்தான் மூல கன்மம் என்று வழங்கப் படுகிறது என்றும் சிந்தித்தோம்.
அப்படி வெளிவர நினைத்து தவிக்கும் உயிர்களுக்கு இரங்கி இறைவன் தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரும் முதல் ஐந்து நிலைகளான சிவ தத்துவத்தைப் பார்த்தோம். அவையாவன
நாதம் , விந்து . சதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை.
மீதி உள்ள 31 தத்துவங்களையும் பற்றி சிந்திப்போம்.
இனி உயிர்கள் இயங்க வேண்டும். இயங்க என்ன வேண்டும்?
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
(pl click the above link to continue reading)
நீங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு இடத்துக்கும் நடுவில் இடை வெளி வேண்டும். அப்போதுதான் நகர முடியும்.
அது எளிதாகப் புரிகிறது.
ஆனால், நகர இன்னொன்றும் வேண்டும். அதுதான் "காலம்" .
நீங்கள் பிறந்த ஊரில் இருந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்து இருகிறீர்கள். அந்த இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள தூர வித்தியாசம் உங்களுக்குப் புரிகிறது.
நீங்கள் பிறந்ததில் இருந்து இன்று வரை உள்ள காலம்? அது புரிவது இல்லை. ஏன் என்றால் அது ஒரு பருப் பொருள் அல்ல. தொட்டு உணர முடியாது. இருந்தும் காலம் வேண்டும் என்று புரிகிறது அல்லவா.
எனவே, முதலில் இறைவன் அசுத்த மாயையில் இருந்து "காலம்" என்ற தத்துவத்தை தோற்றிவித்தான்.
காலம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? தோற்றம் இல்லை, வளர்ச்சி இல்லை, மறைவு இல்லை, ஒன்றும் இருக்காது. எனவே முதல் தத்துவமாக கால தத்துவத்தை இறைவன் படைக்கிறான்.
காலம் தோன்றி விட்டது.
காலத்துக்குள் உயிர்கள் இயங்க வேண்டும்.
எப்படி இயங்க வேண்டும்?
அவைகள் முன் செய்த வினைகளின் படி இயங்கும். ஒரு பிறவியில் செய்த நன்மை தீமைகள், பாவ- புண்ணியங்களாகி, பின் இன்ப-துன்பமாக வந்து சேரும்.
ஒரு பிறவி, மறு பிறவி என்பது காலத்தின் அடிப்படையில் வருவது.
இவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் நியமிக்கிறான்.
அதை "நியதி" தத்துவம் என்கிறார்கள்.
அது இரண்டாவது தத்துவம். நியமிக்கப்படுதல். உனக்கு இது தான் என்று நியமித்தல். இதை நாம் ஊழ் என்கிறோம், விதி என்கிறோம்.
அடுத்து என்ன?
உயிர்கள் இயங்கும் காலத்தையும், அவை செய்ய வேண்டிய கால அளவையும் நிர்ணயம் செய்தாகி விட்டது. இனி அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களை கொஞ்சம் எழுப்பி விட வேண்டும். அவற்றின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும்.
எனவே மூன்றாவது தத்துவம் "கலை" என்று அழைக்கப் படுகிறது. திருப்பள்ளி எழுச்சி அது.
காலம்
நியதி
கலை
உயிர்கள தூக்கம் கலைந்து எழுகின்றன. எழுந்தவுடன், நான் யார், எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்ற கேள்வி பிறக்கும். கேள்விக்கு விடை அறிய முற்பட்டும். அதை அறிவு அல்லது "வித்தை " என்கிறார்கள். உயிர்கள் எவ்வாறு ஞானம் அடைகின்றன என்பது பற்றிய தத்துவம் அது. வித்யா தத்துவம். உயிர்கள் உண்மையை தேடி அலைகின்றனவா இல்லையா?
காலம்,
நியதி,
கலை,
வித்தை
அறிவு தேடலின் நடுவே, ஆசை பெருகும். அறிய அறிய ஆசை வரும். தெரியாத ஒன்றின் மேல் ஆசை வராது. தெரிய வரும் போது எனக்கும் அது போல ஒன்று வேண்டும் என்ற ஆசை வரும். அந்த ஆசை மேலும் கர்மத்தைத் தூண்டும். ஆசைக்கு "இராகம்" என்று பேர் சொல்கிறார்கள்.
காலம்
நியதி
கலை
வித்தை
இராகம்
இந்த ஐந்தையும் கஞ்சுகம் (ஆடை) என்பார்கள். ஆன்மா அணிந்து கொள்ளும் ஆடை. ஏன் ஆடை என்றால், ஆன்மாவுக்கு வடிவு கிடையாது. இந்த ஐந்து குணங்களும் சேர்ந்த பின் ஆன்மா ஒரு வடிவு கொள்ளும்.
அப்படி ஒரு வடிவு கொண்ட ஆன்மாவுக்கு "புருடன்" என்று பெயர்.
குணம், காலம், அறிவு என்று ஒன்றும் இல்லாத ஆன்மா அறிவு, ஆசை, காலம் எல்லாம் பெற்று ஒரு வரையறைக்குள் செயல்படத் தொடங்க தயாராக இருக்கும். அப்படிப்பட்ட ஆன்மாவுக்கு புருடன் என்று பெயர்.
காலம்
நியதி
கலை
வித்தை
இராகம்/அராகம்
புருடன்
இனியும் ஆன்மா இயங்காது. ஆன்மா இயங்க வேண்டும் என்றால் அது தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும்.
என் பெற்றோர், என் மனைவி, கணவன், பிள்ளைகள், வீடு, வாசல், வேலை, என்று தன்னைச் சுற்றி ஒரு பின்னலை ஏற்படுத்திக் கொள்ளும், அதற்கு பிரகிருதி மாயை என்று பெயர்.
நேற்றுவரை யாரோவாக இருந்த இரண்டு பேர் இன்று முதல் அவன் தான் என் உயிர், அவள் இல்லாமல் நான் இல்லை என்று சொல்ல வைப்பது இந்த மாயை. தந்தை, தாய், பிள்ளை என்பதெல்லாம் கற்பித்துக் கொண்டது. அந்தப் பிணைப்பு இருந்தால் தான் செயல் பட முடியும்.
காலம்
நியதி
கலை
வித்தை
இராகம்/அராகம்
புருடன்
பிரகிருதி மாயை
என்ற இந்த ஏழு தத்துவங்களை வித்யா தத்துவங்கள் என்று சொல்கிறார்கள்.
இதில் ஒவ்வொன்றும் இதற்கு முன் உள்ள சிவ தத்துவத்தில் இருந்து எப்படி வந்தன என்று விளக்கங்கள் இருக்கிறது. சொல்லின் விரியும்.
சிவ தத்துவம் 5, வித்யா தத்துவம் 7 ஆக பன்னிரண்டு தத்துவங்கள் பற்றி சிந்தித்தோம்.
இன்னும் 24 தத்துவங்கள் இருக்கின்றன.
மேலும் சிந்திப்போம்.
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
]
No comments:
Post a Comment